சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

Thiruttu Short Story by M. Rajendran Synopsis 89 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 89: ம. ராஜேந்திரனின் திருட்டு சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

கிராமத்து நடப்புக்களை ஒரு விமர்சனத் தொனியில் நவீனமாக எழுதும் படைப்பாளி இவர்.

திருட்டு
ம. ராஜேந்திரன்

“யாரு புடிச்சிருந்தாலும் விட்ருங்க. ஆமா, நான் பொல்லாதவ.  என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.  ஆனா ஒண்ணு, எனக்குத் தெரியாமப் போயிடும்னு மட்டும் நெனக்காதீய… சொல்லிப்புட்டேன்” வீட்டு வாசலில் நின்று உச்ச குரலில் சிலம்பாயி ஊருக்கே அறைகூவல் விட்டாள்.

சிலம்பாயி இன்றைக்கு வயலிலிருந்து வர நேரமாகிவிட்டது.  விளக்கை எடுத்துக் கொண்டு மறுபடியும் தேடினாள்.  திண்ணையில் கிடந்த நெல்மூட்டைச் சந்துகளில் தாய்க் கோழி இறக்கைக்குள்ளிருந்து குஞ்சுகள் தலை காட்டின.  அந்த கருப்புப் பெட்டைக் கோழியைக் காணவில்லை.  வீட்டைச் சுற்றித் தேடினாள்.

இந்நேரம் அது வந்து அடைஞ்சிருக்கணும்.  யாரோ பிடிச்சிட்டாங்க.  இல்லேன்னா குக்குக் கொஞ்சலோடு அது நெல் மூட்டையில் ஏறிக் குதிக்கும்.  சிலம்பாயிக்குத் தாங்க முடியவில்லை.  எங்கிருந்தாவது வாசம் வருகிறதா என்று வரும் காற்றில் எல்லாம் தேடினாள்.  

“ஏக்கா சின்னமக்க, என் கருப்புக் கோளியைக் காணும்க்கா.”

சந்தேகப்படுவதைக் காட்டிக் கொள்ளாமல் தேடினாள்.  வீடு வீடாகச் சமையல் வாசம் பிடித்தாள்.

திருட்டுக் கோளி சமையல் நடுராத்திரியில்தான் நடக்கும், இன்னும் கோளி செத்திருக்காது. நினைத்துக் கொண்டே நடந்தவள் அடுத்த வீட்டில் நின்றாள்.

“ஏண்டி கண்ணம்மா, ஒங்கக் கோளியோட கோளியா வந்த அடைஞ்சிருக்கான்னு பாருடி!”

கண்ணம்மா வீட்டில்தான் சிலம்பாயிக்குச் சந்தேகம்.

“நீயே வந்த பாருக்கா,  அப்புறம் நான் பார்த்தாலும் ஒனக்கு நம்பிக்கை இருக்காது” சொல்லிக் கொண்டே விளக்கெடுத்து வந்து மூடிக்கிடக்கும் கோழிக்கூடைகளைத் திறந்து காட்டினாள்.

சிலம்பாயிக்குச் சந்தேகம் போகவில்லை.  ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை, தனக்குத்தானே பேசிக்கொண்டு வீடு வந்தாள்.  அப்போதுதான் குருநாதன் வயலிலிருந்து வந்து  மண்வெட்டியை மாட்டுத் தொழுவத்தில் மாட்டிவிட்டு வியர்வையைத் துடைத்தவாறு வாசலில் நின்றான்.

சிலம்பாயிக்கு மெதுவாகப் பேசவராது.  சத்தத்தில் இரவு அதிர்ந்தது.

“சரி, சரி, விடு காலையில் பார்த்துக்கலாம்.”

“ஆமா நீ ஒரு மனுசன்.  ஒன்னைக் கட்டிக்கிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்”. 

சிலம்பாயியின் ஏமாற்றம் குருநாதன் மீது வெடித்தது.  இதற்குக் குருநாதன் பேசாமல் இருக்க முடியாது.  

“ஏண்டி கோளி திருட்டு போனதுக்கும், என்னைக் கட்டிக் கிட்டதுக்கும் என்னாடி சம்பந்தம்?  சரி சரி காலையிலே பார்ப்போம் விடு.  ஊரே அசமடங்கிப் போச்சு” சொல்லிக் கொண்டே குருநாதன் குனிந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான்.

“காலையிலே என்னாத்தப் பார்ப்பே?  கோளி மசுரைக்கூட குப்பையிலே பொதச்சிடுவாளுவ.  அப்புறம் என்னாத்தப் பாக்குறது. இப்பவே எதுனாச்சும் பண்ணணும்” அவளுக்கு தொண்டை அடைத்தது.   முந்தானையால் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள்.  முறை வைத்துக் கொண்டதுபோல் எப்போதும் குறைந்தது இரண்டு கோழிகளாவது வீட்டில் முட்டையிட்டுக் கொண்டிருக்கும்.  வீட்டுக் கைச் செலவு கவலையில்லாமல் போகும்

சிலம்பாயிக்கு அழுகை அழுகையாக வந்தது,  “பாவியளா நல்லா இருப்பியளா?   திருட்டுத்தமாகக் கோளியைப் புடிச்சிக் களுத்தைத் திருகுன ஒங்களுக்குப் புள்ளைக்குட்டி ஒட்டுமா?  கோளி புடிச்சி வச்சிருந்தா உட்ருங்க.  அப்புறம் சாமிக்கொறை சும்மா வுடாது.  நான் பட்டாணியன் கோயிலுக்குப் போயி சூடனைக் கொளுத்தி மண்ணை வாரி எறைக்கப் போறேன் சொல்லிட்டேன்”.

வானத்தில் நிலா எட்டிப் பார்த்தது.  தூரத்தில் ஆந்தை திக்கியது.  சிலம்பாயி முடிவுக்கு வந்தாள்.  “ஒன்னைத்தான் தூங்கிட்டியா?”

குருநாதன் எழுந்து  வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டு சிலம்பாயி பின்னே நடந்தான்.  சிலம்பாயி பேசிக் கொண்டே நடந்தாள்.  சின்னமக்கா வீடு வந்தது.  “எக்கா சின்னமக்கா, எங்கே போச்சின்னே தெரியலியே.  என்னாக்கா பண்ணலாம்.  எனக்கு ஒரு ரோசனையும் வராமப் புத்தியப் பேதலிக்க வச்சிட்டாளுவளே.”

சிலம்பாயி ஏதோ தீர்மானமாய் வந்திருந்தாள்.  அதைச் சின்னமக்கா வாயிலிலிருந்து வரவழைக்கப்  பார்க்கிறாள்.

“என்னா பண்றது சிலம்பாயி, பொளுது விடியட்டும்.  இப்போ என்னா பண்ண முடியும்?”

‘இல்லக்கா,  இப்போ விட்டுட்டா கோளியை அடிச்சிக் கொளம்பு வச்சிடுவாளுவ.  பொளுது விடிஞ்சா ஏப்பம் விட்டுடுவாளுவ.   இப்பவே எதுனாச்சும் பண்ணனுக்கா.”

“ஒம்புருசன் என்னா சொல்லுது?”

சின்னமக்கா குருநாதனைப் பார்த்துக் கேட்டாள்

“அது வீட்டு மொறத்தை எடுத்துப் பட்டாணியன் கோயில்லே போடுவோம்னு சொல்றதுக்கா நானும் சரின்னு சொல்லிட்டேன்க்கா” சிலம்பாயி சின்னமக்காவின் கருத்துக்கே விடவில்லை.

“அப்படியா?”

“ஆமாக்க,  இப்பவே மொறம் எடுத்துட்டா ஒரு  பயம்  வந்திடுமில்லே”.

சின்ன மக்கா வீட்டுக்குள் போய் முறத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.  சிலம்பாயி ஒவ்வொரு வீடாகத் தெரு முழுவதையும் எழுப்பினாள்.  சாணி மெழுகிய முறம் புது முறம் சிறியது பெரியது என்று முறங்களைச் சுமந்து கொண்டு குருநாதனும் சிலம்பாயியும் பட்டாணியன் கோயிலுக்கு நடந்தார்கள். 

“நான் இஞ்சய நிக்கறேன்.  நீ போயிப் போட்டுட்டு வா”

பட்டாணியன் காவல் தெய்வம்.  குதிரையும் யானைகளும் பொம்மைகளாய் நின்றன.  கையில் வீச்சரிவாளுடன் பார்ப்பவர்களை மிரட்டும் சாமி அது.  பெண்கள் அந்தப் பக்கம் போகமாட்டார்கள்.  குருநாதன் முறங்களைக் கொண்டுபோய்க் கோயிலுக்கு முன்னே போட்டான்.  பனை மட்டைகள் சலசலத்தன.  குருநாதனுக்கு பயம் வந்தது.  வேகமாக திரும்பி நடந்தான்.

“நாளைக்குத் தெரிஞ்சிடும்” பேசிக்கொண்டே சிலம்பாயி நடந்தாள்.

அந்த ஊரில் இப்படி ஒரு கட்டுப்பாடு.  காலம் காலமாய் சின்னத் திருட்டு என்றால் தெரிவிலுள்ள விட்டின் முறங்களை எடுப்பார்கள்.  பெரிய திருட்டு என்றால் ஊர் முறங்களே பட்டாணியன் கோயிலுக்கு வரும்.  முறத்தை எடுத்துப் போய்க் கோயிலில் போட்டுவிட்டால்  வீட்டிற்கு ஒருவர் போய்க் குளத்தில் குளித்துவிட்டு கோயில் முன் நின்று நாங்க திருடலை என்று சொல்லிவிட்டுத தன் வீட்டு முறத்தை எடுத்துக் கொண்டு வருவார்கள்.  பட்டாணியன் கோயில் முன் பொய் சொல்லும் துணிச்சல் யாருக்கும் கிடையாது.  ஆனாலும் இதுவரை யாரும் கோழித் திருட்டுக்கு முறம் எடுத்ததில்லை,  

நாளைக்குத் தெரிஞ்சிடும் சிலம்பாயிக்குத் தூக்கம் வரவேயிலை.  நேரம் நள்ளிரவை நெருங்கியது.   நிலா வெளிச்சத்தில் ஊரே தூங்கியது.  வாசலில் வந்து உட்கார்ந்தாள்.  சிறிது நேரத்தில்  கருமேகம் சூழ்ந்தது.  அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு மாடுகளைத் தொழுவத்தில் கட்ட குருநாதனை எழுப்பினாள்.  குருநாதனுக்கு அசதியாக இருந்தது.  எழுந்துபோய் மாடுகளை கட்டிவிட்டு வந்தான்,

மொறமெல்லாம் நனையப் போவுது குருநாதன் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.   சிலம்பாயிக்கு மனசு கஷ்டமாகியது.

ஒரு கோளிதானே போவுதுன்னு உட்ருக்கலாம்.  எல்லார் வீட்டு மொறமும் நனைஞ்சு போச்சுன்னா என்ன பண்ணுவாங்க? காளி மாரியாத்தா மளை பெய்யப்புடாது இந்த ஒரு தபா எனக்கு மாப்பு குடு தாயே!

சிலம்பாயியின் வேண்டுதல்களை எல்லாம் மீறி மழை தூறத் தொடங்கியது.  இப்போது முறங்களைப் பற்றி கவலை கொண்டாள்.  குருநாதன் வேட்டியைப் போத்திக் கொண்டு சிலம்பாயி பக்கத்தில் உட்கார்ந்தான்.  காற்றடித்தது.  கூடவே சடபட சத்தம்.  சிலம்பாயி மடியில் தொப்பென்று விழுந்தது.   பயந்து குதித்துப் புடவையை உதறினாள்.  அதற்கு முன்பே அது கீழே விழுந்திருந்தது.  காணாமல் போன கருப்புக் கோழி.  வீட்டு முன் நின்ற வேப்பமரத்திலிருந்து கோழி மழைத் தூறல் பட்டுக் கீழிறங்கியிருக்கிறது.

நாளைக்கு ஊருக்கே தெரிஞ்சிடும்.  முறம் எடுத்த வீட்டுக்கு எல்லாம் பதில் என்ன சொல்றது குருநாதன் குழம்பிக் கிடந்தான்.

சிலம்பாயி அவசரம் அவசரமாக அடுப்பை மூட்டி வெந்நீர் சுடவைத்து கருப்புக் கோழியைத் தலையழுத்தினாள்.  பிடுங்கிய இறக்கையை நாய் தோண்டிக் காட்டிக் கொடுத்துவிடாதபடி ஆழமாய்க் குழிவெட்டி குருநாதன் புதைத்தான்.  உரித்த கோழியில் மஞ்சள் தடவி மசாலா அரைத்து அவசரம் அவசரமாகக் குழம்பு கொதித்தது.  குருநாதனுக்குத் தூக்கம் வரவில்லை.  மழைத் தூறல் வலுக்கவும் இல்லை நிற்கவும் இல்லை.

திண்ணையில் கிடந்த கோணியை எடுத்துத் தலையில் கொங்காணி போட்டுக் கொண்டு பட்டாணியன் கோயில் நோக்கி விரைந்தான்.  பொழுது விடிந்து கொண்டிருந்தது.  தூறல் நிற்கவில்லை.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.