2018 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்.
ஒரு பாலியல் தொழிலாளியும், ஒரு திருடனும் கூட சுயசரிதை எழுத முடியுமா என்கிற நம் உள் மனதின்(நாமெல்லாம் யோக்கியர்கள் என்கிற) அகங்காரம் இந்த நூலை வாசித்து முடிக்கும்போது தவிடு பொடியாகிறது.
சீட்டு விளையாடுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து கோவில் உண்டியலில் திருடிய 30 பைசாவை சட்டைப் பையில் வைத்திருந்து கைதானதில் தொடங்கி ஒரு 590 பக்கம் கொண்ட சுயசரிதை நூல் வெளியிடுமளவு திருடனாக உருவானது வரையிலான இவரது வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியங்களும் நிறைய வலியும் வேதனையும் நிறைந்தது.
பிடிபடும்போது தன் குற்றங்களை ஒப்புக் கொள்ளும் இவர், தன் வழக்குகளுக்காக தானே சாதுர்யமாக வாதாடி போலீசாரையும் நீதிமன்றத்தையும் அசர வைப்பார். பல நேரங்களில் திருந்தி வாழ முடிவெடுத்து கட்டிட வேலையும் மூட்டை தூக்கவும் சென்றபோதும் மீண்டும் அதே புதைகுழியில் தள்ளப்படுகிறார்.
இந்த நூலில் மனதைத் தொட்டவற்றில் ஒரு சில:
*இவர் அளவில்லாமல் திருடியபோதும் தன் அம்மாவும் சகோதரிகளும்(கடும் வறுமையிலும்) நாலணாகூட கடைசி வரை அதில் பெற்றதில்லை.மாறாக இவர் கைது செய்யப்பட்டால் அம்மா தான் கூலி வேலை செய்த காசில் இவரை பிணையில் எடுக்க வருவார்.
*ஒரு பெரிய வீட்டில் இருந்த இரண்டு விலையுயர்ந்த நாய்களை ஏமாற்றிவிட்டு அந்த வீட்டில் திருடிவிடுகிறார்.திருட்டு கொடுத்ததற்காக அதன் எஜமானர் கடுமையாகத் திட்டியதால் இரண்டு நாய்களும் உண்ணாமலிருந்து உயிர்விட்டன என்கிறார்.
*ஒரு திருட்டை மறுத்து நீதிமன்றத்தில் வாதாடும்போது அந்த வீட்டு சிறுமியை அழவைத்துவிடுகிறார். அன்றிரவு முழுவதும் தூங்காமல், சிறையிலிருந்து அந்தக் குழந்தைக்கு மன்னிப்பு கடிதம் எழுதுகிறார்.
*தன் மகள்களுடன் சாகவிருந்த ஒரு பெரியவருக்காக ஒரு திருட்டு நடத்தி பணம் தந்து காப்பாற்றுகிறார். வழக்கமாக பிடிபடும்போது குற்ற்றத்தை ஒப்புக் கொள்பவர் “இதை நான்தான் செய்தேன்.ஆனால் விவரம் கேட்க வேண்டாம்.தேவைப்பட்டால் என்னை கொன்றுவிடுங்கள்” என்கிறார்.
*தன் உடம்பை விற்று நோயாளி கணவனுக்கு மருந்து வாங்க வந்த ஒரு பெண்ணுக்காக ஒரு திருட்டு நடத்தி பணம் கொண்டு போகிறார்.அந்தக் கணவன் இறந்து போனதையறிந்து துயரம் தாங்காமல் கதறியழுததை படிக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.
*இவர் வைக்கம் முகம்மது பஷீரின் வாசகர்.அவரை நேரில் பார்க்க வேண்டும் என விரும்புகிறார்.ஆனால் ஒரு திருடனை அவர் சந்திக்க விரும்ப மாட்டார்.எனவே அவர் வீட்டில் ஒரு திருட்டு நடத்தி, பிறகு நேரில் போய் அந்த பொருளைக் கொடுத்து ஆச்சரியப்பட வைப்பது இவரது திட்டம்.ஆனால் அது தோல்வியில் முடிந்த கதையை சுவாரஸ்யமாக சொல்கிறார்.
திறமைசாலி :
1978ல் 92 பவுன் நகை, 22 ஆயிரம் ரூபாய் பணத்துடன், சலீம் பாஷாவாக மனைவி மற்றும் குழந்தையுடன் மைசூர் சென்று எடயாளா எனும் சிறு நகரில் பாயாசக்கடையில் தொடங்கி புகையிலை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்.
தொட்டதெல்லாம் பொன்னானது(பொன்னிலே தொடர்ந்த வாழ்க்கையென்பதாலோ?). தொழிலாளர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் தர்மப் பிரபுவாக வாரி வழங்குகிறார்.
சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு,அப்போதைய முதல்வருடன் வானூர்தியில் பறக்குமளவு மக்கள் செல்வாக்கு மிக்கவராக வளர்கிறார். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு உயரம் சாதிக்க முடியுமா என மலைக்க வைக்கிறார்.
மீண்டும் தொடங்கிய இடத்துக்கு
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் மீண்டும் கேரள போலீசாரால் பழைய வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு 98 லட்சம்(1983ல்) பறிமுதல் செய்யப்பட்டு, (வியாபாரத்தில் வெளியே நின்ற மேலும் பல லட்சங்களையும் அப்படியே விட்டுவிட்டு) சிறையில் தள்ளப்படுகிறார்……
திருட்டு பணத்தை முதலீடாக்கி வந்த வருமானம் அரசாங்கத்துக்கே சொந்தம் என்றது சட்டம்.
மீண்டும் வறுமை வாழ்க்கை.
எத்தனையோ துயரங்களை அனுபவித்திருந்தாலும் தன் திருட்டுத் தொழிலை அவர் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை.
ஒரு இடத்தில் ” இரவில் திருடுகிற நாங்கள் சட்டத்தின் முன் திருடர்கள்.பகலில் சட்டத்தின் பாதுகாப்பில் சகல திருட்டுக்களையும் நடத்தும் வெள்ளையும் சொள்ளையுமணிந்தவர்கள் கணவான்கள்” என்று இரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா பாணியில் நையாண்டி செய்கிறார்.
அவர் சொல்கிறார்: என்னுடைய சுயசரிதை , தவறான முண்ணுதாரணங்களுக்கு வழிகோலுவதாக ஒருபோதும் அமைந்து விடக்கூடாது. குற்ற வாசனையுள்ள எந்த இளைஞனும் இதை வாசித்து சீரழிந்து விடக்கூடாது.இந்தப் புத்தகத்திலும் சில நல்லவைகள் அங்கங்கே சிதறிக் கிடக்கலாம்.கவனம் இதில்தான் பதிய வேண்டும்”……
இந்த நூலை வாசித்து முடிக்கும்போது
இப்படி எத்தனையெத்தனை மணியன்பிள்ளைகளையும் நளினி ஜமீலாக்களையும் நாம் உருவாக்கியிருக்கிறோம் என்கிற இனம் தெரியாத ஒரு குற்றவுணர்வு தோன்றியது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
திருடன் மணியன்பிள்ளை
(தன் வரலாறு)
மலையாளத்தில்:
ஜி.ஆர்.இந்துகோபன்
தமிழில்:
குளச்சல் மு யூசுஃப்.
2018 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்.
காலச்சுவடு வெளியீடு
ந.சண்முக சுந்தரம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
ஈரோடு.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
திருடன்தான். ஆனால் அவருக்குள்ளிருக்கும் மனிதன் சக மனிதனைத் தட்டி எழுப்புகிறார். மனசாட்சியைப் பேச வைக்கிறார். சுருக்கமாக இருந்தாலும், உலகில் திருட முடியாத ஒரு பொருள் உண்டென்றால் அது மனசாட்சி மட்டும்தான் என்று புரிந்துகொள்ள முடிந்தது. அருமை.