நூல்: “உயிர்த்தேன்”
ஆசிரியர்: தி. ஜானகிராமன்.
பக்கங்கள்: 327
1966 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கதையே இந்த நாவல். நூலகத்தில் இருந்து எடுத்து படித்த புத்தகம். புத்தகத்தில் அட்டை இல்லை. பதிப்பகம் மற்றும் விலை தெரியவில்லை. மன்னித்தருள்க.
நகர வாழ்க்கையில் சொந்தத் தொழிலில் அசூர வளர்ச்சி பெற்று செல்வச் செழிப்பில் திளைத்த பூவராகன் தனது சொந்தக் கிராமத்தில் வந்து வசிக்க முயலும் நிகழ்வில் தொடங்குகிறது இக்கதை.
தி.ஜா அவர்களின் நாவல் என்ற ஒருவித எதிர்பார்ப்புடன் படிக்கத் துவங்கியதாலோ என்னவோ ஆரம்ப பக்கங்கள் சிறிது தகவல்களாகவே கடந்ததாகவே ஓர் உணர்வு மேலிடுகிறது. கதைமாந்தர்களை அறிமுகப்படுத்தும் படலமாக இருந்தாலோ என்னவோ….?….
பூவராகனுக்கு நரசிம்மனுக்குமான (சிங்கம்) உறவு தாண்டிய நட்பு பாராட்டத்தக்கதே… இயல்பாக தொடங்கும் கதை இறுதிவரை அலட்டிக்காமல் மனித மாண்புகளைத் தூண்டிவிட்டு நகரும் தருணங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவையே…
அனுசூயாவின் அறிமுகம் தொடக்கத்தில் ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிவிட்டு இறுதியில் நாவலின் மையமாக சுழலவிட்டதில் தி.ஜா ஜொலிக்கிறார் எனலாம்.
ஆர்ப்பாட்டமில்லா எளிய வருணனைகளில் கிராமத்தின் அழகையும் அங்கு வாழும் மனிதர்களின் (ஆதிமூலம், அம்மாகடாச்சம், திருநாவு ) இயல்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார் தி.ஜா.
பூவராகன் மனைவி ரங்கநாயகியின் கதாபாத்திரம் மிக மிக காத்திரமானது. பூவராகனுக்கும் ரங்கநாயகிக்குமான உறவு இலக்கியமென்றால் நரசிம்மனுக்கும் அவரது மனைவிக்குமான உறவு தோழமையென்றால் கணேசப் பிள்ளைக்கும் செங்கம்மாவிற்குமான உறவு காதலன்றி வேறேது…
பூவராகனை மையமாகக் கொண்டு பயணிக்கும் கதையில் செங்கம்மா பிரதான பாத்திரமாக மாறுவது கலைப்படைப்பின் உச்சமன்றி வேறேது. எல்லோரிடமும் அன்பு பாராட்டத் துடிப்பதும் அடுத்தவர்களின் துயரைத் துடைக்க முதல் ஆளாக ஓடுவதும் யாவற்றிலும் தனது பங்களிப்பே முதன்மையாக இருக்க வேண்டுமென்ற மெனக்கெடலும் முக்கிய பிரமுகராக மாற்றாமல் இருக்க முடியுமா என்ன??? அதிலும் போதாக்குறைக்கு அழகின் உச்சமாக வேற இருக்கும்போது , அதில் ஆச்சரியப்படத் தேவையில்லை தானே…
சமையல்காரியாக இருந்துக் கொண்டு வீட்டின் காரியதாசியோ என்று நினைக்குமளவிற்கு ஆலோசனை வழங்கும் பாங்கெல்லாம் மிக மிக யதார்த்தமாக படைத்துள்ளார் தி.ஜா அவர்கள். பூவராகனுக்கு செங்கம்மா மேல் உண்டாகும் ஈர்ப்பு, கண்ணில் விழுந்த தார் போல் இருந்து வானநீலமாக உருமாறுவதெல்லாம் கண்ணியத்தின் வெளிப்பாடன்றோ…
பூவராகனுக்கும் செங்கம்மாவிற்கான அந்நியோன்யத்தைக் கண்டு நரசிம்மன் பொருமி புலம்புவதும் அதை அவன் மனைவி ஆற்றுப்படுத்துவதும் காவியமென்றால், செங்கம்மாவின் கணவரான கணேசப் பிள்ளையின் நம்பிக்கையும் கண்ணியமும் காப்பியமே ஆகும். ஆமருவி கதாபாத்திரம் தனித்துவமான பாத்திரப்படைப்பு. கலைஞரான ஆமருவிக்கும் பூவராகனுக்குமான நட்பு அதி அற்புதமானது. யாவரிடமும் நேசம் பாராட்ட முனையும் பூவராகனுக்கும் யாவரும் நண்பர்களாக மாறுவது சுவாரஸ்யமாகவே உள்ளது. பழனிவேலுவைத் தவிர..
