நேர்காணல்கள் அனைத்தும் பல்வேறு ஆளுமைகளால் காணப்பட்டுள்ளுள்ளன ஆர் ஆர் சீனிவாசன், மணா, ஷோபாசக்தி, ஆ. தனஞ்செயன், அப்பணசாமி, சங்கர ராமசுப்பிரமணியன், ஆ. முத்துலிங்கம், ச. தமிழ்ச்செல்வன், கீற்று. Com, விகடன் தடம், வ கீதா, கோ பழனி ஆகியோரால் பலவித கோணங்களில், பல்வேறு கால கட்டங்களில் பதிவுசெய்யப்பட்டது. தொ. ப. வின் பதில்கள் எல்லாம் செய்திகுவியலாக இருக்கிறது. வரலாற்றை பார்க்க புதிய கண்களைக்கொடுக்கிறது. பண்பாட்டு ஆய்வுக்கு வந்ததின் நோக்கம் பற்றி கூறுகையில் இந்த ஆடுகளம்இருந்தது, ஆனால்,  ஆடுவோர் இல்லாமல் இருந்தது, அதனால் நான் ஆட வந்தேன் என்று கூறுகிறார்.
பண்பாடு என்பது இரண்டுவகைப்படும், ஒன்று உலகியல் பண்பாடு, (மெடீரியல் கல்ச்சர் ), இன்னொன்று அதற்குப் புறனாக இருக்கக்கூடிய பண்பாட்டு அசைவுகள். பண்பாடு என்ற சொல் இரசிகமணி டிகேசியால் ஆக்கப்பட்டது. அது 20ஆம் நூற்றாண்டு வார்த்தை. நாகரிகம் என்பதே நாம் பயன்படுத்திய சொல். ஆனால் பண்பாடு என்பது ஒரு நல்ல சொல்லாக்கம் ஆகும். பண்பாடு எப்போதும் நிலம் சார்ந்ததே. மதங்களுக்கு முன்பே பண்பாடு தோன்றிவிட்டது. நிலம் என்றால் வெறும் மண் அன்று. அந்நிலப்பகுதியில் வாழ்கின்றமக்கள், அவர்கள் பேசுகின்ற மொழி, அவர்களுடைய உற்பத்திப்பொருட்கள், அவர்களின் கருவிகள், புழங்கு பொருட்கள், கலை இலக்கிய வெளிப்பாடுகள் ஆகிய எல்லாம் சேர்ந்தஒன்றுதான் நிலம் எனும் பொருளாகும். மனிதனின் எல்லாவித தேவைகளையும் அந்த மண் சார்ந்த பொருட்களே தீர்மானிக்கின்றன, நாம் ஒருவரை வரவேற்கும்போது மனம்குளிர்ந்து வரவேற்பதாகக் கூறுவோம், ஆனால் மேலைநாடுகளில் warm welcome என்பார்கள். இதேபோன்று அந்ததந்த சூழ்நிலைகள் பண்பாட்டை செம்மைப்படுத்த உதவுகின்றன. பல நூறாண்டுகளாகவே மக்கள் பண்பாடுடையவர்களாவே இருந்துள்ளனர், மதங்கள் இடையில் உருவாகி பண்பாட்டில் இடைவெட்டாக பல்வேறு செய்திகளை நிகழ்த்துகிறது. மதம் என்பது அதிகாரத்தை நோக்கிய ஒரு நகர்வு.
பார்ப்பனீயம் மோலோங்கி நின்றபோது பார்ப்பான் என்ற சொல்லையே இழிசொல்லாக்கிக் காட்டியவர்தம் பெரியார்.
விதவை திருமணம் இன்றுகூட புரட்சிகரமாகத்தெரிகிறது, ஆனால் தமிழக மக்களின் பண்பாட்டில் 70 சதவீத மக்களிடம் விதவை மறுமணமும், மணமுறிவும் இயல்பாகவே உண்டு.
நாட்டார்மரபு சனநாயகத்தன்மையுடையது, அதிகாரமற்றது, இங்கு ஆன்மீக அதிகாரம் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நாட்டார் மரபுகளின் ஆய்வுகள் அயோத்திதாசபண்டிதரிலிருந்து தொடங்குகிறது என்கிறார்.
60 களில் இருந்த  எல்லாமானவர்களுக்கும் பாடபுத்தகங்களுக்கு அப்பால் ஏதேனும் ஒரு புத்தகத்தையோ, ஒரு இதழையோ படிக்கும் பழக்கம் இருந்தது, இந்த நாற்பது ஆண்டுகளில் வாசிப்பு பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது என்கிறார்.
சென்னைப்பல்கலைக்கழகம் தொடங்கி ஏறக்குறைய 70ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தமிழ் பாடதிட்டக்குழுவே அமைந்தது. தமிழ்நாட்டில் இருந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இடம் இல்லத்தைப்பற்றிய பிரக்ஞை கூட இல்லாமல்தான் தமிழர் இருந்தனர்.
பெரியாரைத் தோற்கடிக்கவே முடியாது ...
தமிழுக்கென்று தனி ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று 1925 ல் சேலத்தில் திரு. பூரணலிங்கம் பிள்ளையவர்கள் தலைமையில் நடந்த தமிழ் ஆர்வலர்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புகின்றனர்.
60 களின் இறுதிப்பகுதி வரையிலும்கூட டாக்டர் பட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டியிருந்தது. மு வ,  வ சு ப மாணிக்கம் போன்றோர் கூட தங்களது ஆய்வறிக்கையை ஆங்கிலத்தில்தான் சமர்ப்பித்து பட்டம் பெறமுடிந்தது.
கருவில் இருக்கும்போதே சாதி எழுதப்பட்டு விடுகிறது. இங்கே தனிநபர்கள் யாருமில்லை, விரும்பியோ விருப்பமின்றியோ அந்த நபர் மீது சாதிப்போர்வை போர்த்தப்படுகிறது.
மக்கள் ஒரு கட்டத்தில் தங்களது கலாச்சாரத்தின் பிரதிநிதியாகக் கடவுளை ஆக்குவார்கள், அப்படி ஆக்கப்பட்ட கடவுள்களும் கோயில்களும் மட்டுமே உயிர் வாழும். மற்றவை பாழடைந்து விடும். தமிழகத்தில் இப்படி பல்வேறு கோயில்கள் பாழடைந்து இருப்பதை நாம் காணலாம்.
12 ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக அரிஜன ஆலயப்பிரவேசம் மைசூருக்கருகிலுள்ள மேல்கோட்டையில் நடத்தப்பட்டது. நடத்தியவர் இராமானுஜர். அந்த மேலக்கோட்டை செயலலிதா பிறந்த ஊராகும்.
பழனிக்கோயிலில் பூஜை செய்துவந்தவர்கள் பிற்பட்டவர்கள், திருமலை நாயக்கரின் தளவாயாக இருந்த ராமப்பையன், அங்கு பூஜை செய்யும் உரிமையை பிராமணர்களுக்கு வழங்குகிறான். ராமேஸ்வரம் கோயிலிலும் இதேதான் நடந்துள்ளது.
எளிய மக்களின் கனவில் ஒருபோதும் பெருந்தெய்வங்கள் வருவதேயில்லை, அவர்களுடைய குலதெய்வம்தான் வரும். மூதாதையர்களுடன் பின்னிப்பிணைந்துள்ள அந்த உறவை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்கள்.
பன்முகத்தன்மையுள்ள கலாச்சாரத்தை பேணிப்பாதுகாப்பவை இந்த நாட்டார் தெய்வங்கள். இந்தபன்முகத்தன்மை எதிரொலிக்கும்வரை சமூகம் சனநாயகத்தன்மையுடன் இருக்கும்.
குவிக்கப்பட்ட அதிகாரங்கள் எப்போதும் பெருவாரியான மக்களுக்கு எதிராகவே இருக்கும். சமூக விடுதலை, அரசியல் விடுதலை என்று நாம் சொல்கிற எல்லாவிஷயங்களுக்கும் எதிரான போக்குதான் அதிகார குவிப்பு.
சாதீய குரல்கள் கேட்கத்தான் செய்யும். இதுவரைகும் குருடர்களாகவும் செவிடர்களாகவும் யார் அடக்கி வைக்கப்பட்டிருந்தார்களோ அவர்களுக்கு இப்போதுதான் பார்வை கிடைத்துள்ளது. காது கேட்கிறது. இதுவரைக்கும் இங்கே அமைதி நிலவுவதாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மயான அமைதி. இதிலிருந்து வெடித்துக்கிளம்பும் குரல்கள் கலகக்குரல்களாகத்தான் இருக்கும். ஒடுக்குமுறைக்குள்ளானதை ஒருவன் எப்போது உணர்கிறானோ அப்போது பெருமூச்சு விடுகிறான், முணுமுணுக்கிறான், அதற்கடுத்து கலகக்குரல் எழுப்புகிறான். இப்போது எழுந்திருக்கிற கலகக்குரல்கள் நிரந்தர அமைதியை நோக்கிச் செல்லக்கூடியவை என்று அவர் கருதுகிறார்.
கருணாநிதியை இன்று எப்படி ...
இதுவரை இந்தியாவில் எழுதப்பட்ட வரலாற்றையெல்லாம் திருத்தி எழுதுவதுதான் நம் முன் உள்ள முக்கியமான வேலை என்கிறார் வரலாற்று ஆய்வாளர் T. T. கோசாம்பி.
இதுவரைபேசப்பட்டது மேல் சாதியினரின் இலக்கியம், மேல் சாதியினருக்கான கலைகள், பெருவாரியான மக்கள் திரளைப்பற்றி அது பேசவேயில்லை.
பிராமணீயம், பிராமணர்கள் இல்லாத இடத்திலும் இருக்கிறது. எப்போது பிற்பட்ட சாதியைச்சேர்ந்த ஒருவரால், சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்ட ஒருவரை அடக்க முடிகிறதோ, அங்கே பிராமணீயம் இருக்கிறது. இதை மார்க்சிஸ்ட்கள் முதலாளித்துவம் என்றனர், பெரியார் பிராமணீயம் என்றார்.
சாதி வரைமுறையை அரசியல்சட்டம் பேணுகிறது என்று பெரியார் கூறினார், பிறப்பு வழிப்பட்ட சாதிக்கொடுமைகளை அரசியல் சட்டம் நன்றாக உணர்ந்திருக்கிறது, அதேசமயம் கோயில் கருவறை என்று வரும்போது அதே சாதீய அடுக்கை அது பாதுகாக்கிறது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொன்னால் அதைக் கவனமாக நிராகரிக்கிறது. இதுவே நடைமுறை.
நம் இயல்பாகவே பண்பாட்டு பின்னணியில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம், பண்பாடு என்பது மூளையில் உறைநிலையில் இருக்கிறது. பண்பாடு மீறப்படும்போது அதை நம்மால் உணரமுடியும். பண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொல்வது ஆராய்ச்சியாளர்களின் வேலை, ஆனால், மக்கள் இயல்பாக அதனுடனேயே இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நுகர்வுக்கலாச்சாரம் நமக்கானது என்றால் அந்த “நாம் “என்போர் யார் என வினவுகிறார். அலுங்காமல் குலுங்காமல் குளிர்சாதன அறையில் இருப்போரா? வெக்கையில் தீப்பெட்டித்தொழில் ஈடுபட்டிருக்கக்கூடிய அந்த உழைப்பாளிகளா?, நாம் என்ற சொல்லாடலை நமக்கு சௌகர்யமாக்கி கொள்கிறோம். ஆனால் நுகர்வு கலாச்சாரம் பெருவாரியான மக்களின் நலனுக்கு எதிரானது என்று கூறுகிறார்.
சாதி அமைப்புகள்,  அரசாங்கமும் காவல்துறையும் தராத பாதுகாப்பை, கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்குத் தருகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், பொருளாதார பாதுகாப்பைத் தராவிட்டாலும் உணர்வு ரீதியான பாதுகாப்பைத்தருகிறது அந்த சாதி அமைப்புகள். இன்னும் கூடுதல் பாதுகாப்பைப்பெற அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்கிறது. சாதி அமைப்புகளுக்கு அடிப்படை பாதுகாப்புணர்வு ஆகும்.
பொதுநலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சியைக் கைவிட்டுவிடக்கூடாது, அதேபோல மான அவமானம் பார்க்கக்கூடாது. அப்படி எந்த எதிர்ப்பையும் மீறி செயல்பட்டவர் பெரியார். அவரிடம் இருந்த பொதுநலம் சார்ந்த கோபம்தான் இன்றையத் தேவை.
நமக்கும் கொஞ்சம் கோபம் வரட்டும்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.
நூல் =தொ. பரமசிவனின் நேர்காணல்கள் 
தொகுப்பு =தொ. ப 
பதிப்பு =காலச்சுவடு பதிப்பகம் 
விலை =ரூ. 175/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *