திருக்குறள் – திரைவிமர்சனம்
திருக்குறள் – புதிய தமிழ்த் தலைமுறைக்கு காலத்தால் அழியாத காட்சி ஆவணம்
அறம் கூறும் நூல் என்று நீதியின் பட்டியலில் வைக்கப்பட்டு பாடத்திட்டங்களில் மனப்பாட பகுதியாக மட்டுமே காலங்காலமாக இருந்து வரும் திருக்குறளை திரைவடிவில் செதுக்கி கண்கள் குளிர்ந்து ரசிக்கும்படி காவியமாக்கியிருக்கிறார்கள்.
தொல்காலத்திற்கு நம்மை சுண்டுவிரல் பிடித்து அழைத்துச் செல்லும் இசைஞானி இளையராஜாவின் இசை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
திருவள்ளுவரை சிலையாக, வரைபடமாக, ஓவியமாக பல்வேறு வடிவங்களில் பார்த்திருக்கும் நமக்கு வள்ளுவரை அச்சு அசலாக காட்டியிருக்கிறார்கள். திரு.கலைச்சோழன் அவர்கள் இப்படத்தில் வள்ளுவராகவே வாழ்ந்திருக்கிறார்.
உடல்வாகு, தீட்சண்யமான கண்கள், பரந்த நெடுநெற்றி, இரண்டடுக்கு குடுமி, ஒளிவீசும் வதனம், தோற்றத்திலும் பேச்சிலும் அறம் வழுவா அழகு என்று வள்ளுவர் கதாபாத்திரத்திற்கு திரு.கலைச்சோழன் அத்தனை பொருத்தமாக மிளிர்கிறார்.
நடிப்பில் மிகை இல்லை, திரைக்கதையின் சோர்வு இல்லை, உரையாடலில் அலுப்பு இல்லை, இசையில் தொய்வு இல்லை. படம் காண்பதில் புதிய உயர்காற்று மூளைக்குள் பாய்வதை உணரமுடிகிறது.
திரைக்கதையின் ஒவ்வொரு பகுதியிலும் திருக்குறளை மிக இயல்பாக கையாண்டிருக்கும் விதம் ஆச்சர்யப்படுத்திகிறது. கதையின் போக்கில் சங்க இலக்கியத்தின் பல நல்ல பாடல்களை உரையாடல்களில் கையாண்டிருக்கும் நுட்பம் பாராட்டுதலுக்கு உரியது.
ஒரு காலத்திற்குள் நம்மை அழைத்து செல்வதற்கு நம்மை மிக அழகாக கட்டமைக்கிறது படம் தொடங்குவதற்கு முன் தலைப்பிடும் பகுதி. எழுத்தும் குரலுமாக நம்மை சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்திற்குள் அழைத்துச் செல்கிறது.
குறிப்பாக கதைக்களமும் கதை நடக்கும் பின்னணியும் நம்மை புதிய உலகத்தில் உலவவிடுகின்றன. தத்ரூபமான கலை ஆக்கம் கதையோடு நம்மை ஒட்டி உறவாட வைக்கிறது.
தமிழர்களின் களவு/கற்பு வாழ்வை சொல்லும் இடங்களில் இனிக்கும் காதல் அறத்தையும் தமிழர்களின் வீரத்தைச் சொல்லும் போது தினவெடுத்த மறத்தையும் தமிழர்களின் கொடையைச் சொல்லும் போது செக்கச்சிவந்த கைகளையும் மிக அற்புதமாக கலைரசனையோடும் பதிவு செய்திருக்கிறார்கள். இயக்குநரின் இலக்கிய ஆழமும் பழுத்த அனுபவமும் பளிச்சிடுகிறது.
இந்தப்படத்தின் உரையாடல் ரசிக்க வைக்கிறது. சங்கத்தமிழையும் சமகாலத் தமிழையும் சரிவிகிதத்தில் பிழைத்து செய்த அழகு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் புதிய தலைமுறையினருக்கு மூதாதை தமிழர்களின் அழகிய காட்சிக் கருவூலமாக திருக்குறள் திரைப்படம் திகழ்கிறது.
வள்ளுவர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் கலைச்சோழனின் முகத்தில் தெய்வ ஒளி ததும்பி வழிகிறது. இப்படத்தை கலைச்சோழர் அற்புதமாக தூக்கிச் சுமந்திருக்கிறார்.
நாடகக்கலைஞராக இருந்து திரையில் இப்படி அழுத்தம் திருத்தமாக அவர் அவதாரம் எடுத்திருப்பது சாதிக்கத் துடிக்கும் கலைஞர்களுக்கு நம்பிக்கையைப் பாய்ச்சுகிறது.
நல்ல சினிமாவை ரசித்து கொண்டாடுவது கலைத்தாய்க்குச் செய்யும் தலைமரியாதை. நேற்று அவிநாசி கருணாம்பிகை திரையரங்கில் சிறப்புக்காட்சியைக் கண்டு ரசித்தேன். இந்த வட்டத்திருக்கிற பல தமிழ் அமைப்புகளின் ஆகப் பழுத்த பெரியவர்கள் வந்திருந்தது தமிழுக்கும் கலைக்கும் கெளரவத்தை ஏற்படுத்தவே செய்தது.
தமிழ் அடையாளங்களைப் பாதுகாப்பதும் அதை அடுத்த தலைமுறையின் கைகளில் கொண்டு சேர்ப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை.
திரையரங்கு சென்று திருக்குறள் பாருங்கள். நல்ல கலையைக் கொண்டாடுங்கள். கலையில் நல்ல ரசனையை உருவாக்க நீங்கள் ஒரு பாலமாக இருங்கள்.
எழுதியவர் :
போ.மணிவண்ணன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.