தாயைத்தின்னி
– எஸ். விஜயன்
தாயைத்தின்னி-யை எப்போதும் ஒரு நிரந்தரமின்மை தொற்றித் தொடர்கிறது .விண்கலத்திலிருந்து வீழ்ந்துவிட்ட அனாதையுணர்வு அவளிடம். அவள் வாழ்வு உள்ளும் புறமும் எரிந்து கொண்டே இருக்கிற உயிர்ச்சிதை.
அவளின் திமிர்த்த அகம் புயலில் நிற்குமொரு ஒற்றை கான்கிரீட் தூண்போல நின்று கொண்டு, இறுக்கி கட்டப்பட்ட அனைத்தின் மீதும் ஏதேனுமொரு கட்டாரியைத் தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கிறது.
தாயைத்தின்னி வாசிப்புக்கிடையே நமக்கு ஒரு செய்தியை சொல்லத் தொடங்குவாள். அது மெதுமெதுவாக ஒரு கிழவி அல்லது கிழவிகள் ஒரே செய்தியைப் பல கதைகளாக மாற்றித்தரும் நுட்பமங்கி அந்த இரகசிய கிடங்கிற்குள் வாசிப்பனையும் வீசி விடுகிறது.
இந்தச் சமூகம் தன்மீது பூசிய கணக்கற்ற தார்க் கறைகளை நீக்கம் செய்யும் எத்தனிப்பில் காய்ச்சப்பட்டு கொதிக்கும் அதேத் தார் உருளைகளாலேயே அவள் நம்மையும் குளிப்பாட்டுகிறாள் .
மனித சமூகம் தன் கண்காணிப்பு ஒழுங்கை பெண்ணிடமிருந்து தான் தொடங்குகிறது
வளர்ப்புப் பிராணியாக மாற்றப்பட்ட நாய் தன்னை ஒரு மனிதனாக கருதத்தொடங்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
அன்பு ,கருணை என்ற பல்வேறு மாமிசத் துண்டுகளை பரத்தி இடுப்புச் சுருக்கில் பார்க்கும்படி அணிந்தும் அவ்வப்போது அவளுக்குத் துணுக்குகளை வீசியும் காட்டும் ஆணாதிக்க அக்கறையை,
சிறு பெண் மீது வழியும் கண்காணிப்பின் அதிகாரப் பிசுபிசுப்பைத் துடைத்தெறியத் தாயத்தின்னி தன் கவட்டை சதா கழுவிக்கொண்டே இருக்கிறாள்.
யுக யுகமாகத் துயர் நினைவுகளால் நிறைக்கப்பட்ட அந்தக் கிணறு ஊளையிட்டு அதிர்ந்து கிடுகிடுக்கிறது.
மனித குலம் கண்டு பிடித்த முதல் எந்திரம் பெண்ணுடல் தான். மேலும் ஒரு தந்திரமாக பெண்ணையே பெண் மீதான கண்காணிப்புக் கருவியாக மாற்றியதன் வழித் தன் வேலைச் சுமையைப் பாதியாகக் குறைத்து அதன் அதிகாரத்தின் படிநிலையை விரிவுபடுத்திக் கொண்டேபோகிற பானாப்டிகான் Panopticon உபாயங்களில் மிகத் தேர்ச்சி உடையது.
தில்லை தன்னுடைய முன்னுரையில் “நான் உடைத்துக்கொண்டு வந்த சிறைக்கூடங்கள் இலகுவானவையல்ல. கலாச்சாரம், பண்பாடு, தொடங்கி கல்வி நிலையம் விடுதி என நீண்டது” என்று கூறுகிறார். (பக்கம் 12)
இறுதிப் பக்கங்களில் லிலித் தாயைத்தின்னியிடம்”என்ன தாயத்தின்னி, ரங்குப்பெட்டியிலிருக்கும் உனது பொக்கிஷத்தை அச்சடித்துப் புத்தகமாக போட்டுவிடுவோமே” என்கிறாள்.
அதற்கு தாயத்தின்னி கூறுகிறாள் “என்ர கதையைக் கேட்டு எங்கட கிராமத்தில நிண்ட பென்னம் பெரிய மரம் கூட செத்துப் பெய்த்துத் தெரியுமா?”என்கிறாள்.(பக்கம்- 200)
அவள் ஊரை விட்டு வெறியேறும் முன் அந்த மரம் தாயத்தின்னியின் துயர் கேட்டு மாளாதுக் கடைசியாய்ப் பட்டுத்தான் போகிறது.
தாயத்தின்னி பிறந்த சிறிது காலத்திலேயே நெல் மூட்டைகள் அடுக்கப்பட்ட நாசியில் நெடியேறும், அந்துப் பூச்சிகளும் பூரானும் ஊறுகிற இடுக்கொன்றில் வீசப்படுகிறாள்.
தனது பேரைக்கூட அறிய முடியாத ஒரு செவிடியைப் போல பாதகத்தியின் கட்டுக்கடங்காத வன்முறையின் கீழ் தன் முழுக் குழந்தைப் பருவத்தை நாய்களின் குரைப்புகளினூடேயும் தாயைத்தின்ற கிணற்றின் ஓயாத காதைக்கிழிக்கும் முனகலிடையேயும் அல்லும் பகலும் உழன்றுகொண்டே கழிக்கிறாள்.
தாயைத்தின்ன பின்னாக அவள் நேரடியாக பாதகத்தியின் வதைமுகாமிற்குள் வந்து சேருகிறாள். பாதகத்தி தனது அத்தனை ஆங்காரத்தையும் கண்காணிப்புக்குப் பழக்கப்பட்ட அவள் வெறியும் உந்தத் தாயைத்தின்னியின் உடலின் மீதும் மனதின் மீதும் இறக்குகிறாள்.
அவ்வளவு வன்முறையையும் முகம்கொண்டு தாயைத்தின்னி அங்கேயே தன் உயிர்வாழ்வைக் கடத்த வேண்டி வருகிறது.
அவளுக்கென்று வேறு போக்கிடமுமில்லை
அந்த ஒருவழிப் பாதையின் வழியே சுக்கானில் கட்டப்பட்ட பாய் போல நின்று கொண்டிருக்கிறாள்.
ஊருக்கு வெளியே நிற்கும் அந்த மூன்று கிளைளோடு படர்ந்திருக்கும் மரத்தில் தன் தாய் இறங்கி நின்று தனது குரலுக்காக அந்த சின்னச் சிவனோடு எப்போதும் காத்திருப்பதாக நம்புகிறாள்.
அவள் தாயும் அந்த சின்ன சிவனின் கண்களை உற்று நோக்கியபடி அவனுக்காகக் காத்துக் கொண்டுடிருப்பதை மட்டும் அவளால் எப்போதும் காண முடிவதில்லை.
ஆயினும் அந்த மரம் உண்மையாகவே அவளின் குரலுக்காக தன் காதுகளை எப்போதும் திறந்து கொண்டு காத்திருக்கிறது.
ஒரு நாள் பாதகத்தியின் அறைக்குள் இரகசியமாக நுழையும் தாயத்தின்னி ஒரு ஊறுகாய்ப் போத்தலை அங்கே கண்டதும் அவள் உடலே நாவாக மாறி புளிக்கத் தொடங்குகிற அனுபவமுணர்கிறாள். அவள் உடல் ஊறுகாய் என்ற ஒன்றையே அறியாத பசியில் புளித்துச் சலித்த ஒன்று.
தனக்குத் தெரியாமல் இந்த வீட்டினுள் பல அறைகளுக்கான பாதைகள் இருக்கலாம் என்பதை உணரும் போது திடுக்கிட்டுப் பதறிப்போகிறாள்.
பின்னாட்களில் தீராத அகதிமை வாழ்வை அடையும் போது உலகம் பல இரகசிய அறைகளையும் பாதைகளையும்கொண்டது என்பதையும் உய்த்து உணர்கிறாள்.
அவளிடம் எரிச்சலடையும் பல பொழுதுகள் ஒன்றில் பாதகத்தி கேட்கிறாள்”என்னடி கிணத்தை அடிக்கடி எட்டிப் பார்க்கிறாய் உண்ட அம்மையைப் போல நீயும் அகிடத்த பாயப் போறிய “என்று.
யாருக்கும் பேசாத, கேட்காத பாழும் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தன் தாயின் வெறி கொண்ட குரல் இடையறாது தன்னிடம் காது கிழியப் புலம்புவதை அதிகாரத்தின் கருவியான பாதகத்திகள் ஒருநாளும் கேட்கிற சாத்தியங்களே இல்லை என்று தனக்குத்தானே இரகசியமாக சிரித்துக் கொள்கிறாள்.
இந்த கேட்பார் அற்ற கதைகள் உலகம் முழுவதும் திறக்க முடியாத பெண்களின் பல்லாயிரம் ரங்குப்பெட்டிகளில் அடுக்கப்படுகின்றன.
அதை திறக்கும் சாவி தன்னிடம் இருக்கிறது என்று நம்பி வன்முறையின் வீரியத்தைத் தன் உடலில் சுமக்கப் பழகுகிறாள் தாயத்தின்னி.
“பாதகத்தியைத் தைரியமாகவும் வெளிப்படையாகவும் வெறுக்கும் ஒரே ஒரு ஆளாக அந்த மரம் தாயத்தின்னியின் மனதிற்குள் இடமாறிக் கொண்டது.”
அதன் பிறகு தனக்கு நடக்கும் ஆக்கினைகளை மரத்திடம் மட்டும் முறையிடத் தொடங்கினாள்.
அவள் நம்பியதைப் போல பாதகத்தியின் தலையில் அந்தமரம் தனது காய்களைப் பல முறை எறிந்து கொண்டே இருந்தது.
அந்த மரத்திடம்
அவள் கேட்கிறாள் “நீயாவது என் அம்மையைக் காப்பாற்றி இருக்கலாமே” என்று. மரம் சின்னச் சிவனை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது தாயைத்தின்னிக்கு தெரியாது.
அந்த மரம் அதிகாரமற்று போனப் பெண்களின் பொது உயிராற்றலின் பெரும் குறியீடாகக் கதை முழுவதையும் எடுத்துச் செல்கிறது.
பெண் உடலின் மேல் சுற்றப்படும் துணி கூட அவள் உடனே தற்கொலை செய்து கொள்ள அல்லது அவள் தன் கைகளாலேயே தன்னை கொன்று கொள்ளவதற்கான வெற்றுக் கலாச்சார ஏற்பாடே.
தாயத்தின்னி நிக்கர் அணியத் தொடங்கும் போது அவள் உடலில் லிலித் என்ற மேலும் ஒருத்தி முளைக்கத் தொடங்கினாள்.
கிராமத்தின் கொலை பாதகத்திற்குத் தப்பி விடுதி எனும் வன்முறை முகாமிற்குள் அவள் அடைக்கபடுகிறாள்.
அதன் பிறகு கண்கணிப்பின் சுவர்களற்ற ஒரு உலகை கற்பனை செய்வதே முடியாத ஒன்றாக விடுதி அவளை வளைத்துப் பிடித்ததுக் கொள்கிறது.

இப்போது உணவும் உறக்கமும் உறுதி என்றான பிறகு தாயத்தின்னி அதைத் தக்க வைத்துக் கொள்ள மேலும் இறுகிய கான்கிரீட் தூணாகத் தன்னை இறுக்கிக் கொள்கிறாள்.
விடுதிக் கழிவறையில் தன் கவட்டுக்கிடையே வழியும் குருதியைக் கொண்டு கீறியக் குகை ஓவியங்களை வரைந்ததற்காக விடுதி கண்காணிப்பாளர் கண்பெரட்டிக் காளி அவளிடம் இரத்தத்திற்குறிய புண்ணைக் காட்டக் கேட்கையில் அவள் தன் பாவாடையை உயர்த்தி அந்தப் புண்ணைக் காண்பிக்கிறாள்.
கண்பெரட்டிக் காளி அன்பொழுகப் பதறிப்போய் பெண்களின் தற்கொலைப் பயன் பாட்டிற்கான அந்தத்துணியைச் சுருட்டி தாயத்தின்னியின் தொடைகளுக்கு இடையே சொருகிக் கதறி அணைத்துக் கொள்கிறாள்.
திடீரெனப் பெருக்கெடுக்கும் அந்த அன்பில் அவள் மேலும் இறுகிய ஒற்றைக் கான்கிரீட் தூணாக மாறிப்போகிறாள் .
“அன்பு என்பது வன்முறையை நிகழ்த்த பாவிக்கப்படும் ஒரு கருவி தான் “(பக்கம்-159) பாதகத்தி தொடங்கிக் கண்பெரட்டிக் காளி பிறகு ஆதன் காக்கா அவளின் உடலை உண்ண எத்தனிக்கும் போது ஊக்கு நுனியால் கணக்கற்றமுறை அவனைக் குத்துவது வரையிலும் அதற்கப்பாலும் தொடர்கிறது.
தாயத்தின்னியின் ரெங்குப்பெட்டியில் தன் தாயைத் திட்டமிட்டுக் கொன்ற கோயில் தலைவர், பாதகத்தியின் காதலன் ஒத்தகொட்டை, கவிஞர் திண்டான் பாஞ்சன்கள் என்று கணக்கற்ற முகங்களின் கதைகளைத் திறக்கவொணாத அந்தப்பெட்டியின் இருட்டில் திணித்து வைத்திருக்கிறாள் தாயத்தின்னி.
ஆனால் லிலித் அவர்களை நிர்வாணப்படுத்தி தெருக்களில் ஓடவிடும் கொதிப்பில் திமிறி எழும்பிக் கொண்டே இருக்கிறாள்.
லிலித்திடமிருந்துஅவற்றைக் காப்பாற்ற உடலில் இருந்து வெளிப்பட்டு ரெங்குப்பெட்டியின் மீது எப்போதும் அமர்ந்து கொள்கிறாள் தாயத்தின்னி.
அனால் லிலித் தன்னிடம் “ஆர் யூ பிரஸ்” (பக்கம்- 115) என்று கேட்பவனின்
முகத்தில் காறி உமிழ்பவள்.
தாயத்தின்னிக்கு போட்டியாக லிலித் உயிர்த்தெழும் போது நிலமும், வீதிகளும், கண்டங்களும் மொழியும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
தனக்குள் ஊறியிருந்த அகதிமை மேலும் மேலும் புளித்து ஊறும் ஒரு காலத்தில் தில்லையும் அந்த உடலில் பிறந்தெழுகிறாள்.
தில்லையாக ஊறிப் புளிக்கும் போது வாழ்வின் ஒட்டு மொத்தமும் திரண்டு இரசவாதமாகி ஒரு தேன் துளியாக பளிங்குக்கல்லில் உருள்கிறது.
இந்திய இராணுவம் கவிஞர் திண்டான் சாம்பன் என்று அனைவரும் லிலித்தின் முன் தன் குறிகளை அவிழ்க்க முயலும் போது லிலித் தன் உடலை இருண்ட குகையின் அடியாழத்தில் புதைத்து ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் நிர்க்கதியாகத் திசையின்றி அலையவிட்டுவிடுகிறாள். ஆனால் தில்லை கிளாசிக் இசையை முடுக்கித் தன்னுள் அந்தக் கிராமம், கிணறு, கதை கேட்கும் மரம் என்று எல்லாவற்றையும் கொண்ட கலவை Montage ஓவியமாக மாற்றி அந்த ஓவியக் கூடத்தில் காட்சிப் படுத்தியபடி மேலும் சிலர் அமர்ந்து கொள்ள இடமிருக்கும் நாற்காலியில் கால் மடக்கி அமர்ந்து கொள்கிறாள்.
ஆண்களின் அனைத்துப் போர்களும் பெண்ணின் மீதானவை.
போர் என்பதையே பெண்ணுக்கான போர் என்று மாற்றி உச்சரிக்க கட்டாயபடுத்துகிறாள்.
தில்லையின் நிலத்தில் எப்போதும் ஒரு நாய் ஊளையிட்டு எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.
அந்தக் கிணறு தன் குரலை ஒளித்துக் கொண்டு அவளுக்காகக் காலம் உறைந்து போனதை மறந்து காத்திருக்கிறது.
மிகத் தொலைவில் அவள் ஒரு மனித விலங்குக்காட்சியகத்துக்குள் Human zoo இருக்கிறாள். அந்தக் காட்சியகம் பெண்களின் மீதான கொலைப் பட்டியல்களை நனிநாகரீகமாக ஜெபித்து கன்னி மேரியாக மாற்றும் பாவனையை நவீனக் கோட்பாடுகளுக்குள் தேடிக் கொண்டிருக்கிறது.
அவளின் அறைக்கு வெளியே பனி படர்ந்த மூன்று கிளைகள் கொண்ட மரம் அசைவற்று நின்று கொண்டிருக்கிறது
தன் உடலைச் சமூகத்திடமிருந்து பாதுகாக்கும் உரிமையைக் கோரும் போது ஆண்களால் கட்டப்பட்ட அமைப்பை புறந்தள்ளி முற்றிலும் வெளியே நிறுத்துவதே பெண்ணிற்கு இருக்கும் அதிகபட்ச சாத்தியம்.
உலகம் முழுக்க நடக்கும் போர்கள் பெண் தன் இருப்பை மீட்கும் வாய்ப்புகளுக்கு எதிரானவையே .
ஒரு பெண் தன் உடல் திறக்க மறுக்கும் போது, தன் உடலைக் கொண்டாடத் தொடங்கும் போது, அவள் விரும்பும் அந்த ஒற்றை துளித் தேனை சுவைக்கத் தொடங்கும் போது இந்த உலகம் பற்றுக் கோடற்ற பால்வீதியில் மிதந்து கொண்டிருக்கும்.
அது ஒற்றை மரமும் சின்னச் சிவனும் மகிழ்ந்து கண்சிமிட்டும் நேரமாக இருக்கலாம்
தோழர் தில்லை தன் எழுத்தின் வழியே மாய எதார்த்தங்களை அன்றி எதார்த்தத்தின் மாயைகளை இந்த நாவலில் எழுதிச் செல்கிறார்.
இவ்வளவு வலிகளையும் எழுதிக் கடப்பதென்பது ஒன்றும் எளிதில்லை.
ஆனால் இந்த புனைவுப் பரப்பிற்குள் அவர் அதை நிகழ்த்திக் காட்டுகிறார்.மனித வரலாறு பெண் உடலின் மீது அன்பு, தாய்மை, கலாச்சாரம் என்ற பெயர்களால் காலங்காலமாகத்தொடுத்துவரும் வன்முறைகளைக் இந்த நாவல் கட்டவிழ்க்கிறது. அதற்கு நையாண்டி மொழிநடையையும் அதனூடாகத் துல்லியமான, கச்சிதமானப் புனைவு மொழியையும் அவர் கையாண்டுள்ளார்.
அதிகாரம் வன்முறையைத் தனக்குள் கருக்கொண்டு இயங்குகிறது. ஆனால் அதன் வன்முறையைப் பெயர்மாற்றிப் பெண்மீது திணிக்கிற செப்படிவித்தையில் சாதுரியம் மிக்கதாகவும் இருக்கிறது. அந்தத் திறமை பெண்ணைக் கண்காணிக்கிற வேலையைப் பெண்ணிடமே திணிக்கிற வஞ்சகத்தை உள்ளடக்கி உள்ளது. அதன் ஓரம்சமே தாயைத்தின்னியின் மையமென்றும் துணியலாம்.
நூலின் தகவல்கள்:
நூல்: தாயைத்தின்னி (Thaayaithinni)
ஆசிரியர்: தில்லை (Thillai)
பதிப்பகம்: தாயதி
விலை: ரூ.280
விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்
நூல் அறிமுகம் எழுதியவர்:
– இரா. விஜயன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.