தேனி சுந்தர் எழுதிய “ஓங்கூட்டு டூணா..!” புத்தகம் | Theni Sundar's Vonkootu Toona Tamil Book Review | பா.விமலா தேவி | www.bookday.in

தேனி சுந்தர் எழுதிய “ஓங்கூட்டு டூணா..!” – நூல் அறிமுகம்

ஓங்கூட்டு டூணா.! – நூல் அறிமுகம்

அறிவொளி இயக்கத்தின் வித்தாக இயங்கிய பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்த புத்தகமானது கவிஞர் மு.முருகேஷ் அவர்களின் மகிழவும் நெகிழவும் சிந்திக்கவும் என்ற அணிந்துரையில் தகதகவென ஜொலிக்கும் தங்கமாய் மின்னுகிறது.

துறுதுறுவென கேள்விகள் கேட்பதற்கு உரியவர்கள் குழந்தைகள். ஆனால் எவ்வளவு பெரிய கேள்விகளானாலும் சிறு குழந்தைகள் மிகச் சாதாரணமாக கேட்டு விடுகிறார்கள் என்று ஒரு சம்பவத்தை நினைவு கூறும் தோழர் முருகேஷ் அவர்கள், மொத்த முரண்களின் சுமையோடு தான் இவ்வாழ்க்கையை ஒவ்வொருவரும் கடக்கின்றோம் என்ற பெரிய உண்மையை குழந்தைகள் தான் நமக்குச் சொல்லித் தருகிறார்கள் என்ற சித்தாந்தத்தை நம் முன்வைக்கின்றார்.

அறிவொளி இயக்க காலங்களில் தனக்கு வாசிக்க கிடைத்த அமெரிக்க கல்வியாளரும் ஆசிரியருமான “ஜான் ஹோல்ட்” எழுதிய “ஆசிரியரின் டைரி” என்னும் நூலையும் கேரளாவைச் சேர்ந்த அபிமன்யு எனும் எட்டு வயது சிறுவன் எழுதிய கதையும் குழந்தைகளின் மன உலகிற்குள் தன்னை கை பிடித்துக் கூட்டிச் சென்ற மகத்தான நூல்கள் என்று சொல்வதின் மூலம் ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய நூலாக பரிந்துரையும் செய்கின்றார்.

சிறியவர்கள் என்பதாலே நாம் அவர்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்ற ஒற்றைக் கேள்வியோடு கடந்து போகும் நமக்கு, குழந்தைக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பது கூட இன்னமும் நமக்கு தெரிவதில்லை என்ற உண்மையைச் சொல்லி , குழந்தைகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ; ஆனாலும் குழந்தைமையோடு வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்பி இந்த புத்தகத்திற்கான ஓர் அறிமுகத்தை மிகச் சிறப்பாக தந்திருக்கிறார். இந்த அணிந்துரை என் மனதில் மிக ஆழமாக பதிந்து ஓர் ஆசிரியராய் சிந்திக்கவும் வைத்தது.

சிறப்பான ஓர் அணிந்துரைக்கு நூலின் ஆசிரியர் மட்டுமல்ல வாசிக்கும் நாமும் கைதட்டலாம். அதோடு மட்டுமல்லாமல் பயமின்றி துணிந்து கேட்கும் சூழலை தன் பள்ளியில் உருவாக்கியதற்காகவே புத்தகத்தின் ஆசிரியரை பாராட்ட தோன்றுகிறது என்ற வரியில் இப்புத்தகத்திற்கான முழு அம்சமும் வந்து அமைந்து விடுகிறது.
மழலையர் வகுப்பு முதல் தொடக்க கல்வி வரை பெண்பால் ஆசிரியர்களால் மட்டுமே ஒரு சிறந்த தாய்மை உணர்வோடு பாடங்களை புகட்ட முடியும் என்பதை உடைத்து காட்டியிருக்கிறார் ஆசிரியர் தேனி சுந்தர். அவருடைய எழுத்து நடை நாமும் அவரது வகுப்பறைக்குள் ஒரு பவானியாவாக ரக்சித்தாக யோகாஸ்ரீயாக யோகேஷாக அதன்யாவாக அமர வைக்கிறது. ஆசிரியர் முற்றிலும் குழந்தைத்தனத்தை தனக்குள் வரவழைத்துக் கொண்டு ஆசிரியராய் இருப்பதால்தான் அவரால் இதுபோன்ற நூல்களை எழுத முடிகிறது என்பதை ஒவ்வொரு பக்கமும் உணர்த்திடும்.

பேச்சு மொழியில் கூட நகைச்சுவை உணர்வோடு கருத்தை தெரிவிக்கும் பாங்கு ஆசிரியர் உள்ளத்தையும் நமக்கு படம் எடுத்துக்காட்டுகிறது. வரிகளுக்கு ஏற்றவாறு வரையப்பட்டுள்ள படங்களும் தம் கருத்தை முன்வைக்கின்றன. மழலையின் மொழிகளிலே ஆசிரியரின் வகுப்பறையை நாம் காணும் சூழ்நிலை உள்ளது.

இது ஒரு வகுப்பறை குறிப்புகள் என்ற உப தலைப்போடு வெளியான புத்தகம் தான் . ஆசிரியரின் டைரியாக குறிப்பிட்ட தேதி முதல் கொண்டு தன் வகுப்பறை நிகழ்வுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். கட்டுரையாக அல்லாமல் ஓர் உரைநடை கவிதை போல… குழந்தை இலக்கியம் போல…. இலகுவாக நம்மை கைப்பிடித்து அவருடைய வகுப்பறைக்குள் அழைத்துச் செல்கிறது.

தொடக்கக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியராலும் தேவதை போல உலா வர முடியும் என்பதை படம் பிடித்து காட்டுகிறார். மாணவன் ஆசிரியர் பயிற்சிக்கு சென்று வருவது தெரியாமல் “நீங்கள் வருவது போல நாங்கள் தாமதமாக வந்தால் ஏத்துப்பீங்களா சார்..? “, என்று கேட்கும் உரிமையும் , மாணவர்களைப் போல ‘ ஆத்தேன்னு ‘ சொல்லி ஓர் ஆசிரியர் பயப்படுவது போல பாசாங்கு செய்வதும் வாசிக்கும் பொழுது மனதிற்கு மகிழ்வையும் நிறைவையும் தருகிறது.

ஒரு சில ஆசிரியர்கள், ஆசிரியர் என்ற பணிக்கு சென்று வருவார்கள். ஆசிரியர் தேனி சுந்தர் ஆசிரியராகவே வாழ்கிறார் என்பது பிரதிபலிக்கிறது. ஒரு தனியார் பள்ளிக்கூட ஆசிரியரிடத்து இந்த உரிமையை எதிர்பார்க்க முடியுமா என்று வினாவை முன்வைக்கின்றேன். தன் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாது இனி பள்ளியில் சேரக்கூடிய பால்வாடி கூட்டங்களையும் தயார் செய்யும் ஆசிரியர் தான் சிறந்த ஆசிரியர்.

இன்றைய காலகட்டங்களில் பல அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடந்து கொண்டிருக்கிறது. நான் ஓர் ஆசிரியன் என்ற கர்வத்தோடும் மிடுக்கோடும் இல்லாமல் பால்வாடி ஆசிரியராகவும் ஒரு தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இருந்தால் மட்டுமே மாணவர்களின் சேர்க்கையை உறுதி செய்வதற்கு ஏதுவாகும். இதனை அவர் தம் எழுத்துக்களில் பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். அதற்காக மீண்டும் வாழ்த்துகள் ஆசிரியருக்கு.

ஜிப்பா போட்டு வருவதையும் , கண்ணாடி போட்டு வருவதையும் ரசிப்பதும் சரி… அது சரியில்லை… என்று நம் மீது குற்றம் சுமத்தி நம்மை அழகு செய்வதும் சரி நம் இணையருக்கு ஈடாக நம்மை கொண்டாடுவது மாணவர்கள் தான். வகுப்பறையில் மிகப்பெரிய மிரட்டல் வாக்கியமான “உன்கூட சேர மாட்டேன் போ…” ங்கற வாசகத்தையே புத்தகத்தின் தலைப்பாக மழலை மொழியில் வைத்து, தான் ஒரு வித்தியாசமானவர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

மனம் கனத்துப் போய் வாழ்வின் வெறுப்பின் உச்சத்தில் இருந்தால் உங்கள் மனதை மாற்றும் மாயக்கண்ணாடியாக இந்த புத்தகம் இருக்கும் என்று நான் வாக்களிக்கிறேன். வாசித்து பாருங்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:ஓங்கூட்டு டூணா..!
ஆசிரியர்:
வெளியீடு:
விலை:₹.100 (10% Discount price was: ₹.90)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பா.விமலா தேவி
பட்டுக்கோட்டை

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *