விடியல் மெல்ல எட்டிப்பார்த்து
இரவின் ரகசியங்களை பேசியபடி
மனிதர்களைக் காண வந்துவிட்டது.
பொட்டிட்டு அலங்கரித்த பால்சட்டி
அக்கினியின் நாக்குகளில் சூடேறியபடி
வாடிக்கையாளரை வரவேற்கிறது.
தேநீரின் சாயத்தை இழுத்து உறிஞ்சிய
வடிகட்டிக்கு சூடு பொறுக்கவில்லை
புகையை விட்டு ஆசுவாசபடுத்தியது.
காதைப் பிடித்துத் தூக்கிய டீ மாஸ்டர்
கண்ணாடிக் குவளைகளில் மாறிமாறி
காற்றில் பறக்கவிட்டு ஆற்றினார்.
மேலே போன தேநீர்த்துளிகள்
குழந்தையென குவளை மடிசேர
நுரையில் முகம் பார்த்தார்.
முதலில் உறிஞ்சிய வாடிக்கையாளர்
பறவைகளின் “க்ரீச்” சத்தம்
பக்கவாட்டில் பின்னிசை பாட
தேநீரை குலுக்கி ஆட்டியபடி
உதட்டுக்கு ஒத்தடம் கொடுத்தனர்.
சில்லரைகள் கல்லாவை நிறைக்க
நெஞ்சுகூட்டில் இதமான சூடு
அன்றைய நாளைத் தொடங்கியது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.