உங்களுக்கு லெனினை தெரியுமா? தெரியும் என நம்புகிறேன். லெனின் எப்படி இருப்பார் என்பது தெரியாமல், அவரது உருவப்படத்தை ஒருமுறைக்கூட பார்த்திராமல், ஆனால் “லெனின்” என்ற பெயருடன் நன்கு பரிட்சயம் கொண்ட சோவியத்தின் லட்சோப லட்சம் குடியானவர்கள் போலவே, நமது தமிழ்ச் சமுகத்தின் பெரும்பாலானோருக்கு லெனினைப்பற்றி தெரிந்திருக்காவிட்டாலும், லெனின் என்ற பெயரை கேள்விபட்டிருப்பார்கள்.

சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். லெனினை பற்றி அறிந்திருக்கும் நீங்கள் ஏதாவது சமயத்தில் “யார் இந்த லெனின்?, லெனின் என்றால் யார்? போன்ற கேள்விகளை எதிர்கொண்ட அனுபவம் உண்டா? அப்படி இருந்திருந்தால் நீங்கள் அவர்களுக்கு என்ன பதிலை அளித்திருப்பீர்கள்? நிச்சயமாக நீங்கள் “பதில்” அளித்திருக்க வாய்பில்லை என்றே நினைக்கிறேன். ஆம்,  நிச்சயமாக நீங்கள் “பதில்” அளித்திருக்க வாய்பில்லை. “பதில்களை” தான் அளித்திருப்பீர்கள்.

லெனின் யார் என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில், ஒரே வரியில், ஒரே பத்தியில், ஒரே பக்கத்தில், இவ்வளவு ஏன்? ஒரே புத்தகத்தில் நிறைவான பதிலை அளித்துவிட முடியுமா? “இவர்தான் லெனின்” என்று புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும், மனதுக்குள் எழுந்த இது போன்ற கேள்விகளுடன் தான் புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.

Image

லெனினைப் பற்றியும், லெனின் எழுதியானவற்றை அடிப்படையாக கொண்டும் இதுவரை ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, தற்பொழுதும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன, இனியும் எழுதப்படும். ஆனால் அவைகளுக்கு மத்தியில் இந்த புத்தகம் தனித்த இடத்தை பெற்றிருக்கும் என்றே தோன்றுகிறது.

லெனின் பற்றிய வழக்கமான புத்தகங்கள் போல இல்லை இது. அவரது முழுமையான வாழ்க்கை வரலாற்றை நமக்கு சொல்லவில்லை இது. லெனினது சிந்தனைகளை, தத்துவங்களை, கோட்பாடுகளை நமக்கு விளக்கவில்லை இது. ஆனால், அவரது வாழ்வில் பலராலும் பெரிதும் அறியப்படாத நெகிழ்ச்சியான, சுவாரஸ்யமான பல சம்பவங்களை நம்முன் காட்சிப் படுத்துகிறது இப்புத்தகம்.

லெனினோடு நேரடியாக, நெருங்கி பழகிய அவரது தோழர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் வெவ்வேறு காலங்களில் எழுதிய 17 கட்டுரைகள், மற்றும் புரட்சி வெற்றிபெற்ற ஆரம்ப காலத்தில் லெனினை ஓரிருமுறை நேரில் சந்தித்த சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் 5 பேர் தந்த குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரைகள் என மொத்தம் 22 கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

Image

லுனச்சார்ஸ்கிய் எழுதிய முதல் கட்டுரை மிகவும் சிறப்பானது. ஒரு இடத்தில் கூட “லெனின்” என்ற பெயரே வராமல், ஆனால் முழுக்க முழுக்க அவரைப்பற்றியே விவரிக்கும் கட்டுரை அது.  இது எப்படி சாத்தியம் என்று தோன்றுகிறதா? எனக்கும் அப்படிதான் இருந்தது. ஆனால், பிறகுதான் புரிந்தது. அந்த கட்டுரையில் வரும் வரிகளுக்கு, உருவாகங்களுக்கு அவரைத்தவிர வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும்?

பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மகத்தான சோவியத் சோசலிச புரட்சி வெற்றி பெற்றுவிட்ட  நவம்பர்-7 (அப்போது அக்டோபர் 25) அன்று இரவு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நள்ளிரவில் “நிலம் பற்றிய ஆணைப் பத்திரத்தை” லெனின் எழுதியதையும், மறுநாள் காலை “சோசலிஸ்ட் புரட்சியின் முதல் நாள் வாழ்த்துகள்” என்று துவங்கி “சோவியத்தில் நிலம் அனைத்தும் பூர்ஷ்வாக்களிடமிருந்து பறிக்கப்பட்டு குடிமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்…. இனி யார் நினைத்தாலும் இந்த ஆணையை ரத்து செய்யவோ, நிலங்களை மக்களிடமிருந்து பிடுங்கி நிலப்பிரபுக்களுக்கு திருப்பி கொடுக்கவோ முடியாது. இதுவே நமது சோசலிச புரட்சியின் மகத்தான வெற்றி” என்று பிரகடனப்படுத்துவதை போன்ச்-புருயேவிச் விவரிக்கும் பக்கங்கள் ஒரு நாவலின் கதை போல பிரமாண்டமாக நாம் கண்முன் தோன்றும்.

Image

இன்று உலக தொழிலாளர்கள் அனைவரையும் சகோதரர்களாக ஒருங்கிணைக்கும் தொப்புள்கொடியாக விளங்கும் தியாக செங்கொடியில் மிடுக்காக காட்சியளிக்கும் “அரிவாள் ☭ சுத்தியல்” இலட்சினை எப்படி சோவியத் ஒன்றியத்தின் இலட்சினையாக மாறியது? அதில் முதலில் இருந்த வாள் நீக்கப்பட வேண்டும் என்பதற்கு லெனின் தந்த விளக்கம் என்ன என்பதை அவர் விளக்கும் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமானது.

1918ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மாலை ஒரு தானிய பரிவர்த்தனை கூடத்தில் நடந்த பொதுக்கூட்டதில் பேசிவிட்டு வாகனத்தின் ஏறப்போகும் போது, எதிர்புரட்சி சக்திகளின் சதி திட்டத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட இளம் பெண் ஒருத்தி லெனினை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கியால் அவரது கையிலும், கழுத்திலும் சுட்டுவிட, பிறகு கிராம்ளின் மாளிகைக்கு அவசர அவசரமாக அவர் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தபடுவதை விவரிக்குக்கும் கட்டுரையை வாசிக்கும்போது, இதயம் கனத்துவிடுகிறது. கட்டுரை முடிவில் வரும்,

“…சில மாதங்களுக்கு பிறகு பூரண உடல் நலம் பெற்று அதே தானிய கூடத்தில் மிண்டும் உரையாற்றினார்.

“உங்கள் சௌக்கியம் எப்படி, தோழர் லெனின்? என்பதே அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி.

“மிக நன்றாயிருக்கிறது, நன்றி என்று புன்னகையுடன் பதிலளித்தார் லெனின்.

என்கிற வரிகளை வாசிக்கும்போது, அதே புன்னகையை நம் உதடுகளிலும் வரவழைக்கிறார் அந்த விசித்திர மனிதர் லெனின்.

Image

ஆகச்சிறந்த ரஷ்ய இலக்கியவாதியும், லெனினது நெருங்கிய நண்பருமான மக்சிம் கார்க்கி லெனினுடனான தனது அனுபவங்களை விவரிக்கும் கட்டுரை லெனின் பற்றி அளப்பரிய தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கட்டுரைகள் அனைத்துமே, உள்நாட்டு போர் – எதிர்புரட்சி நடைபெற்றபோது, வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடிய போது, எரிபொருள் பற்றாக்குறையால் மினுற்பத்தியில் தடை ஏற்பட்டு ஆலைகள் இயங்காமல், தொழிலாளர்கள் பலர் இக்கட்டான நிலையில் இருந்தபோது, என  நெருக்கடியான பல சூழல்களில், லெனின் எவ்வாறு செயலாற்றினார் என்பதை விவரிக்கின்றன.

ஒரு அடுப்பு செய்யும் தொழிலாளி தன்னை திட்டும்போது, ஒரு நிழற்பட கலைஞன் தன்னை படம்பிடிக்க விழையும்போது, தனது கோட்டில் பட்டன் இல்லாததை அறிந்த ஒரு பெண் தொழிலாளி, தனது கோட்டில் இருந்த பட்டனை எடுத்து லெனினது கோட்டில் தைத்து கொடுத்த போது, தன்னை சந்திக்க வந்த விவசாயி ஒருவர் கொடுத்த கொழுப்பு தடவிய ரொட்டி துண்டை சாப்பிடும்போது என வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு மனநிலைகளில் எப்படியெல்லாம் நடந்துகொண்டார் லெனின்? என்பதையெல்லாம் அறியும்போது வெவ்வேறு விதமான லெனினை நாம் காணமுடியும்.

இந்த கட்டுரைகள் ஒவ்வொன்றும் லெனினுடன் உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும். இவற்றை வாசிக்கும்போதே, ஆர்த்மார்த்தமாக லெனின் உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்வார். அதை நீங்கள் தவிர்க்க முடியாது. நான் அந்த நெருக்கத்தை சொல்லவில்லை.  இந்த கட்டுரைகளின் வாயிலாக லெனினை மிக நெருக்கத்திலிருந்து நீங்கள் கவனிக்க முடியும். எந்த அளவுக்கு நெருக்கம்? லெனினது சின்னஞ்சிறு கண்களில் தெரியும் பிரகாசமான ஒளியை நீங்கள் கண்கூடாக காண முடியும். அவர் பேசும்போது அடிக்கடி விரலை சொடுக்கும் மெல்லிய ஒளியை உங்களால் கேட்க முடியும். அவரது புருவங்கள் எப்படி வளைந்து நெளிக்கின்றன என்பதை நீங்கள் உற்று நோக்க முடியும். அந்த அளவுக்கு நெருக்கம்.

Image

லெனினோடு உற்ற தோழர்களாய் நெருங்கி பழகியவர்கள், லெனினை ஓரிரு முறைகளே நேரில் சந்தித்த சாதாரண தொழிலாளிகள், ஒருமுறை கூட லெனினை பார்திராத, ஆனால் லெனின் என்ற பெயரின் மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் கொண்டுள்ள சாதாரண சோவியத் பிரஜைகள் என  ஒவ்வொருவரும், லெனினை பலவிதமாக விவரிக்கிறார்களே…

ஒருவர் அவரை “தொழிலாளி வர்க்க விடுதலையின் சின்னம்” என்கிறார். இன்னொருவர் அவரை எதிர்காலம் குறித்த “தீர்க்கதரிசி” என்கிறார். மற்றொருவரோ இதுகாறும் மனிதகுலம் கண்டதிலேயே “தலைசிறந்த மகத்தான மாமனிதர்” என்கிறார். பாட்டாளி வர்க்கத்தின் படைத்தளபதி, தலைசிறந்த மார்க்சியவாதி, மகத்தான சோசலிச புரட்சியாளர், மாமேதை, மனித மாண்புகளின் மீட்பர், சாதாரண பிரஜைகளையும் சரிக்கு சமமாக நடத்தும் சமத்துவ “தலைவர்”,

பல்வேறு பிரச்சணைகளுக்கு தீர்வு கண்டு கட்சியையும், புரட்சியையும், சோவியத் அரசாங்கத்தையும் காட்டிக் காத்ததால் “தலைமை பண்புக்கான இலக்கணம்”, தொழிலாளர்களோடு தொழிற்சாலைகளில் சரிக்கு சமமாக பணியாற்றும் “தொழிலாளர்களின் தோழன்”, பலநூறு ஆண்டுகளாக மக்களை அடிமைபடுத்தி ஆண்டு வந்த தங்களை அந்த மக்களைக்கொண்டே ஓட ஓட விரட்டியதால், ஜார் மன்னனின் வம்சத்தினருக்கும், பெரும் பூர்ஷ்வாக்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும்,  முதலாளிகளுக்கும் “சிம்மசொப்பனம்”, தனது வாழ்நாளில் அநேக நேரத்தை பல்லாயிரம் புத்தகங்க்களை வாசிப்பதிலும், 22,000 பக்கங்களை எழுதுவதிலும் செலவிட்ட வாசகர், எழுத்தாளர்….

என இன்னும் எண்ணெவெல்லாம் சொல்லிக்கொண்டே போக முடியும் அவரைப்பற்றி? பல பரிமாணங்களைக் கொண்ட விசித்திர மாமனிதர் லெனின். எனவேதான் ஆரம்பத்திலேயே சொன்னேன். “யார் லெனின்? என்ற கேள்விக்கு நிச்சயமாக நீங்கள் பதில் அளித்திருக்க வாய்பில்லை. “பதில்களை தான் அளித்திருப்பீர்கள். 

இந்த புத்தகத்தை வாசிக்கும்போது, ஏற்கனவே லெனின் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் நீங்கள் அறிந்திருந்தால், “அடடே… இப்படியெல்லாமா நடந்துகொண்டார் லெனின்? இது தெரியாமல் போய்விட்டதே நமக்கு.” என்று உங்களுக்கு தோன்றலாம்.

அல்லது, லெனின் பற்றி அறியாதவர்களாக நீங்கள் இருந்தால், இதை வாசித்த பிறகு நிச்சயமாக அவரது வரலாற்றை தேடி படிக்க முற்படுர்வீர்கள்.

புத்தகத்தின் பெயர் : இவர்தான் லெனின் (கட்டுரைகளின் தொகுப்பு)

பக்கங்கள் : 216

பதிப்பகம் : சிந்தன் புக்ஸ்

விலை : ரூ.140

Image

தோழமையுடன்…

க.வி.ஸ்ரீபத்,

இந்திய மாணவர் சங்கம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *