“இலக்கியா”. பெயருக்கு ஏற்றவாறு இளகிய மனம் கொண்டவள். அவளுக்கு “அழகு தேவதை” என்று ஒரு பெயரும் உண்டு. பன்னீர் ரோஜா போன்ற பால் ரோஸ் நிறம். பன்னீர் ரோஜா அதன் நிறத்திலும் மனத்திலும் எப்படி நம்மை வசியப்படுத்துகிறதோ அது போல அவளின் உதடுகளின் நிறமும் புன்னகையும் நம்மை வசியப்படுத்தும் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி மீன் போன்ற கண்கள் என புத்தகத்தில் படித்தது உண்டு. நிஜத்தில் அவளின் முகத்தில் இரண்டு மீன்கள் கண்களாக சுழன்றுக் கொண்டே இருக்கும். அவளின் கண்களே சிரிக்கும். மொத்தத்தில் அவள் ஒரு அழகி. முதுகலை தமிழ் பட்டதாரி. பன்முக தன்மையை கொண்டவள். வீட்டை பொறுப்புடன் பார்த்துக் கொள்வாள். முக்கியமாக செடிகள் வளர்ப்பதில் விருப்பம் கொண்டவள்.

“இலக்கியம்” என்றால் அப்படி ஒரு அலாதி பிரியம். இலக்கியத்தை அறிந்திருக்கும் மனிதருக்கு மட்டுமே தெரியும் இலக்கியத்தின் சுவை. தேன் சுவைத்தவனுக்கு தானே தேனின் சுவை தெரியும். அந்த தேனை சுவைத்த மங்கை இலக்கியா. சங்க இலக்கியங்களில் எந்த பாடலுக்கு விளக்கம் கேட்டாலும் அடுத்த நொடி அவளிடமிருந்து பதில் வரும். சிறு வயது முதல் தன் தாத்தா ரங்கசாமியோடு கம்பர் விழா சென்றதன் தொடர்ச்சி தான் இலக்கியத்தின் மேல் அவள் காதல் கொள்ள காரணமாயிற்று.. தாத்தாவின் கலை வாரிசு என்று கூட சொல்லலாம். அப்பா தண்டபாணி அஞ்சலகத்தில் பணி புரிகிறார். அம்மாவின் லக்ஷ்மி குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். அப்பா அம்மா செல்லம்.

இலக்கியா பட்டாம்பூச்சி போல் பறந்த வண்ணம் இருப்பாள். கல்லூரி படித்து கொண்டு இருக்கும் போதே கவிதை, சிறுகதை, பேச்சு போட்டிகளில் பலவற்றில் கலந்து கொண்டு பரிசு கோப்பைகளால் தன் வீட்டை அலங்கரித்தவள். பல நாளிதழ்களில் அவளின் படைப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கும். இது திருமணத்திற்கு முன் இலக்கியாவின் முகம்.

தண்டபாணியின் பால்ய நண்பன் மனோகர். அவனின் மகன் தான் லட்சுமணன். நல்ல பழக்க வழக்கங்கள் கொண்ட லட்சுமணனுக்கு தனது மகள் இலக்கியாவை மணமுடிக்க விருப்பம் தெரிவிக்க, மனோகரும் மகிழ்ந்து சம்மதித்தார்.

திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்தன. ரித்விக் பிறந்தான். பிள்ளை வளர்ப்பு, குடும்ப பராமரிப்பு, இணையத்தில் ஆன்லைன் பணிகளோடு சேர்ந்து இலக்கியாவின் இலக்கிய பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் லட்சுமணனிடம் அவளின் செயல்பாடுகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள். ஆனால் லட்சுமணனுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆதலால் அந்த பகிர்வுகளை தவிர்த்தாள்.

லட்சுமணனுக்கு தனது மனைவி தான் சொல்வதை கேட்கும் ஒரு கருவியாக தான் இருக்க வேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. “புரிதல்” தான் திருமண வாழ்க்கைக்கு மையம் என்பது அவனுக்கு புரியவில்லை. “சிரிப்பு” என்றால் என்ன என்று கேட்கும் ரகம் கணவன் லட்சுமணன். ஆரம்பத்தில் இலக்கியாவிற்கு அவனுடைய இயல்பு சற்று கடினமாக இருந்தது. பின்னர் அதுவே பழகி விட்டது.

திடிரென்று தண்டபாணியின் அம்மா பங்கஜம் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. இப்போது செவிலியர் பணியும் சேர்ந்து கொண்டது. வருடங்கள் கடந்தன…..

இலக்கியாவின் மறுபக்கத்தை திருமணத்திற்கு பிந்தைய முகத்தை காண போகிறோம். ஆம், இப்போது நாம் மடிப்பாகத்தில் அவள் மணமுடித்த வீட்டில் தான் இருக்கிறோம்……

“பருவமே புதிய ராகம் பாடு…. ” என்ற பாடல் இலக்கியாவின் தூக்கத்தை கலைத்தது. 4 மணிக்கே அலாரம் வைத்து இருந்தாள். இன்று கண்டிப்பாக அதை…. யோசித்த படி திரும்பி பார்த்தாள். பக்கத்தில் கணவன் லட்சுமணன் போர்வையை நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு கொரட்டை சத்தத்துடன் தூங்கி கொண்டு இருந்தான். மகன் ரித்விக் அப்பாவின் மேல் ஒரு கால் தன் மேல் ஒரு கால் போட்டுக் கொண்டு ஆயர்ந்து தூங்கி கொண்டு இருந்தான். மெதுவாக அவன் கால்களை நகர்த்தி அவனது போர்வையை சரி செய்து அவன் முகத்தை புன்னகையோடு பார்த்தாள். பத்தாம் வகுப்பு படிக்கும் ரித்விக் ஒரு வருட குழந்தை போல் நடந்து கொள்வான். அம்மா செல்லம்.

இலக்கியா மின்விளக்கு போடாமல் மெதுவாக வெளியே வந்தாள். அடுக்கு மாடி குடியிருப்பு தான்..வாசல் திறந்து தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து கோலம் போட்டு விட்டு “முதலில் போயிட்டு வந்திடனும் என யோசித்த படி உள்ளே வர… “

மாமா மனோகர் “அம்மா இலக்கியா எழுந்திருச்சிட்டியா மா…… ” என்றார்.

அத்தை பங்கஜம் குரலும் பின் தொடர்ந்தது, “எழுந்துட்டாள்.. ”

“சொல்லுங்க மாமா… ” என்றாள் இலக்கியா

“மணி என்னமா… ‘

“ஐந்து மணி மாமா… என்ன சீக்கிரம் எழுந்துட்டிங்க” என்ற மருமகளை பார்த்து… ” நேத்து ராத்திரி முழுவதும் தூக்கம் வரல…… கொஞ்சம் கஞ்சி வைச்சு கொடுக்கிறியாமா” என்றார்..

*இதோ கொண்டு வரேன் மாமா” என சொல்லிவிட்டு…

அவசர அவசரமாக பல்துலக்கி முகம் கழுவி கொண்டு கஞ்சி மாவை கலந்து வைத்தாள்.

அத்தை பங்கஜம்…. “இலக்கியா…. ” என கூப்பிட….

சொல்லுங்க அத்தை… என்று உள்ளே சென்றவளிடம், “எனக்கு டைபர் கொஞ்சம் மாற்றிவிடு.”. என அதிகார குரலில்..

