“ஆணவ கொலைகளின் காலம்” கட்டுரை
ஆண்டுதோறும் பிப்ரவரி 14 உலக காதலர் தினமாக கொண்டாடப்படுகின்றது. காதல் என்பது மனிதனின் ஆன்மா, காதல் மனிதகுலத்தின் மகத்துவம், ஒருவரை காதலிப்பது என்பது தனிநபரின் விருப்பம், அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் இன்றைக்கு அந்த உரிமையானது மறுதலிக்க படுகின்றது. காதலிப்பது ஒர் குற்ற செயலாக சித்தரிக்கப்படுகிறது. காதல் என்பது அளப்பரியது ஆனால் அதை இன்றைக்கு ஓர் சிறிய வட்டத்திற்குள் அடைக்கப் படுகின்றது. இந்த செயலானது மிகவும் அபாயகரமான தாகும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அரங்கேறிய வன்னமாக உள்ளது. எதற்காக ஆவண கொலைகள் நடைபெறுகிறது?அதற்கான காரணம் தான் என்ன?
ஆணவ கொலைகள்:-
ஆணவ கொலை என்பது தமிழகத்தில் மட்டும் நடைபெறும் ஓர் நிகழ்வல்ல. மாறாக, அவை சர்வதேச அளவில் நடக்கக்கூடிய ஒன்றாகும். ஆணவ கொலைகள் பல்வேறு வகைகளாக உள்ளது. அவை, சாதி, மதம்,இனம், பாலினம், வர்க்கம் என இன்னும் பலதரப்பட்ட வகைகளில் நடைபெறுகிறது. வகைகள் பலவாக இருந்தாலும் அதன் தொடக்க புள்ளி ஒன்றுதான்.அது பெண். ஒரு பெண்ணை மைய கருவாக வைத்துக் கொண்டு தான் இங்கு ஆணவ கொலைகள் நடைபெறுகிறது.
பெண் அடிமை தனம்:-
அனைத்து மதங்களுமே பெண்களை அடிமைப்படுத்தியே வைத்துள்ளது.இன்றைக்கு இருக்கக்கூடிய சடங்கு, சம்பிரதாயம் அனைத்தும் பெண்களை சுற்றியே நடைபெறுகிறது. அவர்களுக்கே இங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப் படுகின்றன. அவர்கள் எந்த உடை உடுத்த வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும், யாருடன் பேச வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாகவே ஆணவப் படுகொலைகள் நடைபெறுகிறது. அதனினும் குறிப்பாக மேலை நாடுகளில் சமய பழக்க வழக்கங்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. சான்றாக, சமீபத்தில் நெதர்லாந்தில் ஒர் பெண்ணின் தலையை திருகி கொன்று ஆற்றில் வீசினர் அந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் எதற்காக என்றால்.அந்த பெண் ஒர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்த்தவர். தங்கள் மத நெறிகளின் அடிப்படையில் புர்கா அணிய வேண்டும் அதற்கு அந்த பெண் மறுக்கவே இந்த சம்பவமானது நடந்தேறியது. இங்கு அந்த பெண்ணின் தவறென்ன.அவள் புர்கா அணியமாட்டேன் என்று சொன்னதா. இல்லை அவள் பெண்ணாக பிறந்ததா.ஏன் அவர் தன் மகளையே கொலை செய்ய வேண்டும். தன் மகளை கொலை செய்ய வேண்டும் என்ற ஓர் எண்ணத்தை உருவாக்கியது தான் என்ன..
லவ் ஜிகாத்:-
மேலைநாடுகளில் இப்படியாக இருக்க இந்தியாவில் வடமாநிலங்களில் மத அடிப்படையிலும், குடும்ப பெருமையின் அப்படையில் ஆணவக்கொலைகள் நடைபெறுகிறது. வடமாநிலங்களில் ஒர் முஸ்லீம் ஆணும் ஓர் இந்து பெண்ணும் சாதரணமாக பேசுவதென்பது கூட கடினம். அவ்வாறாக பேசப்படும் போதே லவ் ஜிகாத் என்று முத்திரை குத்தப்படுகிறது. சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நர்சிங் படிக்கும் மாணவி தனது சாகாக்களுடன் ஹோட்டல் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடினர். லவ் ஜிகாத் என்று அங்கு இருந்த இரண்டு இஸ்லாமிய மாணவர்களை தாக்கினர் பஜிரங் தள் அமைப்பினர். ஆனால் அந்த பெண் நடந்தது லவ் ஜிகாத் இல்லை கலந்து கொண்டதில் இரண்டு நபர்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் மற்ற அனைவரும் இந்துக்களே என்று வாக்குமூலம் அளித்தனர்.இவ்வாறாக மாற்று சமூக மாணவர்களிடம் நட்பு கொள்வது கூட இந்த பொது சமூகத்தில் தவறாக சித்தரிக்கப்படுகிறது.
சாதிய ஆணவப் படுகொலைகள்:-
தமிழகத்தை பொறுத்தளவில் சாதியை அடிப்படையாக கொண்டு ஆணவ கொலைகள் நடைபெறுகிறது. தன்னுடைய சாதியை காப்பாற்ற வேண்டும் தன்னுடைய குலப் பெருமையை காக்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவாக ஆணவ கொலைகள் நடக்கிறது. அவ்வாறு சாதியை காப்பாற்ற கூடிய பணியும் பெண்கள் தலையிலே விடிகிறது. ஒரு ஆண் மாற்று சமூக பெண்னை காதலித்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்கள் செய்தால் வருவதில்லை. பெண்களை மூலப்பொருளாக கொண்டு சாதிய அடிப்படையில் ஆணவ கொலைகள் நடைபெறுகின்றன. பாபுளேசன் பவுண்ட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் ஓர் ஆண்டிற்கு 5,000 பெண்கள் ஆணவப் படுகொலைக்கு உள்ளாக்க படுகிறார்கள் என்று.
சாதியும் – வர்க்கமும்:-
காத்தவராயன்-ஆரியமாலா, மதுரைவீரன் உள்ளிட்டோர் சாதிய ஆதிக்க எண்ணத்தால் படுகொலை செய்யப்பட்டு மாண்டவர்கள் இன்றைக்கு தெய்வமாக இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு கண்ணகி- முருகேசனில் ஆரம்பித்து ஓர் நெடும் பயணமாக சென்றுகொண்டு இருக்கிறது ஆணவப் படுகொலைகள். தமிழகத்தின் ஆணவப் படுகொலைகளை பொறுத்தளவில் சாதியும் மட்டும் பார்க்காமல் வர்க்கத்தை சேர்த்து பார்க்க ஓர் கட்டாயம் உள்ளது. ஆணவ கொலைகளில் வர்க்கமானது முக்கிய பங்காற்றுகிறது. சான்றாக சமீபத்தில் நெல்லையில் கவின் செல்வ கணேஷ் எனும் ஐடி ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது தமிழக அளவில் பேசு பொருளானது. பலதரப்பட்ட இடங்களில் இருந்து கண்டன குரல்கள் வலுத்தன. ஊடகங்கள் அனைத்திலும் இந்த செய்திகளே பரவின. அதுவே சில நாட்களுக்கு பிறகு மற்றொரு ஆணவ கொலையானது தமிழகத்தில் நடந்தது அது பேசு பொருளாக வில்லை. ஊடகங்களில் செய்திகள் வரத் தயங்கின. ஒரு சில இயக்கங்கள் மட்டுமே கண்டனங்களை எழுப்பியது. இரண்டுமே ஆணவக் படுகொலைகள் தான் ஏன் இந்த வேறுபாடுகள். ஏனென்றால் கவின் பொருளாதரத்தில் முன்னேறிய குடும்பத்தை சேர்ந்தவன் ஐடி ஊழியர் வேறு. அதன் காரணமாக பணக்காரர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் ஆதரவு கவினுக்கு கிடைத்தது. அதுவே மற்ற பாமர வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லை.
நீதித்துறை:-
ஒருபுறம் ஆணவக்கொலைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கண்டன குரல்கள் எழும்புகின்ற காலத்தில் மற்றொரு புறம் நீதிமன்றங்களும் கடுமையான விதிமுறைகளை விதிக்க தான் செய்கின்றன. சாதிமறுப்பு திருமணம் செய்துகொள்ள து சட்டப்படியாக நியாயமானதே என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.சான்றாக,
லாத சிங் VS. உ.பி (2006) என்ற வழக்கில் வயதுவந்த ஆண் பெண் நட்பு காதல் கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை என்று சொல் பட்டிருக்கிறது.இந்து திருமண சட்டம் சாதிமறுப்பு திருமனத்திற்கு எதிரானது அல்ல என்று மற்றொன்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.
சக்தி வாஹினி Vs யூனியன் ஆப் இந்தியா (2018) என்ற வழக்கில் தலித்-தலித் அல்லாதோர் திருமணம் செய்தால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஓர் 20 வகையான நெறிமுறைகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
நடைமுறை சிக்கல்:-
ஆனால் இந்த விதிமுறைகள் அனைத்தும் நடைமுறையில் பின்பற்றபடுகின்றனவா என்றால் இல்லை. இந்த சக்தி வாஹினி வழக்கில் ஆணவ கொலைக்களுக்கு எதிராக உடனடியாக FIR பதிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறது ஆனால் நடைமுறையில் இதுவே நேர் எதிராக உள்ளது. காவல் துறையானது FIR போடுவதில் தயக்கம் காட்டுகின்றது.இன்றைக்கு சாதாரண ஓர் குற்ற வழக்குகளில் FIR பதிவு செய்தல் என்பதே கடினமானது. இதில் SC/ST வழக்குகளிலும் ஆணவக் கொலை வழக்குகளிலும் சொல்ல வேண்டியதே இல்லை. ஓர் FIR – யை பதிவு செய்வதற்கும் வழக்கின் உண்மையான சாராம்சங்களை சேர்ப்பதற்கும் கூட இங்கு ஒர் பெரும் போராட்டம் தேவைப்படுகிறது. சான்றாக, கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் DYFI ஒன்றிய செயலாளர் தோழர் வைரமுத்து ஆதிக்க சாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இந்த வழக்கு முதலில் சாதாரண ஒரு கொலை எனவே FlR பதிவு செய்யப்பட்டது. இது சாதாரண கொலை அல்ல இது ஆணவப் படுகொலை என தமிழகம் முழுவதும் DYFI போராட்டங்களை முன்னெடுத்தது.அந்த அழுத்தத்தின் விளைவாக வழக்கு BNS பிரிவு 191(3), 126(2), 296 (6), 103(2)-ல் இருந்து SC/ST பிரிவு 3(2) (va) மாற்றப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடைபெற்ற வன்கொடுமை வழக்குகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான குற்றவாளிகளே சட்டபூர்வமாக தண்டிக்கப் பட்டுள்ளனர். மற்றவை அனைத்தும் கட்டபஞ்சாயத்து மூலமும் சாட்சிகள் கலைக்கபடுதன் மூலமாகவும் காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தாமல் வழக்குகள் மூழ்கடிக்கப் படுகின்றன. இவ்வாறாக காவல்துறையானது குற்றவாளிகளுக்கு ஆதரவான போக்கில் செயல்படுகின்றன.
தனிச்சிறப்பு சட்டம்:-
எதற்காக ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சிறப்பு சட்டம் தேவை என்றால் சாதாரண கொலைக்கும் ஆணவக் கொலைக்கும் வேறுபாடு உண்டு. சாதாரனமாக ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு செல்வோர்க்கும் BNS 103 . அதுவே ஒருவரை சித்திரவதை படுத்தி அவரை வெட்டிக் கொன்று நிர்வாணமாக்கி வீதிகளில் வீசீ செல்வோரும் BNS 103 – என்றால் எந்த வகையில் நியாயமானது. அதை போலவே ஆணவக் கொலை என்றால் இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து – 14 மற்றும் 17 மற்றும் 21 ஆகியவையும் மீறப்படுகின்றது. இவ்வாறு இருவேறு முகாந்திரத்திற்கும் ஒரே பிரிவு என்றால் அது சரியானது அல்ல.அதுபோல ஆணவப் படுகொலைக்கு SC/ST சட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்றலாம் சொல்லப்படுகிறது. ஆனால் தம்பதியர் இருவரும் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் என்றால் அல்லது இருவரும் தலித் அல்லாதோர் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் எப்படி SC/ST வழக்குபதிவு செய்ய முடியும். இதன் காரணமாகவே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சிறப்பு சட்டம் தேவை.
அரசின் தேவை:-
அரசானது சாதிமறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசானது சாதிமறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு அரசானை 8/11ன் கீழ் உதவித்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒக்கீடு வழங்க வேண்டும். முன்னாள் நீதிபதி திரு.சந்துரு அவர்களின் அறிக்கை நடைமுறைபடுத்த வேண்டும்.
முடிவுரை:-
ஆணவப் படுகொலைக்கு தனிச்சிறப்பு சட்டம் தேவை என்றாலும் கூட சாதியத்திற்கு எதிராக மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்ப்பட வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசானது மேற்கொள்ள வேண்டும். இற்றைய 21-ம் நூற்றாண்டிலும் கூட பெண்கள் தங்களின் துணைவனை தேர்வு செய்துகொள்ளும் உரிமையானது கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.காதல் என்பது இயற்க்கை யின் நியதி, காதல் அழிவில்லாதது.அந்த காதலை வைத்து கொண்டு சனாதனத்தை தகர்த் தெரிவோம் சாதி அடக்குமுறையை உடைத் தெரியுவோம்.. ஆதலால் காதல் செய்வோம்
சாதியை கடந்து.! மதத்தை கடந்து.!
📚 எழுதியவர்:
– க.அ.சிவராமன்
சட்டக்கல்லூரி மாணவர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா பொருளாளர்
விளாத்திக்குளம்
தூத்துக்குடி மாவட்டம்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
