தியடோர் பாஸ்கரன் எழுதிய "கல் மேல் நடந்த காலம்" வரலாறு சார்ந்த கட்டுரைகள் புத்தகம் | Theodore Baskaran's Kal Mel Nadantha Kaalam Book Review in Tamil | www.bookday.in

தியடோர் பாஸ்கரன் எழுதிய “கல் மேல் நடந்த காலம்” வரலாறு சார்ந்த கட்டுரைகள் – நூல் அறிமுகம்

“கல் மேல் நடந்த காலம்” வரலாறு சார்ந்த கட்டுரைகள் – நூல் அறிமுகம்

வழக்கமாகச் சொல்லப்பட்டு வந்துள்ள தமிழக வரலாற்றினை தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டுகள் வழி ஒரு புதிய கோணத்திலும் பார்வையிலும் அறிந்து கொள்ள நம்மை தயார்படுத்தும் முன்னெடுப்பே சு.தியடோர் பாஸ்கரனின் இந்நூல். ஒவ்வொரு இயலையும் படித்து முடித்ததும் அதன் சாரத்தை உலகத்தோருக்கு நண்பர்களுக்கு உரக்கச் சொல்லிவிடும் உத்வேகம் தோன்றியதை மறுக்கவியலாது. கற்றளிகள், குடைவரைக் கோவில்கள், சமணப்படுக்கைகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் என்று அவரின் தேடல் வெறுமனே புத்தகங்களின்வழி மட்டுமன்றி அந்தந்த இடங்களுக்கு இயன்றவரை நேரில் அவரே சென்று பார்த்த களத்தரவுகள் வழியும் தன் ஆய்வுப் புள்ளிகளை எடுத்து வைக்கிறார்.

மேலும் ஒவ்வொரு இயலிலும் அவருக்கு துணை நின்ற நூல்களை நூலிறுதியில் பட்டியலிட்டதோடு, கட்டுரைகளின் இடையிலேயே முக்கிய நூல்களை (எ.கா. – ர.விஜயலட்சுமியின் தமிழகத்தில் ஆசீவீகர்கள், சார்லஸ் ஆலனின் அசோகா, க.நெடுஞ்செழியனின் சங்ககால தமிழர் சமயம், மயிலை சீனி வெங்கிடசாமியின் பௌத்தமும் தமிழும், வெளி ரங்கராஜனின் வெளிச்சம்படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், சுரேஷ் பிள்ளையின் Introduction to the study of Temple Art முதலியவை) அடையாளப்படுத்தியிருப்பது இந்நூலுக்குப் பின்னான நமது வாசிப்பும் தேடலும் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இருக்கிறது.

அரசர்கள் மற்றும் ஆளும்வர்க்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போர்கள் கலைப் படைப்புகளில் ஏற்படுத்தியுள்ள முயக்கங்களும் தடுமாற்றங்களும் பல இயல்களில் (குறிப்பாக ஆர்மாமலை, அசோகர் குறித்த இயல்களில்) எடுத்துக்காட்டுகிறார். குஜராத் ஜூனாகாத் நகர் கிர்னார் மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள அசோகரின் சாசனம் ஒன்றினைத் தொட்டு அசோகரை சுற்றுச்சூழல் கரிசனம் கொண்ட மன்னராக விரிவான விளக்கங்கள் வழி நிறுவுகிறார்.

சிந்து சமவெளி நாகரீகம் திராவிடக் கலாச்சாரத்தைச் சார்ந்தது என்று ஆய்வின்வழி நிறுவும் அஸ்கோ பர்ப்பொலா மற்றும் திராவிட உறவுமுறைகள், கால்டுவெல்லுக்கு முன்பே தென்னிந்திய மொழிகள் குறிப்பாக தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானவை அல்ல என்றும் அவை தனி மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் 1816-ல் சென்னை மாவட்ட ஆட்சியர் எல்லீஸின் ஆய்வு எவ்வாறு திராவிடச் சான்றாகப் பயன்பட்டது குறித்த தாமஸ் டிரவுட்மன்னின் நேர்காணல்கள் நமது தேடலை விரிவுபடுத்தும் நோக்கிலானவை. முக்கியமானவை.

தியடோரின் தன்னனுபவங்கள் வழி விவரிக்கப்படும் அமராவதி ஆற்றங்கரை தாராபுர சூழல், கால்டுவெல்லின் கொடைக்கானல் வசிப்பிடம் Roseneath மற்றும் தூய பேதுரு ஆலயம் குறித்த தகவல்கள், ரோஜா முத்தையா செட்டியாருடனான தியடோரின் நேரடித் தொடர்பும் அவரது நல்கை ஆய்வுக்கு முத்தையாவின் சேகரிப்பு உதவிய விதம் குறித்த அனுபவக் குறிப்புகள், 1914-ல் சென்னையில் ஜெர்மன் போர்க்கப்பல் எம்டன் குண்டு பொழிந்தது, பின்னர் எம்டன் ஆஸ்திரேலியக் கப்பற்படையால் அழிக்கப்பட்ட நிகழ்வு அதனூடான முல்லரின் வாழ்வு, இலங்கையின் யாலா காட்டுயிர் சரணாலய நிர்வாகி எங்கல்ப்ரட் எவ்வாறு எம்டனால் பாதிக்கப்பட்டார் போன்ற தகவல்கள் அடங்கிய இயல்கள், கல் மேல் நடந்த காலத்திற்குள் தியடோர் நுழைய நேர்ந்தது பற்றியும் எங்கு சென்றாலும் அங்குள்ள தரவுகளின்வழி வரலாற்றின் புதிர்ப்பாதையில் பயணிக்கும் அவரது மனப்போக்கு பற்றியும் புரிந்து கொள்ள உதவுகிறது.

நூலின் மிக முக்கியமானவையும் நமது தேடலை மாற்று கோணத்தில் எடுத்துச் செல்ல உதவிடும் ஆதார ஊக்கிகளாக விளங்குபவையுமாக நான் கருதுவது தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் குறித்தும் தமிழ் கல்வெட்டுகள் குறித்தும் முறையே 1966 மற்றும் 1983 ஆகிய காலகட்டங்களில் தமிழறிஞர், கலை வரலாற்றாசிரியர் சுரேஷ் பி.பிள்ளையின் இரு கட்டுரைகளின் தமிழாக்கங்களாகும்.

சோழர் கால கல்வெட்டுகள் மட்டும் ஏன் வரலாற்றாசிரியர்களால் எடுத்தாளப்பட்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த வரலாற்றையும் நிர்மாணிக்கப் பயன்பட்டது? காவிரிப் படுகை வரலாறுதான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு வரலாறா? வைதீகக் கல்வெட்டுகள் தவிர்த்த அவைதீகக் கல்வெட்டு வாசிப்பு/தேடல், கல்வெட்டுகளின் பேசுபொருளைத் தவிர்த்து கல்வெட்டுகள் அமைந்திருந்த இடங்கள், வடிவமைப்பு, பரப்பீடு உள்ளிட்டவற்றின் ஆய்வு ஏன் அவசியம் போன்ற புள்ளிகளில் கவனம் குவிக்கிறது இக்கட்டுரைகள்.

ஆகம நியதி சார்ந்த சமய நெறியைப் பரப்ப ராஜராஜன் காட்டிய வேகமும் தீவிரமும் எழுப்பிய எதிர்வினையே தஞ்சாவூர் பெரியகோவில் கட்டும் வேலையைப் பாதித்தது என்றும் அவைதீக/ஆகம விதிகள் சாராத வழிபாட்டு முறைகளைக் கொண்ட பெருந்திரள் மக்களிடம் நேர்ந்த கலகக்கூறே பிற்காலத்தில் அதே பெரிய கோவில் வளாகத்தில் ஆகம நியதி சாராத பெண் தெய்வ வழிபாட்டுக்காரர்களை ஆற்றுப்படுத்த உலகமுடைய நாச்சியார் மற்றும் முருகன் வழிபாட்டுக்காக சுப்பிரமணியர் கோவில்கள் கட்டப்பட்டன என்ற ஆய்வாளர் சுரேஷ் பிள்ளையின் கருதுகோள்கள் குறிப்பாக நோக்கத்தக்கவையும் அந்நோக்கில் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டியவையாகும்.

அதிகாரத்தையும் அரச வாழ்வினையும் எழுதுவது மட்டுமே வரலாறல்ல என்ற நம் போன்ற நிலைப்பாடு கொண்டோர், அத்தகைய வரலாற்றியல் எழுதும் முறையை எவ்வாறு மாற்று நோக்கில் எழுதுவது, அதற்கு தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள் போன்றவற்றை எவ்வாறு உசாத்துணையாக்கிக் கொள்வது என்பது குறித்த புரிதலுக்கு அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது.

நூலின் விவரங்கள்:

நூல்: “கல் மேல் நடந்த காலம்” வரலாறு சார்ந்த கட்டுரைகள்
ஆசிரியர்: தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ.250

எழுதியவர் : 

✍🏻 – அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *