முனைவர் வீ.கிருஷ்ணகுமார் (Krishna Kumar) எழுதிய "திருக்குறளும் திறன் நிர்வாகமும்" கட்டுரை | Thirukkuralum Thiran Nirvakamum - www.bookday.in

திருக்குறளும் திறன் நிர்வாகமும் – முனைவர் வீ.கிருஷ்ணகுமார்

திருக்குறளும் திறன் நிர்வாகமும்

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்னும் இப்பாடல் மகாகவி பாரதியாரின் ‘செந்தமிழ்நாடு’ என்னும் கவிதையில் இடம் பெற்ற திருக்குறளின் புகழ்பாடும் சிறப்புமிக்க வரிகள். தமிழன்னையின் புகழையும், தமிழ்நாட்டின் சிறப்பையும் திருக்குறள் என்னும் உலக பொதுமறையை வள்ளுவன் உலகிற்கு வழங்கியதன் மூலம் தமிழ்நாடு பெற்றுக் கொண்டது என்ற மகாகவியின் கூற்று முற்றிலும் சரியானது. திருக்குறளை உலக பொதுமறை எனக் கூறிடக் காரணம் எதுவாக இருக்க முடியும் என்று ஆராயும் போது அதன் தன்மை எல்லா காலத்திற்கும், எல்லா புதுமைகளுக்கும், அனைத்து சூழ்நிலைகளுக்கும், அனைத்துலகச் சிந்தனைகளுக்கும் பொருத்திப் பார்க்க முடிகிறது என்பதினால்தான் என்பது பதிலாக இருக்கும். திருக்குறளின் இந்தகைய சிறப்பை அதன் குறள்வழி நின்றே விளக்கலாம். ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு’ அதாவது உங்களின் துறை எதுவாகினும் சரி, நீங்கள் விளக்க முயலும் கருத்துகள் எதுவாகிலும் சரி எந்த அளவிற்கு திருக்குறளை நீங்கள் உற்று நோக்குகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களின் துறைசார்ந்த கருத்துக்களை விளக்குவதற்கு துணைநிற்கும் ஒரு கருவியாக அமைகின்றது திருக்குறள் என்பதுதான் உண்மை. அதன் அடிப்படையில்தான் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் மாறாமல் தற்கால திறன் நிர்வாகத்தை விளக்க முயல்கிறது இந்த கட்டுரை.

திறன் நிர்வாகத்தின் அடிப்படைக் கூறுகள்

ஆவணப்பதிவு (Documentation) 

ஒரு திறன் நிர்வாகத்தின் அடிப்படை பணி எதிலிருந்து துவங்குகிறது என்றால் நிகழ்வுகளை முறையாக ஆவணப்படுத்துவதில் இருந்துதான் துவங்குகிறது. அதாவது இன்றைய நிகழ்வுகளை முறையாக பதிவு செய்வதன் மூலம் அது எதிர்காலத்தில் வரலாறாக மாறுகிறது. மேலும்; சில முடிவுகளை எடுப்பதற்கு அது அடிப்படையானவையாக நிர்வாகிகளால் எடுத்துக் கொள்ள முடிகிறது. இதனை

“ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்”   (குறள்: 588)

என்றும் திருக்குறள் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம். அதாவது ஒரு தகவலை ஒன்றிற்கும் மேற்பட்ட ஆதாரத்தின் மூலம் உறுதி செய்யலாம் என்று வள்ளுவர் கூறுகிறார். அதன்படி ஆதாரங்களை பதிவுசெய்து வைப்பதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் ஆதாரத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் நடத்தப்படும் நிர்வாகம் என்பது எப்போதும்  திறன்மிக்கதாக இருக்கும்.

இடர்களைக் கண்டறிதல் (Identify the Bottlenecks)

நிர்வாகத்தில் பணி நிகழவில்லை என்றால் அதற்கு மிகமுக்கியமான காரணியாக இருப்பது ஏதோ ஒரு இடராகத்தான் இருக்கமுடியும். அந்த இடரினை இனம் கண்டு அதனை நீக்குவதன் மூலம் திறன் நிர்வாக பணிகள் மிகவும் இலகுவாக நடந்தேறி நிறுவனத்தின் இலக்கினை எளிமையாக அடையச் செய்கிறது எனலாம். இதனைதான் வள்ளுவர்

“நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”   (குறள்: 948)

என்று கூறுகிறார். அதாவது ஒரு நோயினை தீர்ப்பதற்கு மருந்து வழங்குவதை விட அந்த நோயின் காரணம் என்ன என்று கண்டறிந்து அதனை சரிசெய்வதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம் என்று விளக்குகிறார் வள்ளுவர். அதேபோல் நிர்வாகத்தில் பணிகள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணிகளை கண்டறிந்து அதனை சரி செய்வதன் மூலம் இலகுவான பணி செய்யும் சூழலை உருவாக்கி, பணியாளர்கள் இடர்பாடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக வேலை செய்யும் சூழலை உருவாக்கலாம். இதன்மூலம் எப்போதும் பணி இலகுவான சூழலில் நடைபெறுவதை உறுதிசெய்ய முடியும்.

முடிவெடுக்கும் கட்டமைப்பு (Decision frame work)

“தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்”   (குறள்: 462)

இக்குறள் வெளிப்படுத்தும் கருத்து யாதெனில் அறிவும், அனுபவமும் உடையவர்களுடன் ஆலோசித்து நன்கு ஆராய்ந்து செயல்படுபவர்களுக்கு செய்யமுடியாத காரியம் என்று ஒன்றுமில்லை என்பதுதான். எனவே திறன் நிர்வாகத்தில் இதுபோன்ற ஒரு அறிவும், அனுபவமும் கொண்ட நபரை பணியமர்த்துவதன் மூலம் அவர் எடுக்கும் முடிவுகள் என்பது மிகச்சரியாக இருக்கும். அதாவது ஒரு நிர்வாகத்தில் தோல்வி என்பது பல்வேறு முறைகளின் மூலம் வரலாம் ஆனால் அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காமல் இருப்பதுதான். மேலும்; சில நிர்வாகத்தில் ஒற்றை தலைமையும் அவரின் இசைவிற்காக பல்வேறு பணிகள் காத்திருப்பதையும் நம்மால் காணமுடிகிறது. எனவே இத்தகைய சூழலில் நாம் திறன் நிர்வாகத்தில் அறிவு மற்றும் அனுபவமும் கொண்ட நபரை பணியமர்த்துவதன் மூலம்; அவர் நிர்வாக பணிகளையும், அதன் மீது எடுக்கவேண்டிய சரியான முடிவுகளையும் சரியான நேரத்தில் தேக்கம் இல்லாமல் அவ்வப்போது நடத்தி முடிப்பார். இதன்மூலம் ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கமுடியும்.

தொடர் செயல்முறைகள் உருவாக்கம் (Build Repeatable Processed)

ஒரு சிறந்த நிர்வாகி என்பவர் எப்படிப்பட்ட நிர்வாக திறனை உருவாக்குவார் என்றால்; அவர் இருந்தாலும், இல்லையென்றாலும் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என எண்ணுவார். மேலும்; அந்த பணிகள் தொடர்ந்து வரும் காலங்களில் தொய்வின்றி நடக்கவும் முறையான வழிகளை கண்டறிந்து செயல்படுத்துவார். இதன்மூலம் அந்த திறன் நிர்வாகத்தில் யார் இருந்தாலும், இல்லையென்றாலும் அந்தந்த காலகட்டத்தில் பணிகள் செவ்வனே நடந்தேறும். இதில் பணிகளை நடத்தி முடிக்கும் காலக்கெடுவும் அந்த திறன் நிர்வாக கட்டமைப்பே உருவாக்கிக் கொள்ளும். எனவே இதனை யாரும் கண்காணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனைத்தான் வள்ளுவர் கூறும்போது

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (குறள்: 388)

நீதி, ஒழுங்கு மற்றும் தகுந்த முயற்சியுடன் ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் அரசன்; மக்களால் இறைவனுக்கு நிகராக மதிக்கப்படுவான். அதாவது முறையாகத் திறன் நிர்வாகத்தை செயல்படுத்தினால் அவர் காலத்திற்குப் பிறகும் அந்த செயல்முறை தொடர்ந்து செயல்படும் அந்த செயலால் அந்நிர்வாகி எப்போதும் சிறந்தவராகப் போற்றப்படுவார்.

பணிக்குழு பயிற்சி மற்றும் நம்பிக்கை (Train and Trust the Team)

திருவள்ளுவர் ‘தெரிந்து தெளிதல்’ என்னும் அதிகாரத்தில்

“வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்” (குறள்: 518)

என்ற குறளின் மூலம் ஒரு செயலை செய்வதற்கு தகுதியானவரை தெரிவுசெய்து, பிறகு அந்த செயலை சிறப்பாக செய்யும் வகையில் அவரை உருவாக்கி, அதற்கு பின்பு பொறுப்பு வழங்குதல் என்பதன் மூலம் ஒரு சிறந்த திறன் நிர்வாகத்தை உருவாக்க முடியும் என விளக்குகிறார். மேலும் அவ்வாறான பணிக்குழுவினை உருவாக்குவதன் மூலம் திறன் நிர்வாக கட்டமைப்பு இலகுவாக செயல்பட முடிகிறது. அந்த பணியாளருக்கு சரியான பயிற்சி அளிக்கபடும் போது அவர் அவருக்கு வழங்கப்பட்ட பணியையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்டுவார். எனவே அவருக்கான பணியானது செம்மையாக நடந்து முடியும். இதன்மூலம் அவர்மீது அவருக்கான தன்னம்பிக்கையும் உயரும். இந்நிகழ்வு அவர் மீதான நம்பிக்கையை உயரதிகாரியிடமிருந்து பெற்றுதரும். எனவே ஒரு பணிக்குழுவின் மீதான பயிற்சி மற்றும் அவர்களின் மீதான நம்பிக்கை என்பது நிர்வாகம் ஒரே மைய நீரோட்டத்தில் இருப்பதற்கு வழிவகை செய்கிறது.

தர ஆய்வு புள்ளிகள் அமைத்தல்  (Setup Quality checkpoints)

திறன் நிர்வாகத்தில் மிகமுக்கிய பணியாக கருதப்படுவது தரஆய்வு மையங்களை நிருவுதல். ஏனென்றால் நிர்வாகத்தில் நடைபெறும் அனைத்து பணிகளையும் தர ஆய்வு செய்வதன் மூலம் பணியின் தன்மை மற்றும் தவறுகள் நீக்கி; தரமான தரவுகளை உறுதிசெய்ய முடியும். இதனைதான் பின்வரும் குறளானது விளக்குகிறது.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்” (குறள்: 504)

ஒருவரின் நற்பண்புகளையும், குறைகளையும் ஆராய்வதன் மூலம் அவரின் நிறைகளை மிகைபடுத்தி, குறைகளை குறைத்து நாளடைவில் அது இல்லாமல் செய்வதற்கு இந்த தர ஆய்வு மைய புள்ளிகள் வழிவகுக்கும். எனவேதான் இதனை முக்கிய பணியாகவும், நிறைவு பணியாகவும் கொள்கிறது இந்த திறன் நிர்வாக மேலாண்மை.

ஒரு சிறந்த திறன் நிர்வாகம் என்பது நிறுவனத்திற்கு லாபங்களை மட்டும் ஈட்டி தருவதற்காக மட்டும் அல்ல, அதோடு கூடவே சழுதாயத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு அமைப்பாக செயல்படுத்துவதற்கும்தான். அந்த நிறுவனத்தின் வெற்றி என்பது ஒவ்வொரு தனிமனித வெற்றியாகும். அந்தவகையில் தனிமனித வாழ்வியல் வெற்றிக்கான கருத்துக்களை வழங்குவதில் கருத்துக் குவியலாகவும், அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாகவும் திருக்குறள் விளங்குகிறது. எனவே நீங்கள் எந்த கோணத்தில் பார்த்தாலும் அந்த கோணத்தில் இன்று மட்டுமல்ல என்றைக்கும் திருக்குறள் பதிலளிக்கும். திறன் நிர்வாகம் குறித்த கருத்துக்களை திருக்குறளில் இருந்து இன்னமும் நிறைய பரிணாமங்களில் எடுத்துக் கூறலாம். அந்த வகையில் தமிழையும், தமிழர்களையும், அவர்தம் பாரம்பரியப் பண்பாட்டுக் கூறுகளை உலகமெல்லாம் அறிந்திடச் செய்த உலகின் பொதுமறையாம் திருக்குறளைப் பெற்றமைக்காக ஒரு தமிழனாக நாம் அனைவரும் பெருமை கொள்வோம்!.

📚 எழுதியவர்:

முனைவர் வீ.கிருஷ்ணகுமார்
உதவிப் பேராசிரியர்,
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி,
போடிநாயக்கனூர் – தமிழ்நாடு.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *