அண்ணன்மாரே அக்காமாரே ஓடுற ஓட்டம் எல்லாம் சந்தோசத்துக்கு என்று சொல்லிவிட்டு சந்தோசத்தை தொலைச்சிட்டு ஓடிக்கிட்டே இருக்கீங்க… அருமையான தகவல் ஒன்னு சொல்றேன் கேட்கிறீர்களா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்புனு ஒரு ஊர் இருக்கு தெரியுமா உங்களுக்கு? அதுதான் என்னோட ஊருநாகர்கோவிலில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
கோதையாறு தான் என்னோட தாய் வீடு அங்கிருந்து பாய்ந்து திற்பரப்பு அருவியாகி மக்களைக் குதூகலிக்கவைக்கிறேன். நான் நீர்வீழ்ச்சி அல்ல… அருவி ஆர்ப்பரித்து ஓடும் அருவி, என்னை வீழ்ச்சி எனக்கூறி வீழ்த்தி விடாதீர்கள்.
நான் 300 அடி நீளமும் முற்றிலும் பாறைகளால் ஆன ஆற்றுப்படுகை (அதாவது தளமும் பாறைகளால் ஆனது) நான் 50 அடி உயரத்திலிருந்து கொட்டுகிறேன். வருடத்தில் ஏழு மாதங்கள் நான் செழிப்புடனும் சீற்றத்துடன் இருப்பேன். மற்ற நாட்களில் நீர் வரத்து குறைந்தாலும் நான் அழகுதான். இங்கு குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஆசுவாசமாய் நீராட அரசு வழிவகை செய்துள்ளது.
வழிநெடுகிலும் கடைகள், குளித்து முடித்து உடை மாற்ற சுத்தமான அறைகள், சின்ன குழந்தைகளுக்கு நீச்சல் குளம், இயற்கையை ரசிக்க பூங்கா, என அம்சமான அழகான அருவி நான். ஆனால் என் மனதிலும் ஒரு கவலை இருக்கு.
கொரோனா வின் தனிமை என்னை வாட்டியது என்னவோ உண்மைதான். இப்போது உங்கள் எல்லோரையும் பார்ப்பதில் ஆனந்தம்தான். என்றாலும் ஒரு குறை…வழக்கம்போல மதுவின் வாடையோடு அண்ணன்மார்களும்… மல்லிகைப்பூ சோப்பு ஷாம்போடு வரும் அக்கா மார்களும்…கொரோனாவிற்கு பிறகும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருக்கிறார்கள். வழக்கம் போல அவர்கள் பயன்படுத்திய பாட்டில், சோப்பு, கவர், ஷாம்பூ எல்லாவற்றையும் அங்கங்கே போட்டுவிட்டு தூய்மையை கேள்வியாக்கி தூய்மை இல்லை என குறை சொல்லி விட்டு போகிறார்கள்.
இருந்தாலும் எனில் கரைய வரும் நீங்களும் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்ளலாம். அருவியில் குளிக்க வாசனைப் பொருள்கள் தேவைப்படாது. வாசனைப் பொருட்களில் இருக்கும் கெமிக்கல்களைவிட அருவியில் கெமிக்கல்கள் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கும் மக்காது எனத் தெரிந்தும் அங்கேயே போட்டு விட்டு போகும் உங்களை என்னவென்று சொல்ல…
அப்படியே நீங்கள் பயன்படுத்தினாலும் அதை குப்பைத்தொட்டியில் போட்டு விடுங்கள். நீங்கள் போகின்ற இடம் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பது போல் உங்கள் பின் வருபவர்களும் நினைப்பார்கள் தானே.. உங்கள் பின் வருபவர்கள் என நான் சொன்னது வேறு யாரையோ அல்ல உங்கள் குழந்தைகள் உங்கள் பேரன் பேத்திகள்… இயற்கை உலகை ரசிக்க ஆசைப்படும் நீங்கள் அடுத்தவர்களுக்கும் மிச்சம் வையுங்கள். இல்லையேல் நான் நீர்வீழ்ச்சி தான்…
– சுதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.