நூல் அறிமுகம்: ‘கல்மரம்’- திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய கட்டிடத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லிடும் நாவல்.
–பெ.விஜயகுமார்.
இலக்கிய வகைமைகளில் நாவல் தனித்துவமானது. காவியத்தின் இன்றைய வடிவம் என்று அழைக்கப்பட்டாலும் காவியத்தில் இருக்கும் போதாமையையும் நீக்கி உன்னதமான இலக்கிய வடிவமாக நாவல் உருக்கொண்டுள்ளது. பிரான்சு நாட்டு தத்துவவியலாளர் சார்த்ர தத்துவத்தின் கலை வடிவமாக நாவலைக் கருதினார். ’’நாவல் தெருவழியே நடமாடும் கண்ணாடி’’ என்பர். 1876இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய தமிழின் முதல் நாவலான ’பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி இன்றுவரை தமிழ் நாவல் இலக்கியம் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய திலகவதி தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்துள்ள கொடை ஏராளம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று எழுதிக் குவித்துள்ளார். 1901இல் வெளிவந்த ’கல்மரம்’ நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதையும் திலகவதி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை இயக்குனரான திலகவதி காவல்துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொணர்ந்த பெருமைக்குரியவர். காவலர்கள் பெண்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ‘Gender Sensitization’ என்ற விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தி வெற்றிகண்டவர். காவல்துறைப் பணியில் காட்டிய அதே அக்கறையை எழுத்துப் பணிக்கும் காட்டியவர். ராஜம் கிருஷ்ணன் ‘கரிப்பு மணிகள்’ நாவல் எழுதுவதற்கு உப்பளத் தொழிலாளர்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களின் வாழ்வியல் சோகங்களை அறிந்துகொண்ட பின்னரே அந்நாவலை எழுதினார். இதேபோல் ’கல்மரம்’ நாவல் எழுதுவதற்கு திலகவதி கட்டிடத் தொழிலாளர்களின் நிலைமைகளைத் தெரிந்துகொள்ள களஆய்வு மேற்கொண்டார். இத்தகு படைப்புகள் ஆவணப் படைப்புகள் (Documentary Novels) என்றழைக்கப்படுகின்றன. ’கல்மரம்’ நாவலில் கட்டிடத் தொழிலாளர்களை சதையும், இரத்தமுமாக உயிர்ப்புடன் வாழும் மனிதர்களாகச் சந்திக்கிறோம். கட்டிடத் தொழிலாளர்களின் சொல்லித்தீராத துயரங்களைச் சொல்வதுடன் அதற்கான தீர்வையும் நாவல் சுட்டிக்காட்டுகிறது. இவ்வகையில் நாவல் ஒரு சோசலிச யதார்த்தவாத படைப்பாகவும் மிளிர்கிறது.
தாஜ்மஹல், தஞ்சை பெரிய கோயில், மைசூர் கிருஷ்ண ராஜ சாகர் அணை போன்ற கட்டிடக் கலையின் அற்புதங்களைப் பார்த்து வியக்கிறோம். இக்கட்டிடங்களைக் காட்டுவதற்குக் காரணமாயிருந்த அன்றைய ஆட்சியாளர்களின் பெயராலேயே இக்கட்டிடங்கள் நினைவுகூரப்படுகின்றன. வியர்வையும், இரத்தமும் சிந்தி இக்கட்டிடங்களைக் கட்டிய தொழிலாளிகளின் உழைப்பை நாம் நினைவுகூர்வதில்லை. கட்டிங்களில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்படுவதில்லை.
உயர்ந்த சாரங்கள் மீது நின்று கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தங்கள் உயிரைப் பணயம்வைத்து வானுயர்ந்த கட்டிடங்களைக் கட்டும் தொழிலாளிகளுக்கு எந்தவொரு பாதுகாப்பும் கிடையாது. கன்ஸ்டரக்சன் நிறுவனங்கள் தொழிலாளிகளின் பாதுகாப்புக்குத் தேவையான இரும்புத் தொப்பி, கையுறை, காலுறை போன்ற சாதனங்கள் ஏதும் கொடுப்பதில்லை. விபத்தினால் உயிர்ப்பலி ஏற்படும்போதோ அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனத்துடன் வாழ நேர்ந்திட்டாலோ அதற்கான இழப்பீடு ஏதும் வழங்குவதில்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் லாபம் ஒன்றையே இலக்காகச் செயல்படும் இந்நிறுவனங்கள் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டியே லாபம் ஈட்டுகின்றன. தொழிலாளிகளின் உபரி உழைப்பில் கிடைப்பதே முதலாளிகளின் லாபம் என்று கார்ல் மார்க்ஸ் அன்றே பொருளாதார விளக்கத்தைக் கூறியுள்ளாரே!
2009இல் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சியின்போது இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வலியுறுத்திப் போராடியதால் ’கட்டுமானத் தொழிலாளர்கள் நல்வாழ்வுக் குழு’ உருவாக்கப்பட்டது. இதனால் இன்று கட்டிடத் தொழிலாளர்கள் ஓரளவுக்குப் பாதுகாப்பு பெறுகின்றனர். காப்பீடுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நாவல் எழுதப்பட்ட காலத்தில் (2001) இத்தகு உரிமைகள் ஏதும் இருக்கவில்லை என்பது நாம் மனதில் கொள்ள வேண்டும்.
ஆதிலட்சுமி என்ற அபலைப் பெண்ணின் குடும்பம் அனுபவிக்கும் அளவில்லா சிரமங்களை நாவல் சித்தரிக்கிறது. கொத்தனார் வேலை செய்த இவரின் கணவர் கட்டுமானப் பணியின்போது கீழே விழுந்து உயிரிழக்கிறார். ஆதிலட்சுமி வீட்டு வேலைகள் செய்து தன் மூன்று பிள்ளகளையும் வளர்க்கிறார். மகன் காசி கொத்தனார் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கிறான். ஆதிலட்சுமி அதைக் கடுமையாக எதிர்க்கிறார். கணவனை இழந்த இந்த ஆபத்தான தொழிலில் தன்னுடைய மகனையும் இழக்க அவர் தயாரில்லை. வேறு வேலைகள் கிடைக்காமல் காசி திகைக்கிறான்.
மூத்த மகள் கன்னியம்மாள் வாக்கப்பட்ட இடத்தில் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறாள். கணவன் குடித்துக் கும்மாளம் அடிக்கிறான். அவளின் நாத்தனார் பிரசவத்திற்கு தாய்வீடு வருகிறாள். மூட நம்பிக்கையில் தோய்ந்தது நம் சமூகம் என்பதறிவோம். இரண்டு கர்ப்பினிப் பெண்கள் ஒருவருக்கொருவர் பார்க்கக்கூடாதாம்! மகள் பிரசவத்திற்காகப் பிறந்தகம் வந்ததும் கன்னியம்மாளை வீட்டைவிட்டு துரத்துகிறார் அவர் மாமியார். தாய் வீட்டில் தஞ்சம் புகுகிறாள் கன்னியம்மாள். கடைசி மகள் காவேரி கொஞ்சம் படித்தவள். வேலை தேடி அலைகிறாள்.
வேலையின்றித் தவிக்கும் காசிக்குப் பெண் கொடுக்க முன்வருகிறது ஊரில் இருக்கும் ஒரு சற்று வசதியான குடும்பம். ராகினி அவன் மனைவியாக அந்தக் குடிசைக்கு வந்து சேருகிறாள். இளமையில் வறுமை கொடியது. அதிலும் கொடியது வறுமையில் தாம்பத்தியம். சின்னக் குடிசையில் தனி அறை இல்லாமல் தாம்பத்திய சுகம் அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர் தம்பதிகள். ராகினி கணவன் மீது கோபம்கொள்கிறாள். ராகினியின் அண்ணன் துரை ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறான். ஒரு கன்ஸ்டரக்சன் நிறுவனத்தில் காவால்காரன் வேலை.
நிறுவத்தின் ஓனர், ஆர்.எம்.எம். என்றழைக்கப்படும் ஒரு கறார் பேர்வழி. காசியை அவனுக்கு அறிமுகம் செய்துவைக்கிறான் துரை. ‘’அதோ! அந்த ஷெட்டில் நீ தங்க வேண்டும். தண்ணி அடிக்கவோ; வெளியே எங்கேயும் போகவோ கூடாது. இங்கே இருக்கும் கட்டுமான சாமான்களுக்கு நீதான் பொறுப்பு. கல்யாணம் ஆகியிருந்தால் குடும்பத்துடன் தங்கிக்கொள்”, என்று அதிகார தோரணையுடன் கூறுகிறான். ராகினியுடன் அந்த ஷெட்டில் குடியேறுகிறான் காசி. ராகினிக்கு ஒரே மகிழ்ச்சி. அவள் விரும்பிய தனிக் குடித்தனம் கிடைத்தது. பரந்து விரிந்து கிடந்த அந்த இடத்தில் கட்டுமானப் பொருட்கள் வந்து குவிந்தன. ஆணும், பெண்ணுமென முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களும் வந்து சேர்ந்தனர்.
1990களில் முதலாளித்துவம் கொண்டுவந்த நவீன தராளமயப் பொருளாதாரம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒரு மிகப் பெரிய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கியது. சென்னை மாநகரத்தில் வீடு வாங்குவது மத்தியதர வர்க்கத்தின் மிகப் பெரிய கனவாகியது. இவர்கள் கனவைக் குறிவைத்து லாபம் பார்க்கத் தோன்றின எண்ணற்ற கன்ஸ்டரக்சன் நிறுவனங்கள். எங்கு பார்த்தாலும் குடியிருப்பு மனைகளுக்கான விளம்பரங்கள். நடிகர்கள் விளம்பரங்களில் தோன்றி பசப்பு வார்த்தைகளில் வாடிக்கையாளர்களை ஈர்த்தனர். சென்னை மாநகர் முழுவதும் காணப்படும் இத்தகு நிறுவனங்களில் ஒன்றே ஆர்.எம்.எம். என்ற முதலாளி நடத்திவரும் கன்ஸ்டரக்சன் நிறுவனம்.
ஆர்.எம்.எம். கப்பல் போன்ற ஒரு பெரிய காரில் வந்ததும் காசி ஓடோடி வந்து கதவைத் திறக்கிறான். கட்டுமானப் பணியைச் சுற்றிவந்து பார்வையிடும் முதலாளி ஆர்.எம்.எம். கண்ணில் ராகினி தென்படுகிறாள். அவளைப் பார்த்து. ‘’நீ என்ன படித்திருக்கிறாய்’’ என்று கேட்கிறான். அவள் தான் எட்டாம் வகுப்புவரை படித்திருப்பதாகச் சொன்னதும், ‘’அப்படியா! நீ இங்கு கணக்கெழுதும் வேலையில் சேர்ந்துவிடு’’ என்கிறான். காசியிடம் கடுமையுடன் பேசும் ஆர்.எம்.எம். ராகினியுடன் பேசும்போது குழைகிறான். ராகினி கணக்கெழுத ஒரு மேஜையும், எழுதும் பொருட்களும் வருகின்றன. தம்பதிகள் இருவரும் வேலை கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அடுக்குமாடி கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. காசியின் அக்கா கன்னியம்மாளும் சித்தாளாக வேலையில் சேருகிறாள். ஈஸ்வரி என்ற பெண் கைப்பிள்ளையுடன் வேலையில் சேருகிறாள். வேலை பார்க்குமிடத்தில் ஒரு தொட்டில் கட்டி தன் குழந்தையைப் படுக்கவைத்துள்ளாள். குழந்தை அழுகும்போது குழந்தையின் பசியை அமர்த்திக்கொள்கிறாள். குடும்ப வறுமையைப் போக்க கர்ப்பினி பெண்களும், பிள்ளைத்தாய்ச்சிகளும் வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
ஒரு நாள் மரகதம் என்ற பெண்ணுக்கு தேள் கொட்டிவிடுகிறது. வலியில் துடிக்கிறாள். அவளை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு யாரேனும் ஒருவர் சைக்கிளில் கூட்டிச் செல்ல வேண்டும். காசி முன்வருகிறான். இது ராகினிக்குப் பிடிக்கவில்லை. அசூயை கொள்கிறாள். ‘’உனக்கு எதற்கு இந்த வேலை? ஏன் நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுகொண்டு அலைகிறாய்’’ என்று அவனை அசிங்கமாகத் திட்டுகிறாள். தன் தம்பியை ராகினி திட்டியது கன்னியம்மாளுக்குப் பிடிக்கவில்லை. இந்நேரத்தில் ஓனர் ஆர்.எம்.எம். வருகிறான். எல்லோரும் வேலை செய்யாமல் கூடி நிற்பதைப் பார்த்து அதட்டுகிறான். தேள் கடித்த விவரத்தைக் கூறுகிறார்கள். ’’கல்லிலும் மண்ணிலும் வேலை பார்க்கும் இடத்தில் இது சகஜம்தான். இதற்காக ஏன் இப்படி வேலை பார்க்காமல் கூடி நிற்கிறீர்கள் என்று திட்டுகிறான்’’. காசி அங்கே இல்லை என்பதறிந்து இன்னும் போபத்தில் கத்துகிறான்.
ராகினி தன் தம்பி காசியை பலர் முன்னிலையில் அவமதித்தது குறித்து தன் தாயிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் கன்னியம்மாள். ‘’பரவாயில்லை விடு; ஏதோ அவளை வைத்துத்தான் உங்க எல்லோருக்கும் வேலை கிடைத்துள்ளது’’. என்று ஆறுதல் கூறுகிறார் ஆதிலட்சுமி. வேலை தேடி அலையும் காவேரி சமூகப் பணி செய்யும் சுசீலா என்ற பெண்ணைச் சந்திக்கிறாள். சுசீலா எம்.ஏ. படித்தவள். உலகமறிந்தவள். அரசின் திட்டங்கள் எல்லாம் அவளுக்குத் தெரிகிறது. பெண்கள் எவ்வாறு அரசின் உதவிகளைப் பெறலாம் என்பதை ஊர் மக்களுக்கு விளக்குகிறாள். சுசீலாவுடனான பழக்கம் காவேரியிடம் நல்ல மாற்றங்களை உண்டாக்குகிறது.
ஒரு மாலைப் பொழுதில் இரண்டு லாரிகளிலிருந்து கட்டுமானப் பொருட்கள் வருகின்றன. அந்த நேரத்தில் ஓனர் ஆர்.எம்.எம். வருகிறான். லாரியிலிருந்து சிமிண்ட் மூட்டைகளை இறக்கும்போது ஒரு மூட்டை கீழே விழுகிறது. மூட்டைக்குள்ளிருந்து கீழே விழுவது வெறும் மண்ணாங்கட்டிகள். இதைப் பார்த்த ஆர்.எம்.எம். அதிர்ச்சி அடைகிறான். காசியைப் பார்த்து ‘’என்ன வேலை பாக்குற நீ? இப்படித்தான் எல்லா சாமான்களும் வருகின்றனவா’’? வருகிற மூட்டைகளைச் செக் பண்ண மாட்டியா? என்று கோபப்படுவதுடன் காசியின் கன்னத்தில் அறைந்து விடுகிறான். தன் கண் முன்னால் தன் கணவனை ஓனர் அடிப்பது கண்டு ராகினி மனம் கலங்குகிறாள்.
இச்செய்தியைக் கேட்டு காசியின் தாயுள்ளம் பதறுகிறது. காசியை அவள்கூட ஒரு போதும் அடித்ததில்லை. தொழிலாளர்கள் மனதில் கோபக்கனல் வீசுகிறது. வேலையைப் புறக்கணிக்கிறார்கள். சங்கரன் என்ற தொழிலாளி ஒருங்கிணைக்கிறார். சுசீலாவும் தொழிலார்கள் சங்கமாக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறாள். நிலைமையைப் புரிந்துகொள்ளும் ஆர்.எம்.எம். உடனே கீழே இறங்கி வருகிறான். ராகினியிடம் கெஞ்சுகிறான். ‘’காசி, என் தம்பி மாதிரி. அண்ணன் அவனைக் கண்டிக்கக் கூடாதா? எல்லோரும் வேலைக்கு வாருங்கள். வேலைக்கு வராத நாட்களுக்கும் சம்பளம் தருகிறேன்.’’ என்று சொல்லி பிரச்சனையை முடிக்க நினைக்கிறான். ராகினி எல்லோரிடமும் நடந்ததை விளக்கிச் சொல்கிறாள்.
