இன்றைய கவிஞர்களில் முக்கியமான ஒருவர். விழுப்புரம் மாவட்டத்தின் கண்டாச்சிபுரம் குறுநில மன்னன் கண்டராதித்தன் பெயரை புனைப் பெயராகக் கொண்டவர்.
இதுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்: கண்டராதித்தன் கவிதைகள், சீதமண்டலம், திருச்சாழல்.
திருச்சாழல் மிகுந்த கவனம் பெற்ற கவிதைத் தொகுப்பு. 2018ல் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெற்றது.
மிகச் சிறப்பான ஓவியம் மற்றும் புத்தக வடிவமைப்பு.
மரபின் சாயலும், பகடியும், சந்த நயமும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் விரவி காணப்படுகிறது.
இரண்டு வாரங்களாக இந்த கவிதைகளூடாகவே பயணித்தேன். பல கவிதைகளை இரண்டு முறை, மூன்று முறை வாசித்தேன். எழுத்தாளர் ஜெயமோகன் இணையப் பக்கத்தில் வெளிவந்த அனைத்து கட்டுரைகளையும் வாசித்தேன். கண்டராதித்தனின் உரைகளைக் கேட்டேன்.
சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இரண்டு கட்சியாகப் பிரிந்து விளையாடும் விளையாட்டு. திருவாசகத்தில் இருபது சாழல்கள் உள்ளன.
இத்தொகுப்பில் ஒவ்வொரு கவிதையுமே சிறப்பானதுதான். எனக்குப் பிடித்த சில
கவிதைகள்:
திருச்சாழல் கவிதை:
அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியரை காதலிக்கும் பெண்ணின் தவிப்பு கவிதையாகியிருக்கிறது.
அவள் சொல்கிறாள்:
திங்களொரு நாள் செவ்வாயொரு நாளும் போயிற்று
புதன் வந்தும் பொறுமையில்லை எனக்கு
அவன் நலமோ அவன் மனை நலமோவென
நெஞ்சம் பதைத்துப் போவதுதான் என்னடி
தோழியின் பதில்:
பொல்லாத புதுநோய் வந்ததைப் போல் வருந்தாதே
அலுவலிலும் அவனேதான் வீட்டினிலும்
அவதேதானென பெண்ணொருத்திப் படும்
பெருந்துயர்ப் போலல்ல உன் துயரம்
என்றெண்ணிச் சந்தோஷம் காண் சாழலோ.
கவிஞரின் பகடியில் புன்னகைக்காமல் இக்கவிதையை கடக்க முடியாது.
எனக்கு மிகவும் பிடித்த, நெகிழ்வான கவிதை ‘மகளின் கண்ணீர்’, கடைசி பத்தி மட்டும்:
திடீரென விழித்து முகத்தைப் பார்க்காமல்
காயத்தை வருடினாள்
இப்போது இடதுபக்கத் தோளில் படர்கிறது
வெதுவெதுப்பான மகளின் கண்ணீர்
என் தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே
வீடு போகிறது
பந்துக்கள் இல்லாதவன் மற்றொரு சிறப்பான கவிதை. செல்லும் ஊரெங்கும் பந்துகளை சம்பாதிக்கிறான்.
மனநிலை மத்தியானத்தை எப்படி பாதிக்கிறது என்பதை சிறு துக்கம் கவிதையில். மத்தியானம் மரவட்டையாகிறது:
துக்கம் நிகழ்ந்த நண்பகலது
வெய்யிலும் சோம்பலும்
மிகுந்து கிடக்க
மரவட்டையைப் போல
இந்த மத்தியானம்
தன் லட்சோப
லட்சக் கால்களுடன்
மறுநாள் மத்தியானத்துற்குள்
போனது.
நகுலனின் சாயலில் பெயரற்ற ஏகாம்பரம் கவிதை:
நான்கு கட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம் ஏகாம்பரம் என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம் மூதேவி
உன் கட்டைக்குரல்தான் முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்கா ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து வந்த குரல்.
பகடிக்கும் எள்ளலுக்கும் பல கவிதைகள்:
சஞ்சாரம் சீபத்த கவிதையின் கடைசி பத்தி:
கோவலூருக்கும் வர விருப்பம்தான்
ஆனால்
சம்சாரிக்கேது சஞ்சாரம் சீபத்த
உதிரி கவிதையில் இரண்டாம் கவிதை:
நீண்டகாலம் நண்பனாக இருந்து
விரோதியானவனை வெளியூர்
வீதியில் சந்திக்க நேர்ந்தது
பதற்றத்தில்
வணக்கம் வணக்கம் என்றேன்
அவன் நடந்துகொண்டே
கால்மேல் காலைப்
போட்டுக்கொண்டு போனான்
நீலப்புரவியில் வந்தவன்
சொன்னான்
தோற்றுப்போனவனுக்கு
நண்பனாக இருந்தவன்
நாசூக்காய் அவனைக் கைவிட்டு
இப்பக்கம் வருகிறான்
முடிந்தால் ஓடிவிடு.
விமர்சனங்கள் அழகான வார்த்தைகளில், இரண்டு உதாரணங்கள், கவிதைகளின்
கடைசி வரிகள் மட்டும்:
மேதினபோற்றும் மேதையும் நானே என்பாய்
அருந் தவத்தால் அற்பத்தனத்தை பெற்றவனென
நாங்கள் நினைப்போம்
பண்பட்டவர்தான்
பண்பட்டவரென்றால்
எந்நேரமும்
பண்பாட்டையும் முடியுமா.
தும்பையின் வெண்மையைப் போன்ற அன்பை, தனது ‘அந்த அன்பு என்னுடையதல்ல’ என்ற கவிதையில், எல்லொருக்கும் பகிர்கிறார் கவிஞர்:
வருவோர் போவோரெல்லாம்
வைத்துவிட்டுச் சென்றதுதான்
தாராளமாக
எடுத்துக்கொள்ளுங்கள்
நிறைய இருக்கிறது
காலப் பயணம் கவிஞருக்கு சாதாரணம்:
சோமன் சாதாரணம் கவிதையில் பாரத காலத்து மாமன், மாறாத குணமுடையவன், பல்லாயிரம் காலங்கள் போன பின்பும், இப்போதும் சகுனி தான் என்கிறார்.
மற்றொரு பெயரற்ற கவிதையின் கடைசி வரிகள், காலங்களில் பயணிக்கிறது, தாழி
என்ற குறியீட்டோடு:
உடையாத தாழியொன்று இரவுக்கும் பகலுக்குமாய்
ஆடிக்கொண்டிருக்கிறது தீராத துக்கத்தோடு
வானுக்கும் மண்ணுக்குமான பயணமும் மிக எளிதாக அம்சம் கவிதையில்:
பிறகு பிருஷ்டத்தில்பட்டு ஆடிய கூந்தலை
வலக்கையால் அள்ளி வரப்புகளைத்தாண்டி
வயல்களை விட்டு முட்டைகளின் சிதறிய
கதிர்களைப்பற்றி வானம்வரைச் சென்று
வளர்மதியானாள்
இந்த சந்தநயம், வாசிக்கையில், நாமும் வானம் வரை பயணம் செய்வது போலிருக்கிறது. இதுதான் இக்கவிதைகளின் மாயம்.
மிகவும் வித்தியாசமான கவிதை அனுபவம், ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது.
இத்தொகுப்பு நவீன கவிதையில் ஒரு பாய்ச்சல்.
மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவம்.
கண்ணன்
புத்தகம்: திருச்சாழல்
பிரிவு: கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: கண்டராதித்தன்
பதிப்பகம்: தமிழ்வெளி பதிப்பகம்