thodar 1: sanathaanam ethirppum...ezhuththum.. - s.g.ramesh babu தொடர்-1: சனாதானம் எதிர்ப்பும்...எழுத்தும்... - எஸ்.ஜி.ரமேஷ் பாபு
thodar 1: sanathaanam ethirppum...ezhuththum.. - s.g.ramesh babu தொடர்-1: சனாதானம் எதிர்ப்பும்...எழுத்தும்... - எஸ்.ஜி.ரமேஷ் பாபு

தொடர்-1: சனாதானம் எதிர்ப்பும்…எழுத்தும்… – எஸ்.ஜி.ரமேஷ் பாபு

ஆர்.எஸ்.எஸின் உயிர் எங்கிருக்கிறது?

வரலாறு எல்லோருக்கும் வெள்ளைப் பக்கங்களை வைத்திருக்கிறது. அதை எத்தகையை வாழ்க்கை முறையால் அவரவர் இட்டு நிறப்புகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர் வரலாற்றில் நிர்ணயிக்கப்படுகிறார். மனிதநேயம், அடித்தட்டு வர்க்கங்கள் மீதான நேசப் பார்வை, சாதி, மத, வேறுபாடுகள் கடந்த அன்பை விதைக்கும் மக்கள் ஒற்றுமை , சமூக, பாலின ஒடுக்குமுறைகள் எதிர்ப்பு, சமூக சமத்துவம் இதற்கெல்லாம் மேலாக வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனிதத்தின் உச்சம்தான் வள்ளலாரின் ஆன்மீக நோக்கு.

இந்த நோக்கு சமூகத்தை முற்போக்கு திசையில் கொண்டு செல்லும் கருத்தியல் பார்வை. சனாதான கருத்தியலுக்கு எதிரானது வள்ளலார் சிந்தனைகளின் அடித்தளம். ஆனால் அவரை சனாதனத்தின் உச்ச நட்சதிரம் என ஆர்.எஸ்.எஸ் இன் தமிழக தலைமைப் பிரச்சாகரும், தமிழக ஆளுனருமான ரவி வடலூரில் பேசி உள்ளது, ஏதும் அறியாமல் அல்ல திட்டமிட்டே வள்ளாலாரை சனானவாதியாக முன்நிறுத்தவே!

இது இன்று நேற்றல்ல ஆர்.எஸ்.எஸ் ஸின் பிறப்பே இப்படி பொய்களாலும், கற்பனை கதைகளாலும் கட்டமைக்கப்பட்டதுதான். இதை மிகவும் எளிமையாக, வரலாற்று போக்கில் சமகால அரசியலுடன் இணைத்து எழுதப்பட்டுள்ள புத்தகமதான் “ஆர்.எஸ்.எஸ் ஸின் ஆழமும் அகலமும்” தேவனூர மகாதேவா எழுதியதை கனகராஜ் பாலசுப்பிர மணியன் தமிழில் மொழிபெயர்த்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

கன்னட இலக்கிய வட்டாரத்தில் கிளர்ச்சியாளராக அறியப்படும் பத்மஸ்ரீ தேவனூர மகாதேவா, குசும பாலே நாவலுக்காக மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 2010 இல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கன்னடம் முதன்மை பயிற்று மொழியாக ஆக்கப்படவில்லை என்பதை எதிர்த்து 7 லட்சம் பணமுடி கொண்ட திருபதுங்கா விருதை நிராகரித்தவர். இதற்கும் மேல் 1990 களில் எழுத்தாளர் ஒதுக்கீட்டின் கீழ் அவரை ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கும் அரசாங்கத்தின் வாய்ப்பை அவர் நிராகரித்தவர். அவரின் மனித சமூகத்தின் அன்பின் விளைவாக எழுந்துததான் இந்தப் புத்தகம் என்றால் அது மிகையாகாது.

இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை அவர் இப்படி கூறுகிறார்:

”ஆம், மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அபாயம் குறித்து உணர்த்த வேண்டும் தான்… எவ்வாறு? நம் நாட்டார் கதைகளில் ஏழு கடலுக்கு அப்பால் இருக்கும் குகைக்குள் தன் உயிரை கிளி உருவத்தில் மறைத்து வைத்து, நாட்டிற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மாயாவியின் கதை வரும். அவன் ஏற்கெனவே மாயாவி. கபடதாரி. அவன் உருவம் நூற்றுக்கணக்கானவை. வசீகரணம் செய்வதிலும் சிறந்தவன். அவனை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் அவனை மிஞ்ச முடியாதாம். ஏனெனில் ஏதோ ஒரு குகைக்குள் அவனுடைய உயிர் கிளி உருவத்தில் பாதுகாப்பாக இருக்கிறது.

முதலில் நாம் அதன் உயிர் எங்குள்ளது என்பதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இது போன்ற முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக ஆர் எஸ் எஸ் ஸின் பழங்கால புராதன வாசனை நிரம்பிய கிணற்றை எட்டி பார்த்தேன். அங்கு தெரிந்த காட்சிகள் மிகக் கொடியதானவை. இந்தச் சிறு புத்தகத்தில் இருப்பவை அவற்றின் ஒரு கூறு மட்டும் தான்.” என்று விவரிக்கிறார். அவர் சொன்ன குறியீடுகளை தமிழ் வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

