thiraivimarsanam : elai vizh poonjiraa-era.ramanan
thiraivimarsanam : elai vizh poonjiraa-era.ramanan

திரைவிமர்சனம் : இலை விழா பூஞ்சிரா-இரா.இரமணன்

இலை விழா பூஞ்சிரா

ஜுலை 2022 வெளியான மலையாள திரைப்படம். இப்போது அமேசான் பிரைம் தளத்தில் பார்க்கலாம். ஷாஹி கபீர் இயக்கியுள்ளார். சவ்பின் ஷஹீர், சுதி கொப்பா, ஜூட் அந்தனி ஜோசப், ஜீத்து அஷ்ரப் ஆகியோர் நடித்துள்ளனர்.

பூஞ்சிரா எனும் இடத்தில் மலைக்குன்றின் உச்சியில் காவல் துறையின் ஒயர்லெஸ் நிலையம் உள்ளது. இடி மின்னல்கள் தாக்கும் அந்த இடம், ஆபத்துகளை பொருட்படுத்தாது அங்கு வரும் இளம் ஜோடிகள்,குடும்பத்தினர், கல்லூரி மாணவர்கள், அங்கு பணிபுரியும் காவலர்களின் கடினமான வாழ்க்கை, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்கள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும் திரைப்படம், ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் வெவ்வேறு இடத்தில் கண்டெடுக்கப்படுவதிலிருந்து மர்மக் கதையாக மாறுகிறது.இறுதியில் குரூரமான விதத்தில் முடிகிறது.

படம் எடுக்கப்பட்ட விதம்தான் சிறப்பு. ஒரு முகாமில் காவலர்கள் தனிமையை எவ்வாறு போக்குவார்கள், அவர்களுக்குள்ளே இருக்கின்ற நட்பு, உயர் அதிகாரியின் சிடுசிடுப்பு -அதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல் காரணமாக சொல்லப்படுகிறது -ஆனாலும் பல இடங்களில் அவருக்கும் அவரது ஜீப் ஓட்டுனருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் நம்மை புன்னகை பூக்க வைக்கின்றன. அந்த இடத்திற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் வேறுபட்ட எதிர்வினைகள் போன்றவை நம்மை அந்த சூழலோடு ஒன்ற வைத்து விடுகின்றன. இயற்கையின் அழகும் ஆபத்தும், மனித வாழ்க்கையின் களிப்பும் சோகமும் இரண்டையுமே காமிரா வழியே அற்புதமாகக் காட்டுகிறார்.

அந்த இடத்தை பற்றி சொல்லப்படும் புராணக் கதையை சுதி எனும் பாத்திரம் மதுவிடம் சொல்கிறது.
‘ இந்த இடத்தில் உள்ள குளத்தில் பார்வதி குளித்துக் கொண்டிருந்தாள். அதை மரத்தின் பின்னாலிருந்து தேவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்துவிட்ட சிவன் அங்கு இனி மரங்களே இருக்காது என்று சாபமிடுகிறார். அதனால் இன்று வரை அங்கே மரங்கள் இல்லை.குளத்தில் இலைகளும் விழுவதில்லை.’

இதற்கு மது சொல்கிறான்’ சபிக்கப்பட வேண்டியது மரங்களல்ல’
இந்தப் புராணக் கதையை சுப்பாராவ் போன்றவர்கள் மறு வாசிப்பு செய்து ஒரு சிறு கதை எழுதலாம்.

இந்த ஒரு வரி பல விஷயங்களை சொல்லிவிடுகிறது. தவறு செய்தவர்களை தப்பிக்க விட்டு வேறு யாரையாவது பலிகடா ஆக்கும் சமுதாய போக்கை நச்சென்று சுட்டிக் காட்டுகிறது.

கதாநாயகனின் சோகத்தைப் புரிந்து கொள்ளலாம். தவறு செய்தவன் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தனி மனிதர்களால் தண்டிக்கப்படுவான். எனவே அவன் பழிவாங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவனது வழி முற்றிலும் வக்கிரமான குரூரமான எங்கேயோ எப்போதோ நடக்கின்ற ஒரு செயலாக மட்டுமே இருக்க முடியும். இப்படிப்பட்ட பிறழ் செயல்களை சில தொலைக்காட்சிகள் அவ்வப்போது விரிவாக காட்டுகின்றன. அது பார்வையாளர்களின் அருவருப்பான ரசனைக்கு தீனி போட்டு வருமானம் பார்க்கும் செயல்தான். அது போன்ற ஒன்றை திறமையான இயக்குனர் செய்ய வேண்டுமா?

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *