திருக்குறளும் செயற்கை நுண்ணறிவும் (Thirukkural and Artificial Intelligence)
– முனைவர் வீ.கிருஷ்ணகுமார்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது உலகத்தின் உயரத்தையும், அதன் அகலத்தையும் மையத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. அதேசமயம் தமிழனின் அறிவியல் அறிவு மற்றும் ஆளுமைப் பண்புகள் என்பது எந்த காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றது என்ற புள்ளியைத் தேடி நகர்ந்தால் மிகவும் பின்நோக்கி சென்று கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளதே தவிர அதன் ஆரம்பத்தை கணிக்க அறிஞர்கள் பலராலும் இயலவில்லை. அறிவியல் கலைகள் பண்டைய தமிழர்களிடம் பயன்முறைக் கலைகளாக (Applied Science) மிளிர்ந்திருந்தன என்பதை பல்வேறு காலகட்டங்களில் எழுந்த சங்க இலக்கிய நூல்களின் மூலம் காணமுடிகிறது. போதிய உபகரணங்கள் எதுவுமின்றி பட்டறிவின் மூலம் உருவாக்கிய பயன்முறைக் கலைகள் பற்றிய பண்டைய இலக்கியவாதிகளின் சிந்தனையை இன்றைய அறிவியலாளர்கள் பெரிதும் வியந்து உற்றுநோக்குகின்றனர். அவற்றில் காணப்படும் அறிவியல் சிந்தனைகள் இன்றும் நம்மை வியந்து பார்கச் செய்கின்றன. எனவேதான் பண்டையத் தமிழரின் எந்தவொரு படைப்பும் காலத்தால் பின்னோக்கிய பழமையுடையதாக இருந்தாலும்; தற்காலத்தில் கண்டுபிடிக்கபடும் எந்தவொரு கண்டுபிடிப்புகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏதாவது ஒருவகையில் ஒற்றுமையுடன் காணப்படுவது கண்கூடு. அந்த வகையில் உலக பொதுமறையான திருக்குறளில் பொதிந்துள்ள பொதுமைக் கூறுகளை தற்கால அறிவியல் உலகின் புதுவரவாகிய செயற்கை நுண்ணறிவுடன் பொருத்திக் காண்பதை மையமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.
நாலடியாரில் ‘அறிவிலார் எல்லாம் உயிரிலார் எனப்படுவர்’ அதாவது அறிவு என்ற ஒன்று இல்லை என்றால் மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடுகிறது என்று கூறுகிறது. எனவேதான் அறிவு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட; மனிதனின் முன்னேறிய அறிவு நுட்பம் என்று போற்றப்படக்கூடிய செயற்கை நுண்ணறிவோடு இலக்கிய அறிவினை பொருத்திப் பார்க்கிறது இவ்வாய்வு. அதாவது செயற்கை நுண்ணறிவின் மையப்புள்ளி என்பது அறிவை உருவாக்குவது அல்லது புதிய அறிவின் அடுத்த அத்தியாயமாகத்தான் பார்க்க முடிகிறது. எனவேதான் நாலடியாரின் இந்த வரிகள் செயற்கை நுண்ணறிவின் கண்டுபிடிப்பு அல்லது இனிமேல் வரக்கூடிய புதிய தொழில்நுட்ப அறிவின் கண்டுபிடிப்புகளுக்கு எப்பொழுதும் பொருந்தும் வகையில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவை தொல்காப்பியத்தோடு தொடர்புபடுத்திப் பார்போது, தொல்காப்பியத்தில் உள்ள தமிழ் இலக்கண கட்டமைப்பைப் போன்றே; செயற்கை நுண்ணறிவின் மொழி பகுப்பாய்வும் (NLP-Natural Language Processing) சிறப்பாக அமைந்துள்ளது. எனவே, செயற்கை நுண்ணறிவின் மொழிப் பகுப்பாய்வு என்பது தொல்காப்பிய இலக்கண கட்டமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. அதேபோன்று அறிவியல் சிந்தனைகளைப் பொருத்தவரை தற்கால நவீன உலகம் கண்டும், பெற்றும் வியந்து பார்க்கின்ற அறிவியல் கூறுகளை சிலம்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், சீவகசிந்தாமணி மற்றும் புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்களிலும் காணமுடிகின்றது. அவற்றையும் செயற்கை நுண்ணறிவுடன் பொருத்திக் காண்பது நமது கடமையாகும்.
செயற்கை நுண்ணறிவ என்பது சிந்திக்கும் திறனை இயந்திரம் வழியாக செயலாக்கம் செய்யும் அறிவியல் எனலாம். 1950-களில் ஆலன் டூரிங்கின் கோட்பாடுகளுடன் தொடங்கி இவ்வறிவியல் முறை இன்று மிகப்பெரும் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும், இவ்வறிவியல் துறையானது பல்வகையான துறைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் அளவிற்கு வளர்ச்சியும் பெற்றுள்ளது. அந்தவகையில் திருக்குறளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் இவ்வொப்பீடு வரும் தலைமுறையினருக்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்பதில் எவ்வித ஐயமில்லை. திருவள்ளுவர் தம் குறளில் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய விடயங்களை நேரடியாக கூறவில்லை என்றாலும்; அறிவினால் ஆகக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைப் பற்றிய சிந்தனையை அதிகமாகக் கூறிச் சென்றுள்ளார். செயற்கை நுண்ணறிவில் அறிவே ஆக்கசக்தியாக பயன்படுகிறது என்பது உலகறிந்த உண்மையும் கூட. எனவே, வள்ளுவனின் அத்தகைய சிந்தனை என்பது செயற்கை நுண்ணறிவுக்கு மட்டுமல்ல இனிவரும் அறிவியல் கண்டுபிப்புகள் அனைத்திற்கும் பொருந்துவதாக அமைகின்றது எனலாம். எனவே, செயற்கை நுண்ணறிவியலோடு தொடர்புடைய வள்ளுவனின் குறள்களை இனிவரும் பகுதிகளில் காணலாம்.
அறிவின் முக்கியத்துவம்
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.” (குறள் -423)
ஒன்றைப் பற்றிய செய்தியினை எந்த மூலங்களின் மூலமாக பெற்றாலும் அதன் உண்மைத் தன்மையை கண்டறிவதுதான் ஆகச்சிறந்த அறிவு என்கிறார் வள்ளுவர். செயற்கை நுண்ணறிவிலும் பெறப்படும் செய்திகளை சரிபார்த்து முடிந்தவரை அதன் உண்மைத் தன்மையை உறுதிசெய்தன் பிறகே தரவுகளை வெளியிடுகின்றன செயற்கை நுண்ணறிவுச் செயலிகள். எனவே செயற்கை நுண்ணறிவின் இத்தகைய செயல் வள்ளுவனின் குறளுக்கு வலுசேர்ப்பதாகவே அமைகின்றது எனலாம். இதற்கு உதாரணமாக ஜெமினி (Gemini), சாட்ஜேபிடி (ChatGPT) மீட்டா ஏஐ (Meta AI)ஆகிய செயலிகளை உதாரணமாகக் கூறலாம்.
கற்றலின் அவசியம்
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” (குறள் – 391)
இந்த குறளில் திருவள்ளுவர் கற்றல் என்பது குற்றமில்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். செயற்கை நுண்ணறிவில் Machine Learning என்ற செயலானது வள்ளுவனின் கருத்துப்படி அமைந்துள்ளது எனலாம். அதாவது தவறில்லா தரவுகளைத் தருதல் மற்றும் தரவுகளை சரிபார்த்து அறிந்து கொள்ளுதல் போன்ற சிறப்பான பணியினை இயந்திரக் கற்றல் செயல்பாடு நமக்கு வழங்குகிறது. அதன்மூலம் தவறில்லா கற்றலை தற்கால மாணவர்கள் கற்றுக்கொள்ள இயந்திரக் கற்றல் வழிவகை செய்கிறது எனலாம். உதாரணமாக வேற்றுமொழி கற்றல் செயலிகள் (Arivu APP etc) தேவையற்ற அஞ்சல் செய்திகளை தவிர்த்தல் (Email Spam Detection), யூடியூப் காணொலிப் பரிந்துரைகள் (YouTube Recommendation), இணையவழி வணிகப் பரிந்துரைகள் (Online Shopping Suggestions), முகம் மற்றும் குரல் பதிவின் வழி பதிலளித்தல் (Face and Speech Recognition), முன்கூட்டிய சாலை நெருக்கடிகளை அறிந்து கொள்ளுதல் (Traffic Prediction) ஆகியனவற்றை கூறலாம்.
முன்னறிவு
“அறிவுடையார் ஆவார் அறிவார் அறிவிலார்
அற்றம் அறியார் அறிவு” (குறள் – 429)
திருவள்ளுவர் இக்குறள் மூலம் அறிவுடையார் எதிர்கால விளைவுகளை எப்போதும் உணர்ந்தே எந்த செயலையும் மேற்கொள்வார் என்று கூறுகிறார். அதாவது எதிர்காலத்தில் நிகழ்வதை கணிக்கும் செயற்கை நுண்ணறிவினை Predictive Analytics என்பர். எனவேதான் இந்த குறள் செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டுடன் ஒப்பீட்டு பார்க்க முடிகிறது. இதற்கு உதாரணமாக வானிலை முன்னறிவு (Weather Forecast), விற்பனைக் கணிப்பு (Sales Prediction), கடன் அபாயக் கணிப்பு (Credit Risk Prediction) ஆகியனவற்றைக் கூறலாம்.
ஆராய்ந்து தேர்வு செய்தல்
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்னோய்போல் போற்றாக் கடை” (குறள் – 423)
இந்த குறளின் மூலம் வள்ளுவர், அறிவு என்பது பிறர் நிலையை உணர்ந்து செயல்படுதல் என்கிறார் மேலும் அத்தகைய சிறந்த பண்பினை பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். எனவே இத்தன்மை கொண்டோரின் முடிவுகள் எப்போது தவறாக போகாது. ஏன் என்றால் அவர்கள் பிறர் நிலையில் நின்று சிந்தித்து முடிவுகளை எட்டுவதினால். எனவே வள்ளுவனின் இச்சிந்தனையை செயற்கை நுண்ணறிவின் Ethical Decision Processing யோடு ஒப்பிட முடிகிறது. உதாரணமாக வாகனம் ஓட்டும் போது இடையூறு இல்லா வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் (Driving Car Decision) நிறுவனத்திற்கு ஆட்களை தேர்ந்தெடுத்தல் (AI Hiring System) நோயாளிகளின் தனியுரிமை பாதுகாத்தல் (Medical AI Diagnosis) ஆகியனவற்றைக் கூறலாம்.
எண்ணியச் செயல்
“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” (குறள் – 467)
ஒரு செயலை துவக்குவதற்கு முன்பு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். அவ்வாறு சிந்திக்காமல் அல்லது முறையாக திட்டமிடாமல் செயலை தொடங்கினால் அந்த செயலானது நல்லதொரு முடிவினை தராது என்பது வள்ளுவன் வாக்கு. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவின் Algorithms முறையாக முன்கூட்டியே வடிவமைக்கப் பட்டுள்ளதால் சீராக செயல்படுதலின் மூலம் பின்னாளில் ஏற்படும் தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. உதாரணமாக பிரச்சனைகளை பிரித்து தகுந்த முடிவெடுத்தல் (Decision Tree Algorithm) இரண்டு தரவுகளை கொண்டு தவறுகளைக் கணித்தல் (Linear Regression) அருகில் உள்ள தரவுகளை கொண்டு தெளிவுபடுத்திக் காட்டுதல் (K-Nearest Neighbors) மனித மூளை நரம்பியல் போன்று யோசித்து பிரச்சனைகளுக்குத் தகுந்தாற்போல முடிவெடுத்தல் (Neural Networks) ஆகியனவற்றைக் கூறலாம்.
இறுதியாக தமிழில் நேரடியாக இந்த செயற்கை நுண்ணறிவின் செய்திகளுக்கான தரவுகள் நேரடியாக இல்லை என்றாலும் அதன் செயல்பாடுகளை ஒத்த கருத்துகள் தமிழில் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. இலக்கியத்தில் அறிவு, ஆராய்ச்சி, தர்க்கம், முன்னறிவு, மற்றும் சிந்தனை ஆகியன கட்டமைப்புகளாக விளங்குவதைப் போன்றே; செயற்கை நுண்ணறிவின் அடிப்படை அம்சங்களாகவும் அவை விளங்குகின்றன. அதன் கருத்துக்கள் திருக்குறளில் மட்டுமல்லாது தமிழில் உள்ள அனைத்து இலக்கியங்களிலும் நீக்கமற நிறைந்து காணக் கிடக்கின்றன. ஆகவேதான் தமிழ் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என்னும், தமிழனே! அனைவருக்கும் முன்னோடி என்றும் கூறுகிறது தமிழ் கூறும் நல்லுலகு.
📚 எழுதியவர்:

முனைவர் வீ.கிருஷ்ணகுமார்
உதவிப் பேராசிரியர்,
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி,
போடிநாயக்கனூர் – தமிழ்நாடு.
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
