தொ.பரமசிவனின் தென்புலத்து மன்பதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஜூலை 1) சென்னையில் உள்ள பாரதிபுத்தகாலயம் அரும்பு அரங்கில் உயிர் பதிப்பகம் சார்பில் நடைபெற்றது.
தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலை வெளியிட வழக்குரைஞர் அ.அருள்மொழி வெளியிட வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் வீ.அரசு முதற்பிரதியை பெற்றுக்கொண்டார். இதில் தொ.பரமசிவன் எழுத்தில் சுற்றுச்சூழலும் அறிவியலும் என்ற தலைப்பில் இந்து தமிழ்திசை துணை ஆசிரியர் ஆதி.வள்ளியப்பன், பண்பாடும் பகுத்தறிவும் பார்ப்பன பாசிச யுகத்தில் தொ.ப மீள் வாசிப்பு என்ற தலைப்பில் தமிழ்காமராசன், எம்ஆர்எப் தொழிற் சங்க துணைத்தலைவர் ஐ.சிவப்பிரகாசம், கலப்பை ராமசாமி ஆகியோர் பேசினர்.
வழக்கறிஞர் அருள்மொழி
அற்புதமான உருவமும் உள்ளடக்கமும் கொண்ட புத்தகத்தை தொகுப்பாசிரியர் சண்முகானந்தம் கொடுத்துள்ளார். பெரியாரை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துகிறார் தொ.ப. , இவரது படைப்புக்கள் மாற்றுக்கருத்துக்களை எப்படி எதிர்கொள்ளும் வல்லமையை ஏற்படுத்துகிறது. தமிழ்கூறும் நல்லுலகம் வாசிக்கவேண்டிய தமிழ்படைப்பு இது. படிக்கப்படிக்க புதிய சிந்தனையை நமக்கு தரும் நூலாகும் என்றார்.
ஆய்வாளர் தமிழ்காமராசன்
சமகால சிந்தனைகளையும் பிரச்சனைகளையும் உள்வாங்கி தனது படைப்புக்களை வடித்துள்ளார். பேச்சின் மீது பிறரது உரையாடல் மீது அலாதி ஆர்வம் கொண்டிருந்த தொ.ப., அவரது வாசிப்புக்களின் தெறிப்புத்தான் அவரது படைப்பு. சாதிவன்கொடுமை குறித்தான பேச்சை மேலும் கீழும் வெட்டி நாம்தமிழர் சீமான் போன்றோர் தவறாக பயன்படுத்திவருவது தவறானது. தோழர் தொ.ப வின் கருத்தை ஆதரித்து பேசுவதைத்தவிர மாற்றுக்கருத்து பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பண்பாளர் அவர் . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தை அண்ணாவைத்தபோது அது பாசிச கருத்து என்று உறுதியோடு கூறினார். பிழையில்லாத ஒரு கருத்தை உருவாக்குவது நாம் எல்லோரும் இணைந்து கூட்டாக செய்யவேண்டியது. தம் பிழையை பொருட்படுத்தாது பிறர் பிழையை ஆய்வு செய்யும் மனப்பான்மையை தொ.ப விமர்சிக்கிறார் என்றார்.
தொ.பரமசிவன் எழுத்தில் சுற்றுச்சூழலும் அறிவியலும் என்ற தலைப்பில் இந்து தமிழ்திசை துணை ஆசிரியர் ஆதி.வள்ளியப்பன் பேசுகையில்,
தொ.ப. – தொ.பரமசிவன். ஒவ்வொரு மண்ணில் வாழ்பவர்களுக்கும் தன் மண், மொழி, பண்பாடு குறித்து இயல்பாகவே ஒருவித பெருமித உணர்வு இருக்கும். அப்படி நமக்கும் பெருமித உணர்வுகள் தேவை. அந்தப் பெருமித உணர்வுகள் ஆதாரபூர்வமானதாகவும் மேம்பட்ட மதிப்பீடுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். வெற்றுப் பெருமைகளாக இருப்பதால் சமூகத்துக்கும் பயனில்லை, வாழும் மனிதர்களுக்கும் பயனில்லை.
அப்படியில்லாமல் உண்மையிலேயே நம் மண், மொழி, பண்பாட்டின் பெருமிதங்கள் என்ன என்பதை தமிழ்நாட்டுக்கு எடுத்துச்சொன்னவர் தொ.ப. பொதுவாக அறிஞர்கள், பண்டிதர்கள் நீண்ட கட்டுரைகள், நூல்கள், அடிக்குறிப்புகள், ஆதாரங்களுடன் பெரிய பெரிதாக வாதங்களை முன்வைப்பார்கள். தொ.ப.வின் ‘அறியப்படாத தமிழகம்’ நூலை எடுத்துப் பாருங்கள். 2 பக்கங்கள், அதிகபட்சம் 4 பக்கங்கள். எடுத்துக்கொண்ட விஷயத்தின் சாரமான பிழிவை சொல்லி தன் கருத்தை நிலைநிறுத்திவிட்டு அடுத்த பொருளுக்கு நகர்ந்துவிடுவார். இந்த நூல் எழுதப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றைய தலைமுறையும் படிக்கக்கூடிய வகையில் சுருக்கமாக, நறுக்குத் தெறித்தாற்போல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
பொதுவாகவே அடிப்படை விஷயங்களின் மீது எனக்குக் கூடுதல் ஆர்வம் உண்டு. அது அறிவியல், சுற்றுச்சூழல், வரலாறு என எந்தத் துறையாக இருந்தாலும் சரி. ஊர் சுற்றும்போது, கோயில்களுக்குச் செல்லும்போது, கலைச் சின்னங்களைப் பார்க்கும்போது, நம் மண், மொழி, பண்பாட்டின் சாரம், அடிநாதம் என்ன என்பது குறித்த கேள்விகள் எனக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கும்.
அறியப்படாத தமிழகம் 1997இலேயே வெளியாகிவிட்டது. 2001-2002ஆம் ஆண்டில் ஒரு செய்தித்தாள் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அறியப்படாத தமிழகம் குறித்து அந்த அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு நண்பர் குறிப்பிட்டார். அப்போது அந்த நூலை வாசிக்க வாய்க்கவில்லை. அன்றைக்கு அந்த நூலை வாசித்து தமிழ்ப் பண்பாட்டை வியந்த அந்த நண்பர், இன்று வலதுசாரி அரசியலுக்குள் நுழைந்துவிட்டார். அது வேறு கதை. அதே நூல் பண்பாட்டு அசைவுகள் என்கிற பெயரில் விரிவாக்கப்பட்டு வெளியானபோது வாசித்தேன். அந்தக் கட்டுரைகள் ஏற்படுத்திய ஆச்சரியத்தை என்னால், தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அதே பண்பாட்டு அசைவுகள் நூலில் எளிய மனிதர்கள்தான் தங்கள் பேச்சின் வழியாக மொழியை வளர்க்கிறார்கள். பண்டிதர்கள் அதை செப்பம் செய்து இலக்கணம் வகுக்கிறார்கள் என்று தொல்காப்பியரை மேற்கோள்காட்டி தொ.ப. கூறியிருப்பார். அதேபோல் நம் சமூகத்தின், பண்பாட்டின் மதிப்பீடுகளையும் எளிய மனிதர்களே, நம் முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்த சாதாரண மனிதர்களே நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள் என்பதை பண்பாட்டு அசைவுகள் மூலம் தொ.ப. பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.
மக்களின் புழங்கு மொழியில் கவனிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக அவர் சுட்டிக்காட்டுவது, உள்நாட்டு, அயல்நாட்டுத் தன்மைகளைப் பிரித்துக்காட்டும் பாங்கு: நாட்டுத் தென்னை, நாட்டுச் சர்க்கரை, சீமைச் சர்க்கரை, நாட்டுக் கருவேல், சீமைக் கருவேல், சீமை மருத்துவம்.
இந்தக் கருத்துகளை எல்லாம் தொ.ப. அபுனைவு வடிவத்தில் நமக்குக் கூறினார் என்றால், அதே திசையில் படைப்புகள் வழி நமக்குத் தந்தவர் கி.ராஜநாராயணன். வட்டார வழக்கு எனும் பேச்சு மொழியில் இலக்கியத்தைப் படைத்து நவீனத் தமிழ் இலக்கியத்தின் திசையை மாற்றினார். அதேபோல் சாதாரண மனிதர்களின் மதிப்பீடுகளுக்கு இலக்கிய மதிப்பை உருவாக்கித் தந்தார்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் அறம், அறம் என்று இலக்கியவாதிகள் தொடங்கி பலரும் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள். வெறும் வார்த்தையை பிடித்துக்கொண்டு அலறித் திரிகிறார்கள். தமிழ் மண்ணின் அறம் எது? தொ.ப. திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறார் தாகம் தணிக்கும் நீரும் வயிற்றுப் பசிக்கு சோறும் பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் விற்பனைக்கு இருந்ததில்லை என்று. அதுதானே அறம். கோடைக் காலத்தில் நீர்ப் பந்தல் அமைப்பது வழிவழியாகத் தொடர்ந்துவரும் அறச்செயல். அதேபோல் சத்திரங்களில் உணவு இலவசமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்.
இன்றைக்கு நாம் பங்கேற்கும் பல கூட்டங்களில் அரை லிட்டர் தண்ணீர் புட்டி வைக்கப்படுகிறது, அதன் விலை 10 ரூபாய். மண் பானைகளும், பித்தளை-எவர்சில்வர் குடங்களும் காணாமல் போய்விட்டன. ஏழை மக்களின் பசி தீரிக்கும் அரிசியை மாநில அரசு வாங்கி விநியோகிக்க வெளிச்சந்தை விற்பனைக்கு விட மாட்டோம் என்கிறது மத்திய அரசு. அறம் அறம் என்று முழங்கும் ஆசான்கள் இதைப் பற்றியெல்லாம் என்றைக்காவது பேசியிருக்கிறார்களா?
சமையல்-உணவு என்பது நமது அன்றாட அம்சங்களில் ஒன்று, அதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று பொதுவாகப் பலரும் ஒதுக்கிவிடுகிறோம். நம் உணவிலும் கொண்டாட்டங்களிலும் இயற்கையுடனான உறவு வெளிப்படுகிறது என்கிறார் தொ.ப. எந்தத் தாவரம், காய், கனி எந்தெந்த பருவத்தில் எந்தெந்த விழாக்களில் முதன்மை பெறுகிறது என்பதை வைத்து நம் பண்பாட்டின் ஆதாரங்களை வெளிப்படுத்துகிறார் தொ.ப. எதைச் சாப்பிடுகிறோம், எதற்காகச் சாப்பிடுகிறோம் என்பதன் பின்னால் தேர்ந்த மரபு அறிவும், நவீன அறிவியல் காரணங்களும் இருக்கின்றன.
மற்றொருபுறம் உணவின் பின்னணியில் உள்ள அரசியலையும் ஆராய்கிறார். காப்பி, தேநீர், சர்க்கரை போன்றவை வல்லரசு நாடுகளின் பொருளாதார ஆயுதங்கள். அதேபோல் எண்ணெய் வணிகமும் பொருளாதாரச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அவித்து, வேகவைத்து, எண்ணெய் சேர்க்கப்படாத தமிழக உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்துவருகின்றன. அரசியல் உண்மையை உணராமல், உணவில் உடல்நலத்தைக் கருதாமல் நாவின் சுவையையே இன்றைய மக்கள் சார்ந்திருப்பது வீழ்ச்சிக்குரிய வழி என்று தொ.ப. எச்சரிக்கிறார்.
இப்படி நாம் சாதாரணமாகக் கடந்துவிடும் உணவில் இருந்து பண்பாட்டுக் கூறுகளை அகழ்ந்தெடுக்கிறார் தொ.ப. இப்படிப் பலரும் யோசிக்காத, சாதாரண விஷயங்களிலிருந்து ஒரு பெரும் திறப்பைக் காட்டுகிறார், வெளிச்சத்தை பாய்ச்சுகிறார் தொ.ப. நான் பேச வழங்கப்பட்ட தலைப்பு தொ.ப. எழுத்தில் சுற்றுச்சூழலும் அறிவியலும். அதே நேரம் அவருடைய எழுத்தில் இந்தத் தன்மைகள் பண்பாடு, நாட்டார் வழக்காறு, மொழியியல் மட்டுமல்லாமல், சமூக அரசியல் தன்மைகளுடன் கலந்தே உள்ளன என்பதை அவருடைய எழுத்தின் வழி உணரலாம்.
சில நூல்கள், சில ஆளுமைகள் பலரை அச்சுறுத்தும். தொ.ப.வையும் அவருடைய பண்பாட்டு அசைவுகள் நூலையும் கண்டு தமிழ் இலக்கிய பீடங்கள் அஞ்சத்தான் செய்கின்றன. அதனால்தான் அவருடைய நூல்களையும் அவரைப் பற்றியும் அவதூறு பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. அவரைப் பற்றிய இரங்கல் குறிப்பிலும்கூட அந்த அவதூறு தொடர்ந்தது. அந்த அளவுக்கு அவருடைய எழுத்தும், அவருடைய ஆளுமையும் அவர்களைத் தொந்தரவு செய்திருக்கின்றன, செய்துகொண்டே வருகின்றன.
பல ஆயிரம் ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்துகொண்டே வந்துள்ளது. பண்பாடு, மொழி, மனிதர்களைப் பற்றிய புரிதல், மனிதர்களை நடத்தும் விதம் என எல்லா அம்சங்களிலும் அந்த வேறுபாடு தொடர்கிறது. அதுதான் திராவிடம்-ஆரியம் என்கிற பிரிவுகள். ஆதி இந்தியர்கள் நூலில் அதற்கான எல்லா ஆதாரங்களையும் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார் டோனி ஜோசப். தொல்லியல், மானுடவியல், மொழியியல், மரபணுவியல் என அனைத்து வகை ஆதாரங்களின் அடிப்படையில் சிந்துவெளியில் வாழ்ந்தவர்களின் மொழி, பண்பாடு தென்னிந்தியாவிலும், அதற்குப் பிந்தைய மொழி- பண்பாட்டுக் கலப்பால் வட இந்தியாவிலும் வாழ்கிறார்கள் என்கிற முடிவுக்கு டோனி ஜோசப் வருகிறார்.
ஆரியர்களின் பண்பாடு, சடங்குகள் தீயை மையமாகக் கொண்டவை. திராவிடர்களின் பண்பாடு, சடங்குகள் தண்ணீரை மையமாகக் கொண்டவை என்பதை தன் நூலின் பல இடங்களில் வலியுறுத்திச் சொல்கிறார் தொ.ப. மொஹஞ்சதாரோவில் இருக்கும் மிகப் பெரிய குளம் (தி கிரேட் பாத்) நீர் சடங்கு நடைபெறுவதற்கான இடமாக இருந்திருக்கலாம் என்கிற கருத்தையும் தொ.ப. முன்வைக்கிறார். இன்றைக்கு நம் சடங்குகள், பண்பாட்டின் ஆதாரங்களை மறந்துவிட்டு, சமஸ்கிருதமயமாதலை நோக்கி வைதிகத்தைத் தழுவ மக்கள் கூட்டம் போய்க்கொண்டிருக்கிறது.
அவரை நாம் இன்னும் முழுமையாக உள்வாங்கவில்லை, பரவலாக எடுத்துச்செல்லவில்லை என்கிற ஆதங்கம் இருக்கிறது. இன்றைய சமூக அரசியல் சூழலில் கறுப்பு-சிவப்பு-நீல அரசியல் புலங்கள் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பைக் கண்டறியவில்லை. தாங்கள் இணையும் புள்ளியைக் கண்டறிந்து வலுவாக இணைந்து செயல்படவில்லை. நமக்குள் சண்டை போடுவதில் தீவிரமாக இருக்கிறோம்.
ஆனால், எந்த அடிப்படையோ ஆழமோ இல்லாத இந்துத்துவம் அனைத்தையும் எடுத்து விழுங்கிக் கொண்டிருக்கிறது. நமது ஆளுமைகளையும் நமது சிந்தனைகளையும் நம் நிலத்துக்கு உரமாக இட்டு வளர்த்தெடுத்திருக்கிறோமா? பந்துகள் வீசப்படும்போது, அவை நம் பக்கம் வந்து விழுவதற்கு மாறாக, பட்டுத் தெறித்து எதிர்ப்பக்கம் ஓடுவது போலல்லவா இருக்க வேண்டும். வள்ளலார் குறித்த சர்ச்சை உதிர்க்கப்படும்போதுதான், வேகமாக வள்ளலாரைப் பற்றி வெகுமக்களிடம் எடுத்துச்செல்கிறோம், பேசுகிறோம். நாம் முன்பே வள்ளலாரை உரிய வகையில் கொண்டு சேர்த்திருந்தால், இப்படி அவரை தம் வசமாக்க அவர்கள் முயல்வார்களா? நம் அரசியல் செயல்பாடுகளில் பலவும் எதிர்வினை அரசியலாகச் சுருங்கிவிட்டன.
தொ.ப.வின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கருத்தாயும்தான். இந்த நூலில் மறக்காமல் ‘நான் இந்துவல்ல, நீங்கள்’ என்கிற குறுநூல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் இந்துத்துவம் என்னென்ன சித்துவேலைகளைச் செய்து மக்களை தன் பக்கம் திருப்பப் பார்க்கிறதோ, அது ஒவ்வொன்றையும் அடித்து நொறுக்கியுள்ளார் தொ.ப. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கம் செலுத்திய தேவனூரு மகாதேவா எழுதிய ஆர்.எஸ்.எஸ். ஆழம் அகலம் என்னும் நூலைப் போல், நான் இந்துவல்ல, நீங்கள் நூல் பல லட்சக்கணக்கில் கொண்டுபோய் சேர்க்கப்பட வேண்டும்.
இப்படி நாம் வாசிக்க வேண்டிய, ஆழமாக உணர வேண்டிய, எடுத்துச்சொல்ல வேண்டிய, பரப்ப வேண்டிய பல்வேறு கட்டுரைகள், பொருண்மைகள் இந்த நூலில் புதைந்து கிடக்கின்றன. நாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.அதே நேரம் இந்த நூலின் தொகுப்பு முறை சார்ந்து சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அறிவியல் தமிழ் என்கிற தலைப்பின் கீழ் தமிழ் உரைநடை, தமிழ் இதழியல், கூலமும் கூலியும் ஆகிய கட்டுரைகள் பகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரைகளைத் தமிழ் உரைநடை என்கிற தலைப்பின் கீழ் கொடுத்திருக்கலாம். அதேபோல் அகராதிக் கலை என்கிற தலைப்பின் கீழ் கல்லெழுத்துகள், தொல்லியல் ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மாற்றியிருக்கலாம்.நூலின் உள்ள பிரிவுத் தலைப்புகள் உள்ளடக்கத் தலைப்புகள் போலப் பெரிதாகவும், கட்டுரைகளுக்கான தலைப்புகள் துணைத் தலைப்புகள் போலச் சிறிதாகவும் தரப்பட்டுள்ளன. இது எளிய வாசகருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.
தொ.ப.வின் நேர்காணல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன. எல்லா நேர்காணல்களும் ஒரே தரத்தில், சீர்மையுடன் இல்லை. யார் நேர்காணல் செய்கிறார், எந்த அளவுக்குப் புரிதலுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்து கேட்கிறார் என்பதைப் பொறுத்து நேர்காணல்கள் கவனம் பெறும். இந்த நூலில் தொ.ப.வின் நேரடிக் கட்டுரைகளுக்கும் நேர்காணல்ளுக்கும் இடையிலான வேறுபாட்டை உணர முடிகிறது. சில நேர்காணல்கள் திட்டவட்டமான இலக்கின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோன்ற நேர்காணல்களைத் தவிர்த்திருக்கலாம்.
நமது மருத்துவம், உணவே மருந்து ஆகியவற்றைக் குறித்து தொ.ப. பேசியிருக்கிறார். இன்றைய அறிவியல் புரிதல், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தாவரவியல், உணவுப் பதப்படுத்துதல் வல்லுநர்கள், சமச்சீர் உணவு நிபுணர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் கூறுவது ஒன்றுதான். நம்மிடம் திணைப் பகுப்பு இருந்தது, தாவரவியல்-மருத்துவ அறிவியல் இருந்தது என்கிற பெருமிதங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இனிமேலும் காலம் தள்ள முடியாது. நம் மருத்துவ அறிவு எதிர்காலத்திலும் நீடிக்க வேண்டும், பரவலாக வேண்டும் என்றால் அதை நவீன நிரூபண முறைக்குக் கொண்டுசெல்லாமல் உலகத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. வெறும் நம்பிக்கை அடிப்படையில் இனிமேலும் அவற்றைத் தக்கவைக்க முடியாது.
சுற்றுச்சூழல் சார்ந்தும், இயற்கை சார்ந்தும் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறோம். நம் பண்பாட்டின் நிஜப் பெருமிதங்கள் குறித்து நம் அடுத்த தலைமுறைக்கு உரிய முறையில் எடுத்துச்சொல்லி வருகிறோமா. தொ.ப.வை எவ்வளவு தூரம் கொண்டு சேர்த்திருக்கிறோம், இனிமேல் எவ்வளவு கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியிருக்கிறது என்பதற்குத் திட்டவட்டமான பார்வையும் திட்டமும் நமக்கு வேண்டும்.
தொ.ப. இறந்தபோது விடுதலையில் அவரைக் குறித்த சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. அது ஓர் நல்ல முன்னுதாரணம். ஆனால் முன்னுதாரணங்களுடன் நாம் திருப்திப்பட்டுவிடக் கூடாது. கறுப்பு-சிவப்பு-நீலம் சார்ந்து இயங்கி வருபவர்கள் தொ.ப.வை அனைத்து வகையிலும் உள்வாங்கவும், பரவலாக எடுத்துச் செல்லவும் பரப்பவும் வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு இந்த நூல் உதவும்.“பண்பாடு என்பது பழமையைக் கொண்டாடுவது அன்று. உயிருள்ள வேர்களைப் பாதுகாப்பதாகும். ஏனென்றால், உயிருள்ள வேர்கள் இன்னமும் சமூக அசைவியக்கங்களை முன்னெடுத்துச் செல்கின்றன என்பதே அதற்குரிய காரணமாகும்.” தொ.ப.வின் இந்த வரிகளோடு உரையை நிறைவு செய்தார் பத்திரிகையாளர் ஆதிவள்ளியப்பன்.
தொழிற்சங்கத்தலைவர் ஐ.சிவப்பிரகாசம்
இந்த புத்தகத்தில் வந்துள்ள 85 தலைப்பிலான படைப்புகள் மக்களின் வாழ்வியல் ஆய்வுகள் குறித்து பேசுகிறது பார்ப்பனியத்தை விமர்சிக்கிறது. பார்ப்பனியத்திற்குள் ஒளிந்துகொண்டிருக்கும் தமிழ்தேசிய பேசுவோரை சாடுகிறது என்றார்.
வரலாற்று ஆய்வாளர் வீ.அரசு
தொ.பரமசிவம் எழுதிய படைப்புகள் அனைத்தும் எழுதியது என்று கூறுவதைவிட உரையாடல் என்று சொல்லலாம். சாமான்ய
மனிதர்களை பற்றி பேசிய அவர் மேல்தட்டு குழு எழுதியவை எல்லாம் வரலாறு இல்லை என்றார். சாதாரண மக்களின் எழுத்துக்கள், படைப்புக்கள் மட்டுமே பண்பாட்டு வரலாறு என்றார் தொ.ப,. அம்மன் வழிபாடுகள் குறித்து எழுதிய அவர் பெண்ணடிமைத்தன சமூகத்தில் பெண்ணை தெய்வமாக்கியது ஏன், எப்படி என்பது குறித்து ஆய்வு செய்தார். திருவிழாக்களை எப்படி பார்க்கவேண்டு, விரலி மஞ்சள் , சங்கு வரலாறு, வீட்டின் கட்டுமான வரலாறுகளை நமக்கு அறிமுகம் செய்தவர். சாதி பாதுகாப்பை தருகிறது, சாதி அடையாளத்தை தருகிறது, சாதி வன்முறையை செய்கிறது என்று கூறிய தொ.ப, கருத்துக்களில் கடைசி வரியை துண்டித்து விட்டு அவரை சாதியம் பேசுகிற நபராக சில தமிழர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றார், பெரியார் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர் தொ.ப, பெரியாரை இடதுசாரிகள், முற்போக்காளர்கள் கொண்டாடியது இல்லை என்றும் ஆதங்கப்பட்டார், இந்த தவறு தாமதமாகத்தான் சரியானது, ஜீவா எழுதிய ஈரோட்டு பாதை என்ற புத்தகத்தை ஒரு பதிப்பு ஈரோட்டு, பாதை சரியா என்று மாற்றிய கொடுமையும் நிகழ்ந்த சம்பவமும் நடந்தேறியது. பண்பாட்டு ஆய்வாளர் பண்பாட்டுக்கூறுகளை மிகஆழமாக ஆய்வு செய்தவர் தொ.ப ஆகவே இவரது படைப்புக்களை வாசிப்பது நமது கடமை என்றார் அரசு.