கவிஞர் அ.சீனிவாசனின் கவிதைகள்
***********************************************************
1.
இருந்த இடம் தெரியாமல் இருப்பவன்
என்னை நானே
சிலுவையில் அறைந்து,
அறைந்து சலித்துவிட்டது.
சிலுவையில் எனை
அறைக்கும் பொருட்டாவது,
நண்பனோ எதிரியோ—
யாரோ ஒருவரையாவது
மனிதனின் சாயலில்
அனுப்பி வையேன், இறைவா!
***********************************************************
2.மூடிய கதவு
ஜெயிலில்
அடைத்தாற்போல் இருக்கிறதாம்—
திறக்கும் போதும் மூடும் போதும்
க்ரீச் க்ரீச்சென கதறுகிறது
மரமாயிருந்த
கதவு.
***********************************************************
3. மூலக்கடை நினைவு
பஜாரின் அந்த மூலக்கடை முன்
போகும்போதெல்லாம்
மகனின் கையை
தானாகப் பற்றிக் கொள்கிறேன்.
ஐந்து வருடங்களுக்கு முன்
அதே இடத்தில்
தன் தந்தையை காணாமல்
ஒரு இளைஞன்
அழுதுகொண்டிருந்தான்.
***********************************************************
4.தாய்மை
என்னுள் இருக்கும்
தாய்மையை
உலகிற்கு பறைசாற்றுபவள்—
எனக்குத் தாயானவள்!
***********************************************************
5.அப்பாவின் வீடு
அப்பாவோடு முடங்கி விட்டன—
அந்த வண்டி,
மணி நாய்,
கைத்தடி,
கருப்புக்கோட்டு,
பெரிய கேட்டுக்கதவு,
வராண்டா பெரிய பல்பு—
அப்புறம்…
அம்மாவின் கால்கள்.
***********************************************************
6.உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
எல்லோரும் கடவுளை
ஏதாவது கேட்கிறார்கள்.
நான்…
கடவுளையே கேட்கிறேன்!
***********************************************************
7.வரம்
குட்டி தேவதை
தவமாய் கடவுளை வரைகிறாள்.
கடவுளுக்கு
எவ்வளவு பெரிய வரம்!
***********************************************************
8.
பறவைப் பார்ப்பது
பறவைப் பார்ப்பதே
எனக்கு போதுமானது—
பறப்பதற்கு.
***********************************************************
9.அபூர்வ வாய்(உ)
ஹீலியத்தை விடவும் எளிதில்
ஆவியாகிவிடுகின்றன
அம்மாவின் ஆசைகள்.
பெரும்பாலும்
வாயைக் கூட தாண்டுவதில்லை.
***********************************************************
10.மகள்
“என்னவோ,
இன்று எழுப்பிய முதல் குரலுக்கே
விழித்துவிட்டது—
காத்திருக்காமல்
கடவுள் தரிசனம் செய்த மாதிரி!”
***********************************************************
11.யானை
யானையின் பலம்—
யானைக்குத் தெரிய
வேண்டிய அவசியமில்லை.
***********************************************************
12.நம்ம அஸ்திரம்
உன்னிடம் உள்ள
அமைதியைப்
பூட்டி உள்ளே வை—
ஆக மிகக் கொடிய சண்டைக்குக்
தேவைப்படுவது அல்ல,
கடைசி வரை வலிமை காட்டும்
சேமிப்பாய் வலிமையூட்டும்!
***********************************************************
13.என் வரிகள்
நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க
அரசாங்க வரிகள்.
அன்புப் பற்றாக்குறையைக் குறைக்க
என் வரிகள்—
உங்களுக்கும் எனக்கும்!
***********************************************************
எழுதியவர் :
✍🏻கவிஞர் அ.சீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.