தேனி சுந்தர் (Theni Sundar) எழுதி புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட "திட்டமிடாத வகுப்பறைகள்" (Thitamidatha Vakuparaigal) புத்தகம் - கல்வி கற்றல்

தேனி சுந்தர் எழுதிய “திட்டமிடாத வகுப்பறைகள்” – நூல் அறிமுகம்

திட்டமிடாத வகுப்பறைகள் நூல் குறித்து

நம் பள்ளிப் பருவம் முதல் இன்று வரை குழந்தைக் கவிஞர் என்றாலே அழ வள்ளியப்பா என்ற பெயர் தான் ஆசிரியரான பின்பும் மனதில் முதன்மையாக வந்து நிற்கும்.

அதுபோல குழந்தைகளுக்கான படைப்புகளை அளித்த நமது முன்னத்தி ஏர்களைப் பின்னுக்குத் தள்ளி சிறார் இலக்கியஉலகில் புதுமைப் படைப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கும் எங்கள் தேனி சுந்தர் சார் அவர்களின் சமீபத்திய நூலான திட்டமிடாத வகுப்பறைகள் பற்றிய என் பார்வையிலான மனப்பதிவுகளை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள விரும்பி வந்துள்ளேன்.

அதிக நூல்களை வாசிப்பவரே சிறந்த படிப்பாளி என்ற பொதுவான கூற்று ஒன்று உண்டு. அந்த வகையில் பார்த்தால் தொடக்க நிலை முதல் வளரிளம் பருவம் வரை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு சிறந்த ஆசிரியரே உலகின் மிகச் சிறந்த படிப்பாளி என்று கூறலாம். ஏனென்றால் குழந்தைகளை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு அவரது குழந்தைகளே அனுதினமும் சுவாரஸ்யமான அனுபவங்களைத் தரும் ஆசான்களாக விளங்குகின்றனர் என்பது கண்கூடு .

அதற்கான அத்தாட்சியாகவே சமீப காலங்களில் தேனி சுந்தர் அவர்கள் படைப்பில் வெளிவந்துள்ள சிறார் இலக்கிய நூல்கள் அனைத்தையுமே கூற முடியும்.

ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்று முடிவு செய்யும் போது நமது தேர்வாக அமைவது நல்ல புதுமையான பெயரிடப்பட்ட திரைப்படம் ஆகத்தான் இருக்க முடியும். நவீன மொழியில் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் டைட்டில் Catchy யாக இருந்தது என்று சொல்வார்கள்.

அதுபோல ஒரு நூல் வாசிப்பு மேற்கொள்ளும் போது, அதிலும் குழந்தைகள் உலகம் சார்ந்த நூலை வாசிக்கலாம் என்று முடிவு எடுக்கும் போது ஆசிரியராக இருந்து கொண்டு “திட்டமிடாத வகுப்பறைகள்” என்ற தலைப்பு வைத்திருக்கிறாரே என்று தான் யாருக்குமே வியப்புத் தோன்றும். ஏனெனில் தற்போதைய கற்றல் கற்பித்தல் சூழல் திட்டமிடாமல் நிகழக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கசப்பாக இருப்பினும் அதுதான் உண்மை.

ஆனால் எந்தவித சட்ட திட்டங்களுக்கும் உட்படாமல் சுந்தர் ஆசிரியரின் வகுப்பறையும் குழந்தைகளும் தமக்கு என்று தாமே ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிக் கொண்டு அதிலே கும்மாளமும் மகிழ்ச்சியுமாக கற்றல் என்ற அனுபவத்தை ஆனந்தமான கொண்டாட்ட மனநிலையில் பெற்றுக் கடந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆசிரியர் என்பவர் கற்றுக் கொடுப்பவர் ; குழந்தைகள் அனைவரும் கற்றுக் கொள்பவர் என்ற மனநிலை எப்போது ஒரு ஆசிரியருக்கு மாறுகிறதோ அதுவே வெற்றிகரமான குழந்தை நேய வகுப்பறையாக உருமாறக் கூடும். நூல் ஆசிரியரின் வகுப்பறை அத்தகைய வெற்றிகரமான வகுப்பறையே என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவரது மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள், கற்றல் சாராத செயல்பாடுகள் அனைத்தின் மூலமாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

