திண்ணை இருந்த வீடு – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : திண்ணை இருந்த வீடு
ஆசிரியர் : சசி எம் குமார்
வெளியீடு : சந்தியா பதிப்பகம் சென்னை
முதல் : பதிப்பு 2022
பக்கம் : 134
விலை : 110
தொடர்புக்கு
தொலைபேசி : 0444-24896979
மண்ணில் வாழும் மக்களின் வாழ்வியலை, அவர்களின் வலியை, மண்ணை, மண்ணின் பெருமையை பேசும் படைப்பே மனிதர்களின் மனதில் நிலைத்து நிற்கும். சமூகத்தில் புலப்படும் புறக்கூறுகளை கண்ணுற்று தன் அகத்தில் அதை பாதுகாத்து சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைக்கும் தருணங்களில் அவற்றை மக்களின் மனதில் ஆழப்பதிக்கும் நினைவுகளாக மாற்றும் படைப்புகளே நம்மை வழிநடத்திச் செல்கின்றன.
ஒரு காலத்தில் திண்ணை இருந்த வீடுகள் வெவ்வேறு ரகசியங்களை தம்முள் புதைத்துக் கொண்டு சுமைதாங்கிக் கல்லாக சோகத்திலும் ஆற்றாமையிலும் உழன்றுவரும் மனிதர்களுக்கு ஆறுதல் களமாக மாறி இருந்த காலம் ஒவ்வொருவரின் நினைவுகளுக்குள்ளும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன. அன்றைய திண்ணைகள் எத்தனையோ ரகசியங்களை தமக்குள் அடக்கிக் கொண்டு மனிதர்களை ஆற்றுப்படுத்தி வந்தன.
திண்ணை இருந்த வீடுகளில் திண்ணையை எத்தனையோ பேர் பயன்படுத்தி இருப்பார்கள். எத்தனையோ மனிதர்களுக்கு அவை ஆறுதல் வழங்கியிருக்கும். வேகாத வெயிலிலும் வானத்தின் மழைத்தூறல்களிலும் மனிதர்களை பாதுகாத்து உயிரினங்களுக்கும் அடைக்கலம் கொடுத்து இளைப்பாற்ற வைத்த பெருமை திண்ணைகளுக்கு உண்டு.
கிராமத்து மனிதர்களின் ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்ட திண்ணைகள் இப்போது இடிந்து காணாமல் போய் விட்டன. கேட் வைத்த வீடும் வீட்டிற்குள் காவலுக்கு நிற்கும் நாய்களும் என இன்றைய காலகட்டத்தில் வீடுகள் உருமாறிப் போய்விட்டன. இனிவரும் தலைமுறைகள் திண்ணை என்றால் என்ன என்று வினவும் அளவிற்கு திண்ணைகள் நம் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய நினைவுகளை நம்முள்ளிருந்து மீட்டுச் செல்லும்படியான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
நம் அன்றாட வாழ்வில் நாம் கடந்து செல்லும் எளிய மனிதர்களை, அவர்களின் வாழ்வியலை நம்மை அறியாமலேயே நம் நினைவுகளுக்குள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக புதைந்து கிடக்கும் மனிதர்களைப் பற்றிய மீளாய்வை நமக்கு நினைவுபடுத்துகிறது. காணும் எளிய மனிதர்களின் செயல்பாடுகள் யாரோ ஒருவருக்கு கேலிப்பொருளாக மாறிவிடும் அல்லது அவர்களுக்கு அம்மனிதர்கள் மனநிலை பிறழ்ந்தவர்களாக தென்படலாம். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் இயற்கையை பேணிப் பாதுகாப்பதிலும் மனிதர்களை சமநிலைப்படுத்தி ஆற்றுப்படுத்துவதிலும் சிறப்பான வழிகாட்டியாக அமைந்திருக்கும்.
அந்த அடிப்படையில் உப்புப் பூத்த உழவர்களின் உடல் மொழியையும் வியர்வை பிசுபிசுப்போடு வயலில் களையெடுத்து வெறுங்காலில் பல மைல்கள் நடந்து தங்கள் பிள்ளைகளை வளர்த்த தாய்மார்களின் நடவுப்பாட்டு, வயல்களிலும் காடுகளிலும் பரந்து திரியும் எண்ணற்ற பறவைகளின் தேடல்கள், திரும்பிய இடம் எங்கும் வீதியில் திரியும் மாடுகள் என நம் கண் முன்னே உலவும் உயிர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் மனிதத் தன்மையை வெளிக்கிளறும்படியான கட்டுரைகளை நூல் ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்.
சிறுவயதில் தான் விளையாடிய பல்வேறு விளையாட்டுகளையும் தன் கண்முன்னே சிறந்து விளங்கிய மனிதர்களின் செயல்பாடுகளையும் சினிமா கொட்டகைகளின் ரசிப்பையும், டீக்கடை அரசியலையும், ரயிலடிக் காதலையும் தன் வாழ்வின் கண்ணுற்ற அனுபவங்களையும் ரசித்த நிகழ்வுகளையும் மனிதர்களின் அன்றாட வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் பெருந்தருணங்களையும் இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது.
இதில் இவர் காண்பிக்கும் ஒவ்வொரு மனிதர்களின் குணாதிசயங்கள் வெவ்வேறாக அவர்களின் வாழ்க்கையை திசை மாற்றுகின்றன. வாசிக்கும் நமக்கு ஒவ்வொரு அனுபவங்களும் மிகச் சிறந்த வழிகாட்டியாக மாறுகின்றன.
மிகப் பெரிய பணக்காரராக பல பேருக்கு வேலை கொடுத்து அவர்களின் குடும்பத்தை உயர்த்திப் பிடித்த ஒருவர் காலச் சூழலில் கடனாளியாக மாறி அக்கடனை அடைப்பதற்காக கூலி வேலைக்குச் செல்லும் பொழுது அவருடைய மனநிலை எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் “”இரு கோப்பை காப்பியும் கனகு பாண்டியனும்””என்ற கட்டுரை நம் கண்ணில் நீரை வரவழைக்கிறது. நம் நினைவுகளுக்குள் பொதிந்து போன, என்றோ நமக்கு ஆதர்ச வழிகாட்டியாக இருந்த யாரோ ஒருவரை நினைவுபடுத்துகிறது.
ஒரு திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு விளம்பரம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதை விளம்பரப்படுத்த சினிமா போஸ்டர்கள் ஒட்டும் கலை எவ்வளவு உன்னதமானது என்பதையும் விவரிக்கும் “”எங்கள் நாயகன்”” என்ற கட்டுரையும் எளிய மனிதர்கள் தமது வேலையை கண்ணும் கருத்துமாகவும் சீரும் சிறப்புமாகவும் செய்து தான் செய்யும் தொழிலையே தெய்வம் என மதிப்பவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறது.
மண் எத்தனை பேருக்கு, எத்தனை உயிர்களுக்குத் தாயாக இருந்து அவர்களை வளர்த்தெடுக்கிறது என்பதையும் அத்தகு மண்ணை நாம் எப்படி கூறு போட்டு அதன் தன்மையையே சிதைத்து வளர்த்து விட்டோம் என்பதையும் விவரிக்கும் “”நிலத்தின் சாமி”” என்ற கட்டுரையில் சில வரிகள்;
கண்ணுசாமி என்று நாங்கள் அவரை அழைத்ததே இல்லை. மண்ணுதின்னி என்றே அழைப்போம். . இறுகிய உடம்பு, கருத்த தேகம், துவைத்துத் துவைத்து பழுப்பேறிய வேட்டி,தோளில் சாயம் போன பச்சைத்துண்டு,இடுப்பில் எப்போதும் தூங்கும் ஒரு சிறிய கத்தி, இம்மியளவும் நகர சார்பற்ற முகத்தோடு சீட்டு நைந்து போன பழைய ஹெர்குலிஸ் சைக்கிளில் வருவார். நீரோட்டம் பார்க்கும் ரகசியத்தை அறிந்தவர். இந்த உலகம் மண் சார்ந்து இயங்குகிறது. மண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.அந்த மண் தான் சாமி என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். மண்ணை மென்று பார்த்து இந்த நிலத்தில் இது விளையும் இது விளையாது என்று சொல்லிவிடுபவர். ஒரு கட்டத்தில் நீரோட்டம் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார். காரணம் கேட்கும் பொழுது இவர்கள் இந்த பூமாதேவியை ராட்சச மிசினை வைத்து பொளந்து ரத்தத்தை உறிஞ்சுவது போல் உறிஞ்சி எடுக்கிறார்கள். அந்த பாவத்தை நாம் செய்யக்கூடாது. எல்லா மண்ணுக்கும் ஒரு ருசி இருக்கும். இந்த மண்ணுல இரசாயனத்தைக் கொட்டி மண்ணு விஷமாகி மலடாய் போச்சு என்றார் கண்ணுச்சாமி தாத்தா. எங்கள் நினைவுகளில் மண்ணிருக்கும் வரை கண்ணுசாமி தாத்தாவும் இருப்பார் என்று கட்டுரையை முடிக்கிறார்.
ரயிலில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணையும் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து அவர்களை தன் வாழ்நாள் முழுக்க காப்பாற்றிய பெரியசாமி என்பவரை பற்றிய கட்டுரை “பெரியசாமி அண்ணன்”.வாசிக்கும்போது மனிதாபிமானத்தின் மூலம் அன்பும் கருணையும் இருந்தால் உலகத்தை சண்டையால் வெற்றி கொள்வோம் என்ற பேராசை இருக்காது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.
கிராம மனிதர்கள் தமக்குப் பிடித்த ஏதேனும் ஒரு நபரை நினைவுபடுத்தும் வழியாக தமது குழந்தைகளுக்கு அப்பெயரைச் சூட்டும் போது அதனால் வரும் விளைவுகளைப் பற்றி அவர்கள் அறியப் போவதில்லை என்பதை நமக்கு பகடியாகவும் கிண்டலாகவும் சொல்லும் “”சேவாக்கும் சண்டேய குடிக்கியும்”” என்ற கட்டுரை பெயர் சூட்டுவதில் கூட நாம் நம் மண்ணைப் புறம்தள்ளி விடக்கூடாது நமது மரபை துண்டித்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறது.
தஞ்சாவூர்க் கதைகளின் வழியாக ஒவ்வொருவரின் பிறந்த ஊரின் மண்வாசத்தையும் நினைவுகளையும் அசைபோட வைக்கிறது திண்ணை இருந்த வீடு.
எளிய கிராமத்து மனிதர்கள் தங்களது வெள்ளந்தி மொழியிலும் வெளிப்படையான நடத்தையிலும் பல்வேறு சாதனைகளை செய்துவிட்டு அமைதியாய் இருப்பார்கள். அதைப்போல எத்தனையோ கனவுகளை சுமந்து அதை அடையும் வழிகளை,வெற்றியைக் கண்டறிந்த மனிதர்களையும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத மனங்களையும் தாங்கிய திண்ணைகளை நமக்கு நினைவுபடுத்தி அதன் வழியாக பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை அறிமுகப்படுத்தி நம் வாழ்வின் பயணத்தை இனிதாக்கி இருக்கிறது திண்ணை இருந்த வீடு.
நூல் அறிமுகம் எழுதியவர் :

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