இந்நாவலில் பழனிவேலு கதாபாத்திரம் மட்டுமே இறுதிவரை வில்லத்தனமானதோ என்ற மாயையைத் தருவதாக உள்ளது எனலாம். மெத்த படித்தவரென்ற போதிலும் ஊருடன் ஒட்டாமல் அதற்காக ஊரைவிட்டும் போகாமல் ஊரின் முக்கியஸ்தராக வலம் வரும் குணாதிசயம் கவனத்திற்குரியது.

பூவராகன் தனிநபராக கோவில் திருப்பணியை ஆரம்பித்து ஊரோடு இணைந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஊரின் விவசாயத்தை மேம்படுத்த துணிவதெல்லாம் யாரும் எளிதில் செய்யத் துணியாத, காணக் கிடைக்காத செயலாகத் தோன்றினாலும் இயக்குவது புதிரான உறவாக இருக்கும்போது யாவும் சாத்தியமே என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. ஊரை சாலையுடன் இணைக்கும் பாலம் போட்டப்பின்னர் அரசு அதிகாரிக்கும் பூவராகனுக்குமான உரையாடல் மிக மிக யதார்த்தமானது.
அனுசூயாவிற்கும் செங்கம்மாவிற்கான பகுதிகள் ஒவ்வொன்றும் படு சுவாரசியமாக நகர்கின்றன. கடைசி 150 பக்கங்களே நாவலின் மையச்சரடாக அடியேன் கருதுகிறேன். “காணும் யாவரிடத்திலும் அன்பு பாராட்ட வேண்டும்; உறவாட வேண்டும்” என்ற உயரிய நோக்குடன் வாழும் இரு பெண்களின் வாழ்வியலை படு சிரத்தையாகக் காட்சிபடுத்தியுள்ளார் தி.ஜா அவர்கள்.
பழனிவேலுக்கு பூவராகனின் மேல் மோதல் வருவதற்கான காரண விவரிப்பு மனித மனங்களின் மனநிலை பிரதிபிம்பமாகக் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இராவணனாகத் தோன்றும் பழனிவேலு கதாபாத்திரம் கணேசப் பிள்ளைக்கும் செங்கம்மாவிற்கும் எழுதிய கடிதத்தில் சுக்கு நூறாக உடைவதாகவே தோன்றுகிறது. காமத்தில் கண்ணிய வெளிப்பாடே இந்த “உயிர்த்தேன்”.
“நான் விரும்புகிறவர்களிடமோ என்னை விரும்புகிறவர்களிடமோ எளிதில் உறவாடும் பாக்கியம் எனக்கில்லையே” என்ற செங்கம்மாவின் தவிப்பும் “விரும்புகிறவர்களையெல்லாம் தொட்டு உறவாட வேண்டும் ” என்ற அனுசூயாவின் ஆவலுமே இருவரையும் இணைக்கும் மையமாக கருதுகிறேன்.
இந்நாவலைப் படிக்கும்போது “மரப்பசு” நாவலில் பார்த்த அம்மணி ஞாபகமே வந்து வந்து போனது. அனுசூயா + செங்கம்மா இணைந்த கலவையே அம்மணியோ (மரப்பசு) என்ற எண்ணமே பளிச்சிட்டது. மரப்பசு நாவல் 1976 இல் எழுதப்பட்டது என்பதால் அது உண்மைதானோ என்னவோ….
மரப்பசுவைப் போலவே, உயிர்த்தேனிலும் நாவலின் தலைப்பிற்கான விளக்கம் நாவலின் இறுதியில் உருவகமாகவே வந்துள்ளது. நாவலைப் படித்து உயிர்த்தேனின் தித்திப்பை, தீ வார்ப்பை சுவைத்துக் கொள்ளுங்கள்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
“உயிர்த்தேன்”
-தி.ஜானகிராமன்
பக்கங்கள் :327
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.