கல்வி என்பது வெறுமனே பாடப் புத்தகம் சார்ந்தது என்று யார் சொன்னது ?யார் வரையறை செய்தது? பெரும் பெரும் கல்வி யாளர்களும் உளவியலாளர்களும் இந்த வயதில் இந்த மன வளர்ச்சி உள்ள குழந்தைகளுக்கான பாடத்திட்டமாக இதை வைக்கலாம் என்று எப்படி வரையறுத்து திட்டமிட்டனர்?
ஒவ்வொரு குழந்தையும் ஒரு சின்னஞ்சிறு மேதையே. அவர்களின் இயல்புப்படி வளர விடும்போதும் கற்றல் செயல்களில் ஈடுபட வழிகாட்டும் போதும் ஆசிரியர் உறுதுணையாக இருக்கும்போதும் அவர்களின் கற்றல் வேகமும் உள்வாங்கும் விஷயங்களும் பிரமிக்கத்தக்கனவாக அமைந்து விடுகின்றன. அதற்கான உதாரணம் இந்த நூலில் ஆசிரியர் குறிப்பிடும் பின் தங்கிய மாணவர்களின் செயல்பாடுகளே.

குழந்தைகளின் கற்பனைஉலகம் எல்லையற்ற வெளி கொண்டது. அதில் அவர்கள் யாருடன் சஞ்சரிக்க விரும்புகிறார்களோ அவர்களை மட்டுமே அனுமதிப்பார்கள். வேறு யாருக்கும் இடம் இருக்கிறதா இல்லையோ கண்டிப்பாக தொடக்க வகுப்புகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர் குழந்தை நேய ஆசிரியராக இருக்கும் பட்சத்தில் மதிப்பு மிக்க மனிதராக அவ்வுலகில் போற்றப்படுவார். சுந்தர் சாரின் குழந்தைகளும் அவரைத் தங்களில் ஒருவராக தங்கள் உலகின் கதாநாயகனாகவே வரித்துக் கொண்டு கொண்டாடுவார்கள்.

டோட்டோ ஜான் – ஜன்னலில் ஒரு சிறுமி

இந்த நூல் பற்றிய அறிமுகம் இல்லாதவர் சிறந்த ஆசிரியராக இருக்கவே முடியாது. ஏனென்றால் குழந்தைகளை நேசிக்கும் ஒரு ஆசிரியரால் மட்டுமே இம்மாதிரியான நூல்களைத் தேடிப் படிக்கக் கூடிய மனநிலையைக் கொண்டிருக்க முடியும். எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நூலைப் பற்றி அற்புதமான அறிமுக உரை பல இடங்களில் வழங்கியிருக்கிறார்.

குழந்தைகளின் உலகில் குழந்தைகளாக இருப்பவர்கள் மட்டுமே இடம்பெற முடியும். அல்லது அவர்களைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே சுதந்திரமாகக் கலந்து உறவாட முடியும்.
அதை விடுத்து நான் ஆசிரியர் ;மெத்தப் படித்தவர்; கண்டிப்பானவர்; உங்களைவிட மேலானவர் என்ற எண்ணத்தோடு குழந்தைகளை அணுகினால் அவர்களுக்கும் நமக்குமான தொலைவு நெடுந்தொலைவாகிவிடும். குழந்தைகளின் மொழி புரிய வேண்டுமானால் மேற்கூறிய போலி முகமூடிகளை கழற்றிவிட்டு மட்டுமே உரையாட வேண்டும்.

சுந்தர் சாரின் படைப்புகளில் அத்தகைய மழலை மொழிகளே மகத்துவமான உறவை நிர்மாணிக்கும் என்பது ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது.

நம் தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான நூல்களை எழுதும் ஆசிரியர்கள் வரிசையில் தன் தனித்துவமான எழுத்து நடையால் தனியிடம் பிடித்துள்ள சுந்தர் சாரின் பெயர் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. இனிவரும் காலங்களில் சுந்தர் சாரின் குழந்தை நேயப் புத்தகங்கள் மேற்கோள் காட்டப்படுவதற்கும் வெற்றிகரமான வகுப்பறைகளுக்கான இலக்கண விதிகளுக்கும் சான்றாக அமையக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.. விரும்புகிறேன்…

நூலின் விவரம்:

நூல்: திட்டமிடாத வகுப்பறைகள் (Thitamidatha Vakuparaigal)
ஆசிரியர்: தேனி சுந்தர் (Theni Sundar)
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
விலை: ₹ 50
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நூல் அறிமுகம் எழுதியவர்:

இரா.சத்யா,
தேவாரம்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *