தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களைப் பற்றி தென்னவன் வெற்றிச்செல்வன் தொகுத்துள்ள “வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டு சித்திரம்” என்னும் நூல் வ.அய்.சு.வின் பன்முகத்தன்மையை வாசகர்களுக்குத் தருகிறது. அண்மையில் அவருடைய நூற்றாண்டின்போது (18.2.1926-29.6.2009) அவரைப் பற்றி பல கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்துள்ளன. அவரை நினைவுகூர்ந்து பல கருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன. இந்தச்சூழலில் இந்நூலானது அவருக்குப் பெருமை சேர்க்கின்ற மற்றொரு படைப்பாக அமைகிறது. 164 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் சுமார் 40 பக்கங்களைக் கொண்ட 18 பிற்சேர்க்கைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தகவலாளர்களுக்கும், படங்களும் ஆவணங்களும் தந்தவர்களுக்கும் உரிய ஒப்புகை தந்தவிதம் சிறப்பு.
“கம்பீரமான யானையின் சித்திரத்தைத் துதிக்கையிலிருந்து வரையத் தொடங்குவது போல, வ.அய்.சுப்பிரமணியம் என்கிற வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் எனும் ஆளுமைச் சித்திரத்தை, எங்கிருந்து தொடங்கி வரைவது என யோசித்தால், சுயமரியாதைச் சுடர்விடும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்ட அவரது ஆளுமைப் பண்பிலிருந்து வரைவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று நூலாசிரியர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவருடன் பயணித்தவர்கள் உணர்வர்.
அன்னாரைப் பற்றி வெளிவந்த நூல்களையும், கட்டுரைகளையும், இணையதளங்களையும், அவருடன் தொடர்பிலிருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள், நண்பர்கள் மூலமாகப் பெற்ற தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையானவற்றைத் தெரிவு செய்து ஒருங்கிணைந்துத் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அந்நாள் நினைவுகளுடன், இந்நாளில் வெளியான இப்படைப்பிலிருந்து சில பகுதிகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இவற்றுள் பெரும்பாலானவை பிற நூல்களில் இடம்பெற்ற, பல பெருமக்கள் சுட்டிய மேற்கோள்களாகும்.
“ஆய்வுத்திட்டம் ஒன்றுக்காக, நிதிவேண்டி புதுதில்லி சென்று நடுவண் அரசிடம் நிதி கேட்டிருக்கிறார், வ.அய்.சுப்பிரமணியம். “திட்ட வரைவில் ‘திராவிட’ என்பதை எடுத்துவிடுங்கள் நிதி தருகின்றோம்” என்று, காவிக்கறை தெரிய சிரித்த அமைச்சரிடம், “ஜனகனமன பாடலில் வரும் திராவிட என்ற சொல்லை நீங்கள் எடுங்கள். அப்புறம் நானும் ஆய்வுத் திட்டத்தில் திராவிட என்பதை எடுத்துவிடுகிறேன்” என முகத்துக்கு நேராக, நீடி நின்று நிமிர்ந்தெழுந்து முழங்கியவர்…” (ப.7)
“…வெளித்தோற்றத்துக்குக் கெடுபிடியாளராகத் தோன்றினாலும், உரிய சமயங்களில் தமது மனநெகிழ்வை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தத் தயங்கமாட்டார்…” (ப.10)
“…தமிழ்ப் பல்கலைக்கழகம் பழமையாளர்களால் நடத்தப்படும் ஒன்றாக கருதிடாமல், நமது நாட்டுமக்கள் வளர்ச்சிக்குத் தேவையான புதுமையான நிறுவனம் மற்றும் எண்ணத்தெளிவு அதிகாரத்தில் உள்ளவர்களின் மனதில் வளர வேண்டும். உறைக்க வேண்டும்…” (ப.14)
“ஒழுங்கு, கட்டுப்பாடு, காலந்தவறாமை, நடுநிலைமை, தியாகம், நேர்மை, வாய்மை, பரிவு, கண்டிப்பு, தன்னடக்கம், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு முழுப்பொறுப்பேற்றல் ஆகிய பண்புநலன்கள் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்…” (ப.37)
“தமிழ்நாட்டு ஆளுநர் திரு கே.கே.ஷா அவர்கள், தம்மை ஒரு திராவிடன் அல்லன் என்றும், இந்தோ ஆரியமொழியான குஜராத்தி பேசுபவர் என்றும் குறிப்பிட்டார். எனவே, தான் ஒரு ஆரியன் என்றார். ஆனால் ஆளுநர் அவர்கள், திராவிட இனத்தைதச் சேர்ந்தவர்தான் என்று அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். திராவிட இனத்தினுள்ளும் மிகப்பழமையான மொழி ஒன்றின் பிரதிநிதி என்று நான் கூறுவது உண்மைக்குப் புறம்பாகாது…” (ப.65)
“ஆரம்பப்பள்ளியில்கூட தமிழ்வழிக்கல்வி வேண்டும் என போராட வேண்டிய இச்சூழலில், மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகளைத் தமிழிலேயே நடத்தத் துணிந்து திட்டமிட்டார்…” (ப.90)
“வ.அய்.சு. கட்டுரைகளில், பிறர் யாரும் பயன்படுத்தாத, அரிதினும் அரிதான சில சொல் வழக்குகளைப் பயன்படுத்துவார். அவற்றில் நான் கண்டது ‘பூநிலை’ என்பார். பூகோளம் என்பதன் நல்ல தமிழாட்சியாக அவர் மட்டுமே பயன்படுத்துகிற சொல்லாடலாக இருக்கிறது…” (ப.112)
இந்நூலைப் படித்தபோது வ.அய்.சு. அவர்கள் துணைவேந்தராகப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்து பணியாற்றிய நாள்கள் நினைவிற்கு வந்தன. துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சிடும் பொறுப்பினை என்னிடம் தந்து, “மிகவும் கவனம். இதைப் பற்றி யாரிடமும் விவாதிக்கக்கூடாது. நுணுக்கமாகத் தவறின்றிச் செய்யவேண்டும்” என்றார். துணைப்பதிவாளர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் வழிகாட்டலில், பூல்ஸ்கேப் வடிவத் தாளில் சுமார் 120 பக்கங்கள் ஸ்டென்சில் தட்டச்சிட்டு, படியெடுத்தோம். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய ‘தமிழில் இலக்கிய வரலாறு’ என்னும் நூலின் ஆங்கிலப்பதிப்பின் வரைவைத் தட்டச்சு செய்தது மனதில் நிற்கும் மற்றொரு அனுபவமாகும். 1.9.1985இல் தஞ்சாவூரில் என் திருமணம் நடைபெற்றது. அவர், வந்து காத்துக்கொண்டிருந்ததாக உறவினர்கள் கூறினர். ஆமை வேகத்தில் வந்த மாப்பிள்ளை ஊர்வலம் திருமண மண்டபத்தை அடையும்போது தாமதமாகிவிட்டது. “வந்து, காத்திருந்ததாகச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவர் திரும்பிச்சென்றதாக அறிந்தேன். விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்தபின்னர் துணைவேந்தர் செயலகத்தில் சென்று தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்தேன்.
“அவர் சிறந்த நிர்வாகி மட்டுமல்ல சிறந்த கல்வியாளரும்தான் என்று நிறுவும் முயற்சியை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கம்தான் இந்த நூலின் பயணம்” (ப.115) என்ற வகையில் நூலாசிரியர், தன்னுடைய இலக்கில் வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம். ஓர் அரிய மனிதரைப் பற்றிய நூலை வெளியிட்டு வரலாற்றுக்கும், வரும் தலைமுறையினருக்கும் பெரும்தொண்டாற்றியுள்ள அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
குறிப்பு:
“காவிரிப் பிரச்சனை முற்றிய காலகட்டத்தில், அப்பிரச்சனை குறித்து தமிழக அரசு, நமது தரப்பு நியாயங்களை எடுத்துரைப்பதற்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சங்க இலக்கியத்திலும், தற்கால இலக்கியத்திலும், கல்வெட்டுகளிலும் காவிரி குறித்து வெளியான செய்திகள் அத்தனையும் தொகுத்து, நூல் ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக, நியாயமான உரிமைகள் அழுத்தமாக முன்வைக்கப்பட்டன.” (ப.18)
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டுச் சித்திரம் |
| ஆசிரியர்: | தென்னவன் வெற்றிச்செல்வன் |
| வெளியீடு: | ஆம்பல் பதிப்பகம், சென்னை-8. அலைபேசி: 78689 34995 |
| விலை: | ₹.180 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 முனைவர் பா.ஜம்புலிங்கம் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