இதுதான் முதலாளி வர்க்கத்தின் தந்திரம்! அவர்களுக்கு வேலை நடந்துகொண்டே இருக்க வேண்டும். அதன் மூலமே லாபம் அடைய முடியும். முதலாளி கீழே இறங்கி வந்ததும் தொழிலாளிகளும் மனம் மாறுகின்றனர். அவர்களால் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. இதுதான் தொழிலாளிகளின் பலவீனம்! இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திதான் முதலாளிகள் சாதிக்கின்றனர். சங்கரன் தலைமையில் கூடி முடிவெடுக்கிறார்கள். கிடைத்த வெற்றியைப் பயன்படுத்தி போராட்டத்தை முடித்துக்கொள்கிறார்கள்.
மற்றொரு விபத்தில் கம்சலை என்ற பெண்ணின் பாதத்தில் அடிபட்டு இரண்டு விரல்களை இழக்கிறாள். அப்போதும் ஆர்.எம்.எம். மனம் இரங்கவில்லை. அவளுக்கு மிகக் குறைந்த இழப்பீடு கொடுத்துச் சமாளித்துவிடுகிறான். ராகினியிடம் தான் அடுத்த பிராஜக்ட் தொடங்கப்போவதைத் தெரிவிக்கிறான். இதிலும் ராகினியும், காசியும் தொடரலாம் என்று சொன்னதும் ராகினி மகிழ்ச்சி அடைகிறாள். இந்த புதிய பிராஜக்ட் பெரியது என்றும்; இதற்கு கணக்கெழுத இன்னொரு பெண் தேவை என்றும்; விருப்பமிருந்தால் காசியின் அடுத்த தங்கை காவேரி வேலையில் சேர்ந்து கொள்ளலாம் என்கிறான். காவேரியும் உடனே சம்மதம் தெரிவிக்கிறாள். குடும்பத்தின் அத்தனை பேரையும் வளைத்துப் போட்டுவிடுகிறான் ஆர்.எம்.எம்.
ஆர்.எம்.எம். நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இப்போது தொழிற்சங்க உறுப்பினர்கள். தங்கம் தராத பாதுகாப்பை சங்கம் தரும் என்று நம்புகிறார்கள். தொழிலாளர்களுக்கு போராட்டம்தான் வாழ்க்கை என்றாகியுள்ளது. ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் பலத்துக்கு ஈடு இணையேதுமில்லை என்ற தோழர் ஜீவாவின் வாக்கு அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. கன்னியம்மாளுக்கு குழந்தை பிறக்கும் நல்ல செய்தி வருகிறது. கணவன் அவளைக் கைவிட்ட நிலையில் சக தொழிலாளி சங்கரன் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறான். கன்னியம்மாளின் குழந்தையை அவன் ஆவலுடன் கைகளில் எடுத்துக்கொள்கிறான். இக்காட்சியைக் காணும் ஆதிலட்சுமி, காவேரி, காசி, ராகினி, சுசீலா என அனைவரின் நெஞ்சமும் நிறைந்து போகிறது என்று நாவல் முடிகிறது. ஒரு புதிய ஜீவனுடன் ஒரு புதிய காலம் பிறக்கிறது.
தொழிலாளர்கள் காலங்காலமாகப் போராடிப் பெற்ற உரிமைகளை எல்லாம் பாஜக அரசு இன்று பறிக்க நினைக்கிறது. இன்றிருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் நீக்கிவிட்டு புதியதாக நான்கு தொகுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இச்சூழலில் ‘கல்மரம்’ நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தொழிலாளி வர்க்கம் இதை முறியடிக்க இந்நாவல் உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
——————————
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கல்மரம்” நாவல் |
| ஆசிரியர்: | திலகவதி ஐ.பி.எஸ் |
| வெளியீடு: |
அம்ருதா பதிப்பகம்
|
| விலை: | ₹.250 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 பெ.விஜயகுமார் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
