எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய ‘சுளிப்பு’ என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை
என்ன செய்வார் ஆசிரியர்!?
– மணி மீனாட்சிசுந்தரம்.
இலக்கியம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது. அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அது தருகிறதா? என்றால் வெட்டு ஒன்று துண்டு என்பது மாதிரி அல்லாமல் பழத்திற்குள் இருக்கின்ற விதை போலவும், வெளிச்சத்திற்குள் இருக்கின்ற நிறம் போலவும் தீர்வுகளைத் தராமல் இல்லை.
வகுப்பறையில் ஆசிரியருக்கு பாடத்தை எப்படியாவது மாணவனுக்குப் புகுத்திவிட வேண்டுமென்பது கவலை.
மாணவனுக்கோ வேறு வேறு கவலைகள்.
கவிஞர் ஞானக்கூத்தன் ‘ வீட்டுக் கணக்கு’ என்றொரு கவிதை எழுதியிருப்பார்,
/பத்துப் பேர்கள் ஒரு வேலையை
நான்கு நாள்களில் முடிப்பார்கள் என்றால்
எட்டுப் பேர்கள் அதே வேலையை
எத்தனை நாள்களில் முடிப்பார்கள் என்று
ஆசிரியர் மாணவர்களை
எழுதிக்கொள்ளச் சொன்னதும்
எனக்குத் தலை சுற்றியது
வலதுபக்கம் அமர்ந்திருந்த
ராம்சிங் கண்ணீர் விட்டான்
இதற்கு ஏன் அழுகிறாய் என்றேன்
‘எட்டுப் பேர்களில் ஒருவராக என்
அப்பா கிடையாதே’ என்றான்
எனக்கு மீண்டும் தலை சுற்றிற்று./
இந்தக் கவிதையிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு கவலை.
இப்படி இருந்தால் ஆசிரியர்களின் நிலைமை?
தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளரான தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) ஆசிரியராகப் பத்தாண்டுகள் பணியாற்றியவர்.ஆசிரியராக கற்பித்தல் பணியில் உள்ள இடையூறுகளை அவர் உணர்ந்திருக்கலாம். அவரது ‘ சுளிப்பு’ என்ற சிறுகதையில் ஆசிரியர் படும் பாட்டை நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.
தொடக்கப்பள்ளியில் கதை தொடங்குகிறது.ஆசிரியர் மாணவனுக்குக் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.வெறும் வாயை மட்டும் வைத்துக்கொண்டு பாடம் நடத்தாமல் ஒருகட்டு மரக்குச்சி, சுளுந்துக்குச்சி ஆகிய துணைக் கருவிகளைக் கையில் வைத்துக்கொண்டு கற்பிக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர் மாணவனிடம், “மூணும் மூணும் எத்தனை? “என்று கேட்கிறார்.
மாணவன் “ஆறு” என்று பதில் கூறுகிறான். இப்போது ஆசிரியர் பாடத்தில் எளிமையிலிருந்து கடினப்பகுதிக்குச் செல்கிறார்.
“உங்கிட்ட மூணு குச்சி இருக்கு.உங்க அண்ணா கிட்ட மூணு குச்சி இருக்கு” எனக் கேள்வியை ஆசிரியர் முடிக்கும் முன்பே மாணவன் ” எனக்கு அண்ணா இல்லையே?” என்கிறான்.
” சரி உங்க அக்கா கிட்ட இருக்கு”
என்றால் “அக்காவும் இல்லை” என்கிறான்.
இப்போது ஆசிரியர் தன்னைச் சேர்த்து, “என்னிடம் மூன்று குச்சி இருக்கிறது.உன்னிடம் என்னிடம் இருப்பதைவிட மூன்று குச்சி அதிகமாக
இருக்கிறது.நம் இரண்டு பேரிடமும் சேர்த்து மொத்தம் எத்தனை குச்சிகள் உள்ளன?” என்று கேட்கிறார்.
மாணவன் ” ஆறு” என்கிறான்.ஆசிரியர் திரும்பவும் கேட்கிறார்.குச்சிகளை மாற்றிக் கொடுத்துக் கேட்கிறார்.மாணவனின் பதில் “ஆறாகவே” இருக்கிறது.
ஆசிரியர் விடுவதாக இல்லை.குச்சிகளை விட்டுவிட்டுப் பழத்தை வைத்துக் கேட்கிறார்,
” எங்கிட்ட மூணு மாம்பழம் இருக்கு.உங்கிட்ட அதைவிட மூணு மாம்பழம் அதிகமா இருக்கு.அப்ப மொத்தம் எத்தனை மாம்பழம்?”
பையன் இப்போது ஆசிரியர் எதிர்பார்க்காத வேறு ஒரு பதிலைச் சொல்கிறான், ” எனக்கு மாம்பழம் பிடிக்காது, சாப்பிட்டா சிரங்கு வரும்”
என்கிறான்.
“சரி உனக்கு எந்தப் பழம் ரொம்பக் பிடிக்கும்?”
” நாகப்பழம்”
மாணவனுக்குப் பிடித்த நாகப்பழத்தை வைத்துக் கணக்கைத் தொடர்கிறார்.அரை மணி நேரமாகப் போராடியும் ஆசிரியர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
மற்ற குழந்தைகள் சலித்துப்போய் விளையாடத் தொடங்குகின்றன.பையன் கைகளைப் பிசைகிறான்;கால்களை மாற்றி மாற்றி நிற்கிறான். மாணவன் அழகாய் இருக்கிறான்.அவனைப் பார்த்தால் சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்சத் தோணுகிறது.ஆனால்,பாடம்தான்
வரமாட்டேன் என்கிறது. ஆசிரியரும் விடுவதாக இல்லை.
ஆசிரியரின் தொடர்ச்சியான பிடிவாதத்தைக் கண்டு “மாணவனின் முகம் இடுங்கிற்று.
புருவம் சுருங்கிற்று”. மாணவன் தன்னை இப்படிப் பார்க்கும் தோரணை ஆசிரியருக்கு அவரது மனைவியை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
அந்தப் பார்வை, ஆசிரியரின் திருமணத்தில் அவரை அவரது மனைவி பார்த்த பார்வையாக இருக்கிறது.ஆமாம்.ஆசிரியருக்குக் கொஞ்சம் அழகு குறைவு. ” அவன் நல்ல அட்டைக் கறுப்பு,உச்சி முதல் பாதம் வரையில் அம்மி – கல்லுரலைப் புளிந்தாற்போல அம்மை வடு,அகல மூக்கு,சோழிப் பல்.”கல்யாணப் பந்தலில்தான் மணப்பெண் அவரை ஏறிட்டுப் பார்க்கிறாள்.
” பத்மா நிமிர்ந்து பார்த்தாள் ஒரு புன்னகையுடன். அதே கணம் முகத்தில் ஒரு சுளிப்பு.என்னமோ குத்தினதுபோல் ஒரு வலி.ஒரு பயம்…சிறிது நேரம் அவள் மார்பு, கை, பாதம் எல்லாம் சிலுசிலுப்பதுபோல் ஒரு சிறு அதிர்வு.அதே சுளிப்போடு ஒரு பார்வை.மீண்டும் தலை குனிந்தது”.
பத்மா மூக்கும் முழியுமாக, மாநிறமாக, பளிச்சென்று இருக்கிறாள்.
திருமணம் முடியும் வரையில் அவள் முகம் அந்தச் சுளிப்போடுதான் இருக்கிறது. இப்போது, மனைவி பார்த்த அதே பார்வையை மாணவனும் பார்க்கிறான். மனைவியிடம் இப்போது அந்தச் சுளிப்பு இல்லை. மனைவியைச் ஜெயித்த ஆசிரியர் மாணவனைச் ஜெயிக்க முடியாமல் பரிதாபமாக நிற்கிறார்.
ஆசிரியர் மாணவனை வெறித்துப் பார்க்கிறார்.
” உங்கப்பா என்ன பண்றார்?”
” செத்துப் போய்ட்டார்” கண்ணில் அழுகை இல்லை.
“அம்மா?”
“அம்மாவும் செத்துப் போயிட்டா?”
மாமாவிடம் வளர்வதாகவும் அவர் திண்பண்டங்களை விற்கும் தொழில் செய்வதாகவும் கூறுகிறான் பையன்.
அப்போதும் ஆசிரியர் விடாமல், “உனக்குக் கணக்கு நன்றாகத் தெரிந்தால்தானே உன்னை வளர்க்கும் மாமாவுக்குத் தொழிலில் உதவ முடியும்” என்கிறார்.
பையன் இப்போது ” வயத்தை வலிக்கிறது.போகணும் போகணும்” என்று இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டுகிறான். “ஓடு ஓடு” என்று ஆசிரியர் விரட்டுகிறார்.மாணவர்கள் சிரிக்கிறார்கள்.அப்போது ஒரு மாணவன் எழுந்து ” பொய் சார்.அவனுக்கு அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள்.கூடவே ரெண்டு அண்ணனும் ஒரு தங்கச்சியும் இருக்கிறார்கள்” என்கிறான்.
இவ்வளவு நேரமும் ஆசிரியர் கணக்கை அவன் மண்டையில் ஏற்றப் போராடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியரிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்ற சிந்தனையே மாணவனிடம் இருந்திருக்கிறது.இதற்காக அவன் சொன்னவைதான் அடுக்கடுக்கான அத்தனைப் பொய்களும்.
பாடம் புரியவில்லை,இதற்குத் தன்னால் விடை சொல்ல இயலாது என்று நம்பிக்கை இழக்கும் மாணவன், புரிந்து கொள்வதில் ஆர்வமற்ற மாணவன் அந்த நொடியிலேயே கற்றல் செயலில் இருந்து வெளியேறிவிடுவான். இது கற்பித்தலில் ஏற்படும் பாதகமான ஒரு நிகழ்வு .ஆசிரியர் அங்குத் தலைகீழாக நின்றாலும் கற்பித்தலில் ஒரு அங்குலத்தைக் கூட நகர்த்த முடியாது.
பாவம், ஆசிரியருக்கு அது தெரியவில்லை. எளிதாக ஜெயிக்க மாணவன் என்ன அவரின் மனைவியா?
“வரட்டும்” என்று காத்திருக்கிறார் ஆசிரியர்.மாணவன் என்ன ஆசிரியரைப் போல ஏமாளியா? காலையில் போனவன் கடைசி மணி அடித்தும் வரவேயில்லை.இப்போது ஆசிரியருக்கு வயிற்றில் புளி.
புத்தக மூட்டையை வேறு வைத்துவிட்டுப் போய்விட்டான்.” எங்க தெருதான் சார், நான் கொடுக்கிறேன்” என்கிறான் ஒருவன்.
“வேண்டாம், வீட்டைக் காட்டு.நானும் வருகிறேன்” என்று ஆசிரியரும் கிளம்பிச் செல்கிறார்.வேறு என்ன செய்வது? வராத கணக்கை வா வா என்று அடம்பிடித்து அழைத்ததற்கு ஆசிரியருக்குத் தண்டனை வேண்டாமா?
இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து ஒரு சந்துக்குள் நுழைகிறார்கள்.”அடி வைப்பீங்களா சார் அவனுக்கு ?” உடன் வரும் மாணவன் ஆசைஆசையாகக் கேட்கிறான். அவன் பிரச்சனை அவனுக்கு!
“இவுங்க தான் சார் அவன் அம்மா”
என்று எதிரே வந்த ஒரு அம்மாவைக் காட்டுகிறான் மாணவன்.ஆசிரியர் அவருக்கு வணக்கம் சொல்கிறார்.
” வயித்து வலின்னு ஓடி வந்தான் குழந்தை.புஸ்தகப் பையைக் கூட வச்சுட்டு வந்துட்டேன்னு அழுதான்.அதான் எடுத்து வரலாம்னு கிளம்பினேன் ” என்கிறாள் அவள்.
” இப்ப தேவலையா?”
” தேவலை. தூங்குறான்”.
ஆசிரியர் திரும்பி விடுகிறார்.வழி காட்டின பையன், ” ஏன் சார், நீங்க ஒண்ணும் சொல்லலே நட்டு அம்மாகிட்ட” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்.
“சொன்னா அடிக்க மாட்டாங்களா” என்கிறார் ஆசிரியர்.
“அடிச்சாதான் சார், நாளைக்குப் பொய் சொல்லாமல் இருப்பான்” என்கிறான் மாணவன். மாணவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையும் மாணவர்களே அறிந்திருக்கிறார்கள்.ஆனால், ஆசிரியர்தாம் மாணவர்களின் சொல்பேச்சுக் கேட்பதே இல்லையே?!
மாணவனை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியரிடம் துளிகூட இல்லை. அவர் பாடத்தை மாணவனுக்குப் புரிய வைக்க முயலும் போதும், மாணவன் பொய்களாகச் சொல்லி ஏமாற்றிய போதும் அவர் கோபப்படவே இல்லை. அடித்தால்தான் திருந்துவான் என்பது மாணவனின் கருத்தாகவே இருக்கிறது.பல சமயங்களில் மாணவர்கள் இப்படி ஆசிரியருக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
ஆசிரியரை மாட்டி விடுவதில் எப்போதும் அவர்களுக்கு அலாதிப் பிரியம்.ஆசிரியர் வேகமாகத் தன் வீட்டை நோக்கிச் செல்வதுடன் கதை முடிகிறது.
எழுத்தாளர் தி.ஜானகிராமனுக்கே உரிய குறும்புத்தனத்திற்கு இக்கதையில் எல்லையில்லை.(அதைக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்க!).
மாணவனின் தவறுக்கு ஆசிரியர் கோபம் கொள்வது நியாயமில்லை ; எப்படியாவது பாட அறிவை புரிய வைக்க வேண்டியது ஆசிரியர் கடமை என்ற எண்ணம் இக்கதையில் வரும் ஆசிரியரின் விருப்பமாக மட்டுமல்லாமல் ஆசிரிய எழுத்தாளரின் கருத்தாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.அது எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுதானே.
உதவிய நூல்:
1.தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) சிறுகதைகள்,
(பதிப்பாசிரியர் N.சுகுமாரன்) காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001
2.ஞானக்கூத்தன் கவிதைகள்
( முழுத்தொகுப்பு)
காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001
*****************
கட்டுரை ஆசிரியர் குறிப்பு :
மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர். முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இன்றைய காலத்திற்கும் உகந்த ,மாணவர்கள் ஆசிரியர்கள் சார்ந்த,நகைச்சுவை மிகுந்த , அதே சமயம் இருவரின் மனநிலை உளவியல் சுட்டல் மிகவும் சிறப்பு ஐயா. உங்கள் பார்வை மிகவும் சிறப்பானது. வாழ்த்துகள் ஐயா
எழுத்தாளர் தி ஜா ரா தனது ‘சுலிப்பு’ என்ற தமிழ் சிறுகதையில் வித்தியாசமான ஒன்றைக் குறிப்பிடுகிறார் என்று நான் நினைக்கிறேன். மனிதனின் ஈகோ உடைக்கப்படும்போதோ அல்லது அவரது அடையாளம் சவால் செய்யப்படும்போதோ, அவர் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள விரைவாக எதிர்வினையாற்றுகிறார். ஆனால் அவர் சிரித்துக்கொண்டே அதைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தால், முடிந்தால், செக்ஸ் மட்டுமே ஒரே வழி. இது ஒரு விலங்கு உள்ளுணர்வாக இருக்கலாம், ஆனால் வேறு வழியில்லை. இத்தகைய அழுத்தமான தருணங்களுக்குப் பிறகு செக்ஸ் மூலம் வெளியேற முடியாதவர்கள், மிகுந்த கோபத்தில் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். அதனால்தான் நாம் மக்களை மோசமான வார்த்தைகளிலும், தங்களைச் சார்ந்தவர்களைத் தாக்குவதிலும் சந்திக்கிறோம். கதையின் நாயகனுக்கு தனது நிறம் மற்றும் உடல் வடிவம் குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அவர் செக்ஸ் மூலம் மன வளைவைத் தட்டையாக்குகிறார், இதனால் அவர் அதற்குப் பழக்கப்படுகிறார்.