thodar 12 : naan migavum vegamanavan - a.bakkiyam தொடர் 12 : நான் மிகவும் வேகமானவன் - அ.பாக்கியம்
thodar 12 : naan migavum vegamanavan - a.bakkiyam தொடர் 12 : நான் மிகவும் வேகமானவன் - அ.பாக்கியம்

தொடர் 12 : நான் மிகவும் வேகமானவன் – அ.பாக்கியம்

தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டியில் 1960ல் அறிமுகமானார் கேசியஸ் கிளே. அந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி நடந்த போட்டியில் டன்னி ஹன்சேக்கர் என்பவரை ஆறு சுற்றில் வீழ்த்தி வாகை சூடினார்.அதிலிருந்து 1963ம் ஆண்டு  இறுதி வரை வெற்றி தேவதை அவர் வீட்டு வேலைக்காரியாக இருந்தாள்.  19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து அவர் வாகை சூடினார்.

நாக் அவுட் மூலம் மட்டுமே 15 வெற்றிகளைப் பெற்று வீறு நடை போட்டார்.  டோனி எஸ்பர்டி, ஜிம் ராபின்சன் , டோனி ஃப்ளீமன், அலோன்சோ ஜான்சன், ஜார்ஜ் லோகன், வில்லி பெஸ்மனாஃப், லாமர் கிளார்க் ,டக் ஜோன்ஸ் மற்றும் ஹென்றி கூப்பர் உள்ளிட்ட குத்துச்சண்டை வீரர்களை வளையத்திற்குள் கேசியஸ் கிளேசிதறடித்தார். அதோடு மட்டுமல்ல… தனது முன்னாள் பயிற்சியாளரும் மூத்த குத்துச்சண்டை வீரருமான ஆர்ச்சி மூரையும் தோற்கடித்து குருவை வீழ்த்திய சிஷ்யனாக வலம் வந்தார்.

குத்துச்சண்டைப் போட்டிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே மறுபுறத்தில்,  இனவெறிக்கு எதிரானத் தேடலையும் கேசியஸ் கிளே தொடர்ந்து கொண்டிருந்தார். மால்கம் எக்ஸ், கேசியஸ் கிளேவை கவர்ந்தது போலவே, கேசியஸ் கிளேவும் மால்கம் எக்ஸை கவர்ந்தார். மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர். மனித உரிமை ஆர்வலர். முஸ்லிம் தேசம் என்ற அமைப்பின் செய்தி தொடர்பாளர்.

அவருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட  கேசியஸ் கிளே இஸ்லாம் மதத்திற்கு மாறுவது என்று முடிவு செய்தார். அமெரிக்காவில் இருந்த கிறிஸ்தவ மதம் கருப்பர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கிறது என்ற கருத்து அவருக்கு வலுவாக இருந்ததே இந்த முடிவுக்கு காரணமாகும். ஆனால் இந்த முடிவை உடனடியாக, வெளிப்படையாக அவர் அறிவிக்கவில்லை. அதற்கான தருணத்தை எதிர்நோக்கி அவர் காத்துக் கொண்டிருந்தார்.

அவரது குத்துச்சண்டை களம் அதிகமாக பேசப்பட்ட காலம் அது. 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஃப்ளோரிடா மாநிலம் மியாமி கடற்கரையில் சன்னி லிஸ்டன் என்ற உலக ஹெவி வெயிட் சாம்பியனுடனான போட்டி. லிஸ்டன் குத்துச்சண்டை அரங்கில், உலகில் மிகவும் அச்சுறுத்தும் வீரராக கருதப்பட்டார். உலக தரவரிசை வீரர்கள் 10 பேரில் எட்டு பேரை தோற்கடித்திருந்தார்.  அதில் ஏழு பேரை நாக்அவுட் மூலம் வீழ்த்தியிருந்தார். அதோடு மிகக் குறைவான நேரத்தில் மற்ற வீரர்களை வீழ்த்திய பெருமையும் சன்னி லிஸ்ட்டனுக்கு உண்டு.

லிஸ்டன் கருப்பினத்தவராக இருந்தாலும் வசதி படைத்த வெள்ளை மனிதர்களால் விரும்பப்பட்டார். காரணம் சன்னி லிஸ்டன் குத்துச்சண்டை வீரராக மட்டுமல்ல… முதலாளிகளுக்கு அடியாளாக தொழிலாளர்களுடைய கூட்டங்களை கலைப்பவராக, அவர்களை காயப்படுத்துபவராக, கருப்பினத்தின் கருங்காலியாக அவர் செயல்பட்டார். கேசியஸ் கிளே ஒன்றும் பெரிய ஆளல்ல… அவரை இரண்டே சுற்றுகளில் நாக்அவுட் செய்துவிடலாம் என்று  சன்னி லிஸ்டன் மனக்கணக்கு போட்டார். அதனால் போட்டி நடைபெறு வதற்கு முன்புவரை மிதமான பயிற்சிகளையே மேற்கொண்டார்.

இந்த குத்துச்சண்டைப்  போட்டியை கவர் செய்வதற்காக  நியமிக்கப் பட்டிருந்த 46 பத்திரிகையாளர்களில் 43 பத்திரிகையாளர்கள் சன்னி லிஸ்டன்  எளிதில் வென்று விடுவார்; கேசியஸ் கிளே குத்துச்சண்டை வளையத்தில் படுகாயம் அடைவது நிச்சயம். கேசியஸ் கிளேவின் அழிவைத் தடுக்க முடியாது. மிகவும் ஆபத்தான மனிதருக்கு எதிராக கேசியஸ் கிளே மோத தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று எழுதித் தள்ளினார்கள். கேசியஸ் கிளேவை சிறுமைப்படுத்தி, பயமுறுத்தி, அவரின் நம்பிக்கை குலையும் விதமாக செயல்பட்டனர். அவையனைத்தையும் கேசியஸ் கிளே அலட்சியப் படுத்தினார். தன்னுடைய வெற்றி உறுதி என்பதில் திடமாக இருந்தார்.

இந்தப் போட்டியை காண வந்திருந்த மால்கம் எக்ஸ், ‘‘கேசியஸ் கிளே சிறந்த கருப்பின வீரன். அவர் நிச்சயம் வென்று விடுவார்’’ என்றார். கிளேயின் பயிற்சியாளரோ,‘‘ எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அவரை கேசியஸ் கிளே மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்’’ என்று உறுதிபடத் தெரிவித்தார். கேசியஸ் கிளேவோ தான் புயல்வேகம் கொண்டவன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக,  ‘‘நான் மிகவும் வேகமானவன். படுக்கை அறையில் ஸ்விட்ச்சை தட்டிவிட்டு விளக்கு அணையும் முன் படுக்கையில் கிடப்பேன்’’ என்று கூறினார்.

ஆரம்பத்தில் இந்த குத்துச்சண்டை போட்டியைக் காண பார்வையாளர்கள் குறைவாகவே பதிவு செய்திருந்தனர். போட்டியைக் காண அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதும், லிஸ்டன், கேசியஸ் கிளேயை அநாயசமாக அடித்து வீழ்த்தி விடுவார் என்ற ரசிகர்களின் எண்ணமும் போட்டியைக் காண ஆர்வம் ஏற்படாததற்கு காரணங்களாக சொல்லப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக,கேசியஸ் கிளே இஸ்லாம் மதத்தை தழுவப் போவதாக அவரது தந்தையின் மூலமாக வெளியான செய்திதான், போட்டியைக் காண பலரும் விரும்பாததற்கு காரணம் என கேசியஸ் கிளேவை ஸ்பான்சர் செய்த பில் மேக் டொனால்ட் உறுதியாக நம்பினார்.

குத்துச்சண்டை போட்டி நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக கேசியஸ் கிளேவை சந்தித்த டொனால்ட், ‘‘இஸ்லாம் தேசம் என்ற அமைப்பிற்கான உன் ஆதரவை வாபஸ் பெறவில்லை என்றால் போட்டியே ரத்து செய்யப்படும்’’ என்று எச்சரித்தார். இஸ்லாம் தேசம் என்ற அமைப்பை ஆதரித்து வந்த கேசியஸ் கிளே, அலட்சியமாக பதிலளித்தார். ‘‘நான் அந்த அமைப்புக்கு ஆதரவாகத்தான் செயல்படுவேன். அதை மறைக்க மாட்டேன். இஸ்லாம் தேசத்திற்கான என் ஆதரவு எப்போதுமே இருக்கும். நீங்கள் போட்டியை நிறுத்த விரும்பினால் அது உங்கள் விருப்பம். குத்துச் சண்டையை விட இனவெறிக்கு எதிர்வினை ஆற்றக்கூடிய இஸ்லாம் மதம்தான் முக்கியம்’ என்றார். தான் இஸ்லாம் மதத்தை தழுவ இருப்பதை இந்த தருணத்தில்தான் அவர் முதல் முறையாக சூசகமாக வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு போட்டியின் விளம்பரம் கொஞ்சம் சூடு பிடித்தது. குறிப்பிட்ட தேதியில் போட்டியும் துவங்கியது. பார்வையாளர் அரங்கில் அதிகளவில் வெள்ளையர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்தனர். சிகரெட் மற்றும் சுருட்டு புகை மண்டலத்தால் அரங்கம் பனிமூட்டமாக இருந்தது. பிரபல பாடகர் சாம் குக், கால்பந்து நட்சத்திரம் ஜிம் பிரவுன், மால்கம் எக்ஸ், கேசியஸ் கிளேவின் பெற்றோர் மற்றும் நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க பெரும்புள்ளிகள் பார்வையாளர் மாடத்தில் வீற்றிருந்தனர்.

கேசியஸ் கிளேவின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் தொலைக்காட்சி ஒளிப்பரப்பை காண ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளிலும் போட்டியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக 7 லட்சம் ரசிகர்கள் முன்பணம் செலுத்தி இருந்தனர். போட்டியை நடத்தியவர்களின் காட்டில் டாலர் மழை பொழிந்தது.

போட்டி தொடங்குவதற்கான மணி ஒலித்தது. இரு வீரர்களும் மேடையில் தோன்றி பார்வையாளர்களைப் பார்த்து கையசைத்தனர்.  சன்னி லிஸ்டனுக்கு ஆதரவான குரல்கள் மேலோங்கி இருந்தது. முதல் இரண்டு சுற்றுகள் சமமாக போனது. அடுத்தடுத்த சுற்றுக்களில் கேசியஸ் கிளே தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். பின் வாங்கும் உத்தி, வளையத்துள் நடனமாடும் முறை, வேகமான செயல்பாடு என கேசியஸ் கிளே பலமுனை தாக்குதலை தீவிரப்படுத்தி சன்னி லிஸ்டனை நிலைகுலைய வைத்தார்.

எட்டாவது சுற்றில், உலகப் புகழ்பெற்ற… குத்துச்சண்டைப் போட்டியாளர் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருந்த சன்னி லிஸ்டனை,  22 வயது நிரம்பிய கேசியஸ் கிளே மண்ணைக் கவ்வ வைத்தார். உலகம் முதலில் அதிர்ச்சியடைந்தது; பின்னர் ஆச்சரியப்பட்டது. கருப்பின மக்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். சொந்த நாட்டில் நிறவெறியால் நிராகரிக்கப்பட்ட கேசியஸ் கிளே உலகம் முழுவதும் ஆராதிக்கப்பட்டான்.

போட்டி அறிவிப்புக்கு பின்னும், போட்டிக்கு முன்னும், போட்டியின் போதும் தன்னை சிறுமைப்படுத்தும் செயல்களையும், பேச்சுக்களையும் கேசியஸ் கிளே பொருட்படுத்தவில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன் மீதான நம்பிக்கையை அவர் தளர விடவில்லை. கடைசி வரை தன் நம்பிக்கையை அவர் அடர்த்தியாகவே வைத்திருந்தார். பல்வேறு கணிப்புக்களை பொய்யாக்கி வெற்றி வாகை சூடினார். லிஸ்டனை மூக்கில் குத்தி வீழ்த்தியதன் மூலம் உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தார்; வியக்க வைத்தார்.

அந்தப் போட்டி இருபதாம் நூற்றாண்டின் நான்கு முக்கிய போட்டிகளில் ஒன்றாக கருதப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் நடந்த யுத்தம் போன்ற ஒரு போட்டி என்று அந்தப் போட்டியை சில பத்திரிகைகள் சிலாகித்தன. நாடு முழுவதும் உள்ள மது விடுதிகளிலும், திரையரங்குகளிலும் கருப்பின மக்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேசியஸ் கிளேவின் வெற்றி அவர்களை எழுச்சி கொள்ள செய்தது. கருப்பின மக்களின் உணர்ச்சிகள் ஆனந்தக் கண்ணீராகவும், ஆட்டம் பாட்டுக்களாகவும் வெளிப்பட்டது.

போட்டியின் எட்டாவது சுற்றில் லிஸ்டனை மட்டுமல்ல… போட்டிக்கு முன்பாக பத்திரிக்கைகளும், பிரபலங்களும் தன்னை பழித்தும் இழித்தும் கூறிய  கருத்துக்களையும் காலடியில் கேசியஸ் கிளே வீழ்த்தினார். வெற்றிக் களிப்பில் குத்துச்சண்டை மேடையில் வீறுகொண்டு எழுந்தார். வளையத்தைச் சுற்றி சுற்றி ஓடினார். ‘‘நானே மகத்தானவன்… நானே உலகத்தின் ராஜா’’ என்று கைகளை உயர்த்தி காற்றின் காதுகளில் வானம் எட்டும் வரை மீண்டும் மீண்டும் முழங்கினார். நானே மகத்தானவன் என்ற வார்த்தை குத்துச்சண்டை வளையத்துக்குள் அவரது வாழ்நாள் வரை நிரந்தர வாசம் செய்தது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *