மேற்கு வங்கத்தில் இது இந்துத்வா அரசியலின் துவக்கம் தான், முடிவல்ல – பத்ரி நாராயண் நேர்காணல் | தமிழில்: செ. நடேசன்ஒரே மாதிரியான, நடைமுறை மெய்ம்மைகளுக்கு ஒத்துவராத முறையில் ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தாக்குவது வளர்ந்து வரும் அதன் மேலாதிக்கத்தை எதிர் கொள்ள உதவாது என ஆர்.எஸ்.எஸ்.ஸின் எழுச்சியை.மிக நுணுக்கமாக ஆய்வு செய்து அண்மையில் வெளிவந்துள்ள ‘Republic of Hindutva’ என்ற புதிய நூலில் தமது கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ள எழுத்தாளர் பத்ரி நாராயண் கோவிட் 19ன் போது இந்துத்வாவின் எதிர்காலம் பற்றியும், இன்றைக்கு அந்த அமைப்பை விரிவடையச் செய்ய சங் எதைச்செய்கிறது: அது எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பதைப் பற்றியும் வசுதா வேணுகோபாலுடன் பேசுகிறார். கடந்த காலத்தில் பிஎஸ்பி மற்றும் கன்ஷிராம் இயக்கத்தின் வரலாற்று நடப்புக்களை பதிவு செய்துள்ள நாராயண், உ.பி.யில் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்கொள்வதில் பிஎஸ்பி-க்கு இருந்த குறைபாடுகளையும் பற்றிப் பேசுகிறார். இதோ அவற்றின் சுருக்கம்:

உங்களுடைய புத்தகத்தில், சமுதாயத்தில் மிகவும் முக்கியத்துவம் குறைந்த தசுதா, முசாஹர்கள், சபேராக்கள் மற்றும் மதக்குழுக்களான கபீர்பந்திகள், ரவிதஸியாக்கள் போன்ற சமுதாயப் பிரிவினர் மத்தியில் அவர்களுக்கு சமுதாய, கலாச்சார அங்கீகாரத்தை அளிக்க ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப்பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அடையாளங்களை வடிவமைப்பதில் மதம் என்ற அம்சத்தை மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் பலவும் புறக்கணித்துள்ளனவா?

ஆர்எஸ்எஸ் பல்வேறு தலித் சமுதாயங்களுடன் அவர்களது உள்ளார்ந்த தேடலான கௌரவம் மற்றும் வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதத்தில் வேலை செய்துவருகிறது. கௌரவத்துக்கான தேவையை நிறைவேற்றும் வகையில், இந்துத்வா கட்டமைத்த வரலாற்று அடையாளம் போன்ற பல்வேறு அடையாள ஆதாரங்களைப் பயன்படுத்தி, அவர்களது அடையாளத்தைச் செதுக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். மேலும், சமுதாயத்தில் அவர்களுக்கு மதத்துக்கான ’வெளி’யை அளிக்கிறார்கள். இந்துத்வா கட்டமைப்புக்குள் அவர்களது வரலாற்றைப் புத்தாக்கம் செய்வதுடன், தலித் சமுதாயத்தின் தலைவர்களுக்கு மரியாதை செலுத்த பல்வேறு சமூக-கலாச்சார நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறார்கள். தலித் சமுதாயத்தின் தலைவர்களான சுஹேல்தேவ், ராஜா பால்தேவ், மற்றும் பலரைக் கொண்டாட அவர்களது, ஜென்ம ஜெயந்திகளுக்கு ஏற்பாடுகள் செய்வது, புத்தர், கபீர், ரவிதாசரை வழிபட அவர்களது பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது ஆகியவற்றையும் செய்கிறார்கள். பி. ஆர். அம்பேத்கர் நினைவுகளைக் கூறுவது, நினைவுகொள்வது, கொண்டாடுவது அகியவற்றின் மூலம் தலித் சமுதாயங்களை இந்துத்வா பிடிக்குள் உள்ளடக்குவது சங்-கின் முக்கியமான திட்டங்களில் ஒன்று. ஆர்எஸ்எஸ் மற்றும் சங் அமைப்பால் உற்சாகமடைந்துள்ள அமைப்புக்கள் மிகவும் ஒதுக்கப்பட்ட சமுதாயங்கள் அவர்களது சாதி அடிப்படையிலான தெய்வங்களுக்கான கோவில்களை குடியிருப்பு முகப்புகளிலும், கிராமங்களிலும் கட்ட ஆதரவு அளிக்கின்றன. பள்ளிகள், மருத்துவமனைகளைத் திறப்பது, சுகாதார முகாம்களுக்கு ஏற்பாடு செய்வது போன்ற பிற சமுதாய ஆதரவுத் திட்டங்கள் மூலம் சங்பரிவாரங்கள் ஒதுக்கப்பட்ட சமுதாயங்களின் வளர்ச்சிக்கான அவர்களது விருப்பங்களுக்கு எதிர்வினையாற்றுகின்றன. மதசார்பின்மை என்ற கட்டமைப்பின்கீழ் பெரும்பாலும் பணியாற்றுகின்ற எதிரணியில் உள்ள பிற அரசியல் கட்சிகள் மத அடையாளங்களையும், கௌரவத்தையும் பெற அடிபணிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாயங்களுக்குள் வலுவாக மறைந்துள்ள பெருவிருப்பத்தை புரிந்து கொள்ளத் தவறியுள்ளன. அவற்றினுடைய பிரச்சாரங்கள் பெரும்பாலும் சமூக-பொருளாதார அடையாளம் மற்றும் தரம் போன்ற பிரச்சனைகள் தொடர்பானவைகளாகவே இருக்கின்றன.மேற்குவங்கத்தின் சூழலில் இந்துத்வா மற்றும் வளர்ச்சிக்கான உறுதிமொழி ஆகியவற்றை இணைத்துக்கொண்ட சங்பரிவாரங்களின் இந்துவகைப் பிரச்சாரங்கள் பாஜகவுக்கு எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் பயன்களைத் தர ஏன் தவறிவிட்டன?

மேற்குவங்கத்தில் இது இந்துத்வா அரசியலின் துவக்கம் தான்: முடிவல்ல என்பதைப் பாருங்கள். நான் கூறியதைப்போல தேர்தல் செயல்பாடுகள் பல விஷயங்களைச் சார்ந்திருக்கின்றன: ஆனால், சங்பரிவாரங்களால் வழிகாட்டப் படும் இந்துத்வா விழிப்புணர்வு விரிவாக்கத்தின் ஒரு சுட்டிக்காட்டல் என்று கருதப்படலாம் அல்லது கருதப்படாமலும் இருக்கலாம். தேர்தல் அரசியல் அதன்சுட்டிக்காட்டல்களில் ஒன்றாக மட்டுமே கருதப்படவேண்டும்: எல்லா விஷயங்களையும் சுட்டிக்காட்டுவதாகக் கருதப்படக்கூடாது. இனி வரும் நாட்களில் வங்க அரசியல் இந்துத்வா மற்றும் மத்திய – இடது ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கிடையேயான கூர்மையான போட்டியாக உருவாகப்போகிறது.

சமீப ஆண்டுகளில் அம்பேத்கரியர்கள் ஆர்எஸ்எஸ்-ஐ விமர்சிப்பவர்களில் மிகப்பெரிய விமர்சகர்களாக உருவாகியிருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த சவாலை ஆர்எஸ்எஸ் எப்படிப் பார்க்கிறது? ஏனென்றால் குறிப்பாக பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ஸும் முடிந்த அளவுக்கு பி.ஆர்.அம்பேத்கரை உயர்த்திப்பிடிக்க முயற்சித்தன.

சங் தனது பரப்புரையில் அம்பேத்கரை உள்ளடக்கிக்கொண்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச்செல்லும் மூன்றுவகையான உத்திகளில் வேலை செய்கிறது – எல்லாவற்றுக்கும் முதலில், அவரை இந்த தேசத்தின் மகாபுருஷர்களில் ஒருவராக முன்நிறுத்துகிறது. இரண்டாவதாக, அவருக்கு நினைவு சின்னம் அமைக்கும் திட்டங்களில் இந்துமதம் பற்றிய அம்பேத்கரின் விமர்சனங்களுக்குத் திரும்பச்செல்லாமலும், நினைவுபடுத்தாமலும் அவரை வழிபடக்கூடிய மாபெரும் தலைவராக ஆக்குகிறது. மூன்றாவதாக, அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட சாதிய அமைப்பு முறையின் கேடுகளை ஏற்றுக்கொள்கிறது: மேலும் விரிவடைந்த இந்துத்வா கட்டமைப்புக்குள் ஒதுக்கப்பட்டசமுதாயங்களை கொண்டுவர முயற்சிக்கிறது. விரிவாக்குவதில், அது சமாஜிக் சம்ராஷ்ட்ரா மடிப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதால் அம்பேத்கரியர்களின் விமர்சனங்களை சங் பெருமளவில் புறக்கணிக்கிறது.

பிஎஸ்பி மற்றும் கன்ஷிராம் இயக்கத்தின் எழுச்சியை யாரோ ஒருவர் கூட காலக்கிரமப்படி தொகுத்தது போல, தலித்துகளில் ஒரு பிரிவினர் பாஜகவுக்கு மாறிச்செல்ல வைத்ததற்கு பிஎஸ்பி செய்த தவறுகள் என்ன?

இது மிகவும் ஆர்வமூட்டக்கூடிய கேள்வி. உண்மையில் இந்தக்கேள்வி, இந்த நூலை எழுத நான் எங்கிருந்து துவங்கினேனோ, அங்கிருந்து விலகிச் சென்றதைக் குறிக்கிறது. தொண்ணூறுகளில் இந்தி பேசும் இதயப்பகுதியின் அரசியல் காட்சிகளில் இரண்டு இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததை நீங்கள் நினைவு கூரலாம். ஒன்று கன்ஷிராம் மாயாவதியால் தலைமை தாங்கப்பட்ட பகுஜன் இயக்கம். இரண்டாவது ராம ஜென்ம பூமியை மையமாகக் கொண்ட இந்துத்வா இயக்கம். இந்துத்வா இயக்கம் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது: பகுஜன் இயக்கம் சிதைந்துகொண்டிருக்கிறது. ஏன்? உண்மையில், கன்ஷிராம்ஜியால் கண்டுபிடிக்கப்பட்டு, படிப்படியாக வளர்ச்சி பெற்ற தலித்-பகுஜன் சமுதாயத்தின் அடையாள ஆதாரவளங்களான கதாநாயகர்கள், வரலாறுகள், மாபெரும் தலைவர்கள் போன்ற பெரும்பாலான அடையாளங்கள் சங் பரிவாரங்களால் அவர்களுக்கே உரிய அவர்களின் சொந்த வழிமுறைகளில் மறு பரப்புரைகள் செய்யப்பட்டு வந்தன. ஆகையால் அவர்கள் பகுஜன் இயக்கத்தின் அடித்தளமாக இருந்த குறியீட்டு அடையாள அதிகாரங்களை வெற்றிகரமாக தங்களுடையதாக எடுத்துக்கொண்டார்கள். கன்ஷிராமால் கண்டுபிடிக்கப்பட்ட நீண்ட கால குறியீட்டு அடையாள அதிகாரத் தலைநகரத்தை மாயாவதியால் தக்க வைத்துக்கொள்ள முடியாததால் இந்தி பேசும் இதயப்பகுதியில் பகுஜன் அரசியல் மெல்லமெல்ல பலவீனம் அடைந்தது.நீங்கள் உங்களுடைய நூலில், எதிர் அணி ஓர் ஆர்எஸ்எஸ்-ஐப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது, அது நீண்டகாலமாக நடப்பில் இல்லை: அந்த அமைப்பு ஒட்டுமொத்தமாக படிப்படியாக வளர்ச்சி பெற்று ஒரு புதிய நிறுவனமாக தோன்றுகிறது என்று கூறுகிறீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் செய்த மிகவும் முனைப்பாகத் தோன்றுகின்ற மாற்றங்கள் என்ன?

ஆர்எஸ்எஸ் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது, மேலும் அதன் செல்வாக்கோடு யார் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ளவில்லை. ஒரே மாதிரியான, நடைமுறை மெய்ம்மைகளுக்கு ஒத்துவராத முறையில் ஆர்.எஸ்.எஸ்-ஸைத் தாக்குவது வளர்ந்து வரும் அதன் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள உங்களுக்கு உதவப் போவதில்லை. சங் அமைப்பு சிக்கலான சமூகக் குழுக்கள் என்று முன் நிறுத்தப்பட்ட சமுதாயங்களையும், பல்வேறு சமூகக்குழுக்களையும் இந்துத்வா கட்டமைப்புக்குள் கொண்டுவர பலவகையான நெகிழ்வுத்தன்மை கொண்ட செயல்பாடுகளைப் பெற்றிருப்பதை நான் கண்டறிந்தேன். சங் அமைப்பு தொடர்ச்சியாக நவீனத்தன்மைக்கும், சமகால சமூக-அரசியல் பிரச்சனைகளுக்கும் எதிர்வினையாற்றுவதையும் ஒருவரால் காணமுடியும். கோவிட்-19-ன் போது பல்வேறு பெருநகரங்களிலும் இணையவழி ஷாகாக் களை ஒருங்கிணைப்பதும், சமூகச்செயல்பாடுகளில் வேறுபல நவீன வடிவங்களை சங் அமைப்பு மேற்கொண்டு வருவதும் தெளிவாகத் தெரிகிறது.

ஆர்எஸ்எஸ் அதனுடைய கலாச்சார வேறூன்றல், பிரச்சாரக்குகளின் எளிமையான பழக்க வழக்கங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட குழுக்களைச் சென்றடையக்கூடிய அந்த அமைப்பின் ஆற்றல் காரணமாக மக்களை அணிதிரட்ட முடிகிறது என்று நீங்கள் வாதிடுகிறீர்கள். ஆனால், குறிப்பிடத்தக்க வகையில் ஆர்எஸ்எஸ்-ன் இருப்பு உள்ள கேரளா, புதுடெல்லி அல்லது மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலும் கூட பெரும் எண்ணிக்கையில் பாஜகவுக்கு வாக்குகள் அளிக்கப்படவில்லையே: இது ஏன்?

சங் அமைப்பு விழிப்புணர்வை, அதற்கேற்ற சூழ்நிலைகளை உருவாக்குகிறது: அவற்றின் மீதுதான் படிப்படியாக அரசியல் வளர்ச்சியடைகிறது. விழிப்புணர்விலிருந்து அரசியலுக்கு மாறிச்செல்வது மிகவும் கடினமானது. அது ஒரு மிகவும் சிக்கலான வளர்ச்சிப்போக்கு, வட்டார அரசியல் மரபுகள், உள்ளூர் தலைவர்களின் திறன், உள்ளூர் அரசியல் வரலாறு ஆகியவை இதில் ஒரு பங்கு வகிக்கின்றன. விழிப்புணர்வு, அரசியலில் மேம்பட்ட மாற்றத்துக்கு உள்ளாக நீண்டகாலத்தை எடுத்துக்கொள்கிறது.

நரேந்திரமோடி போன்ற ஒரு பிரபலமான தலைவர் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், ஆர்எஸ்எஸ்-ஐ ஏற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறதா?

அது சாத்தியம் தான். பாஜக அதிகாரத்தில் இருப்பதாலும், நரேந்திரமோடி போன்ற தலைவர்கள் ஊடக வெளிச்சம் பெறுவதாலும், அவர்களது வேலைகளில் சங் அமைப்பை ஆதரிப்பதாலும் அது சாத்தியமே: ஆனால், பல ஆண்டுகளாகவே ஊடகங்களின் அதிகமான கவனத்தைப் பெறாமலேயே சங் அமைப்பு தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறது.

திருணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இன்னும் காங்கிரஸ் போன்ற பல அரசியல் கட்சிகளின் மென்மையான இந்துத்வா அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

இந்துத்வா அணி திரட்டல் எல்லா அரசியல் கட்சிகளையும், இந்துத்வா தாங்கிய உத்திகளுக்கும், சொல்லாட்சிக்கும் பதிலளிக்கும் எதிர் வினையை ஆற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நான் கருதுகிறேன். அதனால் தான் திருணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், இந்து சமூகக்குழுக்கள் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு பக்கமாகக் குவிந்து விடுவதைத் தடுக்க, அவர்களுடைய இந்து அடையாளங்களை உறுதிப்படுத்துகிறார்கள்.எஸ்.சி/எஸ்.டி/ஓ.பி.சி குழுக்களில் பலவும் பிராமணிய மதிப்பியல் அமைப்பு முறைகளில் ஆழ்ந்த சந்தேகம் கொண்டவர்களாகவும், அவற்றை நிராகரிப்பவர்களாகவும், அவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தும்கூட, ஆர்எஸ்எஸ் தனது பிடியை மேல்சாதி சமூகக்குழுக்களிடம் பாதுகாப்பாக வைத்திருக்கும்போதும் கூட ஆர்எஸ்எஸ் அந்தக்குழுக்களிடம் எவ்வாறு வெற்றிகரமாகச் சென்று சேர முடிகிறது? ஒன்றுக்கொன்று எதிரான நலன்களைக் கொண்ட குழுக்கள் மேலோங்கி நிற்பது ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளில் சிக்கலை ஏற்படுத்தாதா?

