கவிஞர் தேன்மொழி தினைப்புலம் கவிதை Thinaipulam

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “தினைப்புலம்” – அன்பாதவன்

 

 

‘இன்னதை தான் எழுதவேண்டும் ;இவற்றையெல்லாம் எழுதலாகாது’ –என எந்தவொரு படைப்பாளிக்கும் ஆணைப்பிறப்பித்தல் அபத்தம்; அதிகாரக்குரல்களை ஏற்பதே இல்லை, படைப்பாளிமனம் எனும் காற்று.

பூமிப்பரப்புக்குள் அதிர்வேற்படில் நிலம்பிளக்கும்; உயிர் மனிதரையும், உயிரற்ற கான்கிரீட் கட்டடங்களையும் ஒரே விழுங்கு! முடிந்தது கதை! அதே அதிர்வு சமுத்திரத்துள் நிகழ்வின் நிலப்பரப்பை நீர்நாக்கு அலையால் அடித்து கபளீகரம் செய்ததை நாமறிவோம். கடலுக்குள் ஏற்படும் அதிர்வின் எழுச்சியும், விளைவுகளும் ரிக்டர் அளவால் விவரிக்கவியலா ஆழ்ந்த துயர் சோகம் தருபவை.

பெண் படைப்புலகின் அக உலகமும் ஆழ்கடலைப் போன்றதே. மேலோட்டமானப் பார்வைக்கு எளிய சொற்கள் ; புதிய மொழி, உள்ளடக்கப் புதுமை என சாது முகங்கொண்டாலும், காடு கொள்ள மிரட்சி தருபவை பெண் படைப்புகள்; தேன்மொழி-யின் தினைப்புலம் கவிதை நூலிலும் இந்த மாயமே நிகழ்ந்துள்ளதை வாசிக்கையில் உணரலாம்.

‘முதல் நிமிடம் நீளும் தூரங்களை
தவளைப் பாய்ச்சலால் கடக்கிறேன்
தூரத்து நிலவை
ஒரு சிறுமியாய் மாறிக் கொய்து வருகிறேன் ;
மறுநிமிடம் கண்ணாடிப் பேழைக்குள்
நழுவும் பாம்பு போல தோற்றுப்பின் வாங்குகிறேன்.
யார் இதை இவ்வளவு எளிதாய் மாற்றி வைத்தது? (பக் 14) எனச் சமூகத்தின் முன் வீசும் கவிஞர் தேன்மொழியின் வினாவுக்கு பதிலெழுத எவர் உண்டு? விடைகிடைக்கும் இடம் தான் எது?
எதையெல்லாம் எழுதலாம் எதையெல்லாம் எழுதலாகாது என எந்தவொரு எழுதுகோலுக்கும் கட்டளையிட இன்றையச் சூழலில் ஏலாது.

குறிப்பாக பின் நவீனம் என்ற வாயில் திறக்க பெண் படைப்புலகம் எண் திசையிலும் படை திரட்டி வெற்றி கண்டதற்கு சமகாலப் படைப்புகளே சாட்சி. தேன்மொழியின் ‘தினைப்புலம்’ நூலை என் ரசனைக்கேற்ப நான்கு சிமிழ்களுக்குள் அடைக்க எண்ணுகிறேன் :

1. இயற்கையின் மீதான நேசம்
2. சமகால அரசியல் நிகழ்வுகள்
3. விசித்திர சிறுமியின் சித்திரங்கள்
4. தேகமொழியின் தீச்சிற்பம்.

1. இயற்கையின் மீதான நேசம் :

இயற்கை நேசம் என்பதை வெறும் அழகியலோடு மட்டுமே பொருத்திப் பார்த்திடாமல், சூழலியல் அக்கறை என்றும் பொருள் கொள்ளல் அவசியம்.

‘இழைப்படலமாய்
பனியிறங்கும் நிர்வாணக்
காலை நதி’ – எனும் காட்சியில் நதியின் சலசல- இசை வாசகனுக்கு கேட்கும்.

‘அடியாழத்தில் நிகழும்
பூமியின் குமுறல்
அடையாளம் காட்டுவதில்லை
பன்னீர்மரம்’ – வரிகளின் அழகு ஈர்க்கும்! பூமியின் குமுறலுக்கு – காரணமானவர் யார்?

‘பாடும் நதிகளின் மேல்
இறகுகள் விழுந்து
கூழாங்கற்களாய் மாறுகின்றன”
அழகியல் படிமம். வாசகனுக்கு பரிசு.

‘இல்லை என்ற போதும்
பூக்களைக் கசக்குவது
மிகப்பெரிய வன்முறைதான்’ எனத் தொடங்கும் சிறு கவிதை சூழலியல் அக்கறைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

-‘அதன் வண்ணத்தை அழிக்கிறோம்’
-’அதன் வாழும் நிமிடங்களைச் சூறையாடுகிறோம்’
-அதன் மகரந்தங்களை தீ வைத்து பொசுக்குகிறோம்’
எனத் தொடரும் கவிதை ஒருப் பூவின் வாயிலாக,  அனைத்து உயிர்களுக்கும் பொருந்துகிறது.

கவிதை எண் 54-ல்  உள்ள நீள் கவிதை ஐந்திணை வழியாக, நவீனக் கலித்தொகையாக விரிகிறது. சங்கப்பாடலின் செரிவும், நவீனத்தின் அடர்த்தியும் இயைந்த சிறப்பானக் கவிதை; ரசிக்கலாம்!

தேன்மொழியின் வலிமையான வினா ஒன்று வாசகருக்காக காத்திருக்கிறது.
“எப்படி தொடர்வது?
நெய்தல் நிலத்தில்
பாலைச்சொல் பேசும்
உன்னோடு
என் உரையாடலை?”
ஐந்திணை அறிந்தவரே அறிவார் மந்திரச்சாவி இருக்குமிடம்!

2. சமகால அரசியல் நிகழ்வுகள்:

அகம்பாடும் கவிஞர் தேன்மொழி புறம்பாடுதலையும் விடவில்லை. சமகால அரசியல் பிரக்ஞை இல்லாமல் கவிஞனாய் வாழ்தல்..ம்ஹூம்ம்… இருத்தலும் இயலாது.

‘பறவைகளின் உலகில்
கவிதையெழுத
வானம் இருக்கிறது
மொழிதான்இல்லை’  – என வருத்த வரிகளைப் பதிவிடும் தேன்மொழி,  மொழியை மட்டுமே உயிரெனக்கொண்டு, தனக்கான வானத்தையும், பூமியையும் இழந்த ஈழ மக்களைக் குறித்து எழுதும் கண்ணீர் வரிகளிவை :

‘பிணங்களின்வாசத்தை
சுவாசிக்கும்பூமியில்
எச்சங்களாகிவிட்டது
மனிதர்களின்இருப்பு’

‘அலைகள் பிரிவை எழுதும் ஆழ்கடலில்
போர்க்கப்பல் கிழிந்தெறிந்துவிட்டது
உறவுகளை…..’

‘குண்டுகளின் இரைச்சலில்
ஆணி வேரிலிருந்து பிய்த்தெறியப்படுகிறது
மனிதநேயம்’ – மேற்கண்ட வரிகள் எழுதியக் காலம் வேறு! ஆனாலும், இன்றைக்கும் சிரியா, உக்ரைன் சூழலுக்கும் பொருத்தப்பாடுடைய கவி வரிகளிவை. புலம் பெயர்தல் ஒரு பெருஞ்சோகம்! தன் மண், தன் நீர், தன் வானம் அனைத்தையும் இழந்து ;உயிர் வாழ்தல் பொருட்டு, வெற்று ஜடமாக வேற்று நிலத்தில் இருத்தல் (வாழ்தல் அல்ல) காலம் தண்டனித்த கடுந்துயரம். புலம்பெயர்ந்தவருக்கு தான் எத்தனையெத்தனைக் கேள்விகள்:

‘நாசியெங்கும் தழும்பேறிக் கிடக்கிறது
என் தேசத்து மண் வாசனை
விடைபெறாமல் வந்துவிட்டேன்
என் ஜன்னலோர நார்த்தங்குருவியிடம்
அது மூங்கில் அரிசி தேடி இங்கே வருமா”
இவை ஒருபுற அவலமெனில் கீழ்க்கண்டவரிகளில் கவிதை உயிர்ப்பாகிறது.

‘என் சிறு நெல்லிச்செடி
செந்நீரின் நிறம் பார்த்து
பயந்திருக்குமா…?’
– பாரி மகளிரின் புலம்பலை சமகால முகத்தோடு மடைமாற்றி பதிவு செய்யும் கவிஞர் உறுதிபட கூறுகிறார்.

‘உங்கள் ஊர் புத்தன்களிடமும்
புறாக்களிடமும்
போர்ச்சம்பவங்கள் குறித்துப் பேச
என்னிடம் நிறைய விடயங்கள் உண்டு’
மண்ணையும் உறவுகளையும் துக்கங்களையும் கண்ணீரையும் நினைவூட்டும் நிகழ்காலகுரூரத்தின் கவிதைப்பதிவுகள் கவிஞர் தேன்மொழி வழியாக கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

 3.விசித்திர சிறுமியின் சித்திரங்கள்:

