திருக்குறளும் வணிக நிர்வாகமும்
குறள், முப்பால், பொதுமறை என்று பலவகையாலும் அறியப்படும் திருக்குறள் சற்றேறக்குறைய 2300 ஆன்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. திருக்குறளைப் படிக்கும் போது பல குறள்கள் இக்காலத்து வணிக நிர்வாகத்துக்கும் பொருந்தும் என்று மனதில் தோன்றும். அவற்றில் இருபத்து நான்கு குறள்களைத் தேர்வு செய்து அது எவ்வழியில், இந்த நவீன யுகத்திலும் வணிக உலகிற்குப் பொருத்தமாக உள்ளது என்பதை விளக்கியுள்ளேன்.
தலைமைத்துவம்.
வணிக நிறுவனத்திற்கு அதன் தலைமைப் பொறுப்பு மிகவும் முக்கியமான ஒன்று. நிறுவனத்தின் வளர்ச்சி அந்த நிறுவனத் தலைவரின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும். நிறுவனத்தலைவர்க்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணங்கள் நான்கு.
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு. (382)
நிறுவனத்தை வழிநடத்தற்குத் தேவையான துணிவு, நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பணியிருப்பவர்கட்கு வேண்டியவற்றைத் தயங்காமல் அளிக்கின்ற மனம், சீர்தூக்கிப் பார்க்கும் தெளிந்த அறிவு, முன்னேற்றம் வேண்டும் என்ற மன எழுச்சி ஆகிய நான்கு குணங்கள் இன்றி அமையாதவை.
தூங்காமை, கல்வி, துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு. (383)
நிறுவனத் தலைவனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத மூன்று பண்புகள் – எடுத்துக் கொண்ட பணியைச் சோர்வு இல்லாமல் காலம் தாழ்ந்து செயல்படாமல் காரியத்தை முடித்தல், செய்கின்ற பணியைப் பற்றிய தெளிந்த அறிவு, பணியை முடித்தற்குத் தேவையான மனத் திட்பம்.
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)
நிறுவனத்தின் நிதி பெருகுவதற்கான வழிகளை உணர்ந்து அதற்கேற்ற பாதையில் நிறுவனத்தைச் செலுத்தி, ஈட்டிய செல்வத்தைக் காத்து, அதனை அளவறிந்து செலவு செய்ய வல்லவனே தலைவராக இருக்கத் தகுந்தவன்.
தகுதி யெனஒன்று நன்றே, பகுதியால்
பாற் பட்டொழுகப் பெறின் (111)
நிறுவனத் தலைவன் எப்பக்கமும் சாராமல் நடுநிலை வகுக்க வேண்டும். நடுநிலை வகிக்கின்ற தலைவன் சிக்கல் வரும் போது அதற்கேற்ற தீர்வை ஆராய்ந்து செயல் படுத்த முடியும்.
தன்னைத் தான்காக்கின் சினம்காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (305)
கோபம் ஒருவனை அழித்துவிடும் வல்லமை உடையது. அதுவும் நிறுவனத் தலைவர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறமையற்றவராக இருந்தால், அது நிறுவனத்திற்கே கேடாக முடியும்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (429)
தொலை நோக்குப் பார்வையுடன் பின்னால் வரப் போகின்ற இடுக்கணை அறிந்து அதற்கேற்ப தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் தன்மை வேண்டும். காலத்திற்கேற்ப தொழில் நுட்பங்கள் மாறுகின்றன. மாற்றம் வருகிறது என்பதை அறியும் திறன் இருந்தால், வருகின்ற மாற்றத்திற்கு ஏற்றாற் போல் தான் சார்ந்த நிறுவனத்தின் பாதையை மாற்றவோ, செப்பனிடவோ துணிவு வரும்.
வினைக்கேற்ப திட்டமிடுதல்
நிறுவனம் ஒரு பணியைத் துவங்கும் முன் அந்தப் பணியை செய்யும் வகைக்குத் திட்டமிடுதல் அவசியம். பெரிய பணியாக இருந்தால் அதை சிறு சிறு பணிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் செய்து முடிக்க எத்தனை காலம் பிடிக்கும், செய்து முடிக்கத் தேவைப்படும் தகுதியென்ன, பணியை செய்யப் போகிறவர்கள் யார் என்று ஆராய்ந்து அதன் பின்னரே பணியை மேற் கொள்ள வேண்டும்.
எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)
செயலை செய்யத் தொடங்கு முன் இந்த வினை நமது நிறுவனத்தின் திறனுக்கு ஏற்றதா ?, செய்து முடிக்கும் ஆற்றலுள்ளவர்கள் நம்மிடையே உள்ளாரா ? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.
செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
செய்யாமை யானும் கெடும். (466)
எடுத்துக் கொண்ட செயலுக்கு தேவையானதை செய்யத் தவறி விட்டாலும், அந்த செயல் செய்து முடிப்பதற்கு தேவையற்ற ஒன்றை செய்வதினாலும் அந்த செயல் கெடும்.
அருவினை என்ப உளவோ, கருவியான்
காலம் அறிந்து செயின்? (483)
ஒரு செயலை சரிவர செய்து முடிக்கின்ற வழியறிந்து, அதை எந்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற காலத்தையும் அறிந்து, அந்த செயலை செய்பவனுக்கு செய்ய முடியாத வினைகள் என்று எதுவுமில்லை.
அரிய என்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். (537)
கொடுத்த பணியை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஆழ்ந்து சிந்தித்து செயலில் இறங்குபவனுக்கு முடியாத செயல் என்பது ஒன்றுமில்லை.
தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (672)
குறிப்பிட்ட ஒரு பணியை சிறு சிறு பணிகளாகப் பிரித்து செயல் செய்ய துவங்கும் போது, ஒரு சில பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் விரைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால் அது அதற்கடுத்து செய்ய வேண்டிய மற்ற பணிகளைத் தாமதப்படுத்தும் சூழல் ஏற்படும். ஒரு சில பணிகளை காலம் தாழ்ந்து செய்தாலும் எடுத்துக் கொண்ட பணியை குறித்த தருணத்தில் முடிக்க இடையூறு ஏற்படாது.
பொருள், கருவி, காலம் வினைஇடனோ(டு) ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் (675)
ஒரு வினையைச் செய்யத் தொடங்கும் முன் முக்கியமான ஐந்தை நன்கு ஆராய வேண்டும். அவையாவன – வினையைச் செய்வதற்குத் தேவையான பொருள் வசதி, வினையைச் செய்யும் வழி, வினையை செய்து முடிக்க வேண்டிய காலம், வினையின் தன்மை, வினையைச் செய்து முடிக்கப் போகின்ற இடம்.
செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை
உள்ளறிவான், உள்ளம் கொளல். (677)
ஒரு தொழிலைச் செய்யத் தலைப்பட்டவன், அந்த தொழிலின் நுட்பத்தை நன்கு அறிந்தோர் எவரேனும் இருந்தால், அவரது கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வினைக்கேற்ப பணியாளரை அமர்த்தல்
தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள் (509)
பணியில் அமர்த்தியவர்கள் எவரையும் அவர்களின் குணநலங்களை நன்கு ஆராய்ந்து அறியாமல் நம்பக் கூடாது. பணிக்கு ஏற்றவர் என்று நம்பிய பின்னர் அவரின் வல்லமைக்கு ஏற்ற பணியை அவரிடம் விட வேண்டும்.
தேரான் தெளிவும், தெளிந்தாங்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும். (510)
ஆராயாமல் ஒருவனைப் பணி அமர்த்துவதும், நன்கு ஆராய்ந்து பணியில் அமர்த்தியவன் மீது ஐயம் கொள்வதும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை, இந்நான்கும்
நன்குடையான் கட்டேத் தெளிவு. (513)
பணியில் அமர்த்தப்படுபவனுக்கு இன்றியமையாத நான்கு குணங்கள் – தான் சார்ந்த நிறுவனத்தின் மீது பற்று, கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்யத் தேவையான ஆழ்ந்த அறிவு, ஆராய்ச்சிக்குத் தேவையான தெளிந்த மனது, பேராசை இல்லாத தன்மை.
இதனை இதனால் இவண்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல் (517)
இந்தப் பணியை இவனால் சிறந்த முறையில் செய்து முடிக்க முடியுமா என்று நன்கு ஆராய்ந்து, முடியும் என்று அறிந்த பின்பு தான் அந்தப் பணியை அவனிடம் விட வேன்டும்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்(கு) அல்லால் வினைதான்
சிறந்தானென்(று) ஏவற்பாற் றன்று (515)
ஒருவனைப் பணியில் அமர்த்தும் போது, இந்தப் பணியை செய்ய வல்லவனா, அதற்கேற்ற அறிவும், ஆற்றலும் உள்ளவனா என நன்கு ஆராய்ந்து பின்னர் பணியில் அமர்த்த வேண்டும். அல்லாமல் இவன் எனக்கு இனிமையானவன், என் சொல்லைக் கேட்பவன் என்ற கருத்தில் தகுதி அற்றவனை பணியில் அமர்த்தக் கூடாது.
பொதுநோக்கான் வேந்தன், வரிசையா நோக்கின்,
அதுநோக்கி வாழ்வார் பலர். (528)
ஒரு நிறுவனத்தின் தலைவர், தன்னிடம் பணி செய்யும் எல்லோரையும் ஒரே தன்மையில் நோக்காமல், அவரவர் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப பணியாளர்களை நடத்துவாரானால், பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு நீங்காதிருப்பர்.
பேச்சுத்திறன்
அவையறிந்(து) ஆராய்ந்து சொல்லுக: சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். (711)
நிறுவனத்தில் பலநிலைகளில் பணியாளர்கள் இருப்பர். வெவ்வேறு நிலைகளிலும் பணியாளர்களின் கல்வித்தரம், சொல்வதைப் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவை வேறுபடும். ஆகவே ஒரு குழுவாகப் பணியாளர்களிடம் பேசும் போது, ஒரு நிறுவனத் தலைவர், அந்தக் குழுக்களின் தரம் அறிந்து அதற்கேற்ப தன்னுடைய பேச்சை வகைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
நிறுவனத்தலைவரின் ஆலோசகர்கள்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர் ? (447)
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இதை கண்டிப்பாகச் செய்யலாம் அல்லது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன், நிறுவனத் தலைவர் செய்யலாம் என்று கொண்டு வந்த பணியை அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இது வேண்டாம் என்று துணிவுடன் தலைவரிடம் சொல்லும் துணிவுற்ற ஆலோசகரைப் பெற்ற நிறுவனம் என்றும் அழியாது.
இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும். (448)
தலைவன் செய்கின்ற தவறை சுட்டிக் காட்டி, இது செய்யத் தக்கதல்ல என்று துணிவுடன் கூறும் ஆலோசகர் இல்லாத நிறுவனம் நாளடைவில் அழிந்து போகும்.
முதலீடு செய்தல்
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். (461)
நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்தை வாங்கத் தலைப்படும் போதோ அல்லது புதிய தயாரிப்பிற்கு திட்டமிடும் போதோ முதலீடு செய்வதற்கு முன் கீழ் கண்டவற்றை நன்கு ஆராய்ந்து பின்னரே செயலில் இறங்க வேண்டும். அவையாவன – எத்தனை முதலீடு செய்ய வேண்டும், இத்திட்டத்தால் நிறுவனத்திற்கு என்ன வரவு, எத்தனை இலாபம் ஈட்ட முடியும்.
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். (463)
ஒரு பணியில் முதலீடு செய்வதில் அதிக இலாபம் வரும் என நம்பிக்கை கொண்டு முதலிட்டு அதனால் சேமிப்பை இழக்கும் செயலை செய்யக் கூடாது. அதிக வட்டி வரும் என்று நம்பி சிறுகச் சிறுக சேமித்த செல்வத்தை முன்பின் தெரியாத இடத்தில் முதலீடு செய்து அதனால் தன் வாழ் நாள் சேமிப்பை இழப்பவர்களுக்கும் இது பொருந்தும்.
திருக்குறள் ஒரு கருத்துக் கருவூலம். எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதான அறிவுரைகள் ஈரடியில் கொட்டிக் கிடக்கின்றன. தற்கால வணிக நிர்வாகத்திற்கும், நிறுவனங்களுக்கும் பொருந்துவதாக உள்ள குறள்களில் ஒரு சிலவற்றையே இங்கு எடுத்துக் காட்டாக விளக்கியுள்ளேன். இது மேன்மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்ற பொருள் என்று நினைக்கிறேன்.
📚எழுதியவர்:
சென்னை.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