“சரிங்க அத்தை… ” என்று சொல்லிய வண்ணம் அத்தையை தூக்கி அமர வைத்து சுத்தம் செய்து டைபர் மாற்றி..படுக்க வைத்தாள்.. ”

பின்னர் கலந்து வைத்த கஞ்சியை காய்ச்சி மாமனாருக்கு கொடுத்து விட்டு வருவதற்குள் மறுபடியும் அத்தையின் குரல், “இலக்கியா காபி கொண்டு வா… ”

“சரிங்க அத்தை … ”

வாசலில் இருந்த பால்பாக்கெட் , நாளிதழ் எடுத்துக் கொண்டு உள்ளே சென்று மாமனாரிடம் நாளிதழை கொடுத்து விட்டு.. காபி கலந்து அத்தைக்கு கொண்டு போய் அவர்களை எழுப்பி மடியில் அமர வைத்து ஓவ்வொரு ஸ்பூனாக கொடுத்தாள்.

லட்சுமணன் வழக்கம் போல் சிரிப்பற்ற முகத்துடன் அப்பாவிடம் நாளிதழ் வாங்கி கொண்டு கழிப்பறைக்குள் சென்றான். இனி வெளியே வர அரைமணி நேரம் ஆகும்.

போகும் முன், “இன்று போர்ட் மீடிங் 7.30 மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும். சீக்கிரமா டிபன் செய்து விடு. மத்தியம் சாப்பாடு கட்டி வைத்து விடு… ” என வரிசையாக கட்டளைகள் பிரபித்து விட்டு உள்ளே சென்று விட்டான்!

எந்த ஒரு சிந்தனையும் அற்று சமையலறை சென்று கடகடவென இட்லி சட்டினி, சாதம், சாம்பார், உருளை கிழங்கு பொறியல் செய்து அவனுக்கு சாப்பாடு கட்டி வைத்தாள்.

அரைமணி நேரம் கழித்து கழிப்பறையில் இருந்து வெளியே வந்தவன் தொலைக்காட்சியை ஆன் செய்து விட்டு, இலக்கியா… “டீ’ என்றான்.

“இதோ கொண்டு வரேங்க… ”

வயிற்றில் இருந்து வாய்வு மேல் பக்கமாக எழுவது போன்ற உணர்வு…. அந்த உணர்வை தவிர்த்தாள் “டீ” கொடுத்தவுடன் சீக்கிரம் போய்விட்டு வந்து விடனும்., என்று நினைத்தாள். ஆனால் போகவில்லை..

ரித்விக் “எழுந்திரு செல்லம் 8 மணிக்கு ஸ்கூல் வேன் வந்து விடும்.. சீக்கிரம் எழுந்து கிளம்பு” என சொல்லி கொண்டு இருக்கும் போதே மம்மி பிளிஸ் 5 மினிட் என்றான்.மம்மி எனக்கு ஸ்கூலுக்கு சப்பாத்தி உருளைக்கிழங்கு பிரை மம்மி என்றான்.

“சரிடா செல்லம்”, என மறுபடியும் சமையலறை பிரவேசம்.

லட்சுமணன் திட்டமிட்டபடி 7.30 மணிக்கு அலுவலகம் கிளம்பி விட்டான். வீட்டில் சும்மா தானே இருக்க போறே .. வங்கிக்கு போய் இந்த கடிதத்தை கொடுத்து விட்டு வா… அப்புறம் வழக்கம் போல பட்டியல் தொடர்ந்தது…

ரித்விக் குளித்து சாப்பிட்டுவிட்டு 8.00 மணிக்கு ஸ்கூல் வேனில் பள்ளிக்கு கிளம்பி விட்டான்.

அத்தை மாமாவிற்கு 8 மணிக்கு டிபன் கொடுத்து விட்டு..

ஏனோ லட்சுமணன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர “சும்மா இருக்க போறே..” இந்த வார்த்தை அவளை ஈட்டி போல் இதயத்தில் பாய்ந்து கொண்டேயிருந்தது.

காலையில் எழுந்து அத்தை மாமாவிற்கு கடமையாகவும் சேவையாகவும் செய்து, வீட்டு வேலைகள் முடித்து, மாலை சிற்றூன்டி செய்து தனது படைப்புகளை நாளிதழுக்கு அனுப்பி, மனைவியாக கணவனின் தேவைகளை பூர்த்தி செய்து ….. இப்படி வரிசை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

படிக்காத பெண் பேசவில்லை என்றால் பரவாயில்லை “பெண் ஏன் அடிமையானாள்” என்ற பெரியாரின் புத்தகத்தை படித்து பயிலரங்கு நடத்திய தானும் ஏன் அமைதியாக இருக்கிறோம் என அவளுக்கு விளங்கவில்லை.

யாரும் அவளை கட்டுபடுத்த வில்லை. அவளே அவளை கட்டுக்குள் கட்டிக் கொள்கிறாள். பிற்போக்குவாதியும் அல்ல. பின் என்ன?

மனிதர்களுக்கு பல முகங்கள் இருப்பது போல பல ஆர்வங்கள், விருப்பங்களும் உண்டு. சக மனிதர்கள் நம்மை பார்க்கும் பல பார்வைகளும் உண்டு. யுகயுகமாக மூளை சலவை செய்து நம்மை கட்டமைப்புகுள் அடக்கி வைத்துள்ளது இந்த சமூகம்.

மாதாராக பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என்று கூறமுடியாது மாதாராக வரம் பெற்று பிறந்தும் தனது அனைத்து விருப்பங்களையும் திறமைகளையும் தன்னுள் புதைந்து கொண்டு இருக்கும் மங்கைகள் மன மூடகத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். அந்த வரம் தான் வேண்டும். அலமாரியில் சமீபத்தில் அவள் வாங்கிய “சிறந்த இலக்கியவாதி விருது” அவளை பார்த்து நகைத்தது.

அவள் கல்லூரியில் அவளின் பேச்சு போட்டி அவளின் நினைவலையில்……

பெண்கள் காண தேவதைகளாகவே வலம் வருகிறார்கள். பெண் தன்னை தானே வடிவமைத்து கொள்பவள். அவள் கற்சிலை அல்ல…. அவள் ஒரு தேவதை…..சில வரிகள் தனக்கு பொருந்தும் என சிந்தனையோடு, காலைக் கடன் கழித்தல் காலவதியாகி போக… வாசல் கதவை மூடிவிட்டு கழிப்பறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் இலக்கியா.

அலாரம் அடிக்கும் சத்தம் திடுக்கிட்டு எழுந்தாள் இலக்கியா. அட கணவா? இல்லை நேற்று தோழி இராஜி வாழ்க்கையில் நடந்ததை பகிர்ந்து கொண்டாலே அந்த நினைவலையிவ் தன்னை பொறுத்தி பார்த்து விட்டாளா? கனவாக இருந்தாலும் சரி இராஜியின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி அதை மாற்றி ‌அமைப்பது தன்னுடைய முதற்கண் வேலை என‌ முடிவு செய்தாள்.

அதே நிமிடம் தன்னை யாரோ உற்று நோக்குவதை உணர்ந்தாள். வேறு யாரு அவளின் வழிகாட்டி முன்டாசு கவி பாரதி தான். கண் எதிரே புகைப்படத்தில் இருந்த கவியை நேர் கொண்டு பார்த்தாள். என் கணவு நினைவு செய் என்ற அவனது கட்டளையை ஏற்று இராஜியை மாலை சந்திக்க வேண்டும் என கட்சேவையில் பதிவு செய்தாள்.

காலை இயற்கை பிரிதலை உடலின் மொழி உணர்த்த அதனை முதலில் முடித்து தனக்கான யோக பயிற்சிக்கு தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க ஆயுதமானாள் தேவதை இலக்கியா.

திருமதி. சாந்தி சரவணன்
கோல்டன் ஜூபிலி பிளாட்
பிளாக் எண் 157/16
பாடி குப்பம் ரோடு
அண்ணா நகர் மேற்கு
சென்னை 600 040
Mob: 9884467730
Email : [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *