எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

கருதாப் பிழை

– மணி மீனாட்சிசுந்தரம்.

மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது. ஆனால் மனித வாழ்வோ கையில் பிடிபடாத காற்றைப்போல போக்குக் காட்டி அலைக்கழிக்கிறது. வாழ்வின் குணம் அப்படிப்பட்டதாக இருக்கிறது.

குணங்களின் உயரங்களில் ஒருவன் ஏறி நின்றாலும் அவனைக் காலிடறச் செய்யும் பண்பு கொண்டதே இவ்வாழ்வு. நுட்பமும் விசித்திரமும் கொண்ட இந்த மனித வாழ்வை, ஆசிரியப் பணியை முன்வைத்து எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ எனும் சிறுகதையும் பேசுகிறது.

/எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன் உயிரை விலையாகக் கொடுத்த/ இயேசு பெருமகனின் தலையிலிருக்கும் முள்முடி ஒரு குறியீடாக இக்கதையின் தலைப்பாகியிருக்கிறது.

அனுகூலசாமி பள்ளிக்கூட ஆசிரியர். இன்றுடன் அகவை அறுபது முடிந்து தன் பணிக்காலத்தை நிறைவு செய்கிறார்.மாணவர்கள் அவரைச் சிறப்பாக வழியனுப்ப நினைக்கிறார்கள்.பள்ளிக்கூடத்தில் அவருக்குப் பாராட்டு விழா.மாலை மாலையாய் அனுகூலசாமியின் கழுத்து நிறைகிறது.மடல்மடலாய் வாசித்த பாராட்டு உரையில் அவருடைய மனது நிறைகிறது. இவை மட்டுமல்ல, பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் நாதஸ்வரம், மேளத்துடன் மாணவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துப் போகிறார்கள். ஆசிரியர்கள் எல்லோருக்கும் இந்தச் சிறப்புக் கிடைத்துவிடாதல்லவா? அவ்வளவு சிறந்தவரா அனுகூலசாமி ஆசிரியர் என்று தோன்றுகிறதா?!

அனுகூலசாமியை வீட்டில் விட்டுவிட்டு, வந்த கூட்டம் கிளம்புகிறது.
மாணவர்கள் ஒவ்வொருவராக அவரது காலைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறார்கள்.இதெல்லாம் வேண்டாமென்று அனுகூலசாமி குன்றிப்போய் காலை இழுத்துக்கொள்கிறார்.

அப்போது ஒருவர் /” அனுகூலசாமி, நீங்க ஒரு நிஜமான கிறிஸ்தவர்.முகத்துக்குச் சொல்லலே.முப்பத்தாறு வருஷம் பிரம்பைத் தொடாம,அதிர்ந்து ஒரு வார்த்தை சொல்லாம,வாத்தியாராய் இருக்கிறதுன்னா,அந்த தெய்வத்தை விழுந்து கும்பிட்டாத்தான் என்ன?” என்கிறார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

/” வயத்திலே பொறந்த பிள்ளையைக் கூட ஒரு அடியாவது எப்பவாவது அடிக்காம இருக்கமாட்டாங்க.ஒரு வெசவாவது வெய்வாங்க.இந்த மாதிரி யாரால் இருக்க முடியும்” /என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது
/ பையன்கள் குனிந்து கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அனுகூலசாமிக்கு வாயைத் திறக்கவே முடியவில்லை.வாயைத் திறந்தால் குரல் உடைந்து நாக்குப் புரளும் போலிருந்தது./

ஆசிரியரை வீட்டில்விட வந்தவர்கள் சொல்லிக்கொண்டு கிளம்புகிறார்கள்.
கூடத்தை அடைத்துக் கொண்டிருந்த கூட்டம் கிளம்பியதும் அந்த இடம் வெறிச்சிட்டுக் கிடந்தது. / அந்தச் சூன்யமும் நெஞ்சைப் பிடுங்குகிற ஏக்கமும் முன்னே ஒரு தடவை வந்ததுண்டு.பத்துவருடம் முன்னால் தம் மகளை மாப்பிள்ளை வீட்டில் கொண்டு விட்டுவிட்டு வரும்போது வந்த அதே சூன்யம் ; அதே ஏக்கம்./

அனுகூலசாமி ஊஞ்சலில் அமர்ந்து தனக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட பொருள்களை அமைதியாகப் பார்த்தபடி இருக்கிறார்.மனைவி பெருமை பொங்கக் கணவரைப் பார்க்கிறாள்./ ” என்னைக் கூட நீங்க அடிச்சதில்லலே.அதிர்ந்து சொன்னதில்லே” என்று மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்./

அனுகூலசாமி முப்பத்தாறு வருடப் பணிக்காலத்தில் எந்த மாணவனையும் அடித்ததில்லை.அதுமட்டுமா? அதட்டிக்கூடப் பேசியதில்லை. இல்லாவிட்டால் பதவியை விட்டு ஓய்வு பெறுகிற எந்த வாத்தியாரை மேளதாளத்துடன் வீடுவரை கொண்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்?!

