வழிப்போக்கனின் ஐந்தாவது கவிதை தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து….
நம்புங்கள் நான்
அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்ல
அநீதிக்கு எதிரானவன்.
உண்மையில் மொழியைப் போலொரு வலிமையான ஆயுதமில்லை, ……….என்னை சுற்றி அன்றாடம் நிகழும் அந்த அசிங்கங்களை, அவலங்களை, அசம்பாவிதங்களை, சுரண்டல்களை, இந்த மொழியின் துணைகொண்டு நான் எழுதித் தீர்க்கிறேன் இல்லை இல்லை எனது எதிர்ப்புக் குரலாய் இங்கே ஆவணப்படுத்துகிறேன்.
…………. இந்த மொழியை கொண்டு நான் என்னை அடையாளப்படுத்துகிறேன். எனக்கானவற்றை இந்த மொழியை கொண்டு ஆவணப்படுத்துகிறேன். ……..
ஏன் ஆவணப்படுத்துகிறேன் என்றால் நம்மை சுற்றி நிகழும் அவலங்களை அசிங்கங்களை நாம் மறக்கிறோம் என்பதை விட மறக்கடிக்கப்படுகிறோம் என்பதே நாம் கவனிக்க மறந்த மாபெரும் உண்மை. அதனால் தான் தொடர்ந்து நான் அதனை ஆவணப்படுத்துகிறேன். இந்த அசிங்கங்களுக்கு நான் வெறுமனே மௌன சாட்சியாய் இருந்துவிட்டுப் போக விரும்பவில்லை. ……….
கவிதையென்பது தன்னைத் தானே தீயிட்டு எரித்துக்கொள்ளுமொரு வேட்கை. அதிலும் சமூக அவலங்களின் போது அந்த தீ இன்னும் கொஞ்சம் எனக்குள் உக்கிரமாகிறது. அகத்தே நான் குளிக்கும் தீயை புறத்தே எழுத்தின் வழியே நான் உங்களிடம் கடத்துகிறேன். எனது இயலாமையின் வெளிப்பாடே தேசத்துரோகியின் குரல். குரல்வலை நெரிக்கப்படும்போது எழும் அபயக்குரலே தேசத்துரோகியின் குரல்.
…….. நான் ஏன் தேசத்துரோகியாய் மாறினேன் என்றால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பள்ளிக்கூட வாசலிலேயே அரசாங்கத்தால் கழுத்தறுக்கப்பட்டபோது நான் தேசத்துரோகியாய் மாறினேன். நமது சுதந்திரமும் ஜனநாயகமும் வாக்குச்சாவடிக்கு வெளியிலேயே அரசாங்கத்தால் கழுத்தறுக்கப்பட்ட போது நான் தேசத்துரோகியாய் மாறினேன். கடைசியாய் நாம் என்ன உண்ண வேண்டும் என்பதைக் கூட நமது அரசாங்கம் தீர்மானித்த போது நான் தேசத்துரோகியாய் மாறினேன்.
அநீதிக்கு எதிராக போராடுபவர்களை அறம் சிதைந்த ஒரு சமூகமும், மனநிலை சிதைந்த ஒரு சமூகமும் தேசத்துரோகி என்றே குறிப்பிடுகிறது. அறப்போராட்டங்களை வன்முறை போராட்டங்களாய் சித்தரிக்கிறது. பசு வதைக்கு போராடும் இரக்கமுள்ளவர்கள் தான் இன்று சகமனிதனை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் கம்பத்தில் கட்டி வைத்து உதைப்பதையும் இரக்கமற்று கொன்று குவிப்பதையும் தினம் தினம் செய்திகளில் பார்க்கிறோம். அப்படியான அவலங்களின் போது கொந்தளிக்கும் ஒரு சாமான்யனின் குரலே தேசத்துரோகியின் குரல். ……………
என்னை சுற்றி நடக்கும் சமூக அவலங்களுக்கு அசிங்கங்களுக்கு வெறுமனே மௌன சாட்சியாய் இருந்துவிட்டு போக நான் விரும்பவில்லை. அதனால் அழுத்தமாகவும் ஆவணமாகவும் எனது குரலை பதிவு செய்யும் முயற்சியே இந்த தேசத்துரோகியின் குரல்.
இப்படியான ஒன்றை பதிவு செய்தால் எல்லாம் மாறிவிடுமா எனக் கேட்டால் தீர்க்கமான பதில் என்னிடத்தில் எதுவும் இல்லை;ஆனால் நிச்சயம் தனிமனித மனங்களில் ஏதோவொரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையிருக்கிறது எனக்கு . மாற்றம் என்பது முதலில் தனிமனித மனங்களில் உண்டாக வேண்டும். எனது சமகால மனிதர்களுக்கான விடுதலைக் குரல் இது. வரப்போகும் சந்ததிகளுக்கான எச்சரிக்கைக் குரல் இது. நடந்து முடிந்த அநீதிகளுக்கு ஞாயம் தேடும் குரல் இது.
நிறை அன்புடனும்
நீதி சம்பந்தமான பெருங்கோபங்களுடனும்
வழிப்போக்கன்