சிறுகதை: திருப்பம் – ப. சிவகாமி                       ரகுவின் மகள் கலையரசியின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு வந்திருந்த அத்தனை பேருமே பிரமித்துத்தான் போனார்கள். விழா பிரம்மாண்டமாக நடந்துகொண்டிருந்தது. அலங்கார வளைவு, அணிவகுப்பு, மக்கள் கூட்டம் என மண்டபமே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. சராசரி குடும்பத்தின் நான்குக் கல்யாணச் செலவை ஒரு நிச்சயதார்த்தத்திற்கே  செலவழித்திருப்பார்கள் போல!. மாப்பிள்ளை பெண்ணின் உடையலங்காரத்திலிருந்து இசை நிகழ்ச்சி வரைச் செல்வச் செழிப்பில் மிளிர்ந்து கொண்டிருந்தது.

                     “இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு. இவனெல்லாம்  உருப்படுவானான்னு நினைச்சோம். இவன் வாழ்வே இப்ப தலைகீழா மாறிப்போச்சே! இதைத்தான் நேரம் காலம்னு சொல்றதோ?” என்று தன் தோழி கமலாவிடம் கிசுகிசுத்தாள் அம்சா.

                     “ஆமாண்டி! நம்மப் பெத்தவங்க நம்மள எப்படியெல்லாம் வளர்த்தாங்க! நம் பிள்ளைகளை நாமும்தான் எப்படிப்  பார்த்துப்பார்த்து வளர்க்கிறோம்! ஆனா இவனுக்கு அடிச்ச யோகத்தைப் பாரேன்.” என்று பெருமூச்செரிந்தாள் கமலா.

                     இன்னொரு பக்கம் டேய், “இவனத் திருத்த நாம எவ்வளவு  முயற்சி பண்ணியிருப்போம்!  இருபத்திரண்டு வயசுப் பையன் நீ, மூன்று குழந்தைகளுக்குத் தாயானவளோட  குடும்பம்பன்றியே நல்லாவா இருக்கு? அவள விட்டுட்டு உனக்கென ஒருத்தியைப் பார்த்து கட்டிக்கோடா என்று எத்தனை முறை சொல்லியிருப்போம். கேட்டானாடா அவன்? அதனாலதான அவனிடமிருந்து நாம ஒதுங்க வேண்டியதாப் போச்சு! ஆனா அவனும் உருப்பட்டு இன்றைக்கு அவனுக்கு அடித்திருக்கிற அதிர்ஷ்டத்தை பார்த்தா…….” தன் நண்பன் கணேசனிடம் சொல்லி அதிசயத்தான் பெருமாள்.

                       “ஒண்ணாம் நம்பர் பொறுக்கியா திரிஞ்சது அது! அதுக்கு வந்த வாழ்வைப்பாரு!” ஒரு அம்மா பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் தன் வயிற்றெரிச்சலை ரகசியமாய் வெளிப்படுத்தினாள்.

                     ரகுவை நன்றாகத் தெரிந்திருந்த பெரும்பாலானவர்களின் பேச்சு இப்படியாகத் தான் இருந்தன. காரணம், அவனது வாழ்வில் திருமணத்திற்கு முன்பு திருமணத்துக்கு பின்பு எனப் பிரித்தோமானால் திருமணத்துக்கு முன்பான வாழ்க்கை மிகக் கேவலமானது. கீழ்த்தரமானது. தீயப் பழக்கங்களின் மொத்த உருவமாய் உழன்று கொண்டிருந்தவன். அவனைக் கண்டாலேப் பலரும் ஒதுங்கிப்போவார்கள். அருவெறுப்பினால் முகம் சுளிப்பார்கள். அவனோடுப் பேசுவதையேத் தவிர்ப்பார்கள்.

                 அவனது அந்த நிலைமைக்கு அவன் மட்டுமே காரணமல்ல! அவன் வளர்ந்தச் சூழலும் முக்கிய காரணம். கணவனை இழந்த அவனது தாய் ஒரு உணவகம் நடத்திவந்தார். அப்போதுத் தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த காலம் என்பதால் உணவகம் என்ற போர்வையில் கள்ளச்சாராயம் விற்பது உட்பட சில சட்டவிரோத செயல்களில் கொடிகட்டிப்  பறந்தார்கள்! கையில் அதிகப்பணம் புரளவே தான்தோன்றித்தனமாக கட்டுப்பாடற்று வளர்ந்தார்கள் ரகுவும், அவரது சகோதர சகோதரிகளும்! அவனது இரண்டு சகோதரர்களும் இப்போது இல்லை. இரண்டு சகோதரிகளும் வெளியூர்களில் குடித்தனமாகிவிட்டார்கள்.  இன்று அவனதுக் குடும்பத்திலேயே பேர் சொல்லும் பிள்ளையாக இருப்பது ரகு மட்டும்தான்!

                  ரகுவையும் ரகுவின் குடும்பத்தையும் நன்கு அறிந்தவள் நான். அவரது வீடிருக்கும் பக்கத்து தெருவில்தான் எங்களின் வீடு. நன்கு அறிமுகம் இருந்தாலும் அவர்களது பழக்க வழக்கங்களால் அதிகப் பேச்சு வழக்கில்லை. எனக்கும் மணமாகி வேற்றூர் சென்றுவிட்டேன்.

                ஓரிரு வருடங்களுக்குப் பிறகு ரகுவிற்கு திருமணமாகிவிட்டது என்றும் அவர் அவங்கம்மாவோட உணவகத்தையே பொறுப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் பழைய தீயப் பழக்கங்களை விட்டுவிட்டு நாலுபேர் மதிக்கும் அளவிற்கு  மாறியிருக்கிறார் என்றும் என் அம்மா சொல்லக் கேள்வியுற்ற நான் வியந்துபோனேன். எனக்கு ஏனோ அவரது மனைவியைப் பற்றித்தான் சிந்திக்க தோன்றியது.

                ஒரு சராசரிக் குடும்பத்திலிருந்தோ அல்லது ஏழ்மையில் இருந்தாலும் பண்பான குடும்பத்திலிருந்தோ நிச்சயமாக யாரும் ரகுவிற்கு பெண் தர முன் வந்திருக்கமாட்டார்கள். என்  சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது என் அம்மா, “நீ நினைக்கிறது சரிதான். அந்தப் பொண்ணு ராதா அவங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அப்பா அம்மா இல்லாததால இவங்க வீட்டு உணவகத்தில சமையலுக்கு உதவியாக வேலை செய்தாள். ரொம்ப நல்ல பொண்ணு!” என்று கூறினார்கள். அந்தப் பொண்ணு நல்லப் பொண்ணு என்பது மட்டுமல்ல. திடமான, திறமையான பொண்ணு என்பதால தான் அவனது வாழ்விற்கும் உயிர்க்கொடுத்து வளர்ச்சிக்கும் உத்தரவாதம் கொடுத்திருக்கு என்று நினைத்துக்கொண்டேன். முகம் பார்த்தறியா அந்த பெண்ணிடம் ஒரு மரியாதை உண்டானது.

                 சில மாதங்களுக்கு முன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள நகரத்துக் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தேன். எதிரே ரகு. அவரை எப்போதாவது பார்த்தால் பார்க்காதது போலச் சென்றுவிடுவதுதான் என் வழக்கம். ஆனால் அன்று மழை பிடித்துக் கொண்டதால் அடுத்துள்ள கடைமுகப்பில் ஒதுங்கி நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ரகுவும் அவ்வாறே ஒதுங்கி நின்றார். அவர் என்னைப் பார்த்து புன்னகைக்க, அதற்கு மேலும் பேசாமலிருப்பது அநாகரீகம் என்று கருதிய நான், “எப்படி அண்ணா இருக்கீங்க?” என்றேன்.                         “நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க? எங்க வேலைசெய்ற? உன் வீட்டுக்காரர் என்ன செய்கிறார்? எத்தனை பிள்ளைகள்?….” விசாரிப்புக் கேள்விகளை அடுக்கினார்.

                        என்னைப் பற்றிய விவரங்களைக் கூறியபிறகு, “உங்க பிள்ளைங்க என்ன செய்யறாங்கண்ணா?” என்றேன். “பொண்ணு கலையரசி பி.டெக். ஃபைனல் இயர்,  பையன் கலையரசன் பி.இ. செகண்ட் இயர்” என்றார்.

             இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு,  “பரவாயில்லைங்கண்ணா! பிள்ளைகளை நல்லாப் படிக்க வச்சிருக்கீங்க.”  என்றேன்.

               “ஆமாம்மா! பொண்ணு என்னைப் படிக்க வையுங்கன்னு கண்டிப்பா சொல்லிடுச்சு. அதுவும் நல்லா படிக்குது! நல்லாப் படிக்கிற பொண்ண படிக்கத்தான் போறேன்னு சொல்றப் பொண்ண படிக்க வைக்கலேன்னா எப்படிம்மா? நான் தான் எப்படியெல்லாமோ வாழ்ந்திட்டேன். நெறிக்கெட்டு போயிட்டேன். என் பிள்ளைகள் தங்கம்மா. பையன் படிப்பிலே கொஞ்சம் மந்தமாத்தான் இருந்தான். ஆனால் அவனும் அவன் அக்காவைப் பார்த்து இப்ப ஆர்வமா படிக்கிறான்.”  அவரது கடந்தகால வாழ்க்கையைப் பற்றிய வேதனையையும் நிகழ்கால வாழ்வைப்பற்றிய பெருமிதமும் சங்கமிக்கும் உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்தது அவரது வார்த்தைகள்.

              “செலவுகளை எப்படி அண்ணா சமாளிக்கிறீங்க?” என்றேன்.

                “வங்கியில கொடுக்கிற கல்விக்கடன் கல்லூரிக் கட்டணத்துக்கு ஆகிடுது. போக்குவரத்துக்கும் மற்ற செலவுகளுக்கும் வர்ற வருமானத்திலேயே பார்த்துக்குறேன்” என்றார்.

                   அவர் சொல்லச் சொல்ல ஏதோ ஒரு இனம்புரியா மகிழ்ச்சி என் மனதுக்குள் ஓட அதை அப்படியே அவரிடம் வெளிப்படுத்தி,  “ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா. பிள்ளைகளை நல்லாப் படிக்க சொல்லுங்கள்.  மழை கொஞ்சம் விட்டுடுச்சு. நான் வரட்டுங்களா?” என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றேன். ‘எப்படி இருந்த ஆள் எப்படி மாறிட்டார்’ என்ற வியப்பு மட்டும் என்னிடமிருந்து ஏனோ விலகவே இல்லை.

                   பள்ளி விடுமுறை நாட்களாதலால் அம்மாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று வந்த என்னை அம்மாதான் நிச்சயதார்த்த அழைப்பிதழை காட்டி,  “என்னால் செல்ல இயலவில்லை. நீ சென்று வா” என்றார்கள். அழைப்பிதழே அசத்தலாகத்தான் இருந்தது.

                      அதுபற்றி அம்மாவே சொன்னார்கள். சில தலைமுறைகளுக்கு முன்பு பிழைப்புக்காக குடிபெயர்ந்து சென்னை சென்று தற்பொழுது பெரிய தொழில் அதிபராக உயர்ந்து நிற்கும் ஒரு குடும்பத்தார் பூர்விக கிராமத்தில் தன் மகனுக்கு பெண்  எடுக்க விரும்பி உறவினர் மூலமாக கலையரசியின் நற்பண்புகளைப் பற்றி கேள்வியுற்று பெண்  கேட்டிருக்கிறார்கள்.

                  கலையரசி அப்பொழுது தான் என்ஜினீயரிங் முடித்திருந்தாள். பெண் கேட்டு வந்த குடும்பத்தைப் பற்றி கேள்வியுற்ற ரகு அவர்களின் அந்தஸ்துக்கும் தமக்கும் ஒத்துவராதே என்று நிறைய யோசித்திருக்கிறார்.

                  “வரதட்சனைப் பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். உயர்ந்த ரகக் காரை உங்கள் பெண்ணின் பெயரில் நாங்களே பதிவு செய்து வாங்கி விடுகிறோம். உங்கள் பொண்ணுக்கு நூறு பவுன் நகையும் போட்டுவிடுகிறோம். எங்கள்  சொந்தங்களுக்கும் சுற்றத்திற்கும் அவற்றை உங்கள் சீரெனச் சொல்லி விடுகிறோம். நல்ல அழகும், குணமும் நிறைந்த உங்கப் பெண் தான் எங்கவீட்டுக்கு மருமகளாக வேண்டும்! மற்றபடி வசதிக்கு எங்களிடம் எந்த குறையும் இல்லை” என்றார்கள்.                 ‘இதையெல்லாம் கேட்ட ரகுவின் மனதில் பயமும் வியப்பும் மாறிமாறி அலைமோதின. இந்த காலத்துல இப்படிகூட மனிதர்கள் உண்டா?’ என்று மயங்கி நிற்கையில் உள்ளூர் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டாரின் நற்குணங்களைப் பற்றி எடுத்துக்கூறி அவரது மனநிலையைத் தெளியவைத்து பெண் கொடுக்க சம்மதம் பெற்றிருக்கிறார்கள். அன்றிலிருந்து ஊர்முழுக்க ரகுவின் குடும்பத்தைப் பற்றித்தான் பேச்சு. இதோ இந்த நிச்சயதார்த்த விழாவில் கூட சில பொறாமை உள்ளங்களும் பொறுக்காத மனிதர்களும் பெருமூச்சோடு தங்கள் வெறுப்பினை ரகசியமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

                                            மறுநாள் ஊருக்குப் புறப்படத் தயாரானேன். புறப்படுவதற்கு முன் ரகுவின் பிள்ளைகளுக்கு நல்வாழ்த்தையும் அவரது குணநல மாற்றத்தினால் உண்டான மிகப்பெரிய ஏற்றத்தையும் பற்றிய என்மகிழ்ச்சியை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்த நினைத்து அவரின் வீட்டிற்குச் சென்றேன்.

                   அங்கு சென்ற என்னால் நடந்து முடிந்த நல்ல விசேஷத்தின் விளைவுகளை உணரமுடிந்தது. ரகுவும், ராதாவும் பிள்ளைகளும் என்னை  அன்பாக   வரவேற்று  உபசரித்தனர். ரகு தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் என்னை அறிமுகம் செய்து வைக்கப் பேச்சு கடந்த காலத்துக்குச் சென்றது.

                      ‘என் அப்பா இருந்தவரை நல்ல நட்போடு இருந்த இவங்க குடும்பம் அவர் இறப்பிற்குப் பிறகு எங்களிடமிருந்து பட்டும்படாமல் ஒதுங்கிக்கொண்டது.’   என்று என்னைச் சுட்டித் தன் மனைவியிடம் கூறிய  ரகு, அப்போதையத் தன் வாழ்வு முறையை வேதனையோடு வெளிப்படுத்த, எளிமையானத் தோற்றமும் மென்மையான மனமும் அமைதியே உருவானவளுமான ராதா தன் கணவனின் முதுகு தடவி ஆசுவாசப்படுத்தினாள்.

                          “அண்ணா அப்படி தடம்மாறி வாழ்ந்து கொண்டிருந்த நீங்கதான் இன்று இந்த ஊரே வியந்து பார்க்கும் அளவிற்கு நிமிர்ந்து நிற்கிறிங்க. உயர்ந்து நிற்கிறீங்க. அது தான் எனக்குப் பெருமையை எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த மகிழ்ச்சியை உங்களோடுப் பகிர்ந்து கொள்ளத்தானே இப்போ இங்கே வந்தேன்” என்று நான் சொல்லவும் உணர்ச்சி வசப்பட்டார்.

                             “என்னோட இந்த வாழ்வுக்கு இவதாம்மா  காரணம். எல்லோரும் கீழ்த்தரமா நினைக்கும் படியும் கேவலமா பேசும்படியும் வாழ்ந்து கொண்டிருந்த என்னையும் ஏற்றுக்கொண்டு என்னோட இழி செயல்களை சகிச்சிகிட்டு, சாக்கடையில் கிடந்த கல்லான என்னையும் எடுத்து சுத்தப்படுத்தி மெல்லமெல்லச் செதுக்கிச் சிற்பமாக்கி மற்றவர் நடுவில் எனக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படக் காரணமானவள். இரு காவியங்களா இருக்கிற இந்த பிள்ளைகளையும் உருவாக்கி பேர் சொல்ல வைத்தது இவதாம்மா!”  என்று தன் மனைவியின் மடியில் குழந்தையைப் போல தலை சாய்த்துக்கொண்டார்.

                                        நானும் பிள்ளைகளும் அவர் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களாய் அமைதியாய் அமர்ந்திருக்க…. ராதா கணவனின் தலைவருடி மெதுவாக தோள் தொட்டு தூக்க முயற்சிக்க… நான் அந்த நெகிழ்ச்சியான உணர்வுப்பூர்வ சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் அமைதியாக விடைபெற்றேன்.

                                     ‘தீயவன் திருந்தினால் மீளவும் அவனைத் தீயவழிக்கு அவ்வளவுச் சுலபமாக யாராலும் திருப்பிவிட முடியாது. நல்லவன் தீயவனானால் அவ்வளவுச் சுலபமாக யாராலும் திருத்திவிட முடியாது’ எப்போதோ யாரோ சொன்னது என் நினைவுக்கு அப்போது வந்தது!.

**********

 

நன்றிகளுடன்,

ப. சிவகாமி,

புதுச்சேரி.