‘அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்’; ச.தில்லைநாயகத்தின் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
– பெ.விஜயகுமார்.
அ.முத்துலிங்கம் தமிழ் இலக்கியத்துக்கு அளித்துவரும் கொடை அளப்பரியது. இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து கனடாவில் வாழ்பவர். உலக வங்கியிலும், ஐ.நா. சபையிலும் பணியாற்றி உலகளாவிய அனுபவங்கள் பெற்றவர். கடந்த அறுபதாண்டுகளாக நிறையக் கதைகளும், கட்டுரைகளும் எழுதிக் குவித்துள்ளார். இவரின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ ஒரு தனித்துவமான நாவல். வாழ்வின் அனுபவங்களை கற்பனை கலந்து எழுதி உண்மை எது, கற்பனை எது என்றறியாது வாசகர்களைத் திணற்செய்வது இந்நாவலின் தனிச் சிறப்பு. இவரின் அனைத்துப் படைப்புகளையும் amuttu.net என்ற வலைத்தளத்தில் படித்து மகிழலாம். வாசிப்பு அனுபவத்தை அவருடன் பகிரலாம். நமது பதிவுக்கான பதிலை உடனே வெளியிட்டு நம்மை பரவசப்படுத்துவார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய ச.தில்லைநாயகம் சிறந்த இலக்கியத் திறனாய்வாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். ‘அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்’ எனும் இந்நூலில் பேரா.தில்லைநாயகம் முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுத்த பத்தொன்பது சிறுகதைகளின் மேன்மைகளை எடுத்துரைக்கிறார். இவர் மொழிபெயர்த்த முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பினை ‘Password and Other Stories’ என்ற தலைப்பில் ’ரத்னா புக்ஸ்’ வெளியிட்டுள்ளது. ‘Goat Milk Puttu and Other Stories என்ற அடுத்த தொகுப்பினை ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ் வெளியிட இருக்கிறது. ’அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிகரங்கள்’ எனும் இந்நூலில் முத்துலிங்கத்தின் சிறுகதைகளைக் கூர்ந்து படித்துத் திறனாய்வு செய்துள்ளார்.
நூலினைப் படித்துத் தான் இன்புறுவதுடன் அதன் நயத்தை விளக்கிப் பிறரும் இன்புற வேண்டி ஆற்றுப்படுத்துதல் ஒரு சிறந்த திறனாய்வாளரின் பணி. இப்பணியை தில்லைநாயகம் செவ்வனே செய்துள்ளார். திறனாய்வாளர் என்பவர் தேர்தெந்த வாசகர். ஒரு சாதாரண வாசகரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று படைப்பின் ஆழத்தையும், செழுமையையும் காட்டுபவர். படைப்பாளிக்கும், வாசகனுக்கும் இடையில் பாலமாக இருந்து படைப்பு அனுபவத்தை எளிமையாக்குபவர்.
தொகுப்பின் அறிமுக உரையில் எழுத்தாளரும், பொறியாளருமான மு.ராமநாதன் ’’முத்துலிங்கத்தின் கதைகள் இதுவரை யாரும் பயணிக்காத நிலங்களின் வாழ்வியலைச் சொல்கின்றன. முத்துலிங்கத்தின் கதைகள் மணற்கேணியைப் போன்றவை. அதில் ஊறிவரும் நீரை தில்லைநாயகம் நமக்கு இறைத்துத் தருகிறார். அவர் ஒவ்வொரு முறை இறைக்கும்போதும் நீர் புதிதாக ஊறி வருகிறது.” என்று நூலாசிரியரை அறிமுகப்படுத்துகிறார்.
டிரைடன் என்ற ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் ஆங்கிலக் கவிஞர் சாசரின் (Chaucer) கெண்டர்புரிக் கதைகள் என்ற ஒப்பில்லா படைப்பில் வரும் கதாபாத்திரங்கள் பற்றிக் கூறும்போது,’’இங்கே கடவுளின் படைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன’’ (Here is God’s Plenty) என்று கூறுகிறார். அதுபோல் முத்துலிங்கத்தின் கதைகளிலும் எண்ணற்ற, வேறுபட்ட கதாபாத்திரங்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கிறோம். முத்துலிங்கத்தின் ஐநூறுக்கும் மேலான கதைகளிலிருந்து பத்தொன்பது கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சாரத்தைப் பிழிந்து வாசகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் தில்லைநாயகம்.
எந்தவொரு சுவையும் தனி மனித விருப்பம் சார்ந்ததுதானே. இலக்கியச் சுவையும் மாறுபடும்தான். முத்துலிங்கத்தின் நண்பர் தில்லைநாயகத்தின் சுவையுணர்வு எனதை ஒத்ததாகவே இருப்பது கண்டு வியக்கிறேன். முத்துலிங்கத்தின் ஐந்து கதைகள் குறித்து பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு கட்டுரை எழுதினேன். என்னவொரு ஆச்சரியம்! அந்த ஐந்து கதைகளும் இந்நூலின் இடம்பிடித்துள்ளன. கடவுச்சொல், ஆதிப் பண்பு, நிலம் எனும் நல்லாள், சுவருடன் பேசும் மனிதர், மயானப் பராமரிப்பாளர் ஆகிய ஐந்து கதைகளையும் தில்லைநாயகத்தின் பார்வையிலிருந்து படித்ததும் கதைகள் புதுப் பரிமாணம் பெற்றதை உணர்ந்தேன். ஆம்; தில்லைநாயகம் சொல்வதுபோல் முத்துலிங்கத்தின் கதைகள் கலைடோஸ்கோப் போன்றவை ஒவ்வொரு சுற்றிலும், ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்புது அர்த்தங்கள் தருவன.
நூலின் தொடக்கத்தில் தில்லைநாயகம் எழுதியுள்ள ’சிறுகதை சிற்பி அ.முத்துலிங்கம்’ என்ற இருபது பக்கக் கட்டுரையைப் படித்துவிட்டு நூலுக்குள் நுழையுங்கள். இது முத்துலிங்கம் கதைகள் குறித்த மிகச் சிறந்த திறனாய்வுக் கட்டுரையாகும். ’’அலெக்சாண்டர் போப் என்ற கவிஞன் தன்னைப் பயன்படுத்தமாட்டானா, என்று வார்த்தைகள் ஏங்கும்’’ என்று இலக்கியத் திறனாய்வாளர் சாமுவேல் ஜான்சன் கூறுவார். அதுபோல் கதைகளும், கட்டுரைகளும் முத்துலிங்கத்தின் படைப்பெனும் கருவூலத்தில் இடம்பெறக் காத்திருப்பதுபோல் தோன்றுகின்றன என்று கட்டுரையைத் தொடங்குகிறார் தில்லைநாயகம்.
முத்துலிங்கத்தின் நடையை ‘’நீர்ப்பரப்பில் தத்தித்தத்திப்பாயும் தட்டான்பூச்சி போல தன் இலக்கை லாவகமாக சென்று சேர்கிறது” என்று கவித்துமான மொழியில் சொல்லி மெச்சுகுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கக் கவிதைகள் உலக இலக்கியத்துக்கு தமிழர்கள் அளித்த கொடை என்று சொல்லிப் போற்றப்படுகின்றன. இன்று சிறுகதை இலக்கிய வகைமையிலும் உலகளவில் தமிழர்கள் சாதித்து வருவதன் சாட்சியமாக முத்துலிங்கம் போன்ற சிறுகதை எழுத்தாளர்களின் நீண்ட பட்டியல் உள்ளது என்கிறார் தில்லைநாயகம்.
முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்கிறார் தில்லைநாயகம். குடி பெயர்வு, நகைச்சுவை, பல்லுயிர் ஓம்புதல், சுற்றுச் சூழல் மீதான அக்கறை, இயற்கை, பல்வேறு கலாச்சாரங்கள், அறிவியல் குறிப்புகள், உணவு வகைகள், தமிழ் மற்றும் பிற மொழிகள் குறித்த சிந்தனைகள், என்று எத்தனையோ ஆய்வுக்குரிய பொருண்மைகள் உள்ளன என்கிறார். முத்துலிங்கத்தின் கதைகளை மூன்று களங்களில் காண்கிறோம் என்கிறார் மு.ராமநாதன். முதலாவது முத்துலிங்கத்தின் தாய் மண்ணான இலங்கை மண்ணின் நிகழ்வுகள், இரண்டாவது உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு இனமக்களின் வாழ்வியல் காட்சிகள், மூன்றாவது நிலையில் கதாபாத்திரங்கள் தமிழர்களாக இருப்பார்கள் ஆனால் கதை உலகின் எங்கோ ஒரு நிலப்பரப்பில் நடக்கும். இத்தகு நல்விருந்து படைக்க முத்துலிங்கத்தினால் மட்டுமே முடியும்.
முத்துலிங்கம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சிறந்த எழுத்தாளர் என்பதுடன் மட்டும் நிற்கவில்லை. மாணவர்கள் தமிழ் கற்கவும், தமிழில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் வசதியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும், டொரண்டோ பல்ககைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். தமிழை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட ’தமிழ் இலக்கியத் தோட்டம்’ என்ற அறக்கட்டளைக் குழுமத்தின் தொடக்க நாளிலிருந்து (2001) இன்றுவரை அதன் முக்கியப் பொறுப்பாளராக அயராது உழைக்கிறார்.