“நம் இந்து ராஷ்ட்ரத்தில் வேதங்களை அடுத்து மனுநீதி தான் புனித மத நூல். ஆதி காலம் தொட்டு நம் மரபு, தத்துவம், வழக்கங்கள் அனைத்துக்கும் அது தான் அடிப்படைக் கோட்பாடு. பல நூற்றாண்டு காலங்களாக இருக்கும் நம் நாட்டின் ஆன்மீக மற்றும் தெய்வீக வழிகளை ஒன்றிணைத்த உன்னத நூல் அதுவாகும். கோடானுகோடி இந்துக்கள் இன்றும் தம் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றும் விதிகளின் அடிப்படை நூலும் அதுவே. ஆகையால், மனுநீதி தான் இன்றைய இந்து சட்டம்.” என வி.டி. சாவர்க்கர் சொல்வதும்

”சில மேற்கத்திய நாடுகளிலிருந்து சில விதிகளை எடுத்துக்கொண்டு பொருத்தமே இல்லாது குறுக்கல் முறுக்கலாய் ஒட்டியது தான் நம் அரசமைப்புச் சட்டம். ஐக்கிய நாடுகளின் சாசனத்திலிருந்து (சார்டர்) அல்லது முந்தைய உலக நாடு அமைப்பிலிருந்து சில போலி தத்துவங்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளின் அரசமைப்புச் சட்டங்களின் ஒட்டுத் துணி வேலை இது.” என கோல்வால்கர் சொல்வதும் நமது அரசியல் சாசன சட்டத்தில் சனாதனம் கோலோச்ச வேண்டும் என்ற அடிப்படையில்தான்.

“புருஷசூக்த”த்தில் வரும் சமூக அமைப்புதான் இவர்களுக்கு கடவுள். பிராமணன் சிரம், சத்திரியன் தோள், வைசியன் தொடை, சூத்திரன் பாதம் எனும் சமூக அமைப்புதான் ஆர் எஸ் எஸ் ஸின் கடவுள். இதை கோல்வால்கர் “உயிர் மிக்க பரமாத்மா” என்றார். இந்த நம்பிக்கைதான் ஆர் எஸ் எஸ் ஸின் அடித்தளம் மற்றும் இதுதான் அவர்களுக்கு சாட்சாத் பகவானும் கூட! ” ஆக வர்ணாசிரம தர்மத்தை நிலை நாட்டுவதுதான் இவர்களில் இந்து தேசியம்.

அம்பேதகர் முன்வைத்துள்ள இன்றைய அரசியல் சட்டம் இவைகளுக்கு எதிராக நிற்கிறது. பண்மைத்துவத்தை பறைசாற்றுகிறது. இது அவர்களுக்கு இனிதாய் இல்லை. மாநிலங்களின் ஒன்றியம் இவர்களுக்கு ஒற்றை நாடு எனும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்கிறது. எனவேதான் ஆர்.எஸ்.எஸ் வழி நடத்தும் பாஜக அதிகாரத்திற்கு வந்ததும், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்ப்படுகிறது அது ஜி.எஸ்.டி துவங்கி ஆளுனர் தலையீடுவரை நீள்கிறது.

இட ஒதுக்கிட்டை ஒழிப்பது என்பது அவர்களின் கட்டாய தேவையாய் இருக்கிறது. எனவேதான் தகுதி திறமை என பசப்புகின்றனர். மண்டல் கமிஷனை எதிர்த்து கலவரங்களை செய்ததும் இதன் பொருட்டே! கல்வியில் புராணப் புளுகுகளை திணிப்பதும், வரலாற்றை மாற்றி எழுதுவது, புதிய வரலாற்று அமைப்புகளை உருவாக்குவதும் இவர்களின் இந்து ராஷ்டிர கனவு. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கூட்டத்தை மதத்தின் பெயரால் திரட்டுவது மிக எளிது என்ற சூத்திரத்தை மிக இலகுவாக கைக்கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.

ஒரு எதிரியைக் கட்டமைத்து அவர்கள் மீது வன்மத்தை தூவி கலவரங்களை அல்லது படுகொலைகளை நடத்துவது இவர்கள் சித்தாந்த வழிகாட்டியாக ஹிட்லரின் பாணி. அதையே இங்கு முன் நிறுத்துகின்றனர். எதையும் யோசிக்காமல் தலைவனுக்கு கீழ்படியும் ஒரு மந்தை சமூகம் அவர்கள் விரும்புவது. அதை நோக்கிதான் இந்திய சமூகத்தை உந்தித் தள்ளுகின்றனர். இது குறித்தெல்லாம் மிக ஆழமாக இந்த நூல் விவரிக்கிறது.R S S in Azhamum Agalamum

ஆர்.எஸ்.எஸ் ஸின் துவக்கம் முதல் இன்றைய மோடியின் கார்ப்பரேட் கூட்டுக் களவாணி கொள்ளை வரை இந்த 40 பக்கம் கொண்ட புத்தகம் கவனத்துடன் உரத்துப் பேசுகிறது. மாநில உரிமைகள் நசுக்கப்படும் சூழலில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கேள்விக்குள்ளாக்கப்படும் இன்றைய ஆட்சிமுறையில் ஜனநாயக இயக்கங்களில் ஒற்றுமைக்கு அறைகூவி தேவனூர மகாதேவா எழுத்துக்கள் அழைக்கிறது.

கட்சிகள் எப்படியேனும் பெயர்களை வைத்துக்கொள்ளுங்கள், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்ததிற்கு எதிராக இருந்தால் போதும் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை காவி இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்களிடம் பேசிய புத்தகமாய் ஆர்.எஸ்.எஸ் ஸின் ஆழமும் அகலமும் திகழ்கிறது. கர்னாடக காங்கிரஸ் வெற்றியில் எப்படி கல்புர்கியும், கவுரி லங்கேசும் பொறியாய் இருந்தார்களோ அப்படி கன்னடத்தில் லட்சக்கணக்கில் விற்பனையான இந்த புத்தகமும் ஒரு பொறியாய் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சனாதனத்திற்கு எதிரான எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்போம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *