நூல் அறிமுகம்: திருவிழாக்களின் தலைநகரம் – ச. சுப்பாராவ்தலைப்பைப் பார்த்ததுமே புத்தகம் எதைப் பற்றி, எந்த ஊர் பற்றி என்று தெரிந்திருக்கும்.. ஆம்,.. எங்கள் மதுரையைப் பற்றிதான். எல்லா ஊர்க்காரர்களுக்கும்  தமது ஊர் பற்றிய ஒரு பெருமித உணர்வு இருக்கும்.  மதுரை, திருநெல்வேலிக்காரர்களுக்கு அந்த உணர்வு சற்று கூடுதல் என்பது எனது அனுபவம்.  அது உண்மைதான் என்று நிரூபிக்கும் வண்ணம் வந்திருக்கும் நூல்தான் சித்திரவீதிக்காரன் எழுதியிருக்கும் திருவிழாக்களின் தலைநகரம் என்ற அற்புதமான நூல்.

திருவிழா என்பது சமூக இளைப்பாறுதல் என்கிறார் முன்னுரை எழுதியிருக்கும் தொ.பரமசிவன் அவர்கள். மதுரையின் அனைத்து சமூக மக்களும் கொண்டாடி இளைப்பாறும் 22 திருவிழாக்கள் பற்றிய விரிவான தொகுப்பு இந்த நூல்.  கூடவே அழகான படங்களும்.  நூலாசிரியர் சிறந்த ஓவியரும், புகைப்படக் கலைஞரும் என்பது கூடுதல் சிறப்பு.

மதுரை கோவில் மாநகரம், தினந்தோறும் ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கும் நகரம் என்று எல்லோருக்கும் தெரியும்.  மதுரையின் மீனாட்சியும், கோவிலுக்குள் உட்கார்ந்து ஆட்சி செய்யும் சாதாரண அரசி அல்லள்..  அவள் தன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் கலந்து கொள்பவள்.  நீங்கள் மதுரையின் ஏதேனும் ஒரு தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென யானை, ஒட்டகம், குடை, பரிவட்டம், மேள தாள பரிவாரங்களோடு மீனாட்சி உங்களைக் கடந்து செல்வாள். அல்லது எதிரே வருவாள். என்ன என்று கேட்டால் மீனாட்சி இன்று  கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கதிர் அறுத்து விட்டு வருகிறாள் என்பார்கள். இன்று தனது ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கெல்லாம் படியளக்க வருகிறாள் என்பார்கள். ஒரு நாள் மீன் பிடிக்கப் போவாள். ஒரு நாள் வளையல் விற்பாள்.  சொக்கன் விறகு விற்பான். புட்டு வாங்கித் தின்று விட்டு, தூங்குவான். பிரம்படி படுவான். நரியைப் பரியாக்குவான். திக்கு விஜயம் வரும் மீனாட்சியை மணப்பான். கல்யாண விருந்து ஏக ரகளையாக இருக்கும்.  இதில் மச்சினர் அழகர் வேறு வந்து செல்வார். அது மற்றொரு தனி ரகளை…

எல்லாத் திருவிழாக்களையும் சித்திரவீதிக்காரன் நேரில் பார்த்து அனுபவித்து, கொண்டாடி, அந்த அனுபவத்தை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறார்.  அழகரின் எதிர்சேவை பற்றி அவர் எழுதியதைப் படிக்கும் போது, மதுரையே நாயக்கர் காலத்தில் உறைந்து நிற்கிறது. நானும் ஒரு பக்கமாக உறைந்து நிற்கிறேன். வசந்தோற்சவம், அழகர் கோவிலின் தைலக்காப்புத் திருவிழா, திருப்பரங்குன்றம் தேரோட்டம், புட்டுத் திருவிழா,  உலகில் எங்குமே இல்லாத வகையில் மதுரையில் மட்டும் நடக்கும் ஐந்து கருட சேவை என்று அவர்தான் எத்தனை எத்தனை திருவிழாக்களைக் கண்முன் காட்டுகிறார் !

தன் அனுபவத்தை மட்டும் எழுதாமல், அத் திருவிழா பற்றிய வரலாற்றுத் தகவல்கள், இலக்கியப் பதிவுகள் எல்லாவற்றையும் சேர்த்துத் தருவது என்னை திகைக்க வைக்கிறது. அழகர் தீர்த்தத் தொட்டிக்கு நீராடச் சென்றால், அவர்  பெரியாழ்வார் சிலம்பாறு பற்றி எழுதியதையும், சிலப்பதிகாரத்தில் சிலம்பாறு பற்றிய வரியையும்  மேற்கோள் காட்டுகிறார். கஜேந்திர மோட்சம் பற்றிய கட்டுரையின் முதல் வரியே பெருமாளும் நல்ல பெருமாள், அவர்தம் திருநாளும் நல்ல திருநாள் என்ற காளமேகத்தின் வரிதான் ! காளமேகப் பெருமாள் உறையும் திருமோகூர் எப்படிப்பட்ட ஊர் என்பதற்கு ‘மழை ஒழுக்கு அறா அப் பிழையா விளையுள் பழையன் மோகூர்‘ என்ற மதுரைக்காஞ்சியின் வரி! ஆஹா… ஆஹா….

ஆனால், நூல் வெறும் பெருந்தெய்வங்களின் திருவிழாக்கள் பற்றியது மட்டுமல்ல… அவரின் சொந்த ஊரான கோவில்பாப்பாக்குடி சாமி கும்பிடு, ஜல்லிக்கட்டு புகழ் அலங்காநல்லூரின் முத்தாலம்மன், முனியாண்டி திருவிழா, ஆயிரம் புரவிகாணும் அ.வல்லாளபட்டி புரவியெடுப்பு திருவிழா,  எல்லாவற்றைப் பற்றியும் புத்தகத்தில் விரிவாக உண்டு. மதுரை அருகே உள்ள காரியாபட்டிக்கு செல்லும் வழியில் உள்ள வலையங்குளம் கிராமத்தில் நடக்கும் இசைநாடக விழா பற்றிய கட்டுரை மிக அதிசயமான செய்திகளைச் சொல்கிறது. இந்த ஊரின் ‘தானாக முளைத்த தனிலிங்கப் பெருமாள் பெரிய இசை நாடக ரசிகர். எனவே பக்தர்கள் ‘எனக்கு இதை செய்து கொடு, நான் உனக்கு வள்ளி திருமணம் நாடகம் நடத்தித் தருகிறேன்.. நான் ஹரிச்சந்திரா நாடகம் நடத்தித் தருகிறேன்‘ என்று வேண்டிக் கொள்வார்களாம்.  சிவராத்திரி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை இப்படி வேண்டுதலுக்கான நாடகங்கள் தொடர்ந்து கோவில் வாசலில் நடக்குமாம். வசதி இல்லாத பக்தர்கள் இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து கூட்டணி போட்டு வேண்டுதலை நிறைவேற்றுதலும் உண்டு.  மதுரையின் ஒரு பெருமாள் சங்கரதாஸ் சுவாமிகளின் ரசிகன் !

திருவிழா என்பது ஜாதி, மதம் கடந்தது இல்லையா? மதுரையின் இஸ்லாமியர்களும். கிறிஸ்தவர்களும் திருவிழா கொண்டாடியடிபடியே இருக்கிறார்கள்.. அதற்கு இந்துக்களும் குஷியாக புது டிரெஸ் போட்டுக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.  கோரிப்பாளையம்  சந்தனக் கூடு திருவிழாவிற்கு பட்டை பட்டையாக விபூதி பூசிக் கொண்டு, மதுரையின் நாதஸ்வர, தவில் வித்வான்கள்  வாசிக்க, இஸ்லாமியர்கள் சந்தோஷமாக அதை ரசிக்கிறார்கள். சந்தனக் கூடு உலா வரும் மாட்டுவண்டியை ஓட்டுபவர் கடா மீசையும், நெற்றி நிறைய விபூதியும், பெரிய வட்டக் குங்குமமுமாக கருப்பணசாமி கெட்டப்பில் இருப்பவர். சின்னக்கடைத் தெரு முஹைதீன் ஆண்டவரின் சந்தனக் கூடு வீதி வலம் வரும் பெரிய மரக்கப்பல் 1942ல் மதுரை கீழவெளி வீதி வெற்றிலைப் பேட்டை வியாபாரிகள் செய்து தந்தது…  புதூர் லூர்து அன்னையின் தேர்த் திருவிழாவின் ஒன்பதாவது நாளில் தேவாலயத்தின் வாசலில் இந்துத் தாய்மார்கள் விறகடுப்பு வைத்து பொங்கல் வைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகளை அன்னையின் முன் வைத்து, பாதிரியார் மந்திரித்து நீர் தெளித்துப் படைக்கிறார். பொங்கல் பிரசாதம் விநியோகம் நடக்கிறது. பார்க்கும் சித்திரவீதிக்காரனுக்கு  வண்ணநிலவனின் கடல்புரத்திலும் நாவலின் அறுப்பின் பண்டிகைக் காட்சிகளும், எஸ்.ராவின் துயில் நாவலில் வரும் துயில்தருமாதா திருவிழாவும் நினைவுக்கு வருகின்றன.   கீழவாசல் மரியன்னையின் தேர்த்திருவிழாவைப் பார்க்கும் போது அவர் பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் வரும் மாதாகோயில் தேர்த்திருவிழாவை நினைத்துக் கொள்கிறார்.  நாவலில் வருவது மாதிரியான  பெரிய தேர் மரியன்னைக்கு இல்லையே என்று வருந்துகிறார்.. அன்னைக்கு நல்ல பெரியதாக ஒரு மரத்தேர் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறார் இந்த கோவில்பாப்பாக்குடி சோனைக் கருப்பணசாமி பக்தர் !  இந்த வரிகளை வாசிக்கும் போது இதுதான் எங்கள் மதுரை என்று எனக்குள் அப்படியே ஏதோ பொங்கியது.

புத்தகத்தில் ஒரே ஒரு சிறு குறைதான்.  மதுரையில் நடக்கும் அனைத்து திருவிழாக்களின் பட்டியல் ஒன்றை புத்தகத்தின் கடைசியில் தந்திருக்கலாம்.  சித்திரவீதிக்காரனிடம் சொல்லி இருக்கிறேன். அடுத்த பதிப்பில் இணைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

நூலின் முன்னுரையில் அ.முத்துகிருஷ்ணன் சொல்வது போல, சித்திரவீதிக்காரன் மதுரையின் திருவிழாக்களில் தொலைந்து கொண்டே இருக்கும் சிறுவனாக இருக்கிறார்.  புத்தகத்தைப் பபடித்த நானும் அப்படி ஒரு சிறுவனாக  ஒரு கையில் ஆப்பிள் பலூனுடனும், மறுகையில் மூங்கில் ஊதலுடனும் (ஒரு முனையில் பலூன் மாட்டப்பட்டது !)  வாயில் ஜவ்வு மிட்டாய் சிவப்புடனும்  அவர் காட்டும் அந்த ஒவ்வொரு திருவிழாக்களிலும் தொலைந்து கொண்டே இருக்கிறேன் !

சித்திரவீதிக்காரனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல்: திருவிழாக்களின் தலைநகரம் – மதுரை
ஆசிரியர்: சித்திரவீதிக்காரன்
பதிப்பகம்: பசுமை நடை வெளியீடு
விலை: ரூ130.00
பக்கங்கள்: 200