நூல் அறிமுகம்: இஸூரு சாமர சோமவீரவின் *திருமதி பெரேரா (சிங்களச் சிறுகதைகள்)* – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: இஸூரு சாமர சோமவீரவின் *திருமதி பெரேரா (சிங்களச் சிறுகதைகள்)* – கருப்பு அன்பரசன்



திருமதி பெரேரா
சிங்களச் சிறுகதைகள்
இஸூரு சாமர சோமவீர
தமிழில்: எம் ரிஷான் ஷெரீப்
ஆதிரை வெளியீடு
புத்தகம் வாங்க கிளிக் செய்க : திருமதி பெரேரா (சிங்களச் சிறுகதைகள்)
ஆண் சமூகத்தினால் பெண்கள் மீது ஒவ்வொரு நாளும் எப்படி எல்லாம் தாக்குதல்கள், நெருக்குதல்கள், பாலியல் பலாத்காரம் பார்வையாலும்  தொடுதலாளும் வன்முறைகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த வன்முறைகள் அனைத்துமே ஆண்களைப் பொறுத்தவரை வெறும் உடலியல் ரீதியான வன்முறையாகவே யோசித்து வைத்து இருக்கிறோம். ஆனால் அதையும் மீறி பெண்கள் மீது எத்தனை விதமான வன்முறைகளை அவள் பெண் குழந்தையாக வீட்டில் அறிமுகமானதிலிருந்து நிகழ்த்தப்பட்ட வந்திருக்கிறது என்பதை என்றாவது ஒரு நாள்  நீங்களும் நானும் யோசித்திருக்கிறோமா..? இத்தகைய வன்முறைகளை நிகழ்த்துவதற்கு பெண்களையே எப்படி.. எந்தெந்த வகைகளில் அவர்கள் வழியாகவே அவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்த நானும் நீங்களும் ஒரு தனி வடிவத்தை உருவாக்கி  வைத்திருக்கிறோமே.! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்படி யோசிக்கும் பொழுது நமக்குள் பல நினைவுகள் நிச்சயம் வந்து போக வேண்டும். அப்படி எல்லாம் ஏதுமில்லை என நான் தெரிவித்தால்.. நினைத்தால்  என்னை போன்றதொரு மனநிலை கெட்டுப் போனவர் எவரும் இருக்க முடியாது. பெண் மனதின் மீது வன்முறைகள்.. அவளின் உணர்ச்சிகளின் மீது வன்முறைகள்.. அவளின் மன உணர்வுகளின் மீது வன்முறைகள்.. இப்படி எவையெல்லாம் நம்முடைய கண்களுக்கு தெரியாமல்.. நம்மால் யோசிக்க வாய்ப்பு அற்றுப்போய், யோசிக்க வாய்ப்பு இருந்தாலும் அவை நம்முடைய கண்களுக்கு நேரடியாக தட்டுப்பட்டாலும் அவைகளைக் கடந்து போய்… அல்லது நம்முடைய மனதும் அந்த உணர்வுகளை யோசித்து கிடந்தாலும் அதையும் மீறி இத்தகைய வன்முறைகளை தொடர்ந்து நாம் நிகழ்த்திக் கொண்டேயிக்கிறோம் என்பதுதான் நிஜம்.. இந்த மெய்யினை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டியிருக்கும்.
பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அவளின் மீது.. அவள் உணர்ச்சிகளின்.. மீது உணர்வுகளின் மீது குடும்பத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் வன்முறைகள் தொடங்கப்படுகிறது.. வளர்வது தொடங்கி, அவள் பள்ளிக்கு செல்வது..  விரும்பியதை படிப்பது.. விரும்பிய நேரத்தில் படிப்பது.. விளையாடுவது.. ஆடை உடுத்துவது.. பேசுவது.. சிரிப்பது.. உணவு உண்பது.. படுத்து உறங்குவது.. அதற்கான நேரத்தை ஒதுக்குவது.  தண்ணீர் குடிப்பது.. அவளின் பார்வைகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த உணர்வுகளின் மீது வன்முறைகளை நிகழ்த்துவது.. இப்படியாக தொடங்கிய அவளின் மீதான, அவளின் உணர்வுகளின் மீதான வன்முறை என்பதை அவளின் மரணம் வரையில் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறோம் நாம். அவள் சார்ந்த அத்தனை ஆண்களாலும், அவளோடு இருக்கும் பெண்களின் வழியாக இருந்தும் ஆண்கள் தம்முடைய வன்முறையை ஆற்றலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் இன்றளவும் பெண்கள் இருந்து இறந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.. இந்த வன்முறைகளை எல்லாம் மீறி ஒரு பெண் தனது சுயமன உணர்வுகளின் அடையாளத்தோடு நடந்து கொண்டாள் எப்படி இருக்கும் என்பதுதான் திருமதி பெரேரா சிறுகதையாகும்..
தன்னுடைய குடும்ப உறவுகளில் இருந்து.. காதல் உணர்வுகளில் இருந்து.. வலுக்கட்டாயமாக பிய்த்து எறியப்பட்டு  திரு பெரேராவை திருமணம் செய்துகொண்டு திருமதி பெரேரா என்று அவள் அழைக்கப்பட.. அவளுடைய முதல் உண்மையான பெயர் மறைத்து வைக்கப் படுகிறது.. கூடவே அவளின் பழக்கப்படுத்தி வந்த பழக்கவழக்கங்களும், கொஞ்சம்  தன்உணர்வுகளும்.. தான் சார்ந்து வாழக்கூடிய இன்னொரு ஆணுக்காக மாற்றி வைக்கப்படுகிறது.  நாளின் ஒவ்வொரு நிமிடமும் தனக்கு வலுக்கட்டாயமாக பூட்டப்பட்ட ஆணின் மனம் கோணாமல் நடந்துகொள்ள தன்னை பழக்கப்படுத்திக் கொள்கிறாள் திருமதி பெரேரா. அது உணவுமுறை தொடங்கி, உடை உடுத்துவது, காலில் செருப்பு அணிவது, அவனுக்கு விரும்பிய உணவை தானும் விரும்பி உண்பது, அவன் தேநீர் குடிக்கும் பொழுது தேநீர் குடிப்பது, காபியாக இருக்கும்பொழுது காபி குடிப்பது, அவன் மரக்கறி உண்ணும் போது  மரக்கறிக்கு மாற்றிக்கொள்வது, மாமிசக் கறி அவன் விரும்பும் பொழுது இவளும் சாப்பிடுவது. தன் உடம்பில் அவன் வன்முறையை நிகழ்த்த வரும்பொழுது தன்னுடைய மனதும் உடலும் அதற்கு தயாராக இல்லை எனினும் அவனுடைய பிடிகளுக்குள் ஒப்புக் கொடுப்பது.. தன் உடலின் மீது வன்முறையை நிகழ்த்தியவன் தூங்கிய பிறகே இவளும் தூங்குவது.. அவன் எழுவதற்கு முன்பே இவள் எழுந்து மறுநாள் அவனின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தேடுதலைத் தொடங்குவது..


அதிலே கவனம் சிதறும் பொழுது, இல்லை கவனம் குறையும் பொழுது அதற்காக அவன் நிகழ்ந்திடும் வார்த்தை வன்முறைகளை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வது. இப்படி பெரேராவை திருமணம் செய்துகொண்ட காலம் தொடங்கி தன் உணர்வுகள் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து வன்முறைகளிலிருந்து விடுதலைப் பெற்ற திருமதி பெரேரா, அவளுடைய தன் உணர்வுகளிலிருந்து வெறும்இரண்டு மணி நேரம் வாழ்ந்தால்.. அவள் மனது யோசித்தால்  எப்படி எல்லாம் அவளின் என்ன உணர்வுகள் மன ஓட்டங்கள் இருக்கும் என்பதை தன்னுடைய கதைக்குள் பதிவாக்கி இருப்பார் கதையாசிரியர்.. ஆணாக இருந்து எப்படி இவரால் ஒரு பெண் மன உணர்வுக்குள் சென்று பார்க்க முடிந்தது என்பது மிகப் பெரிய ஆச்சரியமே. அதை சிறப்பாகவும் பெண் மன உணர்வு நிலையில் இருந்தும் ஆண் மன உணர்வுகளுக்குள் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்..
வழக்கமாக இரவு படுக்கச் சென்ற தன் கணவன் பெரேரா, வழக்கத்திற்கு மீறியும் படுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய உடலில் எந்தவிதமான அசைவையும் இவளால் பார்க்க முடியாது. தன்னுடைய கணவன் இறந்து போய்விட்டான் என நினைத்து.. அவள் யோசித்து.. இரண்டு மணி நேரம் அந்த உடலை வைத்துக்கொண்டே, அவளின் எண்ண ஓட்டங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும் அன்றாட பணிகளை செய்துகொண்டே.. இறந்துபோன உடல் திடீரென்று விழித்தெழுந்து ஒரு தேனீர் கேட்டால் எப்படி இருக்கும்..?! அந்த இரண்டு மணி நேரத்தில் திருமதி பெரேராவின் மன உணர்வுகளை எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார் சிறுகதையாசிரியர் திருமதி பெரேராவில்.
தன்பால் உணர்வால் ஈர்க்கப்பட்ட ஆண்களை பொதுவெளிப் பெரும் சமூகம் எப்படி எல்லாம் பார்க்கிறது.. பொதுவெளிச் சமூகம் தம் உணர்வுகளின் மீதும் உணர்ச்சிகளின் மீதும் தினம் நிகழ்ந்திடும் வார்த்தை வன்முறைகளையும், உடலின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை.. குரோமோசோம்களால் தங்களுக்குள் தங்களுக்குள் நிகழ்த்தப்பட்டு இருக்கும் இத்தகைய இயற்கையான மாற்றத்தை குடும்ப உறவுகளிடையே அல்லது நண்பர்களிடையே பகிர முடியாமல் உணர்வுகளின் உணர்ச்சிகளின் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தினமும் தகித்துக் கொண்டிருக்கும் தன்பால் ஈர்ப்பு கொண்ட காதலை அதனுடைய ஏமாற்றத்தை.. அதனுடைய வெறுமையை.. அதனுடைய இயலாமையை.. தன்னுடைய “நீரணங்குத் தீரம்” கதையில் பதிவாக்கி இருக்கிறார்.
அதேபோன்று தன்பால் ஈர்ப்பு உணர்வால் ஈர்க்கப்பட்ட ஆண் ஒருவர் குடும்ப நிர்பந்தத்தின் காரணமாக பெண்ணை மணம் புரிந்து அவளோடு வாழ முடியாமல் அவளின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாத ஒரு சூழல் வரும் பொழுது அவளைவிட்டு பிரிந்து தன்னுடைய குற்ற உணர்விலிருந்து அவளின் எதிர்காலம் குறித்த அக்கறையோடு ஒரு கதையினை “அன்பின் நிமிலிக்கு” என்ற கடிதத்தின் வழியாக பதிவாக்கி இருப்பார்.. பாலின வேறுபாடு சார்ந்த உணர்வுகள் இருந்தாலும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் எதிர் பாலினத்தவர் மீது அன்பும் அக்கறையும் காதலும் இருக்கிறது என்பதை இந்தச் சிறுகதையில் மிகவும் நேர்த்தியாக அழகாக பதிவாக்கி இருப்பார்.
பருவ மாற்றம்  ஒரு ஆணுக்குள் நிகழ்ந்து வரக்கூடிய ஒவ்வொரு படிநிலைகளில் அவனுடைய ஈர்ப்பாகவும்.. அவனுக்கான உணர்ச்சியின் வடிகாலாகவும் நட்புச் சிரிப்பாகவும் வாழ்க்கையின் இணைப்பாகும் இருந்து வந்திருக்கக்கூடிய அன்பிற்குரிய பெண்கள் குறித்தும்.. அதோடு பிரிக்க முடியாத அவன் நேசிக்க கூடிய.. தன் உணர்ச்சியின் படிநிலை மாற்றம் எல்லாம் நிகழ்ந்து வரக்கூடிய காலப்பொழுதில் கூடவே இணைந்து பயணித்த.. இயற்கையின் அத்தனை அழகையும் புறத்தே கொண்டிருந்த.. நிமிர்ந்து நிற்கக் கூடிய ரப்பர் தோட்டங்களை உள்ளடக்கிய ஆணின்
மன உணர்வுகளை.. வெளிப்பாடுகளை பதிவாக்கி கொடுத்திருக்கிறார் தன்னுடைய “றப்பர்” என்கிற சிறுகதையில் ஆசிரியர். பல ஆண்கள் இந்த உணர்வுகளை பகிர்வது, பேசுவது தன் ஒழுக்க நிலைக்கு எதிரானது என்கிற ஒழுங்கீனத்தை வெளிப்படையாக்கியிருக்கிறார் இக்கதை மூலம்.
எம்.ரிஷான் ஷெரீப்
இவன் வித்தியாசமானவன்.. இவனின் மன உணர்வுகள் மற்றவர்கள் உணர்வு நிலையிலிருந்து எப்பொழுதும் மாறுபட்டே வந்திருக்கிறது ஒவ்வொரு வயதிலும். எவையெல்லாம் மற்றவர்களால் அசிங்கமாகவும், ஒதுக்கப்பட்டும் வந்து இருக்கிறதோ அவைகள் அனைத்தும் இவனால் ஆதரிக்கப்பட்டும் அரவணைக்கப்பட்டு மட்டுமே வந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனநிலைக்குச் சொந்தக்காரன் இவன். அப்படி தன்னுடைய சிறுவயதில் நேசித்த ஊனமுற்ற மீன் ஒன்றுக்கு மாமாவின் மீன் தொட்டிக்குள் வளர்ப்பதற்குச் சண்டை போடுவதில் இருந்து.. ஒரு நாள் அந்த மீன் செத்துப் போக, இவனுக்குத் தெரியாமல் அந்த மீனை எடுத்து அவர் மாமா வெளியே வீசிட.. அதைக் கண்டுணர்ந்த அவன் காலம் முழுவதிலும் தான் நேசித்த அந்த மீனை எப்படி எந்த துர்நாற்றமின்றி தன் கூடவே வைத்துக் கொள்கிறான் என்பதுதான் இந்தக் கதை.. கதையை நீங்கள் வாசிக்கும் பொழுது.. புத்தர் தேசத்தின் ஆறுகளில் மிதந்து வந்து கொண்டிருக்கும் மனித உடல்களைப் பார்க்கலாம்.. குழந்தைகளின் வெட்டுண்ட தலைகளைப் பார்க்கலாம்.. ஆற்றின் கரையோரம் ஒதுங்கி இருக்கும் உப்பிப் போன உடல்களைப் பார்க்கலாம்.. இவைகள் அனைத்தும் கதையை வாசிப்பவரின் மனதை, நடந்து முடிந்த கொடூரமான போர்ச் சூழலுக்கு கொண்டுபோகும். போர்ச்சூழலில் நிகழ்ந்த அன்பிற்கான போராட்டமாக “எனது மீன்” இந்தக் கதை.
தொகுப்பின் முதல் கதை மட்டும் “கிராஞ்சி” புரிந்துகொள்வதில் சிக்கல் இருக்கிறது..
என்ன சொல்ல வருகிறார் என்பது கடைசி வரையில் தெரியவில்லை.. தொகுப்பின் கடைசி “அது” என்கிற கதையில் வரக்கூடிய கொடூரமான பச்சை மனித குரங்கு உங்களுக்கு ஒவ்வொரு அரசியலையும் அதன் பின்னால் இருக்கும் அமைப்புகளையும் இயக்கங்களையும் நினைவு கூறலாம்.. ஏன் அங்கே இருக்கக்கூடிய புத்த பிக்குகளும் நமக்கு நினைவில் வரலாம். வாசிப்பவரின் மனநிலைக்கு ஏற்றவாறு அந்த குரங்குகள் ஒத்துப்போகும்.. சிறுகதை எழுதுவதில் நல்லதொரு புது முயற்சி.
இத்தொகுப்பில் வந்திருக்கக்கூடிய “நீலப்பூ சட்டை” கிளாசிக் என்று சொல்லலாம்.. அன்பின் பெயர்தாங்கி ஆண் ஒருவன் எப்படியெல்லாம் பெண்ணின் மன உணர்வுகளை துச்சமாக மதித்து ஆண் திமிரோடு நடந்து கொள்கிறான் என்பதையும் வெகுண்டெழுந்து பெண்மன உணர்வு அதனை, அவனை  எப்படி எதிர்கொண்டு வெளியேற்றுகிறது என்பதுதான் இக்கதை.
சூழலைப் பொறுத்துக்கொள்ள முடியாத.. ஏற்றுக்கொள்ள முடியாத.. சமரசம் செய்து கொள்ள முடியாத பெண் ஒருத்தியின் மன உணர்வு நிலையிலிருந்து உடல் உணர்ச்சி நிலையிலிருந்து இக்கதையை கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
அனைத்து கதைகளையும் சிறப்பான முறையில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு கொடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரீப் அவர்கள்.. நல்ல வடிவான முறையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் ஆதிரை பதிப்பகத்தார்.. இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்..
எவரும் தொட்டு விடாதே பேசமறந்த அல்லது பேசமறுத்த மனித மனஉணர்வுகளில் இருந்து பேசியிருக்கிறார் தொகுப்பின் ஆசிரியர் இசுரு சமர சேமவீர.. ஆசிரியருக்கு அன்பும் பிரியங்களும்.
மனித மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்து உயர்த்திப் பிடிக்கும் சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளவை பெரும்பாலும். வாசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு
“திருமதி.பெரேரா”.
கருப்பு அன்பரசன்
திருமதி பெரேரா
சிங்களச் சிறுகதைகள்
இஸூரு சாமர சோமவீர
தமிழில்: எம் ரிஷான் ஷெரீப்
ஆதிரை வெளியீடு

புத்தகம் வாங்க கிளிக் செய்க : திருமதி பெரேரா (சிங்களச் சிறுகதைகள்)


Show 1 Comment

1 Comment

  1. அ. கரீம்

    அட்டகாசம்…. நல்ல அறிமுகவுரை.. நவீன கதை மொழி எப்படியெல்லாம் உள்ளது என்று தெரிந்து கொள்ள உதவும் சிறுகதை தொகுப்பு திருமதி பெரோரே… நல்ல மொழி பெயர்ப்பு. ஆசிரியர் மொழி பெயர்ப்பாளர் அன்பரசன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *