“மரப்பசு”
-தி. ஜானகிராமன்.
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 255
₹. 290
பல வருடங்களாக தி.ஜானகிராமன் அவர்களின் நாவல்களைப் படிக்க வேண்டுமென்பது தீராத ஆவலாக இருந்து வருகிறது. ஒரு சில சிறுகதைகள் மட்டுமே படித்துள்ளேன் என்பதே நிதர்சனம். ஒவ்வொரு முறையும் புத்தகக் கண்காட்சியில் தி.ஜா அவர்களின் நாவல்களின் விலையை பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன் திரும்பியதே உண்டு.
‘நூலகத்தில் எடுத்து படித்துக் கொள்ளலாம்’ என்ற நப்பாசையுடன் வந்து தேடி தேடி சலித்த நாட்களோ ஏராளம். இங்ஙனம் உள்ளத்தில் கனன்ற தி.ஜா நெருப்பை மேலும் பற்ற வைத்த பெரும் பொறுப்பு “கனலி” இணைய இதழ் வெளியிட்ட தி.ஜா நினைவு சிறப்பிதழுக்கேச் சேரும். தற்சமயமும் ” மோகமுள்” மற்றும் ” அம்மா வந்தாள் ” வாங்காமல், “மரப்பசு” நாவல் வாங்கி வந்தேன்… விலை மலிவு என்பதால்…
255 பக்கங்களில் “மரப்பசு” பேசும் வாழ்வியல் பொருள்களோ லட்சக்கணக்கானவைகளே…நூல் வெளிவந்த காலகட்டமோ 1975… அக்காலகட்டத்தில் இப்படியொரு தளத்தில் இயங்கும் வண்ணம் நூலினைப் படைத்த தி.ஜா அவர்கள் மரியாதைக்குரியவரே…
இப்படியொரு பெண் வாழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றும் வண்ணம் காட்சிகளை அமைத்து மாபெரும் புரட்சியே செய்துள்ளார் என்ற எண்ணமே முதலில் உதித்தது. நாவலைப் படிக்க படிக்க இப்படியொரு பெண் உண்மையிலேயே வாழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனையில் லயிக்கச் செய்துள்ளார். புனைவை அபுனைவாக தோன்றும் வண்ணம் நூலினை வடிவமைத்து மிரட்டியுள்ளார் தி.ஜா அவர்கள்.
சின்னஞ்சிறு வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான காலகட்டத்தில் ஒரு பெண்ணின் வாழ்வியலை அவளே கூறும் வடிவில் அழகுற அமைத்து அசத்தியுள்ளார் தி.ஜா அவர்கள். அம்மணி என்ற சிறுமியின் வாழ்வில் அவள் கண்டுணரும் இளம்பருவ நிகழ்வுகளே அவளின் இத்தகைய மன மாற்றத்திற்கு உருமாற்றத்திற்கு காரணமோ என்று எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை….
கதையைக் கூற ஆரம்பித்தால் ஒருநூறு பக்கங்கள் போதாது. “தொடுதல் ” மூலம் அடையும் பரவசம்…. உச்ச நிலையை அடைந்த பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பும் உன்னதத்தைக் காட்சிபடுத்திய பாங்கே நாவலில் நம்மை கரைந்து போகச் செய்கிறது. பெற்றப் பிள்ளையைக் கூட தொட்டுத் தூக்கி பழகாத பெரியவரின் கைகளில் முதன்முதலில் தஞ்சமடைந்த அம்மணி அடைவது மகிழ்ச்சியென்றால் நாம் அடைவதோ அதிர்ச்சியன்றி வேறேது.
கணவனை இழந்த மகளின் தலைமயிரை மழித்து வெள்ளையாடை அணிய வைத்து முடக்கும் இழிச்செயலை இளவயதிலேயே கண்டு, அதற்கு உறுதுணையாக இருந்த காரணத்திற்காக இதுநாள் வரை ஆசைக் கொண்டிருந்த பெரியவரை வெறுப்பதன் வழியே அம்மணி புதுப்பார்வை பெறத் தொடங்கினாள் எனலாம்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியரால் அடிக்கப்பட்ட மாணவனின் தலைவலி தீர தைலம் தடவி அதனால் அவப்பெயர் சுமந்த போதிலும் ஆசிரியரை எதிர்த்து போராடி வெற்றிக் கண்ட துணிச்சலில் அம்மணி ஜொலிக்கிறாள். மார்க்கீசிய சிந்தனையுடையவளாக மாறியதற்கான காரணம் தெளிவுற இல்லாவிட்டாலும் புரட்சிகரமான செய்திகளைப் பரப்ப பிரசங்கம் செய்து வரும் நிகழ்வுகள் புரட்சி விதைகளை விதைப்பவையே…
கோபாலி என்ற புகழ்பெற்ற இசைக்கலைஞரை சிறுவயதில் இருந்து தூரத்தில் நின்றிருந்து ரசித்து பழகிய அம்மணி தனது பெரியம்மாளின் மகளின் திருமணத்திற்கு கச்சேரி நடத்த அழைத்துச் செல்லும் காட்சி கவித்துவமானது மட்டுமன்று; அம்மணியின் வாழ்வையே புரட்டிப் போடும் காலச்சக்கரமாக உருமாறுகிறது.