கவிஞர், வேதியியலிலும், வரலாற்றிலும் முதுநிலைப்பட்டம் பெற்றவர்; முனைவர், அரசு அலுவலர்! ஆனால் என்ன வளர்ந்த பெண்மைக்குள் ஒரு சிறுமி ஒளிந்திருக்கிறாள்;அவலுக்கு பூவுலகின் சங்கதிகளே விசித்திரமானவை.
‘யார் தட்டினாலும்
ஓடிச்சென்று கதவைத் திறக்கிறாள் சிறுமி.
‘மூடியக்கதவு தட்டப்பட வேண்டும்
ஓடிச்சென்று திறக்க வேண்டுமென்பது அவளது ஆசை’
அந்த சிறுமியின் வாழிடம் எது?
‘நீர் அறியா நிலம்
தரை மேகங்களாய் மணல்
தனிமை வரைந்த கோடுகள்
திரட்டி வைத்த மௌனம் –
மலைக்குன்று
மொழியின்றி உரையாடும் காற்று
அங்கு அநாதரவாய் நிற்கிறாள் ஒரு சிறுமி’-
– இந்த கோட்டோவியமே கொடுந்துயர் தருகிறதல்லவா…..?
‘பாம்புகளோடு பழகுவது
சிறுமிக்கு
எளிதாக இருக்கிறது’–
எனத் தொடங்கி நாகசாம்ராஜ்யத்தை சிறுமி வழியாக வனைகிறார் கவிஞர் இந்தச் சிறுமி ஒளியில் உதித்தவளா? வர்ணங்களில் வாழ்பவளா…. யாரிந்த வானவில் கேட்பவள்?
இருளை வரையாத சிறுமி எப்போதும் சூரியனை தீட்டுபவள்; தன்னம்பிக்கை முனையில் வாழ்பவள்.

‘சிறுமி மிதக்கும் கண்களிலிருந்து வெள்ளை ஒளியை உருவுகிறாள் நிறப்பிரிகை அடைகிறாள். வண்ணங்களை வானவில்லாய் என் மீது எழுதத் துவங்குகிறாள்.
மாய யதார்த்த விநோத சிறுமியின் விசித்திர உலகம் பெரியவர்கள் உணர்ந்ததில்லை; அறிந்ததில்லை. முடியவும் முடியாது: புரியவும் புரியாது!
எனில், விளைவு என்னவாகிறது…?
‘ஒரு குழந்தையின் உலகத்தை எப்படி உருவாக்குவது என்ற அறிவு சூன்யத்தில் நுரைப்பந்தை கை தொட்டு உடைக்குமளவு? வக்கிரம் கொண்ட சூழ்நிலைக் கைதியின் இயலாமையின் கூடு பற்றி எரிகிறது.’
வேறு வேறு கவிதைகள் வழியாக விரியும் விநோத உலகம் சிறுமியுடையது மட்டுமல்ல என்பது எவருக்கும் புரியும். எனில், அந்த சிறுமியைக் காண நீங்கள் நூலுக்குள் நுழைய வேண்டும்.

4. தேகமொழியின் தீச்சிற்பம்:

பெண்மைய எழுத்துகள் 1980களுக்கு பிறகு பிரவாகமாக வெளிவந்தன. அவற்றின்மையம் உடல்மொழி – யாக இருந்தது வரலாற்று உண்மை. உடல்மொழியென்பது வெறுமனே அங்கங்களின் பெயர் சொல்வதல்ல!குறிகளின் குரல் பதிவுமல்ல! பெண்மையஎழுத்தென்பது, உடலை மட்டுமே மையமாக கொண்டதல்ல மாறாக மனதை மையமாக கொண்டது. காதலை, காமத்தை உணர்ந்து வெளிச்சொல்ல முடியா வேதனை பெருந்துக்கம், பெண்மொழியாய் உருவானது. பின்னாளில் கொண்டாட்டமாய் குதூகலித்தது.
தேன்மொழி-யின் கவிதைகளிலும் இந்த துயரும், குதூகலமும் கலந்தே இருக்கின்றன.

‘ உடல்வெளியெங்கும்
அசுர விளைச்சல்
அறுவடை முடித்தோம்
மீதமிருக்கும் நிலாத்துண்டை
வியந்தபடி தேவகன்னிகளின்
சிறகுகளைப் பொருத்திக் கொண்டோம்’
-எனஉற்சாகம்கொப்பளிக்கஆனந்தயாழினைமீட்டுபவரேவேறுசூழலில்.

‘இருண்ட தேகத்திலிருந்து
பௌர்ணமி நாளில்
பாடுகிறாள் கொற்றவை
கானல் வரி’ இசைக்கிறார்.

‘குளத்திற்குள் தண்ணீர் பாம்புகள்
கரை மீது கொட்டை வாழைச்செடிகள்
அவளது தாய் நிலம்
இருப்புக்கும் தவிப்புக்குமாய் இடையே
தளும்பிக் கிடக்கிறது.’
– என்பதெல்லாம் ஒரு பெண்ணின் துயரல்ல… கோடிகோடிப் பெண்டிரின் சொல்லவொண்ணா சோகம்.

“இனம் புரியாத துயரமோ, பெயர் தெரியாத ஆனந்தமோ மென்மையாய்ச் சீண்டிவிட்டு நகர்ந்தாலும, கொதித்து பொங்கும் உணர்வுகள் எழுத்துகளாய் அரும்பும் போது சுமை குறைந்து, திரும்பவும் சிறுபிராயத்திலிருந்து தன்னை எழுதத் துவங்குகிறது வாழ்க்கை”  – எனும் சுய அறிமுகத்தோடு தன் படைப்புகளை பதிவு செய்திருக்கும் கவிஞர் தேன்மொழியின், ‘தினைப்புலம்’ காண சிட்டுக் குருவிகளாய்ச் செல்வோம், கவண் கல் அல்ல கவிதைகளால் வரவேற்பார்.

அன்பாதவன்,
anbaadhavanjp@gmail.com

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *