திருச்செந்தூர் அமலி நகரில் மாணவர்களை வாசிக்க ஊக்குவிக்கும்
இல்லம் தோறும் நூலக இயக்கம்
திருச்செந்தூர், ஜூன் 28-
வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கோடு முன்முயற்சியில் மாணவர்களின் சேமிப்புக்கு மும்மடங்கு விலையில் புத்தகம் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரில் கல்வியாளர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள் மற்றும் மக்களோடு இணைந்து தூண்டில் இயக்கம் சார்பாக கடலோர சிறார்களிடம் வாசிப்புப் பண்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ‘இல்லம் தோறும் நூலகம்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
குழந்தைகளின் கற்றல் மற்றும் வாசிப்பு திறனை அதிகரிக்க ஒவ்வொரு குழந்தைகளிடமும் ‘கற்கை நன்றே’ என்ற உண்டியல் வழங்கப்படுகிறது. அதில் அவர்கள் சிறுக சிறுக சேமித்தத் தொகையினை பெற்று அதைவிட 3மூன்று மடங்கு விலையுள்ள நூல்கள் கொடுத்து நூலகம் அமைக்க பழக்கப் படுத்தப்படுகிறார்கள்.
திருச்செந்தூர், அமலி நகர் 9ஆம் வகுப்பு மாணவர் அந்தோணி வீட்டில் புதனன்று (ஜூன்28) இல்லம் தோறும் நூலக தொடக்க விழா நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்ததோடு வாசிப்பு தொடர்பான ஊக்க உரை வழங்கினார்.
இதில் முத்தாய்ப்பாக அமலிநகர் ஆர் சி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பாரதிபுத்தகாலய வாசகர்கள் பலர் கலந்து கொண்டு நூலக தொடக்க விழாவை சிறப்பித்தனர். மாணவர்கள், பெற்றோர், முற்போக்குச்சிந்தனையாளர்கள் மத்தியில் இந்நிகழ்வு நல்ல வரவேற்பை பெற்றது.