சங்க இலக்கியங்களில் “,பெருந்திணை” வகையில் அமைந்த வாழ்வியலை சிறுதும் விரசமின்றி சமசரமும் செய்து கொள்ளாமல் துணிவாக படைத்திட்ட பாங்கிலேயே தி.ஜா என்றென்றும் ஜொலிக்கிறார் என்ற எண்ணம் உண்டாகிறது. வளர்ப்பு மகளாக இருந்த போதிலும் மகளின் வாழ்வைக் காப்பாற்ற அவதியுறும் பெரியம்மா கதாபாத்திரம் பாந்தமானது என்றால் பெரியப்பாவின் கதாபாத்திரமோ பவித்திரமானது. இத்துடன் முதல் பாகம் இனிதே நிறைவுற இரண்டாம் பாகமோ பூந்தொன்றலாக கிளம்பி புயலென உருவெடுத்து ஆங்கார நடனமாடியுள்ளது என்பதே கண்கூடு.
அம்மணிக்கும் கோபாலிக்கும் இடையேயான பந்தம் அன்புரசம் தவழ்கிறது என்று கருதினால் அம்மணிக்கும் பட்டாபிக்கும் இடையேயான உறவு ஆத்மார்த்தமான நிலையில் நிற்பதாகவே உணர முடிகிறது. ஒரு பெண் இங்ஙனம் இருக்க முடியுமா என்ற சிந்தனையை நம்மில் விதைத்துக் கொண்டே அம்மணியின் தீரா தாபத்தை தொடுதல் ஏக்கத்தை வேரூன்றி வளர்த்துக் கொண்டே சென்றுள்ளார் தி.ஜா அவர்கள்.
ரயில் பயணத்தில் வெளிநாட்டுத் தம்பதியரிடையே கோபாலியும் அம்மணியும் நடத்தும் உரையாடல் மிக மிக சுவாரஸ்யமான அனுபவம் தருபவன. கோபாலிக்கும் அம்மணிக்குமான ஊடல்கள் ஒவ்வொன்றும் சற்றே சிந்திக்க வைப்பனவே. காட்சியமைப்புகளும் வசனங்களும் நம்மை நாவலை விட்டு வெளியேற விடாமல் நாவலோடு இணைந்தே பயணிக்க வைப்பதாகவே அமைந்துள்ளன.
மரகதம் கதாபாத்திரம் மிக மிக சுவாரஸ்யமானது. ஒரு பெண்ணைப் பார்த்து மற்றொரு பெண் ஆணாக மாறி மோகங்கொள்ளத் துடிக்கும் வண்ணம் தேர்ந்த படைப்பாக அமைத்து தெறிக்கவிட்டுள்ளார் தி.ஜா அவர்கள். கோபாலியிடம் பாடல் கற்று நடனம் கற்று அதன்மூலம் நிகழ்ச்சிகள் நடத்தி சுயக் காலில் நின்று தனது இச்சைகளை நிவர்த்தி செய்து வந்த போதிலும் கோபாலியை அண்டியே அம்மணி வாழ்ந்தற்கான காரணங்கள் நம்மை சிந்திக்க வைப்பனவே…
ஆணிற்கும் பெண்ணிற்கும் திருமணமே வேண்டாம் என்ற பரப்புரை செய்து வாழ்ந்து காட்டி வந்த அம்மணி மரகதத்தின் திருமண வாழ்வை பார்த்து நெகிழ்வது கலாரசனையானது. ‘கை குலுக்குவதன் மூலம் தொழிலை அறிவதுடன் மட்டுமல்லாமல் மனிதனின் உள்ளத்தையும் உணர முடியும்’ என்று அம்மணி கூறுவது நம்பத்தகுந்தது தானே…
போரின் பாதிப்புகளையும் போரைத் தவிர்ப்பதற்கு முன் வைக்கும் காரணங்களும் யாவரும் சிந்தித்து பார்க்க வேண்டியவைகளே… தன் முகத்தில் காறித் துப்பிய எச்சிலின் வடுவிலேயே வாழும் இளைஞன் ‘ப்ரூஸ்’ஸின் மனப்பிதற்றலை நீக்கும் அம்மணியை அவளின் நெடுங்கால வினாவிற்கான விடையைப் பகருபவனாக அந்த இளைஞன் மாறுவதும் கலைப்படைப்பின் உச்சமெனக் கருதலாம்.
யதார்த்தத்தை மீறிய படைப்பாக தோன்றுவதைத் தவிர்க்க இயலாது என்றாலும் இந்நாவல் முன் வைக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் தவிர்க்க இயலாதவைகளே… “தாய் வழி சமூகம்” என்ற வரலாற்று உண்மையை உடலை முன் வைத்து சோம்பேறித்தனத்தை மூலதனமாக்கி இயக்க நிலையை அஸ்திரமாக்கி பெண்ணின் மோகதாபத்தை பகிரங்கமாக பேசிய நாவலை எவ்வளவு மெச்சினாலும் தகும்.
நாவலிற்கான தலைப்பு கனக்கச்சிதம். மரப்பசுவை உருவகமாகக் கொண்டு நாவலை நிறைவு செய்து பாங்கு வளரும் எழுத்தாளர்களுக்கு எளியதோர் அட்சரப்பியாசமே….
புதியதோர் அனுபவம் கைகூடுவது நிச்சயம். உடன்பாடான கருத்துகளும் கருத்து முரண்பாடுகளும் எழுவதும் நிகழலாம். பெண்ணியத்தை இப்படியும் பேசலாம் என்ற துணிவிற்காகவே மரப்பசுவை யாவரும் போற்றலாம்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நல்லதோர் படைப்பு.
நன்றி.
“மரப்பசு”
-தி.ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்.
பக்கங்கள் : 255
₹. 290
பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.