அனுகூலசாமி அன்பையே தனது பண்பாக வரித்துக்கொண்டவர் மட்டுமல்ல, தன்னுடன் பணி செய்யும் பிற ஆசிரியர்களிடமிருந்தும் வேறுபட்டவர். அவரது பள்ளியின் ஆசிரியர் நாரணப்பய்யர் ஊதாரியாய் ஊரெல்லாம் கடன்வாங்கி அசிங்கப்பட்டார்.பெட்டிக்கடை நாயுடு கடனுக்காக நாரணப்பய்யரை நடுரோட்டில் வளைத்துக்கொண்டு சைக்கிளைப் பிடுங்கிக் கொண்டார். ஆசிரியர் இனத்துக்கே அவமானம்!
அவராவது பரவாயில்லை.

சாமிநாதன் ஆசிரியர் போலி நகையை வங்கியில் அடமானம் வைத்து ஏமாற்றினார். கையும் களவுமாகப் பிடிபட்டவுடன் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் தனது குழித் தோட்டத்தை எழுதிக் கொடுத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.இன்னும் ஒரு ஆசிரியர்,ஓய்வு பெற்றபோது மாணவர்களைத் தயார் செய்து தனக்காகப் பணம் வசூல் செய்தவர். அனுகூலசாமி கடைசிவரை அப்பழுக்கற்ற ஆசிரியராகவே இருந்தார்.

அனுகூலசாமிக்குக் காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டு, விழாவில் தன் கணவரைப் பாராட்டிக் கொடுக்கப்பட்ட வாழ்த்து மடல்களை வாசித்துப் பார்க்கிறாள் அவர் மனைவி.
/ நடுநடுவே பெருமையுடன் அவரை நிமிர்ந்து பார்த்துக் கொண்டாள்./

/” அதெல்லாம் நெசம்னு நெனைச்சுக்காதே, இனிமே வேலைக்கு வரமுடியாது அழப்போறானேன்னு உளுவாக் காட்டியிருக்காங்க…சக்கரை முட்டாயி.” என்கிறார் அனுகூலசாமி.

/” தெரியும்.ஆனால் நெசத்தை மட்டும் சொல்லியிருக்காங்க.உங்கள் கை நீளாம, குரல் வெடுவெடுக்காம இருந்தது நெசம். தடியெடுக்காம, அதட்டாம, அப்படியே கெட்டிக்காரர்ன்னு பேர் எடுக்கறதும் கஷ்டம்தானே?”/என்று பூரிக்கிறாள் மனைவி.

அவள் சொல்வது உண்மைதான்.இத்தனை ஆண்டுகால ஆசிரியர் பணியில் மாணவர்களை அடிக்காததும், அதட்டிப் பேசாததும் பெரிய சாதனைதான்.அதைவிடப் பெரிய சாதனை,’வந்தானுக்கு வந்தான், போனானுக்குப் போனான்’ என்றில்லாமல் அனுகூலசாமி, கெட்டிக்கார ஆசிரியர் என்று பெயர் வாங்கியிருப்பது!

இயேசு /எல்லோரும் செய்த பாவங்களுக்குத் தன் உயிரையே கொடுத்தானே, அவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் சேர்த்துத்தான் கொடுத்தான்.உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுகிட்டுப் போக்கணுமா? அடிச்சு யாரைத் திருத்தமுடியும்? மனுஷனாப் பொறந்த வன் யாரும் அடியிலே நம்பிக்கை வைப்பானா?/ என்ற எண்ணமுடையவர் அனுகூலசாமி.

எத்துணை உயர்ந்த எண்ணம். கற்பித்தல் என்பதில் அடியும் வசவும் அங்கம் எனக் கருதும் உலகில் இப்படியும் ஓர் ஆசிரியரா ? என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா?!

பள்ளியில் நடந்த பாராட்டு விழாவும், வாசிக்கப்பட்ட புகழுரைகளும் ஆசிரியரின் மனத்தில் ஓடுகின்றன.
வீட்டில் மனைவியின் பாராட்டும் ஆசிரியரை பெருமகிழ்வில் தள்ளுகிறது.

/ அனுகூலசாமி யோசித்துப் பார்த்தார்.அதுவும் உண்மைதான் என்று பட்டது.அவருக்குக் கர்வப்பட உரிமை உண்டு என்று தோன்றியது/

அப்போது கதவை யாரோ தட்டுகிறார்கள். மனைவி சென்று கதவைத் திறக்கிறார். ஆசிரியரின் பழைய மாணவன் ஆறுமுகம், இப்போது பள்ளியில் படிக்கும் சின்னச்சாமி, அவனது அம்மா மூவரும் வந்திருக்கிறார்கள்.ஆசிரியர் வியப்புடன் ‘ என்ன சேதி?’ என்று கேட்கிறார்.

சின்னச்சாமி அம்மா அவனை நோக்கிச் “சொல்லுடா ? ” என்கிறாள்.சின்னச்சாமி தலையைக் குனிந்தபடி பேசாமல் இருக்கிறான். அவன் முகம் கோணுகிறது; உதடு நடுங்குகிறது.

/” ஒரு வருசமாத் துடிச்சுப் போயிட்டுதுங்க அது” என்றாள் அம்மா”/

அனுகூலசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. /”ஆமாம் சார். நீங்க இனிமேல் பேசலாம்னு சொல்லிடுங்க சார்”/ என்கிறான் ஆறுமுகம்.

அனுகூலசாமி யோசித்துப் பார்க்கிறார்.ஒன்றும் விளங்கவில்லை.

/” ஆறுமுகம் சொன்னான், ” சார், போன வருஷம் இவன் காயாரோகணத்தோட இங்கிலீஷ் புத்தகத்தைத் திருடிட்டுப் போயி, வேற பேர் ஒட்டி, கடையிலே பாதி விலைக்கு வித்துப்பிட்டான். நான்தான் அதைக் கண்டுபிடிச்சு உங்களிட்ட கொண்டு நிறுத்தினேன்.

நீங்க அவனைச் சித்த நேரம் பாத்திங்க.
” நம்ம கிளாசிலே ஒரு பைய இதுவரைக்கும் இந்த மாதிரிப் பண்ணினதில்லே. இனிமே இந்தப் பயலோட ஒருத்தரும் பேசாதீங்கடா”ன்னு சொன்னீங்க”/

ஆறுமுகம் சொல்லச் சொல்ல சின்னச்சாமி அழுதபடி இருக்கிறான்.

ஆசிரியர் அப்படிச் சொன்னதில் இருந்து ஒரு வருடமாக
மாணவர்கள் யாரும்
சின்னச்சாமியிடம் பேசுவதில்லை.
ஆசிரியரின் பணிஓய்வு விழாவுக்கு மாணவர்கள் பணம் திரட்டியபோது சின்னச்சாமியும் பணம் கொடுத்திருக்கிறான். அவனிடம் மட்டும் வாங்க மறுத்திருக்கிறார்கள்.
சின்னச்சாமி தன் வீட்டில் சொல்லி அழுதிருக்கிறான். அம்மா அவனை ஆசிரியர் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

இப்போது அனுகூலசாமிக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.இவ்வளவு கடுமையான தண்டனையா கொடுத்தோம்? என்று தன்னையே குறைபட்டுக் கொள்கிறார்.
இவ்வளவு கண்டிப்பாகவா நடந்து கொண்டோம்? என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறார்.

/சின்னையா அழாதடா ஏய்!” என்கிறார் அவர்./

/ நாங்கெல்லாம் அவனோட பேசலாம்னு சொல்லுங்க சார், நீங்க”/என்கிறான் ஆறுமுகம்.

/ ” ஒரு வருஷமா அவன் சொரத்தாவே இல்லீங்க.எப்பவும் சிரிச்சுப் பேசிட்டு இருப்பான்.இப்ப சரியாப் பேசுறதில்லே.ஒரு வார்த்தை பேசுவான்.போயிடுவான்.என்னமோ அதுங்க மனசிலே இருக்கிறது நமக்குத் தெரியுதுங்களா? தங்கச்சிகளோட சரியாப் பேசறதில்லை. இன்னிக்கிச் சாயங்காலம்தான் எல்லாத்தியும் சொன்னான். வாத்தியாரை இன்னக்கிப் பார்த்தாத்தான் உண்டுன்னான். வந்தேன்.நீங்க பெரிய மனசு பண்ணுங்க”/ என்கிறாள் சின்னச்சாமியின் அம்மா.

/அனுகூலசாமி கையும் களவுமாகப் பிடிபட்டு விழித்தார். புழுத்துடிப்பாக அவர் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது./

மாணவர்களை ஒருபோதும் அடிக்காத, திட்டாத ஆசிரியர் என்று பெருமைபட்டுக் கொண்டிருந்தோமே,
மாணவனை அடிப்பதும் திட்டுவதும் தவறான செயல்கள் என்றால் இது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? அடியும் திட்டும் கூட கொஞ்ச நேரத்தில் மறந்துவிடுமே? ஆனால், சிறிய தவறுக்காக மாணவனை ஒருவருடம் துயரக் கடலில் தள்ளியது என்ன நியாயம்? நாமா சிறந்த ஆசிரியர்? நமக்கெதற்கு இவ்வளவு புகழ்ச்சி? அந்த நொடியில் ஒரு நல்லாசிரியரான
அனுகூலசாமியின் மனதில் இப்படியெல்லாம் தோன்றியிருக்கத்தானே செய்யும்?

/”ரொம்ப நல்ல பையன் சார்.அன்னிக்கு ஏதோ புத்தி பிசகாப் பண்ணிட்டான்.அப்புறம் ஒரு புகார் கிடையாது சார் அவன் மேலே”/ என்கிறான் ஆறுமுகம்.
ஆசிரியரின் பணி நிறைவுக்கு சின்னச்சாமி தரும் அன்பளிப்பையும் வாங்கிக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சுகிறார்கள் ஆறுமுகமும் சின்னச்சாமியும் அவன் அம்மாவும்.

அனுகூலசாமிக்குத் தன் பணி ஓய்வு நாளில்‌, தன்னைப் பற்றித் தான் கொண்டிருந்த உயரத்தில் இருந்து தலை குப்புறத் தள்ளிவிட்டதைப் போல் இருந்தது.
இந்த வாழ்க்கை அப்படிப்பட்டதா? அல்லது இந்த ஆசிரியப் பணி அப்படிப்பட்டதா? கை நீட்டிக் குற்றத்திற்கு ஆளாகாமல் ஒருவன் இந்தப் பிறவியைக் கடந்துவிட முடியுமா என்ன?!

/” இந்தப் பயலுங்க இப்படிப் பண்ணுவாங்கன்னு தெரியாமே போயிடிச்சே எனக்கு” / என்று புழுங்குகிறார் ஆசிரியர்.

/”நீங்க சொன்னதைத் தானே செய்தாங்க”/ என்கிறாள் மனைவி.

/ ” அது சரி” என்று லேசாகச் சிரித்தார் அவர். அழுகைதான் சிரிப்பாக வந்தது./
வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் தலையில் முள்முடியுடன் இருக்கும் இயேசு பெருமானின் படத்தைப் பார்க்கிறார்.
/ மேலே படத்தில் தோன்றிய முள்முடி அவர் தலையை ஒருமுறை அழுத்திற்று/ என்பதுடன் கதை நிறைவுக்கு வருகிறது.

எல்லாம் அறிந்துவிட்டோம் என்ற கணத்திலே கூட வாழ்க்கை புதிதாக இன்னொன்றைக் கட்டுக்கொடுக்கத்தான் செய்கிறது இல்லையா?

எப்படிப்பட்ட ஆசிரியர்?
எப்படிப்பட்ட மாணவர்கள்?
எப்படிப்பட்ட பெற்றோர்?
என்ற கேள்விகளையெல்லாம் இக்கதை எழுப்புகிறதென நீங்கள் எண்ணுகிறீர்களா?

இவைகளுடன் ‘ எப்படிப்பட்டது இந்த வாழ்க்கை?’ என்ற வினாவையும் எழுப்புவதாலேயே இக்கதை சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகிறது.

உதவிய நூல் :-

சர்வதேசக் கதைகள், தொகுப்பாசிரியர் சா.கந்தசாமி,கவிதா வெளியீடு, சென்னை – 600017

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. நாகேந்திரன் இ

    மிகவும் அருமையான கதை. முள்முடி எதிர்பாராத தருணத்தில் ஆசிரியருக்குச் சூடுவது திருப்பம். ஆசிரியர் மனநிலையையும் மாணவர்கள் நிலையையும் ஒரு கணத்தில் நேர்கோட்டில் நிறுத்தி, தாங்கள் கேட்கும் வினா சிறப்பு ஐயா. வாழ்த்துகள்.

  2. Latha

    தேசிய ஆசிரியரின் மான் இன்று எமது ஆசிரியர் குழுவில் பரிந்துரை செய்யப்பட்ட செய்யப்பட்ட “முள் முடி “நூலைஉடனே படிக்க வேண்டும் என்ற ஆவலில் இணையதளத்தில் தேட கிடைத்தது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் கட்டுரை .நன்று.. முள் முடி மனதை உறுத்துகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *