நூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ் 

     நூலாசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். செயற்பாட்டாளர். குறள் வழித்திருமணங்களை நடத்தி வைப்பவர். இதுவரையிலும் 150 க்கு மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்துள்ளார். வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர். தேனியில் இயங்கிவரும் வாசிக்கலாம் வாங்க என்ற வாசிப்பாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர். இதுவரை ஒரு கவிதைத்தொகுப்பையும், திருக்குறள் இன்பத்துப்பால் பற்றிய ஒரு கட்டுரைத்தொகுப்பும் எழுதியுள்ள அவரின் மூன்றாவது நூலாகும் இது.
   இந்நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள் உள்ளன. வள்ளுவர் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள், அரசியல், மருத்துவம், வாழ்வியல், மதுவிலக்கு, இல்லறம், அறநெறி, நட்பு, ஆண்களுக்கு வேண்டும் கற்பு. ஊழையும் உப்பக்கம் காண்பர், நீரின்றி அமையாது உலகு போன்ற அருமையான கட்டுரைகளை எழுதித்தொகுத்துள்ளார்.
ஊழ் என்பது தூய தமிழ்ச் சொல். தொல்காப்பியம் தொட்டு சங்க இலக்கியங்கள் உட்பட திருக்குறள் வரை இச்சொல் 96 இடங்களில் பதிவு பெற்றிந்தாலும் ஓரிடத்தில் கூட அச்சொல் தலைவிதி என்றோ, வினைப்பயன் என்றோ கையாளப்படவில்லை என்கிறார். திருக்குறளுக்கு பின் வந்த இலக்கியங்களான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தான் அது விதி என்றும் வினைப்பயன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பழந்தமிழ் நூல்களில் ஊழ் என்பது முறைமை, மலர்தல், முற்றல், உதிர்தல் போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி ஊழ் என்பது இயல்பாக தானே நிகழ்வது ஆகும். ஆவது அழிவது தானே நிகழ்வது என்று கூறும் ஆசிரியர் இருவகையான ஊழ்களை குறிப்பிடுகிறார். அது ஆகூழ், போகூழ் என்பன. வினைப்பயன் என்பது இல்லை என்று நிறுவனம் ஆசிரியர் சுனாமி நிகழ்வைச்சுட்டிக்காட்டுகிறார். அன்று இறந்த ஆயிரக்கணக்கான உயிர்களும் ஒரே தலைவிதியினால்தான் இறந்தார்களா என்று வினா எழுப்புகிறார்.
இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ...
உழவன் ஒருவன் தன் நன்செய் நிலத்தில் விதைத்திருந்த நெல் மணிகள் ஒரு நாள் பெருமழையில் அடித்துச்செல்லப்படும்போது, அதே உழவனின் புன்செய் பயிர்கள் செழித்து வளர்ந்தால் அந்த உழவன் செய்த நல்வினை என்ன? தீவினை என்ன? என்று கேட்கிறார்.
கபிரியேல் பெர்ட்ரான் என்ற உயிரியல் விஞ்ஞானி நூறுகிலோ எடையுள்ள ஒரு மனிதனின் உடலில் ஆக்சிஜன் 63%, கார்பன் 19%, ஹைட்ரஜன் 9%, கால்சியம் 1%, பாஸ்பரஸ் 700கிராம், நைட்ரஜன் 5%, சோடியம் 250கிராம், குளோரின் 180கிராம், இரும்பு 3கிராம் போன்ற தனிமங்களால் ஆனவை என்று கண்டுபிடித்துள்ளார். ஆனால் நம் முன்னோர்கள் உடலானது ஐம்பூதங்களால் ஆனது என்றும், நம் உடல் இயக்கம் சீராக நடக்கவேண்டுமென்றால் வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று நாடிகளும் சமமாக சீராக இயங்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். நம் உடலில் உள்ள காற்று, நீர், வெப்பம் ஆகியவற்றில் ஏதோ ஒன்று கூடினாலும் குறைந்தாலும் நோய் வருமென்று உணர்த்தினார், அதையே வள்ளுவர்
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று “என்று குறிப்பிடுகிறார்.
“அற்றால் அளவறிந்து உண்க” என்று நமக்கு அறிவுரை கூறும் வள்ளுவர், அது ஒன்றினால்தான் மட்டுமே நெடிய ஆயுள் கிடைக்கும் என்று கூறுகிறார்.
மதுவைப்பற்றிய ஒரு கட்டுரை, அதில்,  நாம் அருந்தும் ஆல்கஹால் குருதியில் கலந்து மூளையை அடைகிறது. ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை கண்டறியும்போது Blood Alcohol concentration  என்று குறிப்பிடுவார்கள். அந்த bac அளவைப்பொறுத்து அதனை உட்கொண்டவர்களின் எதிர்வினையிருக்கும்.
Bac அளவு.0.12%%இருந்தால் தான் ஒரு பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம் மேலோங்கும் இந்நிலையில் சரியான முடிவுகள் எடுக்கமுடியாமல் உணர்களுக்கு எளிதில் வயப்படுவர்.
Bac0.9%லிருந்து 0.18%வரையிருக்கும்போது தூக்கம் வரும். நினைவு மழுங்கும், நிலை தடுமாறும்  உணர்வுகள் மரத்துப்போகும்.
0.25%போகும்போது மட்டையாகிவிடுவார் அதற்கும் மேலே போகும்போது மூச்சு விடுதல் குறைந்து. இதயத்துடிப்பு குறைந்து இறப்பு வாய்ப்பு அதிகரிக்கும். இப்படிப்பட்ட  மது குடிப்பது பற்றி வள்ளுவர்
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுபவர் “என்று பாடுகிறார்.
திருக்குறள் – புகழ்பெற்ற பழைய ...
இல்வாழ்வான் சிறப்புகளைப் பற்றி கூறும் வள்ளுவர், இல்லத்திலிருந்து செம்மையாக வாழ்வை நடத்துகிறவன் என்றும், தனக்கு இயல்பாக தொடர்புடையவர்களாக விளங்கும் தாய், தந்தை, மனைவி, ஆகிய மூன்று பேருக்கும் நல்ல வழிகளில் துணையாக இருப்பதோடு துறவிகளுக்கும், வறுமையில் சிக்கியவர்களுக்கும் பாதுகாப்பற்றவர்களுக்கும் துணையாக நிற்க வேண்டும் எனக்கூறுகிறார்.
கொடையென்பது எல்லோருக்கும் கொடுப்பதல்ல, பிறரை வஞ்சிக்காமல், புண்படுத்தாமல், களவு, சூது செய்து ஏமாற்றாமல் தன் முயற்சியில் நேர்மையான வழியில் பொருள் சேர்த்து தனக்கு எஞ்சியதை தகுதியுடையவர்களுக்கு கொடுப்பதே கொடையாகும் என்கிறார்.
கணவன் பரத்தையைத் தேடிச்சென்றாலும் அவன் மீண்டும் வருவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கவேண்டும் என்று சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றை உடைக்கும் முதல் மனிதராக வள்ளுவர் விளங்குகிறார் என்றால் அது பொய்யில்லை. ஆண்களுக்கும் அந்தக்கற்பு உண்டு என்கிறார். ஆணோ அல்லது பெண்ணோ அவரவர்கள் தங்களது மேன்மையினை உறுதிப்படுத்தவேண்டும்.
திருக்குறள் ஒரு தேசிய நூல் என்பதற்கு ஆசிரியர் பல்வேறுச் சான்றுகளைத் தருகிறார்.
திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை, அதே சமயம் எந்த மதத்தையும் அது முன்னிறுத்தவில்லை, மதச்சார்பின்மைதான் நம் இந்தியா திருநாட்டின் மாபெரும் சிறப்பு, திருக்குறளும் அவ்வகைப்பட்டதே. குறள் நெறி நாட்டில் பரவினால் ஒருமைப்பாடு தானே உருவாகும் என்கிறார் குன்றக்குடி அடிகளார்.
திருக்குறளின் பெருமையை உணர்ந்த மகாத்மா திருக்குறளைப்படிப்பதற்காகத் தான் தமிழனாய் பிறக்கவேண்டும் என ஆசைப்படுகிறார்.
இந்நூலில் உள்ள அனைத்துக்கட்டுரைகளும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வாசிப்பவர்களுக்கு இந்நூல் அருமருந்தாகும்.  உள்ளம்  உயர்வு பெற வள்ளுவர் காட்டிய வழியில் நடப்போம்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.
நூல் =திருக்குறள் ஒரு மருந்தகம் 
ஆசிரியர் =குறளாய்வுச் செம்மல் புலவர் ச. ந. இளங்குமரன் 
பதிப்பு =மணிவாசகர் பதிப்பகம் 
விலை =ரூ 75/