எறும்பு -தமிழ் திரைப்படம்
இயக்குநர் சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எறும்பு’. சுரேஷ் குணசேகரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அளவான கதாபாத்திரங்களுடன் கதைக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது யூ டியூபில் பார்க்கலாம்.
(இந்து தமிழ் )
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயக் கூலியான அண்ணாதுரை (சார்லி). முதல் மனைவி இறந்துவிட, மகள் பச்சையம்மா (மோனிகா சிவா), மகன் முத்து (சக்தி ரித்விக்), இரண்டாம் மனைவி கமலம் (சூசன் ஜார்ஜ்), அண்ணாதுரைக்கும் கமலத்திற்கும் பிறந்த கைக்குழந்தை, அண்ணாதுரையின் தாய் பொம்மி (பரவை சுந்தராம்மாள்) ஆகியோருடன் கடனிலும் வறுமையிலும் நாள்களைக் கடத்தி வருகிறார் அண்ணாதுரை. இந்நிலையில், கந்துவட்டிக்காரர் ஆறுமுகத்திடம் (எம்.எஸ்.பாஸ்கர்) வாங்கிய முப்பதாயிரம் ரூபாய்க் கடனை அடைக்க முடியாததால், ஆறுமுகத்தின் தகாத வசவுகளால் ஊர் முன் அவமானப்படுகிறார். மொத்த கடனையும் வட்டியுடன் அடைக்க, அண்ணாதுரையும் கமலமும் 15 நாள்களுக்கு வெளியூருக்குக் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்கிறார்கள்.
அந்த இந்த இக்கட்டான சூழ்நிலையில் அக்குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் ஒரு கிராம் மோதிரத்தை முத்து தொலைத்துவிட, சித்தி கமலத்தின் வசவுகளுக்குப் பயந்து அக்கா பச்சையும் தம்பி முத்துவும் செய்வதறியாது நிற்கின்றனர். சித்தி வீடு திரும்புவதற்குள் தொலைந்த மோதிரத்தைக் கண்டுபிடித்தார்களா, ஆறுமுகத்திடம் வாங்கிய கடனை அண்ணாதுரை திரும்பி அடைத்தாரா போன்ற கேள்விகளுக்கு அக்கா – தம்பியின் வாழ்க்கை வழியே பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ்.ஜி. (ஆனந்த விகடன்)
நம்முடைய பார்வை.
நேர்மறை அம்சங்கள்.
சிறுவர்களை மையமாக வைத்து படம் எடுத்ததற்கு பாராட்ட வேண்டும். காலணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஈரானிய படம்,children of heaven (தமிழிலும் வந்துள்ளது) பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்படும் மூன்று சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம் போன்ற வரிசையில் இதையும் சேர்க்கலாம்.ஒரு கிராமம் என்றால் பச்சை பசேல் என்கிற வயல்கள், அழகான கதாநாயகி, நகரத்திலிருந்து வரும் நாயகன் என்கிற பார்முலாக்களிலிருந்து விலகி அசலான கிராமத்தையும் மனிதர்களையும் காட்டியிருக்கிறார்.
சித்தி என்றால் கொடுமைக்காரி என்பதை மட்டும் முழுமையாக மாற்றவில்லை. ஆனால் மூத்தார் குழந்தைகள் பச்சியம்மாவும் முத்துவும் மிகுந்த சிரமப்பட்டு பணம் சேர்த்து இக்கட்டான நேரத்தில் உதவியதைப் பார்த்துவிட்டு அவர்கள் சாப்பிடும்போது தண்ணீர் கொண்டுவந்து வைக்கும் காட்சியில் இயக்குநர் சில விசயங்களை உணர்த்துகிறார்.
சித்தியோ இல்லை வேறு எவரோ மோசமானவர்கள் இல்லை. அவரவருடைய சூழலே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன.மனம் பிறழ்ந்தவராக வரும் சிட்டி பாத்திரம் குழந்தைகளுக்கு உதவுவதற்காக முயல் வாங்குபவரிடம் ‘வெள்ளிக்கிழமையானா என்ன? கறி சாப்பிடக்கூடாதா?’என்று கேட்கும்போது எல்லாமே ஒரு அவசியத்தின்பால் தோன்றியதே என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.முயலை விற்று பணம் பெற முயன்ற பிள்ளைகள் சில நாட்கள் அதனுடன் பழகியபின் அதை விற்க மனமில்லாமல் வளர்க்க முடிவெடுப்பதும் சற்று நெகிழ்வான ஒன்று.
கரும்பு வெட்ட செல்லும்போதும் கைக்குழந்தையை எடுத்து செல்வது; பிள்ளைகளை அடித்து விட்டாள் என்ற கோபத்தில் மனைவியை கணவன் அடித்து விடுகிறான். இருந்தாலும் உடனே இருவரும் சேர்ந்து வேலைக்கு புறப்படுவது; 30000 கடனை கரும்பு வெட்டிய கூலியில் அடைத்துவிடுவதுபோன்ற நெருடலான காட்சிகள் இருக்கின்றன.பச்சையமமாவாக நடிக்கும் பெண் சிறப்பாக நடித்திருக்கிறார். பாடல்கள் இனிமையாக உள்ளன.

