‘அ. முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்’ நூலின் முன்னுரை
மூன்றும் கலந்து பாடுங்கால்…
மு.இராமனாதன்
“இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று; அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு. இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை. இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் தனி.”
இந்த வாசகம், அ.முத்துலிங்கம் எழுதிய ‘ரி’ எனும் கதையில் இடம் பெறுகிறது. இது நல்ல இசைக்கு மட்டுமல்ல, முத்துலிங்கம் எழுதிய மிக்க கதைகளுக்கும் பொருந்தும். அவரது கதைகளின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் தாண்டி, அவற்றுள் பொதிந்திருக்கும் உள் அடுக்குகளை அறிவதும் உணர்வதும் ‘மூன்றும் கலந்த’ அனுபவமாக அமையும். ச. தில்லைநாயகம் அப்படியான அனுபவத்தை இந்த நூலில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நூல் நெடுகிலும் அவர் முத்துலிங்கத்தின் கதைகளில் தான் கலந்து பேசுகிறார். அது உவட்டாமல் இனிப்பதுவே!
முத்துலிங்கம் நம் காலத்தின் ஆகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அவருக்கு வாசகர்கள் எண்ணிறந்தவர். ஆராதகர்கள் பல பேர். அவரது படைப்புகளுக்கு ஆய்வாளர்களும் உண்டு. இந்த மூன்றும் கலந்தவர்களும் இருக்கிறார்கள். தில்லைநாயகம் அப்படியானவர்; எனில், அவர் ஒரு படி மேலே நிற்கிறார். அவர் முத்துலிங்கத்தின் கதைகளை உலக மொழியான ஆங்கிலத்தில் பெயர்க்கிறார். அவர் மொழிபெயர்த்த முத்துலிங்கம் கதைகளின் முதல் தொகுப்பு, Password and Other Stories (Tamilnadu Text Book and Educational Services Corporation and Ratina Books, 2022) எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
அந்தத் தொகுப்பில் முத்துலிங்கத்தின் ‘தொடக்கம்’ எனும் கதை இடம்பெறுகிறது. அதில் ஆயிரக் கணக்கான மைல்கள் வலசை போகும் வல்லமை மிக்க பறவையொன்று இறந்து போகும். முத்துலிங்கம் சொல்வார்: “அந்தப் பறவை இன்று ஒரு சிறிய தவறு செய்தது. திரும்ப வேண்டிய ஒரு சிறு திருப்பத்தில் திரும்ப மறந்துவிட்டது. அதனால் அது இறக்க நேரிட்டது. இனி அது தனக்குச் சொந்தமான ருஸ்ய நாட்டின் வடபகுதிக்குத் திரும்பவே போவதில்லை.”
கதையின் நாயகன் தனது நிறுவனம் செய்த ஒரு சிறிய தவறு பெரிய பிழையாகிவிட்டது என்பதை விளக்க இதை முதலீட்டாளர்களிடம் சொல்கிறான். அதே வேளையில் இது அந்நிய மண்ணில் அல்லலுறும் அகதிப் பறவைகளுக்கான உருவகமாக அமைகிறது. இன்னொரு பார்வையில் சுற்றுச் சூழலை அபகரிக்கிற மனிதகுலத்தின் கீழ்மைக்கும் உருவகமாகிறது.
இந்த வரிகளை தில்லைநாயகம் மொழிபெயர்த்தார். ‘Today, one of these skilful birds made a small mistake. It forgot to turn where it should have and died because of that. It is not going back to its native country, Russia.’ இப்போது இந்தச் செறிவான வரிகளை உலகம் அறிந்தது. மெக்சிகோவில் உள்ள குடலஜாரா நகரத்தை, ‘உலக புத்தகத் தலை நகரம்’ என்று அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ. அந்த நகரின் இலக்கிய ஆர்வலர்கள் மேற்படி வாசகத்தை ஆங்கிலத்திலிருந்து ஸ்பானிஷ் மொழியில் பெயர்த்து, அதைத் தங்கள் ஊரின் பிரதானச் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்படியாக முத்துலிங்கத்தின் புலமையை வெளிநாட்டோர் வணக்கஞ் செய்ய வகை செய்கிறார் தில்லைநாயகம். மொழிபெயர்ப்பதால் அவர் முத்துலிங்கத்தின் படைப்புகளை எழுத்தெண்ணிப் படிப்பவர் ஆகிறார்.
¶¶
சில எழுத்தாளர்களின் கதைகள் முதல் வரியிலேயே தொடங்கிவிடும். முத்துலிங்கத்தின் கதைகள் ஒரு படி மேல். அவை தலைப்பிலிருந்தே தொடங்கிவிடும். அந்தத் தலைப்புகளில் சில சூட்சுமமாயும் பூடகமாயும் இருப்பதாகச் சொல்கிறார் தில்லைநாயகம். ‘முழு விலக்கு’ அப்படியான தலைப்பு. நமக்கு பல விலக்குகள் தெரியும். மது விலக்கு, மாத விலக்கு, விதி விலக்கு, வரி விலக்கு என்பன. எனில், முழு விலக்கு புழக்கத்தில் இல்லாத ஒரு சொற்சேர்க்கை. இந்தத் தலைப்பு கதைக்கு எவ்விதம் பொருந்திப் போகிறது என்பதை விரித்துப் பேசுகிறார் நூலாசிரியர். கதையின் நயமும் தலைப்பின் நயமும் துலங்கச் செய்கிறார்.
‘இலையுதிர் காலம்’ இன்னொரு கதையின் தலைப்பு. அது ‘முழு விலக்’கைப் போல பூடகமாக இல்லை. சாதுவான தலைப்பாகத்தான் தெரிகிறது. கதை ஓர் இலையுதிர் காலத்தில் தொடங்குகிறது. தோட்டமெங்கும் உதிர்ந்து கிடக்கும் இலைகளைக் கூட்டிப் பெருக்கி பைகளில் அடைக்கிறான் பக்கத்து வீட்டு மாணவன். அதற்கு அவனுக்கு ஊதியம் கிடைக்கும். சூஸன் வழங்குவார். அவர்தான் வீட்டின் உரிமையாளர். 70 வயதான சூஸன் ஒரு முதியோர் இல்லத்திற்குப் போகப் போகிறார். அவரை அழைத்துச் செல்ல அங்கிருந்து ஒரு வாகனம் வரப்போகிறது. அதற்காகக் காத்திருக்கிறார். முத்துலிங்கம் படைக்கும் அந்த மாலை நேரம் துயரமானது, கனமானது. அதற்குள் நம் கையைப் பிடித்துப் பதவிசாக அழைத்துச் செல்கிறார் தில்லைநாயகம். சூஸனின் வீட்டில் 2000 புத்தகங்கள் இருக்கின்றன. ஏராளமான தொட்டிச் செடிகள் இருக்கின்றன. அது நாலு அறைகளும் ஒரு நிலவறையும் முன்னும் பின்னும் தோட்டமும் உள்ள பெரிய வீடு. இதில் எதையும் அவர் கொண்டு போகமுடியாது. 20 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி மட்டுமே முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்படும். 40 ஆண்டுகள் ஒருமித்து வாழ்ந்த காலஞ்சென்ற கணவனின் நினைவாகவோ, 20 ஆண்டுகள் அவரோடு இருந்து, இப்போது அயலில் வாழும் மகனின் நினைவாகவோ, சூஸன் எதையும் எடுத்துச் செல்லவில்லை. அவர் எடுத்துச் செல்வது ஒரு புத்தகம். கட்டடக் கலை தொடர்பான அரிய நூல். கல்லூரிக் காலத்தில் அவருக்கு அதைப் பரிசளித்தவர் அறிவாளியும் விட்டேத்தியுமான ஒரு பேராசிரியர். 2000 புத்தகங்ளில் அதை மட்டும் ஏன் அவர் எடுத்துச் செல்ல வேண்டும்? கதையின் வெளி அடுக்குகளில் எந்தக் காரணமும் சொல்லப்படுவதில்லை. உள்ளடுக்கில் இதை வாசகர் இட்டு நிரப்பிக்கொள்ளலாம். அப்போது ‘மூன்றும் கலந்த’ நிலை உருவாகும். நிரப்பாமலும் கடந்து போகலாம். அது ‘இரண்டும் கலந்த’ நிலையாக நின்று விடக்கூடும். நான் எனது புரிதலுக்கு ஏற்றவாறு ஒரு காரணத்தைக் கற்பித்து வைத்திருந்தேன். இந்த நூலில் தில்லைநாயகம் சொல்வது வேறு காரணம். வாசகன் இட்டு நிரப்பிக்கொள்ளும் வெளிகள் ஒரே மாதிரி அமைய வேண்டுவதில்லை. முத்துலிங்கம் தனது கதைகளில் அதற்கான சாத்தியங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.
‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ அப்படியான இன்னொரு கதை. ஆகவி தமிழ்ப் பிள்ளை. அசுந்தா சிங்களப் பிள்ளை. இருவருக்கும் ஒரே அப்பா- சிறீபாலா. அம்மாக்கள் வேறு வேறு. ஆகவி தனி அம்மா பிள்ளை. கதை அப்படித்தான் தொடங்கும். முடிவில் அசுந்தாவும் தனி அம்மா பிள்ளை ஆவாள். காரணத்தை வாசகன் இட்டு நிரப்பிக்கொள்ள வேண்டும். நான் ஒரு விதமாக நிரப்பிக்கொண்டிருந்தேன். தில்லை நாயகம் வேறு விதமாக நிரப்புகிறார். இந்த நூல் வாசகருக்கு இப்படியான பல திறப்புகளை உருவாக்கும்.
‘இலையுதிர் கால’த்தை சூஸனின் பக்கத்து வீட்டு மாணவன்தான் நமக்குச் சொல்கிறான். அவன் கதைக்கு வெளியேதான் நிற்கிறான். ஆதலால் அவனை கிரேக்க நாடகங்களில் வரும் கோரஸுடன் ஒப்பிடுகிறார் தில்லைநாயகம். கூடவே இந்தக் கதையே ஒரு கிரேக்க நாடகத்தின் கூறுகளுடன் விளங்குவதாகவும் துணிகிறார். நூலாசிரியர் நயம் பாராட்டும் ‘மயானப் பராமரிப்பாளர்’, ‘சுவருடன் பேசும் மனிதர்’ முதலான கதைகளின் கதை சொல்லிகளும் கதைக்கு வெளியேதான் நிற்கிறார்கள். நான் அவர்களை நம் தெருக்கூத்து மரபின் கட்டியங்கரார்களாக வரித்திருந்தேன். இவர்களைக் கிரேக்க மரபின் கோரஸாகப் பார்க்கிற சாத்தியத்தை தில்லைநாயகம் திறந்து வைக்கிறார். அப்போது கதை வேறு விதமாகத் துலங்கும்.
¶¶
முத்துலிங்கத்தின் படைப்புகள் இதுகாறும் தமிழில் யாருமே எழுதாத நிலங்களில் பயணிக்கின்றன. யாருமே எழுதாத வாழ்க்கையைப் பேசுகின்றன. அவற்றின் விதிகள் நாம் அறிந்திராதவை. முத்துலிங்கத்தின் கதை மாந்தர்களில் பலரை நாம் அறிவோம். ஆனால் நம்மைப் போலவே அந்த விதிகளை அவர்களும் அறியார். தில்லைநாயகம் அந்தக் கதைகளின் ஊடாக நம்மை அழைத்துச் செல்கிறார்.
சிவபாக்கியத்தின் மகள் ஒரு யூதரை மணந்திருக்கிறாள். யூதர்களின் உணவும் பண்பாடும் சிவபாக்கியத்திற்குத் தெரிவதில்லை. அதனால் அவர் அடையும் துயரம் பெரிது (‘கடவுச் சொல்’).
அமெரிக்காவில், கோடைக் காலத்தில், குறிப்பிட்ட நாளில், பகல் பொழுது ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. சாந்தனின் தந்தைக்கு இது தெரியாது. அதனால் அவர் ஒரு மணி நேரத்தை இழக்கிறார். அந்த ஒரு மணி நேரத்தை அவர் திரும்பப் பெறமாட்டார் (‘கடன்’).
சர்வதேசத் தேதிக் கோட்டின் இரண்டு புறமும் நேரம் ஒன்றுதான், ஆனால் நாள் மாறுகிறது. ‘மயானப் பராமரிப்பாளர்’ கதையில் வரும் அமெரிக்கச் சிறுமிக்கு இந்தச் சூழ்ச்சி தெரிவதில்லை. அதனால், அவள் ஒரு நாளை இழக்கிறாள். அந்த ஒரு நாள் அவளுக்கு என்றென்றைக்கும் கிடைக்கப் போவதில்லை.
‘ஆதிப்பண்பு’ கதையில் பனியுடன் கூடிய சூறைக்காற்று (‘ஒய்ட்டவ்ட்’ ) வீசுகிறது. நியூபவுண்ட்லேண்ட் மருத்துவர் அந்தச் சூறைக் காற்றில் தனது காரைச் செலுத்துகிறார். அதில் உள்ள சவால்களை அவர் அறிவார். ஆனால் அன்றிரவு அந்தச் சூறைக் காற்றில் தனது வாகனம் விபத்துக்குள்ளாகும் என்பது அவர் அறியாதது. அமெரிக்கவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய ஒரு சந்ததி இன்றும் தொடர்கிறது என்பதோ, அந்தச் சங்கிலியில் ஒருவர் தம்மை விபத்திலிருந்து காப்பாற்றுவார் என்பதோ அவர் அறியாதது.
முத்துலிங்கம் எழுதி எழுதி மேற்செல்லும் இந்த அறியப்படாத நிலங்களையும் விதிகளையும் அபூர்வ கணங்களையும் தில்லைநாயகம் நமக்கு வெகு அருகில் கொணர்ந்திங்கு சேர்க்கிறார்.
¶¶
தில்லைநாயகம் ஓரிடத்தில் சொல்கிறார்: “முத்துலிங்கத்திற்குத் தமிழ், ஆங்கில இலக்கியங்களில் இருப்பதைப்போன்று பிறமொழி இலக்கியங்களிலும் நல்ல தேர்ச்சியுண்டு.” நூல் நெடுகிலும் இதற்கு பல எடுத்துக்காட்டுகளையும் வழங்குகிறார். தில்லைநாயகமும் இரு மொழிப் புலமை மிக்கவர். அதுவும் இந்த நூலில் வெளிப்படுகிறது.
சூஸனின் முழு நேரப் பணி வீட்டைத் துப்புரவாகப் பராமரிப்பது (‘இலையுதிர் காலம்’). இதற்கு சங்கப் புலவர் தொடித்தலை விழுத்தண்டினாரின் பாடலை மேற்கோள் காட்டுகிறார் தில்லைநாயகம். அதே கட்டுரையின் முடிவில் நன்னம்பிக்கைச் செய்திகளை ஷெல்லியும் கிப்ரானும் வழங்குகிறார்கள்.
‘ஒட்டகம்’ கதையில் டோனி மாரிசனின் கூற்றை எடுத்தாள்கிறார்- ‘புனைவுக்கும் அறவழிப் பொறுப்புண்டு; அறிவுறுத்துவது அல்ல, ஆழ்ந்து ஆராய்வது’.
‘வேட்டை நாய்’ கதையில் நாயகி- உக்ரைன் நாட்டு நடாஷா, நாயகன்- ஈழத் தமிழன். கதையின் ஆதார சுருதி இருவருக்கும் இடையிலான ஊடல். அது கூடலில் முடியும். கதையின் முடிவிலும் ஊடல் வரும். கூடல் அடுத்து வரக்கூடும். நூலாசிரியர், “ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்/ கூடி முயங்கப் பெறின்” என்கிற குறளை பொருத்தமாகச் சுட்டுகிறார்.
முத்துலிங்கத்தின் நகைச்சுவையைப் பற்றிப் பேசும்போது அதில் பயின்று வரும் சொற் சிக்கனத்தை சிலாகிக்கிறார். கூடவே ஷேக்ஸ்பியரின் ‘Brevity is the soul of wit’ எனும் கூற்றை மேற்கோள் காட்டுகிறார். ஈண்டு ‘wit’ எனும் சொல் நகைச்சுவையுடன் அறிவுத் திறனையும் குறிக்கும்.
¶¶
இந்த நூலில், முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுத்த 19 சிறுகதைகளின் ஊடாக நம்மை அழைத்துச் செல்கிறார் தில்லைநாயகம். இதற்கு நுழைவாயிலாக அமைந்திருக்கிறது ‘சிறுகதைச் சிற்பி அ.முத்துலிங்கம்’ எனும் முதல் கட்டுரை. இந்தக் கட்டுரையில் நூலின் பேசு பொருளான 19 கதைகளை மட்டுமல்லாமல் அவரது எல்லாக் கதைகளையும் கட்டுரைகளையும் எடுத்துக்கொள்கிறார். புதிய வாசகர்களுக்கு பரிந்துரைகளும் உண்டு.
முத்துலிங்கத்தின் கதைகள் மணற்கேணியைப் போன்றவை. அதில் ஊறிவரும் நீரை தில்லைநாயகம் நமக்கு இறைத்துத் தருகிறார். அவர் ஒவ்வொரு முறை இறைக்கும்போதும் நீர் புதிதாக ஊறி வருகிறது.
| தலைப்பு |
விவரம் |
| நூலின் பெயர்: |
அ.முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள் |
| ஆசிரியர்: |
ச.தில்லைநாயகம் |
| வெளியீடு: |
உயிர் பதிப்பகம், திருவொற்றியூர், சென்னை-19
|
| விலை: |
₹.180 |
| எழுதியவர்: |
|
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************