மூச்சுக்காற்றை போன்று தமிழை உட்பிடித்து அதை கவிமலர்களாக பிரசவிக்கும் கவிஞர் தியாரூவின் படைப்புலகத்தில், மலர்ந்த மற்றுமோர் மொட்டு தான் *கைகளுக்குள் வைகறை வானம்*..
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
கவிஞர் தியாரூ, தனது தனித்துவமான நடையாலும், ஆழமான கருத்துக்களாலும் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்..
கண்களில் கவிதைகள் தோன்றுவதுண்டு ஆனால் கண்களையே கவிதையாக மாற்றிச் செல்லும் உணர்வை விதைக்கும் படைப்பு இது..
சமூகம், நட்பு, நம்பிக்கை, கோபம், தன்னுணர்வு வெளிப்பாடு, போன்று தான் சுவாசிக்கும் காற்றுக்கு உயிர் கொடுத்து கவிதை நயத்துடன், வார்த்தைகளால் குதிபோட்டு கவிதையாக புனைந்துள்ளார் ஆசிரியர் என்பது பாராட்டத்தக்கது..
விடியல்களை பிரசவிக்கும் வைகறை வானம் வகுக்கப்பட்டுள்ளது எட்டு பிரிவுகளாய் அதில் எட்டாவது பகுதியான, *சிறு தூண்டில்களும் சுறா மீன்களும்* அளவில் சிறிதெனினும் கவியில் பெரிதாய் பளிச்சிடுகிறது..
இதில் நான் ரசித்து முகர்ந்த கவிதை மலர்கள் சிலவற்றை தூவிச்செல்கிறேன்,
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
கிறுக்கல்கள் கூட
கவிதையாகலாம்!
திருக்கல்லும் நாளை
சிலையாய் மாறலாம்!
விழுகின்ற மரமும்
வீணையாகலாம்!
அழுகின்ற மேகம்
மழையை தூவலாம்!
தாயின் தாலாட்டில்
தெய்வம் தூங்கலாம்!
சுடுமணல் வெளியில்
சுனைகள் தோன்றலாம்!
மரணமும் என்னை
மறந்து போகலாம்!
மறுபடி நானே
மழலையாகலாம்!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
ஆட்டுக்காலும்
மாட்டுத்தோலும்
சந்தையில் நல்ல
விலை போகும் – அட
காட்டுத்தேனும்
கூடை மீனும்
கடைத்தெருவில்
தொகையாகும்
மானிடக் காலும்
மேனியின் தோலும்
மூன்று காசு
விலைபெறுமா- இதை
எண்ணி பார்த்தால்
மனதுக்குள்ளே
மமதை என்னும்
பிழை வருமா!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
முள் தைத்தால் பிடுங்கி எறி!
மலர் தைத்தால் வாசம் அறி!
சொல் தைத்தால் தூக்கி எறி!
சுகம் தைத்தால் மனதை விரி!
வில் தைத்தால் பகையை அறி!
வினை தைத்தால் செயலை அறி!
கல்தைத்தால் பாதை அறி!
கணம்கணமாய் வாழ்வை அறி!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
கருவாட்டு முள்ளுக்கும்
கடிகார முள்ளுக்கும்
உறவுமுறை ஏதுமில்லை
தெருவோர வெறுங்கல்லும்
திருக்கோயில் படிக்கல்லும்
இருவேறு நிலைதானே!
பனம்பாலும் பசும்பாலும்
இனத்தாலே வேறெனினும்
குணத்தாலே மேன்மைதான்
மனமென்ற மலரொன்று
மனம் வீசும் எழிலோடு
தினம் தோறும் மலராதோ!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
அஞ்சி கிடந்தால் அணிலும் கூட
சிங்கம் போல உன்னை மிரட்டும்- நீ
கெஞ்சி குழைந்தால் குரங்கும் கூட
ஓட ஓட உன்னை விரட்டும்!
இதுதான் உலகம் புரிந்து கொண்டால்
இதயத்துள்ளே சக்தி பிறக்கும் – நீ
எதையும் முடிப்பாய் எதிலும் ஜெயிப்பாய்
வசந்த வாழ்வின் வாசல் திறக்கும்!
பழைய கதையை அடுப்பில் போடு
புதிய வெளிச்சம் விழியில் தெறிக்கும்- நீ
துணிந்து நடந்தால் பாதை எங்கும்
வெற்றி பூக்கள் மெத்தை விரிக்கும்!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
ஊளிகள் கொண்டு
உன்னை செதுக்க
சில பேர் வருவார்
மயங்கிடாதே மனிதா
செதுக்குதற் போல்
சிதைத்து சிதைத்து
உதிரம் ருசிப்பார்
இணங்கிடாதே மனிதா!
உன்னை செதுக்க
ஊரார் எதற்கு
உன்னை நீயே
செதுக்கி பழகு
உன்னை உடைத்து
புதிதாய் படைத்து
உன்னை காண்பி
உலகம் வணங்கும் மனிதா!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
பாண்டவர்க்கு வித்தையினை
துரோணர்தான் கற்பித்தார்;
பாண்டவரோ போர்க்களத்தில்
துரோணர்தம் கதைமுடித்தார்!
தசரதன்தான் வரம்தந்தான்;
கைகேயி உளங்களித்தாள்!
வரம் பெற்ற கைகேயி
தசரதனின் உயிர்பறித்தாள்!
நன்மைகளைப் பெற்றவரே
நமக்கெதிராய் நின்றிடலாம்;
உண்மையிதை நாமுணர்ந்தால்
உற்றவழி சென்றிடலாம்!
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
இதில் *கலைஞர் மு. கருணாநிதி* அவர்களின் மறைவிற்கு எழுதிய இரங்கற்பாவும், *எழுத்து சித்தர்* பாலகுமாரன் இயற்கை எய்திய தினத்தில் எழுதிய கவிதைகளும், *பாடும் நிலா* எஸ்.பி பாலசுப்பிரமணியன் மறைவையொட்டி எழுதிய இரங்கற்பாவும், அதிகாலை தன்னை திக்குமுக்காட வைத்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு எழுதிய இரங்கற்பாவும், நம்மை அவரது கவியுலகில் வலம்வர செய்கிறது சிறப்பு..
வாருங்கள்..!!
அவரது கவியுலகின் வாசனையை முழுவதுமாய் நுகர கையில் எடுப்போமா.. ! !
*கைகளுக்குள் வைகறை வானம்*
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கைகளுக்குள் வைகறை வானம் |
| ஆசிரியர்: | கவிஞர் தியாரூ |
| வெளியீடு: |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
|
| விலை: | ₹.225 |
| அறிமுகம் எழுதியவர்: |
அ.சுகிர்தா, நெல்லை..
|
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு
2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் சென்னை புத்தக காட்சியை நேரடியாக வந்து பார்வையிட்டு அதில் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்த நூல் அறிமுக கட்டுரையை ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை www.bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

