தொடர்-15 : சமகால நடப்புகளில் மார்க்சியம் - என். குணசேகரன் thodar -15 : samakaala nadappukalil marxiam - n.gunasekaran
தொடர்-15 : சமகால நடப்புகளில் மார்க்சியம் - என். குணசேகரன் thodar -15 : samakaala nadappukalil marxiam - n.gunasekaran

தொடர்-15 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

உலக சட்டம் நீதி என்பதெல்லாம் யாருக்கானது?

இன்றைய உலகில் நாடுகளுக்கிடையே உள்ள உறவுகள் எப்படிப்பட்டது? ஜனநாயக, சமத்துவ நிலையில் இந்த
உறவுகள் உள்ளனவா?
இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில்தான் உண்டு. இன்றைய சர்வதேச உறவுகள் அராஜகம்,அடிமைத்தனம்
நிறைந்ததாகவே உள்ளன.

பொருளாதாரத் தடை

ஈரான், ரஷியா உள்ளிட்ட 15 நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு, உலக வர்த்தகத்திலிருந்து அவை
விலக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகள் செய்த தவறுதான் என்ன?
இதில் பல நாடுகள் அமெரிக்காவின் அடாவடித்தனத்தை ஏற்காமல் சுயமாக தங்களது கொள்கைகளை அமைத்துக்
கொள்ள முயற்சிக்கின்றன. தனக்கு அடங்காமல் எப்படி அவை செயல்படலாம் என்று அவர்களது
பொருளாதாரத்தையும்,வளர்ச்சியையும் முடமாக்கிட ஏகாதிபத்திய நாடுகள் கையில் எடுக்கும் ஆயுதம்தான்
பொருளாதாரத் தடை.
எனவே, இன்று சர்வதேச உறவுகளில் சமத்துவம், ஜனநாயகம் எதுவும் இல்லை.வல்லான் வகுத்ததே வாய்க்கால்
என்பது பழமொழி. ஏகாதிபத்தியம் வைத்ததே சட்டம், நீதி என்பது இன்றைய உலக நிலை.
அமெரிக்கா போன்ற நாடுகளின் உலக மேலாதிக்கம் எவ்வாறு உருவானது? இது ஆண்டவனால் விதிக்கப்பட்டது
அல்ல.
மூன்றாம் உலக நாடுகள், ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டி, இந்த மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏழை நாடுகளின் சொத்துக்களை அபகரித்து அந்த நாட்டு உழைப்பாளி மக்களின் உழைப்பைச் சுரண்டி, ஏற்றம்
பெற்று, உலக ஆதிக்கத்தை அமெரிக்கா போன்ற நாடுகள் எட்டியுள்ளன.
நூற்றாண்டுகளாக, பணக்கார நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை சூறையாடி தங்களை வளர்த்துக்
கொண்டார்கள். இதுவே,தற்போது ஏழை நாடுகளில் நீடிக்கிற வறுமை, பின்தங்கிய நிலைமைகளுக்கு முக்கிய காரணம்.
ஆட்டம் காணுகிற மாளிகை
ஆனால் சமீப காலங்களில் ஏகாதிபத்தியம் கட்டிக் காத்து வந்த உலக மேலாதிக்கம் எனும் மாளிகை, ஆட்டம் காணுகிற
வகையில் சில நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
உலகப் பரிவர்த்தனையில் டாலர் பயன்பாட்டில் சரிவு (de-dollarization) நிகிழ்ந்து வருகிறது.
கடந்த காலங்களில் ஒன்றிரண்டு நாடுகள் மட்டும் பொருளாதார தடைக்கு ஆளாகும் நிலை இருந்தது. தற்போது அதிக
நாடுகள் மீது இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொருளாதாரத் தடை எனும் ஆயுதத்தை பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை மேலும்
மேலும் அடக்கி ஒடுக்கிட முயற்சிப்பது எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஏழை நாடுகள் தங்களது பொருளாதார வளர்ச்சிக்கு வேறு வழிகளை நாடுகிற நிலை ஏற்படுகிறது. இதனால்தான்
சந்தையில் டாலரை ஒதுக்குகிற போக்கு தீவிரமடைந்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, உக்ரைன் போரை காரணம் காட்டி ரஷ்யா மீது கடும் பொருளாதார தடையை அமெரிக்கா
விதித்துள்ளது. இது அந்நாட்டிற்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.இதிலிருந்து மீள்வதற்கு ரஷியா பல
நாடுகளோடு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
இந்த ஒப்பந்தங்களில் ரஷிய ரூபிள் மற்றும் இதர கரன்ஸிகளை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது டாலர்
பயன்பாட்டிற்கு மேலும் ஒரு சரிவு.
சமீபத்தில் சீன, பிரெஞ்சு கம்பெனிகள், சீன கரன்சியில் வர்த்தகம் நடத்த ஒப்பந்தம் செய்து கொண்டன. சீன, பிரேசில்
நாடுகள் அவரவர் தேசிய கரன்சிகளில் வணிகம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.
உலகில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முனைப்பாக செயல்பட்டு வரும் சூழலில் பல நாடுகள் சீனாவுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.
போஓ மன்றம் (Boao Forum) எனப்படும் 25 ஆசிய நாடுகளின் மாநாட்டில் டாலரை அகற்றுவதற்கான கருத்துக்கள்
அதிகமாக பேசப்பட்டன. இதில் பேசிய மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் சர்வதேச நிதி நிறுவனம், டாலர் , உலக வங்கி ஆகியவற்றுக்கு எதிரான மாற்றுக்களை உருவாக்க வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார்.
அவர் ஒரு படி மேலே சென்று,ஆசிய நிதி நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை மாநாட்டில் முன்வைத்தார். டாலரை நம்பி எதிர்கால பொருளாதார நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் வலுப்பட்டு வருகிறது.

மார்க்சும் டாலர்மய சரிவும் ஒரேடியாக, டாலர் ஆதிக்கம் உலகப் பொருளாதாரத்தில் அகன்று விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்னமும் டாலர் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆனால் இப்போது டாலர் பயன்பாட்டிற்கு ஏற்படும் சரிவு நீண்டகால நோக்கில் நாடுகளுக்கிடையே உறவுகளை ஜனநாயகப்படுத்த உதவிடும். மேலாதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட நாடுகளின் கூட்டமைப்புக்கள் உருவாகிட அது உதவும். 175 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாமனிதர் உலகை ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவம் வீழ்ச்சி அடைய வேண்டுமென குரல் கொடுத்தார்.

அந்த மேலாதிக்கம் உருவானதே காலனி நாடுகளை சுரண்டி,கொள்ளையடித்து ஏற்பட்டதுதான் என்றார் அவர்.அந்த ஆதிக்கத்தை எதிர்த்து உலக உழைக்கும் மக்கள் அணி திரள வேண்டுமென்று அவர் அறைகூவல் விடுத்தார்.அவர்தான் கார்ல் மார்க்ஸ். அவரும் எங்கெல்சும் படைத்த கம்யூனிஸ்ட் அறிக்கை எனும் காவியத்தில் இந்த கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
இன்று சமகாலத்தில் நடக்கிற நடப்புகள் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்தோட்டங்களின் பின்னணியில் ஆராய்ந்தால்
டாலர்மய சரிவின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
1881- ஆண்டில் டேனியல்ஸ்சன் என்ற பொருளாதார நிபுணருக்கு மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் இங்கிலாந்திற்கு இந்தியாவிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகளின் மதிப்பு, தொழில் மற்றும் விவசாயத் துறை சார்ந்த 6 கோடி தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விட அதிகமாகும். இது ரத்தத்தை உறிஞ்சும் பழிவாங்கும் நிகழ்வு…
மார்க்சின் இந்த வாக்கியங்கள் உலக முதலாளித்துவத்தின் ஆதிக்கம், மக்களின் இரத்தத்தை உறிஞ்சி நிலைநிறுத்தப்பட்டது என்பதை விளக்குகிறது. அப்படிப்பட்ட ஆதிக்கம் தகர்க்கப்பட வேண்டும்.

டாலர் ஆதிக்கத்திற்கு எதிராக உள்ளூர் கரன்சிகளை பயன்படுத்துகிற சிறிய அளவிலான நிகழ்வும் மார்க்சிய நோக்கில்
பார்த்தால், சிறு பொறி பெருந்தீயாக உருவாகும்; என்கிற நம்பிக்கை பிறக்கிறது. உலக பாட்டாளி வர்க்க இயக்கம்
நம்பிக்கையோடு முன்னேறிட இந்த நடப்புகள் உத்வேகத்தை அளிக்கின்றன.
( தொடரும்)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *