கேரளாவின் நிதியமைச்சர் டி.ஆர்.தாமஸ் ஐசக், திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பாட்டு ஆய்வு மையத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். அதற்குப் பின்னர் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்த அவர், கேரளாவின் புகழ்பெற்ற அதிகாரங்கள் மற்றும் வளங்களைப் பரவலாக்குவதற்கான மக்கள் திட்டப் பிரச்சாரத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். 2006-2011 காலகட்டத்தில் மாநிலத்தின் நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கோவிட்-19 குறித்த கேரள அரசின் செயல்பாடுகள் வேறுபடுவது; மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் குழப்பமான உத்திகள்; மக்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தித் தராமல் ஊரடங்கு நடவடிக்கை ஏன் நீடிக்க முடியாது; இறுதியாக, கேரளாவின் தீவிரமான சூழ்நிலை உத்திகள் மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும் நிலையில், இந்தியாவில் அது ஏன் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப்போகிறது என்பவை குறித்து ஃப்ரண்ட்லைனுடன் தாமஸ் ஐசக் மிக விரிவாகப் பேசினார். அவரது நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
இந்த அளவிற்கு தொற்றுநோயின் தாக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்துவதற்கு கேரளா என்ன செய்தது?
இதற்கான பதிலை, கேரளாவில் உள்ள பொது சுகாதார அமைப்பின் பலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அது ஒரு நீண்ட வரலாறு, கடந்த காலத்தின் மரபு. பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதில் தற்போதைய இடதுசாரி அரசாங்கம் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளது. மருத்துவமனைக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்காக KIIFB எனப்படும் கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடமிருந்து சுமார் ரூ.4,000 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் இன்றைக்கு ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் புற்றுநோயியல் துறை உள்ளது.
ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் இதயம் தொடர்பான துறை உள்ளது. மற்றும் ஒவ்வொரு தாலுகா மருத்துவமனையிலும் குறைந்தது 20 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களை இலக்காகக் கொண்டு செயல்படுகின்ற ஆர்த்ராம் திட்டத்தை தொடங்கியுள்ள கேரள அரசாங்கம், ஆரம்ப சுகாதார நிலையங்களை குடும்ப சுகாதார மையங்களாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள ஆரோக்கிய மையங்களை மிகவும் ஒத்தவையாக இவை இருக்கின்றன என்றாலும், அவற்றிற்கு இடையே இருக்கின்ற ஒற்றுமை கருத்தியல்ரீதியிலானது மட்டுமே.
நாட்டின் சிறந்த முதல் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இன்றைக்கு கேரளாவில்தான் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள 68 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக விரைவாக நோய்த்தடுப்பு வலையமைப்பு மற்றும் மருத்துவமனை மேம்பாட்டுக் குழுக்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்திற்கு பிந்தைய நெருக்கடியில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டதிலும், நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கேரளாவின் முயற்சிகளிலும், இந்த பொது சுகாதார அமைப்பின் வலிமைதான் துணை நின்றது. இப்போது இந்த அமைப்பு இவ்வாறான நெருக்கடிகளைக் கையாள்வதற்கான நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.
வூஹான் பற்றிய செய்தி வந்த உடனேயே, சுகாதாரத் துறையால் உடனடியாக ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது, நடித்துக் காட்டி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து தயாரிப்பு வேலைகளும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மிகுந்த அக்கறையுடன் தொடங்கின. வூஹானில் இருந்து திரும்பி வந்த அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஒருவர்கூட வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலிருந்து இரண்டாவதாக வந்த சிலர் தனிமைப்படுத்தலைத் தட்டிக் கழித்ததன் விளைவாக, நிலைமை கைமீறியது. ஆனாலும் இப்போது அந்த பிரச்சினையும் வெற்றிகரமாகச் சமாளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கையாளுவதில், இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து கேரளா மாறாக இருப்பதற்கு பல குறிப்பிட்ட காரணிகள் உள்ளன. முதலாவதாக, தீவிர சுழற்சி முறையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நோயுடன் தொடர்புள்ள அனைவரையும் கண்டறிவது, பின்னர் அவர்களுக்கும் பரிசோதனை செய்வது, அவர்களைத் தனிமைப்படுத்துவது என்று நாங்கள் பின்பற்றிய இந்த சுழற்சிமுறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையில், நோயாளிகளின் பாதை குறித்த வரைபடங்களை உருவாக்கியது கேரளாவின் கண்டுபிடிப்பே ஆகும். நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட அனைவரின் கடந்த இரண்டு வாரங்களுக்கான நடவடிக்கைகள் குறித்த பாதை வரைபடம் உடனடியாக உருவாக்கப்பட்டது.
பின்னர் அது செய்தித்தாள்களிலும் பிற இடங்களிலும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் அவர்களுக்கு அருகில் இருந்த அனைவருக்கும் எச்சரிக்கை ஏற்பட்டது; மக்கள் எச்சரிக்கையாக இருக்கத் தொடங்கினர். இது உண்மையிலேயே மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. இது நாட்டில் வேறெங்கும் இல்லாத செயல்பாடாகும். ஏனெனில் அங்கெல்லாம் எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை. அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட சில மாநிலங்களில் கோவிட்-19 நோய் இருந்தவர்கள் அதிகமாக இல்லை என்பதை உங்களால் காண முடியும். அது பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் அந்த மாநிலங்களில் கண்டறியப்படவில்லை என்பதையே குறிக்கிறது. அவ்வாறு இருக்கின்ற இடைவெளி பேரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.
இரண்டாவதாக, ’பிரேக் தி செயின்’ (சங்கிலியை உடைப்போம்) என்ற பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்பதை நான் சொல்ல வேண்டும். கேரளாவில் உள்ளவர்களுக்கு வெற்றிலை மெல்லும் பாரம்பரியம் உள்ளது. அதனால் சாலையில் வெற்றிலைச் சாற்றைத் துப்புவது மிகவும் சாதாரணமானது. பிரச்சாரம் கீழ்மட்டம் வரை பரவியதால், அந்த பழக்கம் இப்போது மறைந்துவிட்டது. ’பிரேக் தி செயின்’ பிரச்சாரம் சானிடைசர்கள் மற்றும் சோப்பை மக்கள் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளது. முகக்கவசங்களை நாங்கள் அணியவில்லை என்றாலும், அதுவும் அடுத்த கட்டத்தில் பிரபலமாகிவிடும் என்றே நான் நம்புகிறேன். மருத்துவக் கண்ணோட்டத்தில், கேரளா அடைந்திருக்கும் வெற்றிக்கு இந்த இரண்டு முக்கிய காரணிகளும் காரணம் என்றே நான் கூறுவேன்.
ஏற்கனவே எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவியை அறிவித்த முதல் மாநிலம் கேரளாவாகும். கோவிட்-19 நெருக்கடியின் ஆரம்பத்திலேயே இதைச் செய்ய வேண்டும் என்று அரசைத் தூண்டியது எது?
ஆற்றல் மிக்க சமூக இயக்கங்களைக் கொண்ட மாநிலம் கேரளா என்பதால், வாழ்வாதாரத்திற்கான உதவியை அரசு வழங்கத் தவறினால், அதைக் கோரி போராட்டங்கள் நடக்கும். கீழிருந்து மிகப்பெரிய அழுத்தம் இருப்பது, மிகவும் சாதகமான விஷயம் என்றே நான் நினைக்கிறேன். அது வெறுமனே மாநில அரசின் கருணையால் நடப்பதாக இருக்காது. எந்தவொரு அரசாங்கத்தாலும் புறக்கணிக்க முடியாது என்ற அளவில் அவ்வாறான அழுத்தம் கீழிருந்து இருக்கும். ஊரடங்கின் விளைவாக மக்களின் வாழ்வாதாரங்களும் அடைபட்டிருக்கின்ற நிலையில், குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை மக்களுக்கு உறுதி செய்து தராமல், ஊரடங்கை அமல்படுத்த முடியாது என்பதை அரசு நன்கு உணர்ந்திருந்தது. நாங்கள் அதைச் செய்யாவிட்டால், அல்லது அதில் கவனம் செலுத்தா விட்டால், விளைவு என்னவாக இருந்திருக்கும் என்பதை இப்போது நமக்குத் தெரிகிறது.
நகரங்களிலிருந்து தப்பி ஓடுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும், இந்த ஊரடங்கின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை பொருளற்றதாக்கி இருப்பார்கள். மக்களுடைய மிகக்குறைந்தபட்சத் தேவைகளுக்கான உத்தரவாதத்தை அளிக்காமல், அவர்களிடமிருந்து இணக்கத்தை வலியுறுத்திப் பெற முடியாது என்பது இந்திய அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மிகக் குறைவான நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே, நாங்கள் ரூ.20,000 கோடி நிதியுதவிக்கான தொகுப்பை அறிவித்திருந்தோம்.
ஆனாலும் பட்ஜெட்டுக்கு வெளியே 20,000 கோடி ரூபாயை மாநில அரசால் பெற முடியாது. பட்ஜெட் கட்டுப்பாடுகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆகையால், எங்களுடைய கடன், என்ன செலவு செய்யப் போகிறோம் என்ற சுமையை முன்கூட்டியே ஏற்றுக் கொண்டிருப்பது மட்டுமே எங்களால் செய்ய முடிந்தது. ஆண்டின் பிற்பகுதியில், அதுவும் ஒரு தேர்தல் ஆண்டில், பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது என்பதால், இது நிச்சயம் விவேகமான செயலாகக் கருதப்படாது. ஆனாலும் நாங்கள் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை.
நோயை எதிர்த்துப் போராடுவது மட்டுமே இப்போது மிக முக்கியமாக கருதப்பட வேண்டிய செயல் என்பதால், மக்களின் தேவைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு இணையாக வேறு எந்த செயல்பாடுகளும் இருக்க முடியாது. 55 லட்சம் முதியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.8,500 வழங்கியிருக்கிறோம். மக்கள்நலன் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்ற, கிட்டத்தட்ட அதே அளவிற்கான தொழிலாளர்களுக்கு, தலா ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களின் கீழ் வராத ஆனால் நிதியுதவி தேவைப்படுகின்ற அனைவருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. பணக்காரர்களா அல்லது ஏழைகளா என்பதைப் பொருட்படுத்தாமல், மாநில அரசாங்கத்தின் நிதியில் இருந்து கூடுதல் தானியங்களையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 மதிப்புள்ள உணவுப் பொருட்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இப்போது முழுமையான உணவுப் பற்றாக்குறை உள்ளதால், உணவு பற்றாக்குறை கொண்ட மாநிலமாக கேரளா இருப்பதால் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதை வறுமை ஒழிப்பிற்கான நடவடிக்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
மாநிலமெங்கும், 1,300 சமூக சமையலறைகளை நாங்கள் தொடங்கினோம். ஒவ்வொரு நாளும் இலவச உணவை அனைவருக்கும் அவை வழங்கி வருகின்றன. ஒரு அழைப்பு விடுத்தாலே, உணவு வீட்டு வாசலில் வழங்கப்படுகிறது; அல்லது அங்கே இருக்கின்ற கவுண்டருக்கு வந்து உணவு பாக்கெட்டை எடுத்துச் செல்லாலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச உணவு வழங்கப்படுவதை நாங்கள் இவ்வாறு உறுதி செய்திருக்கிறோம். வீதிகளில் தூங்கிக் கொண்டிருந்த அல்லது அலைந்து திரிந்து கொண்டிருந்த வீடற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறாக தெருக்களில் யாரும் இல்லை என்பதையும், அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றோம். இந்தப் பணி குறிப்பிடத்தக்கது என்றே நான் கருதுகிறேன்.
வெளிநாட்டிலிருந்து வருகை
கோவிட்-19 பாதிக்கப்பட்ட பல நாடுகளிலிருந்து, குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் இருந்து மிகப் பெரிய எண்ணிக்கையிலான கேரளவாசிகளின் வருகைக்கான சாத்தியம் இப்போது தெளிவாக ஏற்பட்டிருக்கிறது. அரசு எந்த அளவிற்குத் தயாராக உள்ளது? அவர்களின் வருகை அரசிற்கு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கும்?
இது கேரளாவிற்கு அடுத்த பெரிய சவாலாக இருக்கும். எத்தனை பேர் திரும்பி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் எத்தனை பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது தெரியாது. அவர்கள் ஒவ்வொருவரையும் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களில் நோய் அறிகுறியற்றவர்கள் இருப்பார்கள் என்பதால், தனிமைப்படுத்தப்படும் காலத்தை 28 நாட்கள் என்று நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம். எனவே அனைத்து ஹோட்டல்கள், விடுதிகள், கல்லூரிகள், வீடுகள் மற்றும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் குடியிருப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு, கோரிக்கை வைத்துள்ளோம் … இந்த இடங்கள் அனைத்தும் இப்போது ஜியோடாக் செய்யப்பட்டுள்ளன.
அதனால் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் [வெளிநாட்டில் உள்ளவர்கள்] வந்தவுடன், இரண்டு விஷயங்கள் நடக்கலாம். ஒன்று, இரண்டாம் நிலை பரவல் இல்லாத வகையில், அவர்களை நாங்கள் தனிமைப்படுத்தி வைப்போம். இரண்டு, நாம் என்ன செய்தாலும், இரண்டாம் நிலை பரவல் இருக்கலாம் என்பதால், தலைகீழ் தனிமைப்படுத்தல் என்ற உத்தியைப் பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். அதாவது பிற நோய்கள் இருப்பதால் ஆபத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களும் வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
சிறிது காலத்திற்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டு விடும் போது, மற்றவர்களை வெளியே செல்ல அனுமதிக்கலாம். ஆனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். நோயின் அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நபர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்காக, தொடர்ந்து நாங்கள் அவர்களைக் கண்காணித்து வருவோம். கோவிட்-19 காரணமாக அவர்கள் இறந்து போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இளைஞர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான ஆபத்து இருக்கலாம். இவையனைத்தையும் செய்து முடிப்பதற்கு துல்லியமான திட்டமிடல் தேவைப்படுகிறது.
மாநிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அதாவது 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் குறித்த உலக சுகாதார அமைப்பின் தரவை நாங்கள் பெற்றிருக்கின்றோம். அதிலுள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கான புதிய தகவல்களை அளித்து அதை ஒருங்கிணைத்து வருகின்றோம். பெரிய தரவுத் தொகுப்பாக இருப்பதால், சில சூழல்களில் வருங்கால நிலைமை குறித்த பல்வேறு காட்சிகளை மிகத் துல்லியமாகக் கணிப்பதற்கு அது உங்களுக்கு உதவுகின்றது. இதை வைத்துக் கொண்டு, மாவட்டங்களுக்கும், மற்ற பிராந்தியங்களுக்கும் என்ன செய்து தர வேண்டும் என்பது குறித்து ஒருவரால் திட்டமிட முடியும். இந்த பெரிய தரவு குறித்த பகுப்பாய்வில் நாங்கள் இப்போது ஈடுபட்டு வருகிறோம். இதில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வருகின்றன.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளா எப்போதும் தயார்நிலையில் இருக்கிறது என்ற முக்கியமான வேறுபாடே, மூன்றாவது காரணமாக எனக்குத் தோன்றுகிறது. இதுதான் இந்த அரசை [மற்றவர்களிடமிருந்து] வேறுபடுத்துவதாக இருக்கிறது. நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றோம். மிக மோசமான சூழ்நிலைக்கும் தயாராகி வருகிறோம். நோய் முதலில் வந்தபோதே, எங்கள் சுகாதார அமைப்பு தயார் நிலையில் இருந்தது. இரண்டாவது அலைக்கு நாங்கள் தயாராக இருந்தோம். தயார் நிலையில் இருப்பது மிகவும் முக்கியமானது.
இவ்வாறான தயார்நிலை இந்திய அரசாங்கம் உள்பட பல மாநிலங்களில் இல்லை. இந்திய அரசாங்கம் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்திருந்தால், ஏராளமான பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் மிகவும் தாமதமாகவே விழித்தெழுந்தார்கள். கேரளா ஒரு மாநில அரசு என்ற போதிலும், இங்கே நடத்தப்பட்டிருக்கும் பரிசோதனை விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. தயாரிப்பின்றி இருத்தல் இந்தியாவிற்கான மிகப்பெரிய பலவீனம் என்றாலும், கேரளா அதிலிருந்து வேறுபட்டே நிற்கிறது.
நீங்கள் குறிப்பிட்ட கேரளா குறித்த உலக சுகாதார அமைப்பின் தரவு சேகரிப்பு பற்றி மேலும் ஏதாவது சொல்ல முடியுமா?
உலக சுகாதார அமைப்பு அதன் [உலகளாவிய] காசநோய் திட்டத்திற்காகச் சேகரிக்கப்பட்ட தரவுகளைச் சேமித்துள்ளது. அது ஒரு பெரிய தரவுத் தொகுப்பாகும். அந்த தரவு மிக நீண்ட காலமாகச் சேகரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு அதைச் சேமித்து வைத்துள்ளது. அந்த அமைப்பு மிகுந்த பரிவுடன் எங்களுக்கு அந்தத் தரவை கிடைக்கச் செய்துள்ளது. தரவு பாதுகாப்பிற்கான நெறிமுறைகள் உள்ளன என்பதை உறுதிசெய்த பிறகு நாங்கள் அதைப் பயன்படுத்தவிருக்கின்றோம்.
வளைகுடா நாடுகளில் குடியேறியவர்கள் பலரும் நிரந்தரமாக இங்கே திரும்பி விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?
அவர்கள் எப்போது அங்கே திரும்பிச் செல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. வளைகுடா நாடுகளில் ஏராளமான மக்கள் வேலை இழந்து வருகின்றனர். எனவே அவர்கள் இங்கே நிச்சயமாக திரும்பி வருவார்கள். பலர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போது அங்கே திரும்பிச் செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
கேரள பொருளாதாரத்தின் மீது அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
அது ஏற்படுத்துகின்ற தாக்கம் மிகப் பெரிதாக இருக்கும். ஒன்று, அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கும். அது அரசின் கருவூலத்திற்கு பெரும் சுமையாக இருக்கும். இரண்டு, இது பிராந்திய பொருளாதாரத்தின் மீது தலைகீழ் பெருக்க விளைவைக் கொண்டிருக்கும் பணப்பரிமாற்றங்களின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். 1980களின் பிற்பகுதியிலிருந்து இப்போது வரை, முப்பதாண்டுகளாக தேசிய சராசரியை விட வேகமாக கேரள பொருளாதாரம் வளர உதவி வந்த இந்த காரணிகளாலேயே, தனிநபர் வருமானத்தில் மிகக் குறைந்த தரவரிசைகளில் ஒன்றாக இருந்து வந்த கேரளா, இன்று தேசிய தனிநபர் வருமானத்தை விட 60 சதவீதம் அதிகமாக தனிநபர் வருமானத்தைக் கொண்டதாக மாறியிருப்பதை உங்களால் காண முடிகிறது. அந்த காட்சி மாறப் போகிறது, அல்லது மாறக்கூடும்.
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்ற, மாநிலங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் பிரச்சினையும் இப்போது இருக்கிறதே.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்களுக்கு வேலைகள் இல்லை. வருமானம் இல்லாததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். ஆனாலும் இந்தியாவின் இந்த மூலையிலிருந்து அவர்கள் வங்காளத்திற்குச் செல்ல முடியாது. ஆகவே, அவர்களை வீட்டிற்கு அனுப்ப முடியாது என்றாலும், மனிதநேயம் கொண்ட வாழ்க்கை, உணவு மற்றும் பலவற்றையும் அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறோம். கேரளாவைப் பொறுத்த வரை அவர்கள் எங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். ஐரோப்பாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் கேரளவாசிகள் வேலைக்குச் செல்கின்ற வரை, இன்னும் பல தொழிலாளர்கள் இங்கே வர வேண்டியிருக்கும். அவர்கள் ஒட்டுண்ணி அல்லது அதைப் போல ஏதோ ஒன்றாக இங்கே இருக்கவில்லை. கேரள அரசும் அவ்வாறு நினைக்கவில்லை. அவர்கள் கேரளாவைப் பொறுத்த வரையில், மிகவும் பயனுள்ள பாத்திரத்தை வகித்து வருகின்றனர்.
அவர்கள் பெரிய எண்ணிக்கையில் திரும்பி வருவார்கள் என்று நினைக்கிறீர்களா?
அவர்கள் திரும்பி வருவார்கள். இன்று கேரளாவில் இருந்து வருகின்ற ஊதிய விகிதங்கள் நீடிக்கும் வரையிலும், அவர்கள் திரும்பி வருவார்கள்.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான கேரளத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர். அது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?
வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பி வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் சில காலத்திற்கு அதிகமான அளவிலேயே இருக்கும். குறிப்பிட்ட அளவு ஊதியங்களுக்கு குறைவாக அவர்கள் இங்கே வேலை செய்ய மாட்டார்கள். அந்த அளவானது வளைகுடா நாடுகளில் அவர்களுக்கு – அனைவருக்கும் இல்லையென்றாலும், பெண்களைத் தவிர்த்து ஆண்களுக்கு – கிடைக்கின்ற வருவாயைக் குறிப்பதாக இருக்கிறது. பெண் தொழிலாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் மிகவும் மாறுபட்ட ஊதிய முறை இருப்பதால், ஆண் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே, மாநிலங்களுக்கு இடையில் புலம் பெயர்ந்து சென்றிருப்பவர்கள் இங்கே திரும்பி வர வேண்டும். ஆனால் கேரளாவில் கட்டுமான நடவடிக்கைகள் குறைந்துவிட்டால், அந்த வகையான தொழிலாளர்களுக்கான தேவை இருக்காது என்பதால், சென்ற அளவிற்கு அல்ல … என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அது தற்காலிகமானதுதான். அவர்கள் திரும்பி வருவார்கள்.
(தொடரும்)
நேர்காணல் – ஆர். கிருஷ்ணகுமார்
ஃப்ரண்ட்லைன் இதழ், 2020 மே 8, 2020 பக்கம் 24-28
தமிழில்
முனைவர் தா.சந்திரகுரு
1 Comment
View Comments