பல்வேறு கருப்பொருட்களில் முத்துலிங்கத்தின் கதைகள் இருந்தாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அனுபவிக்கும் சொல்லொண்ணாத் துயரத்தை நிறையக் கதைகளில் காட்சிப்படுத்துகிறார். ’விசா’, ’இங்கே நிறுத்தக் கூடாது’, ’மாற்று’, ’கடன்’, ’சூனியக்காரியின் தங்கை’, ’நாளை’, ’ஆதிப் பண்பு’, ’சுவருடன் பேசும் மனிதர்’, ’நிலம் என்னும் நல்லாள்’, ’புளிக்கவைத்த அப்பம்’, போன்ற கதைகளில் புலம்பெயர்ந்து வாழ்தல் கொடுக்கும் சொல்லித் தீராத சோகத்தைச் சித்தரிக்கிறார்.
உலகில் பல மொழிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதை மொழியிலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ’சுவருடன் பேசும் மனிதர்’ கதையில் அராமிக் மொழி பேசும் ஒரு ஈராக் நாட்டைச் சேர்ந்தவரைச் சந்திக்கிறோம். தன் தாய்மொழி அழிவின் விளிம்பில் இருப்பது குறித்து கவலைப்படும் இம்மனிதர், தமிழ் மொழிக்கும் இத்தகு ஆபத்து காத்திருப்பதை உணர்த்துகிறார். வாசகர்களே! இது கதையல்ல. ஒரு கண் திறப்பு, என்று எச்சரிக்கிறார் தில்லைநாயகம்.
‘ஆதிப் பண்பு’ கதையில் முத்துலிங்கம் நாமெல்லாம் அறியாத ஒரு செய்தியைச் சொல்லி நம்மை வியப்பின் விளிம்பிற்கு எடுத்துச் செல்வதை தில்லைநாயகம் குறிப்பிடுகிறார். ’’இன்றும் பலர் அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ் என்று நினைக்கிறார்கள். கொலம்பஸ் வருவதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே லெய்ஃப் எரிக்ஸன் என்ற நார்வே நாட்டுக்காரர் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததும் அல்லாமல், குடியேற்றத்தையும் தொடக்கிவைத்துள்ள வரலாற்றுச் செய்தியைச் சொல்வதுடன் அந்தப் பரம்பரையில் வாழும் ஒரு மனிதரையும் ‘ஆதிப் பண்பு’ கதையில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்’’.
’கடவுச்சொல்’ பூமியில் வாழும் மக்களிடையே நிலவிடும் கலாச்சார வேறுபாடுகளை எண்ணி நம்மை வியக்கச் செய்கிறது. ஈழத்தில் ஏழ்மைப் பின்னணியில் வாழ்ந்து அமெரிக்காவில் குடிபெயர நேர்ந்த சிவபாக்கியம் என்ற வயதான பெண்மணியின் சோகக் கதையைச் சொல்கிறது இக்கதை. இந்த அம்மையாரின் மகள் ஒரு பணக்கார யூதரைத் திருமணம் முடித்து செல்வச் செழிப்பில் வாழ்கிறார். யூதர்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் சிவபாக்கியம் அம்மையார் படாதபாடு படுகிறார். கலாச்சார வேறுபாடுகளைச் சித்தரிப்பதுடன் இக்கதை, பாட்டி-பேரன் இடையில் இருக்கும் பாசத்தையும் உணர்ச்சி பொங்கச் சித்தரிக்கிறது. ’கடவுச்சொல்’ சிறுகதை முத்துலிங்கத்தின் ஒரு காத்திரமான படைப்பு என்பதை தில்லைநாயகம் சுட்டிக்காட்டுகிறார்.
அமீனா புகுந்த வீடு விலங்காது என்று தமிழில் ஒரு சொலவடையுண்டு. நீதிமன்றங்கள் சட்டத்தை நிலைநாட்டுவதாகச் சொல்லி மக்களை அலைக்கழிப்பதில் வல்லமை பெற்றவை. ‘ஆட்டுப்பால் புட்டு’ சிறுகதை ஓர் ஆடு திருடு போவதில் தொடங்குகிறது. வழக்கு நீண்டு நீடித்து திருடு கொடுத்தவரும், திருடியவரும் பெரும் சோதனைக்குள்ளாவதைச் சித்தரிக்கிறது. கதையின் இறுதியில் திருடு கொடுத்தவரை திருடியவரின் மனைவி புழுதிவாரித் தூற்றி வசைபாடுவது சற்றும் எதிர்பாராத முடிவாகும். எதிர்பாராத முடிவு சிறுகதை இலக்கணத்தில் ஒன்றுதானே.
‘நிலம் எனும் நல்லாள்’ சிறுகதையில் ஈழ விடுதலைப் போரில் வீரஞ் செறிந்த பங்காற்றிய சைமன் என்ற இளைஞன் முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னால் மனமொடிந்து போயிருக்கிறான். கனடாவில் வாழும் அவன் பெற்றொர் அவனை கனடாவுக்கு மீட்டெடுத்துக் கொண்டு வருகிறார்கள். ’தமிழ் ஈழம் எங்கள் தாகம்’ என்ற லட்சியத்துடன் போராடிய அந்த இளைஞனால் அவன் பெற்றோர்கள் ஈழ விடுதலைப் போர் குறித்த சிந்தனையே இல்லாமல் சுகமாக வாழும் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரவில் வீட்டின் சாளரம் வழியே குதித்துச் சென்ற அவனின் இறந்த உடலை மட்டுமே மறுநாள் கண்டெடுக்கிறார்கள் என்று கதை முடிகிறது. படிப்பவர் மனதை உறையச் செய்கிறது.
‘இலையுதிர் காலம்’ சிறுகதை முதுமையில் தனிமை எவ்வளவு கொடுமையானது என்பதை விளக்கும் அற்புதமான கதையாகும். தன் கணவருடன் வாழ்வாங்கு வாழ்ந்த பெண்மணி கணவனின் மரணத்துக்குப் பின்னர் முதியோர் இல்லத்தில் தங்க நேரும் கொடுமையைச் சித்தரிக்கிறது. புத்தகங்கள் நிறைந்த அந்த அழகான பெரிய வீடு, வீட்டைச் சுற்றியிருந்த நேர்த்தியான தோட்டம் அத்தனையையும் பிரிந்து, முதியோர் இல்லம் விதிக்கும் கட்டுப்பாட்டுகளுக்குப் பணிந்து, வெறும் இருபது கிலோ எடையுள்ள பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும். இக்காட்சியை கதாசிரியர் சித்தரிப்பது படிப்பவர் மனதை நெகிழச் செய்கிறது. தான் இளமையில் ஆர்வம் கொண்டிருந்த கட்டிடக்கலை குறித்த புத்தகம் ஒன்றை தன் நெஞ்சுக்கருகில் பிடித்துக் கொண்டு, பல ஆண்டுகள் வாழ்ந்த வீட்டிலிருந்து அந்த மூதாட்டி வெளியேறுவது, வாழ்வின் அந்திமக் காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதை உணர்த்துகிறது. கலீல் கிப்ரனின், ‘’உன் வீடு நங்கூரமாக இல்லாமல்/ பாய்மரக் கம்பாக இருக்கட்டும்.’’ என்ற கவித்துவ வரிகளுடன் கதை முத்தாய்ப்பாக முடிகிறது. இதுபோல் கதைகளில் பல்வேறு இலக்கியங்களிலிருந்தும் பொருத்தமான பகுதிகளை எடுத்துக்காட்டி முத்துலிங்கம் தன் கதைகளுக்கு மெருகூட்டுகிறார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம். ஆறு கட்டுரைகளின் அருமைகளை எடுத்தியம்பாகிவிட்டது. மீதக் கட்டுரைகளை/ கதைகளை நீங்களே படித்து இன்புறுங்கள். பேராசிரியர் தில்லைநாயகம்- முத்துலிங்கம் இடையில் இருக்கும் நட்பு கோப்பெருஞ் சோழன்–பிசிராந்தையார் இடையில் இருந்த நட்பு போன்றது. இருவரும் சந்திக்காமாலேயே நட்பு பாராட்டி வருகின்றனர். முத்துலிங்கம் தன் வாசகர்களுடன் இதுபோன்ற உயிரோட்டமான தொடர்பு கொண்டுள்ளது நம்மை பிரமிக்கச் செய்கிறது. கனடாவில் ஒருவரும், இந்தியாவில் ஒருவருமாக வாழ்ந்திடும் இவ்விருவரையும் இணைப்பது இலக்கியமே. இவ்விருவரின் நட்பு
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
எனும் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாக உள்ளது.
—————————–
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள் |
| ஆசிரியர்: | ச.தில்லைநாயகம் |
| வெளியீடு: |
உயிர் பதிப்பகம், திருவொற்றியூர், சென்னை-19
|
| விலை: | ₹.180 |
| எழுதியவர்: |
✍🏻 பெ.விஜயகுமார், |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

