babies
kuzhanthai uruvathal

தொடர்-1: குழந்தை உருவாதல்- பேரா.சோ. மோகனா

அம்மாவும்..பாப்பாவும்.. ஒரு வியத்தகு உலகம் 

தாய்மை….!

தாய்மை மகத்தானது..பெருமை மிக்கது,புனிதமானது ; அதன் தியாகம் சொல்லி மாளாது என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.ஆனால் தாய்மை என்பதும், ஒரு மகவை சுமார் 38-40 வாரங்கள் /270-280நாட்கள் வரை தன்னுள் உருவான கருவை தனது  கருவறையில்  சுமப்பது என்பது  ஒருவர் வாழ்வின் மறக்க முடியா அற்புத கணங்கள்..அதனை ஒருவர் அனுபவித்தால்மட்டுமே.. உணர முடியும். தாய்மை அடையா நிலையும் மனதுக்குள் சேர்த்தே மற்றும்  கண்ணுக்குள் வேதனையுடன் வந்து போகிறது.

கருக்காலம் /தாய்மைப் பேறு /கர்ப்பம் என்பதெல்லாம் ஓர் உயிர் உருவாக்கலின் அதிசய நிகழ்வுகள்தான்…உயிரின வாழ்வின் ஆச்சரியமான ஒன்றுதான்..நீங்கள் அம்மாவின் கருவறைக்குள் ஒரு சிறு புள்ளியிலிருந்து/மணல் துகள் அளவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் உருவெடுத்து பெரிதாய் வளருகிறீர்களே .

.எப்படி  எப்படி..?

 

  என்னதான் அதிசயமோ..கருவினிலே

கருவுருதல் நிகழ்ந்து 24 மணி நேரத்துக்குள் முட்டை  வெகுவேகமாக பிரியத்துவங்கும்.ஆனால்  கருவுருதல் நிகழும் கணத்திலேயே , உங்கள் குழந்தையின் அனைத்து மரபணு நிகழ்வுகளும், அதன் பாலினம் உட்பட நிறைவு பெறுகின்றன என்பதை நினைக்க நினைக்க இயற்கையின் வித்தையை சொல்லி மாளாது. இந்நிலையில் முட்டை 3 நாட்கள் வரை சினைப்பை குழாயிலேயே (fallopian tube)  இருக்கும். பின்னர் மெதுவாக நகர்ந்து கருப்பையின் உட்பக்கம், மெத்தை போல உள்ள பகுதியில் புதைந்து வளரத்தொடங்க .ஹார்மோன்கள் உதவி செய்யும். இதனால் சில அம்மாக்களுக்கு அந்நாளில் மிக அரிதாக இரத்ததுளி வெளியேறும். உடனேயே கருப்பையின் மெத்தையில் கரு வளரந்துகொண்டே இருப்பார். அதே சமயம், கருப்பையின் வாய் மெல்லிய சவ்வால் அடைக்கப்படும். .

.

 

சந்தோஷப் பொட்டலம்…

தன்  கருவைச் சுமக்கும்போது சுகமும், சுமையும், சந்தோஷமும், சில சங்கடங்களும் கூட இருக்கும்,, அது மகத்தானது..ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டியது என்றும் கூட சொல்லலாம். உலகம் உயிரின பெருக்கம் அதுதான்..உங்களின் கருவை  உங்கள் கையில் குழந்தையாக முதல் முறை சந்திக்கும் தருணம்தான் ஒருவர் தன வாழ்வின் உச்ச கட்ட சந்தோஷத்தை அனுபவிக்கும்  கணங்கள் ,அதுதான் உலகின் மிகச் சிறந்த பரிசு உங்களுக்கு  ! ஒரு பெண்ணின் வாழ்நாளில்  மறக்க முடியாத காலமும் அவைதான்.. வலிகள் நம்மைத்  துரத்த துரத்த முடிவில் நாம் வலியைத் துரத்தி சந்தோஷப் பொட்டலத்தை  குழந்தையாக அவிழ்க்கிறோம்.அதனைப் பார்ப்பீர்கள்..அப்பப்பா மனம்   மகிழ்ச்சிக் கடலில் கொந்தளிக்கும்.அந்த தருணத்தின் உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது.

 

 

 

 மாற்றம்..மாற்றம்..

 

கரு வளரும்போது வியத்தகு, அதிசயமான ஏராளமான , எக்கச்சக்கமான மாற்றங்கள் உங்கள் உடலிலும், கருவின் உடலிலும்…அதன்பால் உங்க பாப்பாவின் உருவாக்கத்திலும்.

 

 

உயிர்ப் பயணம் துவக்கும் ஒற்றை செல்..

மனிதக் கருவும் எல்லா உயிர்களும் போலவே,,ஒற்றை செல்லில்தான்  தன்  உயிர்ப்  பயணத்தைத் துவங்குகிறது.அதனை நாம் கண்ணால் காணவும் கூட முடியும். ஆனால் மணல் துகள் சைசில் உள்ள அந்த சின்ன முட்டை,,,குழந்தையாகப் பரிணமித்துப் பிறக்கும்போது அதன் உடலில் சுமார் 200,000,000 செல்களாக பிரம்மாண்டமாய்  பல்கிப் பெருகி பரிணமித்து விடுகிறதே .அடேயப்பா  என்ன அதிசயம்.?.இந்த உருமாற்றம் செய்தவர் யார்?

 

 

 

உயிரின் கரு..முட்டைதான் ,,

 

 ஒரு கரு முட்டையின் எடை என்பது 0.00177 -0.0042 மி.கி மட்டுமே இருக்கும். அதன் விட்டம் 0.15-0.2 மிமீ.. இந்த குட்டியூண்டு முட்டைதான் பிறக்கும் போது  சுமார் 3 கிலோ எடையுள்ள குழந்தையாக இந்த உலகுக்கு வருகை புரிகிறது..அதாவது, ஒரு குழந்தை என்பது முட்டையை விட சுமார் 6,000,000 மடங்கு அதிக எடையுள்ளதுஎன்றால் பிரமிப்பு தானே..இது எப்படிப்பா? இதெல்லாம் கருவறை செய்யும் விந்தை மிகு உருமாற்றமும்,வேதிமாற்றங்களும் தான். இதுவரை கடந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாய் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் கூட ஒரு கருவறை செய்யும் பணியை,அல்லது ஒரு செயற்கை கருவறையை இந்த அறிவியல் உலகம் இதுவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

 

முட்டையும், விந்தும் இணையும் தருணம்.

 

இயற்கைதான் ஒரு முட்டையுடன் சேரும் விந்தணுவை நிர்ணயம் செய்கிறது.அப்படித்தான் சொல்ல  வேண்டும் இதனையும் செயற்கையாய் செய்ய முடியாது.முட்டையும் விந்தும்ஒன்று  சேரும்/இணையும் அந்த கணத்தில் தான் கரு ஆணா , பெண்ணா என்ற நிர்ணயம்/தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.அது மட்டுமல்ல எந்த விந்துவுடன் இணைவது என்ற முடிவையும்  முட்டைதான் எடுக்கிறது. அந்த விந்துக்கு மட்டுமே, முட்டையின் மேலுறை விலகி முட்டையின் எல்லைக்குள் நுழைய வழி தரப்படும். . பொதுவாக ஒரு விந்து மட்டுமே முட்டைக்குள் போகும்/அல்லது அனுமதிக்கப்படும்.அது தவிர மற்றது முட்டைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும்.

 

கருவின் உருவும், அளவும்…

மனிதக்கரு 3 ம் வாரத்தில் 0.1 மி.மீ அளவு.

4ம் வாரம், 0.1–0.2 மி.மீ/கசகசா அளவு

5ம் வாரம் ஓர் எள் அளவு

6ம் வாரம் 6.35 மி.மீ/ துவரம் பருப்பு அளவு

6 வாரம் வரை கருவுற்ற அறிகுறி எதுவுமே தெரியாது

 

முட்டைதான் கருவின் ஆதார சக்தி..!

 

இன்னொரு விஷயம் தெரியுமா? கரு வளருவதற்கான அனைத்து வேதிப் பொருள் ஆதாரங்களையும்  தருவது அன்னையின் முட்டை மட்டுமே..ஆம் அதுதான் கரு வளர்வதற்குரிய அனைத்தையும் அம்மாவிடம் இருந்து உருவாக்கி  சுமந்து வருகிறது.அதனால்தான் அவர் அசைவதே இல்லை. அசைந்தால்முட்டையிடம்  இருக்கும் ஆற்றல் இழந்து விடும்..கரு உருவாவதில் சில குறைபாடுகள் வந்துவிடும் என்று அசையாமல் வேதிப் பொருட்களை கட்டிக் காத்து தன சந்ததிக்குத் தருகிறது.விந்தணுவார்  என்பவர் எப்போதும் போல சும்மா ஊர் சுற்றிதான். அவர்தான் ஊர் சுற்றி வந்து முட்டையைத் தேடி வருவார்.ஆடம்பரமாக சுற்றி அனைத்து சக்திகளையும் இழந்துவிட்டு, அவர் வந்து செய்வது கரு உருவாக்க கொண்டு வருவது வெறும் X /Y குரோமோசோம் மட்டுமே.முட்டைக்குள் விந்தணுவின் குரோமோசோம்/DNA உள்ள (பாலினம் நிர்ணயம் செய்ய தேவையான பகுதி) மட்டுமே நுழையும்.  உயிர் உருவாக்க, வளர என அனைத்து நிர்மாணப் பணிக்கான பொறுப்பும் வழக்கம் போல் பெண்ணுக்குத் தாங்க..இயற்கை பெண்ணை உயிரின் உருவாக்கமாய் , தியாக பிம்பமாய் படைத்திருக்கிறது என்பீர்களே..அவள்தான் உலகத்தின் உந்து சக்தி..

 

உடனடித் தீர்மானங்கள் நடக்கும் கணம்..

அது மடடுமா,,முட்டையும் விந்தும் சேர்ந்து கருவுறுதல் நடந்தவுடனே..பல முடிவுகள் அங்கே உடனடியாக மிகத் தீர்மானமாக அமலாகின்றன. பாலினம், அதான்பா, நீ ஆணா ,பெண்ணா என்பது உடனே தெரிந்து விடுகிறது. அதுதான் கண்ணு, முட்டையில் ஒரே ஒரு வகைதான்.அதில் ஒரு X குரோமோசோம் மட்டுமே பெற்றிருக்கும்.. விந்துவில்தான் இரு வகை உண்டு. ஒன்றில் Y குரோமோசோம் இருக்கும். இன்னொருவகையில் X  குரோமோசோம் இருக்கும். முட்டைக்குள் X விந்து நுழைந்தால் கரு பெண்ணாக உருவெடுக்கும். Y விந்து நுழைந்தால் கரு ஆணாக வளரும். அத்துடன் கருவுறும்போது உங்களின் தோலின்  சொந்த நிறம்..(அதுதான் நீங்கள் சிவப்பாக மாறுவதற்கு வாங்கித் தடவுகிறீர்களே  அந்த சிவப்பழகு கிரீமால் தோலை சிவப்பாக்க முடியாதுங்க..நம் தோல் ..அது மரபணு தந்த கொடைங்க ), கண்களின் நிறம்,போன்றவையும், உங்களின் அனைத்து மரபணு குணங்களும் அந்த கணத்தில்தான்  உருவெடுக்கின்றன.எப்படிப்பா இந்த கலை..\

 

 

 X மற்றும் Y குரோமோசோம்..

 

ஒரு ரகசியம் சொல்லட்டுமா? ஆனால் என்னை கல்லை விட்டு அடிக்கக் கூடாது. .2010 ம் ஆண்டின் கண்டுபிடிப்பின் படி, X மற்றும் Y குரோமோசோம்கள் இரண்டும் ஒரே வகையான குரோமோசோம்களிடமிருந்துதான் எதோ ஒருவகையான் சிறு மாற்றம் ஏற்பட்டு உருவாயின. ஆனால்  X மற்றும் Y குரோமோசோம்கள் இரண்டும், சுமார் 300,000,000 (30 கோடி ) ஆண்டுகளுக்கு முன்பு இரண்டும் தனித் தனியாகப் பிரிந்து தனித் தனி தடத்தில் பாட்டை உருவாக்கி பயணிக்கத் துவங்கின.இதில் வே;இப்பார்வையில் உருப்பெருக்கியில் பார்க்கும்போதே..X குரோமோசோம் பெரிதாகவும், Y  குரோமோசோம் சிறியதாகவும் இருக்கும்.மனித  X  குரோமோசோமில்  2,000 மரபணுக்களும், Y குரோமோசோமில் 78 மரபணுக்களும்  இருக்கின்றன..காரணம் காலப் போக்கில்,கடந்த 30 கோடி ஆண்டுகளில்   Y குரோமோசோம் தனது 1,438 மரபணுக்களில், 1393 மரபணுக்களை இழந்து விட்டன..இன்னும் 10 மில்லியன் ஆண்டுகளில் முழுமையும் கூட அழிந்து விடலாமோ என அறிவியலார்கள் அஞசுகின்றனர்.

 

      கருவறையின் உயர்வு…

கருவை சுமக்க காத்திருக்கும் கருவறையின் அளவு உங்களின் கை முஷ்டி அளவுதான்.ஆனால் இத்தனூண்டு கருவறை,,கருவை சுமந்து அது வளரும்போது சுமார் 500 மடங்கு உருப்பெருக்கம் செய்கிறது.என்றால் வியப்பாக இல்லை. ஒரு ரப்பர் பை அல்லது நெகிழி கூட ஒரு அளவுக்கு மட்டுமே மீட்சி பெறும் ..இந்த கருவறையை இப்படி கிழியாமல், நெகிழச் செய்து, விரிவடைந்து இணக்கமாக உங்களைச் சுமக்க சொல்லித்தந்தது யார்? வேறு இயற்கை பரிணாமத்தின் பரிமாணம்தான் அதன் மூலம் உருவான ஹார்மோன்கள் தான்

 

 கருவும், கருவறையும்..

உயிர் பரிணமிக்கு முன் சாதாரண நிலையில் கருவறையின் எடை என்பது சுமார் 50 கிராம்தான்.அதன் நீளம் 7,6 செ .மீ. அகலம்:4.5 செ ,மீ.கனம் :3.0செ .மீ ஆனால் கருவுற்ற காலத்தில் அதன் எடை என்பது சுமார் 1 கிலோதான்.சின்ன குட்டியூண்டு கருவறைக்குள் கருவுறுதல் நிகழ்ந்ததும்,அந்த முட்டை எங்கடா போயி பத்திரமா உட்காருவோம்னு சுமார் ஒரு வாரம் கருவறைக்குள் ரவுண்டடிச்சி அப்புறமா கருவறையின் உட்பக்கம்  ஏதாவது ஒரு இடத்தில் செட்டில் ஆகி வளரத் துவங்குகிறது..பாவம் இப்பதான் பாப்பா கரு உட்கார்ந்திருக்கு..அதை இப்ப தொந்தரவு பண்ண வேணாம்..அப்புறமா வருவோமே..

 

 

 

 

 

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *