கு.மணி எழுதிய "திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம்" கட்டுரை | திருவள்ளுவர் | திருக்குறள் | Thirukkural in Tamil PDF | www.bookday.in

திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம் – கு.மணி

திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம்
————————————————

. “அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்”
என்பது திருக்குறளின் சுருக்கம்.

இது அவ்வையின் பொன் வாக்கு.

” கடுகைத் துளைத்துஏழ்கடலைப்புகட்டி குறுகத் தரித்த குறள்”

இது இடைக்காடர் திருவள்ளுவரைப் போற்றி பாடியது.

திருவள்ளுவர் திருக்குறளில் சிறந்த கருத்துக்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. சிறந்த கருத்துக்களுடன் ஒரு சிறந்த கட்டமைப்பையும் திருக்குறளுக்கு விட்டுச் சென்றுள்ளார் அவர். அந்த கட்டமைப்புக்கு அவர் தேர்ந்தெடுத்தி ருக்கும் எண் 7 ஆகும். அது என்ன கட்டமைப்பு அந்த ஏழாம் எண் பொருத்தம் பற்றி காண்போம்.

திருக்குறளின் சிறப்பு
——————————————
. திருக்குறள் வெண்பா வகை சார்ந்த ஒரு நூலாகும். குறிப்பாக குறள்வெண்பாக்களால் ஆனது. குறள் வெண்பா என்பது இரு அடிகளையே கொண்ட ஒரு வகை வெண்பாவாகும்.

. திருவள்ளுவர் அத்தகைய வெண்பாக்களை கொண்டு ஒவ்வொரு வெண்பாவிலும் ஏழு சீர்கள் வந்து பொருள் தரும்படி அமைத்துள்ளார்.. அதாவது ஒவ்வொரு குறளிலும் ஏழு சொற்களைப் பயன்படுத்தி அந்த ஏழு சொற்களிலேயே அவர் சொல்ல வந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

திருக்குறளின் அமைப்பு
———————————————
. திருக்குறள் அறம் பொருள் இன்பம் ஆகிய முப்பால்களைக் கொண்டு விளங்குகின்றது முதலில் அறத்துப்பாலை எடுத்துக்கொண்டால் இது இல்லறவிமல் துறவறவியல் மற்றும் ஊழியல் ஆகிய பிரிவுகளைக் கொண்டு விளங்குகின்றது. இல்லறவியல் மொத்தம் 20 அதிகாரங்கள் துறவறவியல் 13 அதிகாரங்கள் ஊழியல் ஒரு அதிகாரம் மொத்தமாக அறத்துப்பாலில் இருக்கும் அதிகாரங்களின் எண்ணிக்கை 34.அதன் கூட்டுத்தொகை(3+4=7). 20+13+1= 34
3+4 = 7 ஆகும். மேலும் அதிகாரத்திற்கு பத்துப் பாடல்கள் என அறத்துப்பாலில் மொத்தம் 340 குறட்பாக்கள் உள்ளன. இதன் கூட்டுத்தொகை 7 தான்.

பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால்
——————————————————————
. பொருட்பாலில் மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும்7+0= 7 தான். மேலும் அதிகாரத்திற்கு பத்துப் பாடல்கள் என பொருட்பாலில் மொத்தம் 700 குறள்கள் உள்ளன இவற்றின் கூட்டுத் தொகையும் 7 வருகின்றது .

. இதேபோன்றுதான் இன்பத்துப்பாலிலும் மொத்தம் 25 அதிகாரங்கள். அதிகாரத்திற்கு பத்து பாடல்கள் என 250 குறள்கள் உள்ளன. இதன் கூட்டுத் தொகையும் 7 வருவது தனி சிறப்பு. எனவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பால்களிலும் உள்ள குறள்களின் எண்ணிக்கைகளும் சரி அவற்றின் அதிகாரங்களின் எண்ணிக்கையும் சரி கூட்டினால் 7 வருவதனை போன்றே வள்ளுவர் அமைத்துள்ளார் ..

. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பாடல்களின் அதிகாரங்களைக் கூட்டினால் (34+70+25)129 அதிகாரங்கள் வருகின்றன. ஆனால் வள்ளுவர் இந்த அதிகாரங்களுடன் மட்டும் நிறுத்தி விடாமல் பாயிரத்தில் கூடுதலாக 4 அதிகாரங்களை தந்துள்ளார். இதனால் மொத்த அதிகாரங்கள் எண்ணிக்கை 129+4=133: இதன் கூட்டுத் தொகையும் 7 தான் . மேலும் அதிகாரத்திற்கு பத்துப் பாடல்கள் வீதம் 1330 குறள்கள் 133 அதிகாரத்தில் காணப்படுகின்றன. அவைகளின் கூட்டுத் தொகையும் 7 என்பது வியக்கவைக்கின்றது. இதுதான் வள்ளுவர் திருக்குறளை அமைத்திருக்கும் கட்டுமான முறையாகும்.

. இவ்வாறு 7 என்ற எண்ணை வைத்து பொய்யாமொழியார் தனது நூலினைப்பூட்டி உள்ளார். இதன் முக்கியத்துவம் தனது நூலில் யாராலும் இடைச்செருகல் செய்ய இயலாது என்பதே. இன்றுவரை யாராலும் இடைச்செருகல் செய்ய முடியாத ஒரு தனித்த நூலாக திருக்குறள் விளங்குகிறது என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

வள்ளுவனின் 7 பற்றிய எண்ணம்
————————————————————
. திருவள்ளுவர் எண்ணைப் பற்றி எண்ணி பார்த்திருக்கிறார். எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து இருக்கிறார்.

“எண்ணெண்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ” (குறள்:392)

என்று குறளில் எண்ணையும் எழுத்தையும் இரண்டு கண்களுக்கு நிகராக சொன்ன வள்ளுவர் அதிலும் எண்ணைத்தான் முதலில் வைத்து சொல்லி இருக்கிறார்.

எட்டு இடங்களில் பேசும் 7ஆம் எண்
—————————————————————
. எண்களின் 7 என்ற எண்ணை பற்றி திருக்குறள் எட்டுஇடங்களில் பேசுகிறது.

“எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்” ( குறள்:62)

. பழியில்லாத நல்ல பண்புடைய மக்களைப் பெற்றதால் ஒருவனுக்கு அவனுடைய ஏழு பிறவிகளிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேராது.

” எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு ” (குறள் எண் 107)

. தமக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கியவர்களது நட்பின் பெருமையை ஏழேழு பிறவிகளிலும் நல்லவர் எண்ணுவர்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து” (குறள்:126)

. ஒரு பிறப்பில் ஓட்டுக்குள் பதுங்குகிற ஆமை போல் தனது ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் திறன் பெற்றால் அது அப்படி அடக்கி ஆள்வனுக்கு ஏழு பிறப்பிலும் காப்பாகும் சிறப்படையது.

” ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து ” (குறள் எண்: 398)

. ஒரு பிறவியில் தாம் கற்ற கல்வி ஒருவருக்கு அந்தப் பிறவியில் மட்டுமல்லாது தொடர்ந்து வந்து அவனது ஏழு பிறவிகளிலும் பாதுகாப்பைத் தரும்.

” புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்” ( குறள் எண் :538 )

. சான்றோர் புகழ்ந்து கூறிய கடமைகளைப் போற்றிச் செயல்பட வேண்டும். அவ்விதம் செய்யாது மறந்தவர்களுக்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாவதில்லை.

” ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அன்று” (குறள் என் :835 )

. ஏழு பிறவிகளிலும் அடையத்தக்க நரகத் துன்பத்தை பேதை ஒருவன் இந்தப் பிறவியில்செய்யும் குற்றங்களாலேயே பெறுவான்.

“ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு” (குறள் என்: 1269 )

. வெகு தூரம் பிரிந்து சென்ற காதலர் திரும்பி வரும் நாளைஆவலோடு எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் பெண்களுக்கு ஒரு நாள் பொழுதுஎன்பது ஏழு நாட்கள் போல மெல்லக் கழியும்.

” நெருநற்றுச் சென்றார் எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து” (குறள் எண்: 1278 )

. நேற்றுதான் எம் காதலர்பிரிந்து சென்றார். எனினும் அவர் சென்று ஏழு நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே!எனப் பிரிவுற்றமையால் வருந்துகின்றாள் தலைவி.

7 என்ற எண்ணை மையமாக வைத்து வள்ளுவர் சொல்லும் பல்வேறு கருத்துக்கள் நம்மை சிந்தனையில் ஆழ்த்துகின்றன. நம் மரபில் ஏழு என்ற எண்ணுக்கு தனி மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

7 ஆம் எண்ணின் பெருமைகள்
——————————————————–
. இயற்க்கை கூட ஏழாம் எண்ணை தான் நம் கண் முன்னே நிறுத்துகிறது. ஆகாயத்தில் தோன்றும் வானவில்லின் வண்ணங்கள் மொத்தம் ஏழு நீலம் கருநீலம் ஊதா பச்சை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு என மழை காலத்தில் ஏழு வண்ணங்கள் ஆகிய வானவில்லை ஆகாயத்தில் கண்டு மகிழ்கின்றோம்.

. நம் கண்ணுக்குச் சுகந்தரும் வானவில்லின் நிறங்கள் மட்டுமல்ல காதுக்குச் சுகந்தரும் சங்கீதத்தின் ஸ்வரங்களும் ச ரி க ம ப த நி என ஏழுதான்.

. இந்த ஏழுமே விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகளை சார்ந்து புனையப்பட்டவை. மயில்( ச) மாடு( ரி) ஆடு (க) புறா(ம) குயில் ( ப) குதிரை( த) யானை (நி)ஆகியவற்றின் இயற்கையான ஒலிகள் இந்த ஸ்வரங்களோடு இணைந்து செல்லக்கூடிய தன்மை படைத்தவை என்கிறார்கள் .

. கர்நாடக இசையில் சரிகமபதநி என்று சொல்லப்படும் இதே ஸ்வரங்களுக்கும் பழைய தமிழில் அழகிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. குரல்: துத்தம்: கைக்கிளை: உழை: இளி: விளரி: தாரம் என்பதே அவை.

” குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை
எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே! என்கிறது திவாகர் நிகண்டு.

முடிவு
————–
சுருங்கச் சொல்லி விளங்க வைக்க எண்ணிய வள்ளுவர் குங்குமச்சிமிழில் கடலை அடைக்கும் முயற்சியைப் போல் ஏழே சீர்கள் என வகுத்துக் கொண்டு அதன் உள்ளே தம் எண்ணற்ற சிந்தனைகளைப் பதிவு செய்துவிட்டார். அனைவரும் ஏன் அனைத்து மொழியினரும் நினைத்து நினைத்து வியக்கும் அற்புதமே “குறுகத் தரித்த குறள்”என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. திருவள்ளுவர் கோடி என்ற சொல்லை ஏழு இடங்களிலும் 70 கோடி என்ற சொல்லை ஒரு இடத்திலும் ஏழு என்ற சொல்லை எட்டுக்குறட்பாக்களிலும் பயன்படுத்தி உள்ளார். ஒன்பது என்ற எண்ணை எந்த குறட்பாவிலும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

📚 எழுதியவர்:

கு.மணி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *