thodar 13 : vellai inaveriyarkalai ulukkiya mathamatramum peyar matramum - a.bakkiyam தொடர் 13: வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய மதமாற்றமும் பெயர்மாற்றமும் - அ.பாக்கியம்
thodar 13 : vellai inaveriyarkalai ulukkiya mathamatramum peyar matramum - a.bakkiyam தொடர் 13: வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய மதமாற்றமும் பெயர்மாற்றமும் - அ.பாக்கியம்

தொடர் 13: வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய மதமாற்றமும் பெயர்மாற்றமும் – அ.பாக்கியம்

வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய

மதமாற்றமும் பெயர்மாற்றமும்

பிரம்மாண்ட வெற்றியின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஒரு மனிதர் அதை தக்கவைத்துக் கொள்வதற்காக அனைவரையும் அனுசரித்து செல்வது வழக்கமாக இருக்கும். ஆனால் உலகப்புகழ் பெற்றபிறகும் கேசியஸ் கிளே இனவெறிக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை.இனவெறிக்கு எதிராக அவர் எதிர்வினை ஆற்றத் தயங்கவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முரண்பாடுகள் இருந்தாலும் வெள்ளை இனவெறிக்கு எதிர்வினையாக மதம் மாறுவது என்ற முடிவை போட்டியில் வெற்றிபெற்ற அடுத்தநாள் பிப்ரவரி 27 1964ஆம் ஆண்டு அறிவித்தார்.

மதமாற்றம் எந்த சமூக ஒடுக்குமுறைகளுக்கும் முழுமையான தீர்வு கண்டதில்லை என்பது வரலாறு.ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து அடக்கப்பட்டவர்கள் எதிர்வினை ஆற்றுவதற்கு ஒரு களமாக மதம் என்பது வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது.அவை தற்காலிக நிவாரணத்தையும்,எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கு பக்கபலமாக இருந்துள்ளது.கேசியஸ் கிளேவும் இந்த வகையிலே தான் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

இஸ்லாம் தேசம் (Nation of Islam) என்ற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பின் மதபோதகர் எலிஜா முகமது, கேசியஸ் கிளேவிற்கு முகமது அலி (புகழுக்குரியவர், மிக உயர்ந்தவர்) என்ற பெயரை சூட்டினார். கேசியஸ் கிளே தன் பெயர் மாற்றத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். ஏற்கனவே சூட்டப்பட்ட பெயரில் அடிமைத்தனத்தை சுமந்து கொண்டிருப்பதாக அவர் கருதினார்.

கேசியஸ் மார்செல்ஸ் கிளே ஜூனியர் என்பது அடிமை உடைமையாளரின் பெயர். ஒரு வெள்ளை மனிதனின் பெயர் என்பதால் மாற்ற விரும்பினார். கேசியஸ் மார்செல் கிளே என்பவர் அடிமை ஒழிப்புவாதியாக இருந்தாலும் அவர் அடிமைகளை வைத்திருந்தார். வெள்ளை மேலாதிக்கத்தின் பிரதிநிதியாக இருந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து பெற்ற அடிமைகளை விட தன்காலத்தில் அதிகமான அடிமைகளை சேர்த்து இருந்தார்.அடிமை ஒழிப்புச் சட்டம் அரசியல் சாசனத்தில் சேர்க்கிற பொழுது அதிகமான அடிமைகளை வைத்திருந்தவர்களில் கேசியஸ் மார்செல் கிளேவும் ஒருவர்.

அந்த அடிமை உடைமையாளரின் பெயரை முகமது அலி வெறுத்தார். அவரின் பெயரை நான் ஏன் சுமக்க வேண்டும்.? என் கருப்பின மூதாதையர்களை கண்ணுக்குத் தெரியாதவர்களாக, அறியப்படாதவர்களாக, மரியாதை அற்றவர்களாக நான் ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். முகமது அலி என்பது ஒரு சுதந்திர மனிதனின் பெயர் என்று அறைகூவல் விடுத்தார்.

வெள்ளை நிற அதிகார வர்க்கத்தை அதன் நிறுவனங்களை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் உருவானபொழுதும் அதற்காக முகமது அலி பயப்படவில்லை. துணிச்சலாக எதிர்வினை ஆற்றத் தொடங்கினார்.”நான் அமெரிக்கா. நீங்கள் அடையாளம் காணாத பகுதி நான். நான் கருப்பு நம்பிக்கை. துணிச்சல் என்பது என் பெயர். அது உங்களுடையது அல்ல. என் மதம் உங்களுடையது அல்ல.என் இலக்குகள் என்னுடையது என்று வெள்ளை நிறவெறியாளர்களுக்கு சவால் விடுத்தார்.

முகமது அலியை ஆரம்பத்தில் இஸ்லாம் தேசத்தில் இணைத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டினார் எலிஜா முகமது. அதற்கு அவரது குத்துச்சண்டை வாழ்க்கையை காரணம் காட்டினார்கள். மால்கம் எக்ஸ், முகமது அலியுடன் தொடர்பு கொண்டு அவரது ஆன்மீக அரசியல் வழிகாட்டியாக மாறினார். சன்னி லிஸ்டனை அவர் வென்ற பிறகு அவருடைய புகழ் ஓங்கியது. இந்த தருணத்தில் அவரை இஸ்லாம் தேசம் உடனடியாக உள்ளிழுத்துக் கொண்டது. இஸ்லாமில் தீவிர பற்றாளராகவே முகமது அலி இருந்தார். கடவுள் எல்லா மக்களையும் படைத்தார். அவர்களின் மதம் எதுவாக இருந்தாலும் சரி. மத ரீதியாக யாரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக இருக்கக் கூடாது. அவ்வாறு ஒருவர் இருந்தால் அது மிகப் பெரிய தவறு என்று முகமது அலி கூறினார்.

2001 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த பொழுது முகமது அலி தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார். “இஸ்லாம் ஒரு அமைதி மதம்; அது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும் இல்லை; மக்களை கொள்வதும் இல்லை.இந்த அழிவை ஏற்படுத்திய ஒரு குறிப்பிட்ட இஸ்லாமியரை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது’ என்று கோபமாக கூறினார்.web series

மேலும், அவர்கள் உண்மையான இஸ்லாமியர்கள் அல்ல. அவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் வெறியர்கள். இஸ்லாமிய ஜிகாதிகள் என்று அழைக்கப்படுகின்ற இரக்கமற்ற வன்முறை என்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது என்று உண்மையான இஸ்லாமியர்கள் புரிந்து கொள்வார்கள். இஸ்லாமியர்களாகிய நாம் இஸ்லாத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நிற்க வேண்டும். அரசியல் தலைவர்கள் இஸ்லாம் மதத்தைப் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த பாதகச் செயலை செய்தவர்கள்,  இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன என்பதை பற்றிய மக்களின் பார்வையை திசை திருப்பி உள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்தி மக்களை வென்றெடுக்க வேண்டும் என்று கூறினார்.

1972ஆம் ஆண்டு மெக்காவுக்கு யாத்திரை மேற்கொண்ட அவர், பிரபலமான இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றார்.

முகமது அலியின் பெயர்மாற்றமும் மதமாற்றமும் அமெரிக்காவில் மிகப் பெரும் சர்ச்சையையும், உணர்ச்சிபூர்வமான விவாதங்களையும், பல இடங்களில் இனமோதல்களையும் ஏற்படுத்தியது.பெயர் மாற்றமும் மதமாற்றமும் வெள்ளை நிற வெறியர்களுக்கு ஒரு பெரும் அடியாக இருந்தது. இதனால் அவர்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. வெள்ளை நிற வெறியர்கள் மட்டுமல்ல… சக விளையாட்டு வீரர்களும் அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். கருப்பர்களுக்கான சிவில் உரிமைப் போராட்டத்தை நடத்தியவர்களும் முகமது அலியின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார்கள். இதற்கெல்லாம் முகமது அலி பொறுமையாக பதில் அளித்தார்.

இளைஞர்கள் முகமது அலியின் இந்த எதிர்வினையை கண்டு எழுச்சியுற்றார்கள். 1964ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற கருப்பின மக்களின் சம உரிமை போராட்டத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் பல ஆயிரம் சிவில் உரிமை போராளிகள் கைது செய்யப்பட்டார்கள். தெற்கு முதல் வடக்கு வரை இந்த போராட்டம் பரவிக் கிடந்தது. வெள்ளை நிறவெறி அமைப்பான கூக்லக்ஸை சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களை குண்டு வைத்து தகர்த்தனர். கருப்பர் பகுதியில் இருந்த 36க்கும் மேற்பட்ட வழிபாட்டுத்தலங்களை  தீக்கரையாக்கினார். வடஅமெரிக்காவில் உள்ள சேரிகளில் வாழ்ந்த கருப்பின இளைஞர்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அமெரிக்காவில் முதல் முதலாக நகர்ப்புற எழுச்சி நிகழ்ந்தது. குத்துச்சண்டையும், இதில் வெற்றி பெறும் கருப்பின வீரர்களின் செயல்களும் இனவெறிக்கு எதிரான எழுச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த மதமாற்றம் பெயர் மாற்றத்திற்கு பிறகு முகமது அலி கலந்து கொள்ளும் ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும் கருப்பின மக்களின் எழுச்சிக்கும் வெள்ளை நிறவெறியை ஆதரிப்பவர்களுக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்பட்டது. ஜாக் ஜான்சனுக்கு பிறகு 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் குத்துச்சண்டை இனவெறி எதிர்ப்பு போராட்டத்தின் மையமாக மாறியது. அதன் அச்சாணியாக முகமது அலி இருந்தார்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *