கவிஞர் ந. தேன்மொழி அவர்கள், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் வசிக்கிறார். திராவிடர் இயக்கத்தில் இருக்கிறார். திராவிட இயக்க நிகழ்வுகள், போராட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், மேடைப்பேச்சுகள் என தொடர்ந்து இயங்கிகொண்டிருப்பவர். ஏற்கனவே “உயிர்வலி” என்கிற கட்டுரை தொகுப்பு நூலை எழுதியுள்ளார். “தவிப்பு” கவிதை தொகுப்பு இரண்டாவது நூலாகும்.
இக்கவிதை தொகுப்பில் 60 தலைப்புகளில் கவிதை எழுதியுள்ளார். உடலரசியல், ஆணின் ஆணவம், பெண்உரிமை, அதிகாரம், வன்முறை, பெண்களின் மெளனம், சமூக கட்டமைப்பு, பெண்களுக்கெதிரான சவால்கள் என பெண்களின் தவிப்புகளையும் அவர்களின் உணர்வுகளையும் எழுதியுள்ளார்.
பேசு பொருளா?
பேசா பொருளா?
பெண்ணின் உணர்வுகள்?
உயிரோடு வதைக்கும்
உள்ளத்து எரிமலையாய்
அவளின் தவிப்புகள்!
தந்திடும் வலிகளோ
தலைமுறை கடந்தும்
மாறிடும் காலம் ????
காலம்காலமாக ஆண்களே பேசி வருவதைவிட பெண்ணின் உணர்வுகளை, தவிப்புகளை தயக்கம் இல்லாமல் பெண்களே பேச முன்வர வேண்டுமென்பதே “தவிப்பு கவிதை தொகுப்பின் வழியாக கவிஞர் நமக்கு மிக நுட்பமாக தெரிவிக்கிறார்.
புத்தகத்தின் தலைப்பிட்ட கவிதையில், பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும், கருத்துகளையும், தவிப்புகளையும், உணர்ச்சிகளையும் கவிதையாக பதிவு செய்திருக்கிறார்.
“தவிப்பு
இரக்கமற்ற இரவுகளாய்
அவளின் இரவுகள் – என்று துவங்கும் கவிதையின் இறுதிவரிகளில்….
விடிந்த பொழுதில்
உணர்வுகளை விழுங்கியவளாய்
அன்றாடப் பணிகள்
அவசரமாய் அழைக்க
யுத்தவலி நிரம்பியும்
வலிக்காது புன்னகைத்தாள்.
ஆணும், பெண்ணும் சமம் என்கிற போதிலும், ஆணின் வெளிப்படையான கருத்துகளை போல பெண்களால் பேச இயலுவதில்லை. ஆனாலும் சில பெண்கள் பேசத்துவங்கி இருக்கிறார்கள். இன்னும் பெண்கள் பரவலாக பேச வரவேண்டும் என்கிறார்.
“உரத்தகுரலில்”எனும் கவிதையில்.
யார் சொன்னது?
பெண் சிரிக்கக் கூடாதென்று
மீறிச் சொன்னால்
வெடித்துக் கிளம்பட்டும்
சிரிப்பலை சத்தம்
கன்னத்தில் அறையும்படி – என்கிறார்.
“முடியுமா? தெரியவில்லை”
என் வலிகள்
புரிந்தவனா நீ?
என் நேசிப்பும்
அறிந்தவனா நீ? – எனும் தொடங்கும் கவிதையில்..
பெண்ணின் உணர்வுகளையும் அவளின் வலிகளையும் எப்பொழுது ஆண் உணர்வான், உணரமுடியுமா என்று தெரியவில்லை என்கிறார்.
பெண்களின் நியாயங்கள், உரிமைகள், தேவைகள், காதல், புன்னகை, நட்பு உள்ளிட்டவைகளை சமூகத்தின் பார்வையில் இன்றும்(நவின யுகத்திலும்) சோதனைக்குட்டவையாகவும், வரையரைக்கு உட்பட்டவையாகவும் இருப்பதை “நாகரீக_அடிமையிவள்” எனும் கவிதையில் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார்.
மேலும், இத்தொகுப்பில்…
“கொன்று விட்டாய்”
என் நேசிப்பை
அறிந்திடாது
கொன்றிட்ட
கொலை வாள்கள்
உம் சொற்கள்
கொன்று விட்டாய்
நிரந்தமாய் என்னை.
“அதிகாரம்”
ஆணதிகாரம்
ஆணவ திகாரம்
உன்னதிகார மெனில்
இருந்து போகட்டும்
இவளதிகார மும்
உன்னதிகார மென
ஏய்த்திடல்
எவ்வதி காரமோ?
இதுபோல், கவிதை தொகுப்பு முழுக்க சிறப்பாக இருக்கிறது. பெண்ணின் வலிகளை, தவிப்புகளை, ஊமையாக தொடரும் உணர்வுகளை உரத்த குரலில் பதிவு செய்திருக்கும் கவிஞர் ந. தேன்மொழி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலின் விவரங்கள்:
நூல்: “தவிப்பு”
ஆசிரியர்: கவிஞர் ந.தேன்மொழி
வெளியீடு: மலர்கண்ணன் பதிப்பகம்
ஆண்டு: 2024,
விலை: 120.
எழுதியவர் :
✍🏻 கவிஞர் மு.பிரபு,
வேலூர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