தலித்துகள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாயங்களைப்பற்றிய பார்வை உண்மையாக இருக்கலாம்: ஏனென்றால், அவர்களுடைய நுண்நோக்கிக் கருவி இல்லாமல் பார்க்க முடியாத மிக நுண்மையான சிறுபான்மையினர் இந்த சமுதாயத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மேட்டுக்குடியினராக உள்ளார்கள். ஆனால், கிராமப்புறப்பகுதிகளில் உள்ள தலித் சமுதாயத்தின் பெரும் பிரிவினர் நீங்கள் சொல்லும் ‘பிராமணிய’ மதிப்பியல்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். தலித்துகளும், ஒதுக்கப்பட்டவர்களும் ஒருபுறம் இந்த பிராமணிய மதிப்பியல்களால் சௌகரியமற்றவர்களாக உணர்கிறார்கள்: மறுபுறம், அந்த மதிப்பியல்களை நோக்கி ஈர்க்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சங் அமைப்பு அதன் நடவடிக்கைகளில் இந்துத்வாவை நடைமுறை மெய்ம்மைகளின் உணர்வில் மிகவும் மாற்றியமைத்துக்கொள்கிறது. அதற்கு புகழ்பெற்ற வரவேற்பை அளிக்க அவர்களைத் தயார் செய்கிறது. சங் அமைப்பின் சமுதாயத்திட்டங்களும், அவர்களுடைய பொருத்தமான விளக்க உரைகளும் ஒதுக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினரை சங் அமைப்பால் விவரிக்கப்படும் இந்துத்வாவை நோக்கி ஈர்க்கின்றன. சங் அமைப்பு இந்திய சமுதாயத்தின் புரிந்துகொள்ள மிகவும் சிக்கலான கூறுகளை நன்கு அறிந்திருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை உள்ளடக்காமல் “சமக்ர இந்துத்வா’வை உருவாக்கும் தங்கள் நோக்கம் முழுமை அடையாது என்பதை அறிந்திருக்கிறார்கள். எனவே அவர்களது நோக்கம் இந்த சமுதாயங்களிடையே சென்று சேர வேண்டியுள்ளது: மேலும் அவர்கள் வலுவாக சென்றடைகிறார்கள்.

ஆர்எஸ்எஸ்-ன் வலிமை பிறவற்றைத் தனதாக்கிக்கொள்வதிலும், உள்ளடக்கிக் கொள்வதிலும் இருக்கிறது என்று நீங்கள் எழுதுகிறீர்கள். சமூகக் குழுக்களையும், சமுதாயங்களின் வேறுபட்ட மரபுகளையும் இணைத்துக்கொள்வது அவ்வப்போது மிகவும் ஆதிக்கம் செலுத்தும் இந்து மரபுகளுக்குள் அவற்றை உட்படுத்தி விடுகிறது. அப்படி இருக்குமானால், அது அந்த சமுதாயங்களின் அபிலாசைகளின் உண்மையான பிரதிநிதியாக இருக்கமுடியுமா?

எந்த ஒரு நடவடிக்கை சார்ந்த இலக்கும் அணி திரட்டல் என்ற வடிவத்தில் சமுதாயங்களை ஒருங்கிணைக்குமானால், அது அந்த குறிப்பிட்ட வளர்ச்சிப் போக்கில் மட்டும் நீடித்திருக்காது. அந்த சமுதயங்கள் எவ்வாறு, எதற்காக உள்ளடங்கியிருக்கும் நிபந்தனைகளை ஒத்துக்கொண்டன என்பதைப் பொருத்தே அவை நீடிக்கும்.

அம்பேத்கர் தலித்துகளுக்குக் கொடுத்த முக்கியமான அரசியல் கருவி புத்த மதம்: ஆனால் இன்று மஹாராஷ்ட்ராவைத் தவிர வேறு எங்கும் திரளான அளவில் மக்கள் புத்த மதத்துக்கு மாறுவதற்கான அறைகூவல்கள் இல்லை. அது ஏன்?

இந்து மதத்துக்கான ஒரு மாற்றாகவே புத்த மதம் பாபாசாஹேப் அம்பேத்கரால் முன்மொழியப்பட்டது.ஆனால் புத்த மதத்தால் இந்து மதத்துக்கு உண்மையான ஒரு மாற்றாக செயல்பட முடியவில்லை. புத்த மதத்திலும் கூட பெண்களின் நிலை, சடங்கு சம்பிரதாயங்களின் ஆதிக்கம் ஆகியவை தீவிரமான மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. இரண்டாவதாக, புத்தமதத்தின் வளர்ச்சிப் போக்குக்கு இந்துத்வாவின் எழுச்சியும்கூட ஒரு தடையாகிவிட்டது. இந்தியாவில் தலித் – ஒதுக்கப்பட்ட சமுதாயங்களின் ஒரு பிரிவினரிடையே இந்துத்வா அடையாளத்தை உறுதிப்படுத்தும் போக்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.இந்துத்வாவும், ஜனநாயக மதிப்பியல்களும் அவ்வப்போது ஒன்றோடு ஒன்று முரண்பட்டுக்கொள்கின்றன என விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்து ஒருங்கிணைப்பு முஸ்லீம்களை வேறுபடுத்துதலாக நடக்கிறது என்ற ஒரு நம்பிக்கையும் கூட இங்கே இருக்கிறது. உங்களைப் பொருத்த வரை, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறதா?

முஸ்லீம் சமுதாயங்களிடையே ஓர் ஆழமான களப்பணியை நான் மேற்கொள்ளவில்லை: அதை இந்த நூலை எழுதுபோது ஓர் இடைவெளியாக நான் உணர்ந்தேன். உண்மையில் ஜனநாயகம் சமூகத்தின் சமூக-அரசியல் நீரோட்டத்தை மாற்றியமைக்கும் மகத்தான வலிமையை உட்கொண்டிருக் கிறது. ஆர்எஸ்எஸ்-ம்கூட இந்திய ஜனநாயகத்துக்கு பதிலளிக்கவேண்டி யிருக்கிறது.எனவே விரும்பியோ அல்லது விரும்பாமலோ சங்அமைப்பு தனது அணிதிரட்டல் நடவடிக்கைகளின் வளர்ச்சிப்போக்கில் ஜனநாயகத்தின் செல்வாக்கை உட்கிரகித்துக்கொள்ளவேண்டியுள்ளது.

கோவிட் 19 காலத்திலும், அதற்குப்பிந்தைய உயிரிழப்புக்கள், வாழ்வாதார இழப்புக்களுக்குப் பிறகும் ஆர்எஸ்எஸ் தனது வேலைசெய்யும் பாணியை மாற்றிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? ஏனென்றால், குறிப்பாக பலருக்கும் இந்துத்வா இப்போது உச்சபட்ச அக்கறையாக இல்லை.

உண்மையில் கோவிட் 19, ஒருவகையில் இந்துத்வாவை பொதுவெளியில் முன்வைக்கும் சங்பரிவாரங்களின் திட்டத்தை தொல்லைக்குள்ளாக்கிவிட்டது இரண்டு காரணங்களால். முதலாவதாக, அது ‘சமூகவியல்’ என்ற நமது சிந்தனையையே மாற்றிவிட்டது சங்அமைப்பின் பிரச்சாரக்குகளின் மென்மை யான நகர்வுகளுக்கு அது தடைகளை உருவாக்கிவிட்டது. ஆனால் இந்த அவசரநிலை காலத்திலும்கூட கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாம்கள், உணவு மற்றும் மருந்துப்பைகள் வழங்குவதை ஏற்பாடுசெய்வது என சங் அமைப்பு தனது சொந்த வழிமுறையில் தனது வேலைகளைத் தொடந்து செய்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களின் சிந்தனையில், இதயத்தில் ஒரு சிறு இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் .எனவே இயல்புநிலை மீண்டும் திரும்பும்போது அவர்களது நீண்டகால திட்டமான இந்தியாவில் பொதுவெளியில் இந்துத்வாவை உருவாக்குவதை அவர்கள் மீண்டும் துவக்கக்கூடும்.

’எக்னாமிக் டைம்ஸ்’ வசுதா வேணுகோபால்
நன்றி: த எகனாமிக் டைம்ஸ் / அரசியல் மின் இதழ் நாள்: 7.6.2021
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/it-is-the-beginning-of-hindutva-politics-in-west-bengal-not-the-end-author-badri-narayan/articleshow/83284896.cms