மகிழ்ச்சிக்கான மலைப்பகுதிப் பயணங்கள்
மாசு குறைய, மாறுமா, நம் மக்கள் மனங்கள்?
வெயிலின் உச்சம், உயிர் குடிக்கும் அளவுக்கு, தட்ப வெப்ப நிலை, இருக்கும்போது பொதுமக்கள், தம்மை காப்பாற்றிக் கொள்ள, குளிர் மலைப் பகுதியினை நாடிச் சென்று, வருவதை நாம் அன்றாடம் அறிந்து வருகின்ற செய்தி ஆகும். எனினும் மகிழ்ச்சிக்காக, செல்பவர்கள் உண்மையில் அதனை அனுபவிக்கிறார்களா!? கொஞ்சம் நாம் சிந்தனை செய்யலாமே!! இயற்கையை ரசிக்க செல்லும் நம்மில் பலருக்கும் கோடை காலத்தில் அதிகம் மலைப் பகுதியில் சென்று தங்குவது, லேசான குளிர், மழைத் தூறல், பனி மூட்டம் மலைசிகரங்களில் தவழும் காட்சி, பறவைகள், போன்றவை மனதில் மகிழ்ச்சி தரும்!
ஆனால், அதிகப்படியான மக்கள் தொகை, வாகனங்கள், அவற்றின் புகை, போக்குவரத்து நெரிசல், உலா வரும் பயணிகள் வெளியேற்றும் குப்பை கழிவுகள்,அத்து மீறிய வணிகம், அவர்களின் கடைகளில் நிற்கும் மக்கள் கூட்டம், அதனால் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள், நீர் பற்றாக்குறை, போன்ற பல பிரச்சினைகள்!ஏராளம்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மலைவாச தங்குமிடங்கள் மேலே கூறப்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக அடைந்து வருகின்றன. நம் நாட்டில் உள்ள இமாலய பகுதி,வட கிழக்கு மலைத் தலங்கள், மேற்கு தொடர்ச்சி மலை உதக மண்டலம், கொடைக்கானல், சிம்லா,குளு மணாலி, ஏற்காடு, ஏல கிரி போன்ற இடங்களில் தரைப் பகுதி மக்கள் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் பயணம் சென்று வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில இடங்களில் போக்குவரத்து நெருக்கடி, காற்று, நீர் மாசு, திடக்கழிவு, பிளாஸ்டிக் கழிவு ஆகிய சூழல் பிரச்சனைகளால் தொடர்ந்து திணறி வருகின்றன.
அரசு துறைகள் எவ்வளவு திட்டங்கள் தீட்டி தூய்மை, ஒழுங்கு கட்டுப்பாடு வலியுறுத்தி செயல்பட்டாலும், மக்கள் ஒத்துழைப்பு இங்கு தேவை என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயணிகள் தங்குமிடங்களில், அறைகள் பற்றாக்குறை, அவர்களது வாகனங்கள் நிறுத்த இடம் ஆகிய பிரச்சனைகள், தங்குமிடம், உணவுகூடங்களின் அமைப்பு அவற்றால் கழிவு வெளியேற்றம் மட்டுமல்லாது, இயற்கை பகுதியில் தனி குடியிருப்பு (COTTAGE) அதன் மூலம் அங்கு தங்கும் மக்கள் எதிர் கொள்ளும் விலங்கு, இயற்கை பிரச்சனைகள்! வனம், மலை, சரணாலயங்களில் திரைப்படம் -படப் பிடிப்பு நடத்தும் குழுக்களின் அத்துமீறிய செயல்பாடுகள் ஆகியவற்றால் இயற்கை சூழல் பாதிக்க செய்கின்றன.
மலைப் பகுதிகளில் பயணிகள் வருகை சுற்றுலா வருவாயினை அரசுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெருக்கும் என்பது உண்மை!அரிய இயற்கை வளங்கள், விலங்கு, பறவைகள், இயற்கை அழகு ரசித்து மகிழ்ச்சி கொள்ளவும், சூழல் அறிவியல் அறிவினை அறிந்து கொள்ள உதவுகிறது என்பதிலும் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. எனினும் இந்த இயற்கை வாழ்விடங்கள், மக்களின் பெருக்கம், கவனக்குறைவு நடத்தை, பொதுவிடங்களில் சமூக மனப்பாங்கு குறைவு, ஆகிய காரணிகளால் அடிப்படை குறிக்கோளான” இயற்கையை பேணி பாதுகாத்தல் “சிதைந்துவிடுகிறது என்பதை உணர வேண்டும்.
சிம்லா,இமாலய பகுதி மலை சுற்றுலா தலங்களில், வாகனங்கள் பெருகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில், சுமார் 30,000 வாகனங்கள் புதியதாக வரும்பொழுது, அவற்றினால் காற்று மாசு, போக்குவரத்து நெருக்கடி, உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் மோட்டார் வாகனங்கள் எண்ணிக்கை சுற்றுலா தலத்தின் அழகை பாழ்படுத்த ஏதுவாகிவிட்டது கசவுலி, தர்ம சாலா, சோலான், டல்ஹௌசி, நைனி தால், பீம் தால் போன்ற இடங்களில் வாகனம் நிறுத்த இடம் பற்றாக்குறை ஆகிவிட்டது. நீதிமன்றம் மாற்று புற வழி சாலைகள் உருவாக்க ஆணை இட்டாலும், அதன் மூலம் இயற்கை மேலும் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் ஆகும். அழகு இயற்கை மலை பள்ளத் தாக்குகள் , தற்போது உல்லாச பயணிகள், கடைகள், உணவகங்கள் வெளியேற்றும் குப்பை கொட்டுமிடங்களாக மாறி வருவது வேதனை அளிக்கும் தகவல் ஆகும்.
ஒன்றிய அரசு, கால நிலை மாற்றம், வன சுற்று சூழல் அமைச்சகம், தேசிய தூய்மை காற்று திட்டம் (2019)மூலம் ஆக 2024 ஆம் ஆண்டுக்குள் வளிமண்டலத்தில் உள்ள கரடு முரடான மற்றும் நுண்ணிய துகள்களின் செறிவினை 20%குறைக்க முக்கிய குறிக்கோள் கொண்டு காற்று மாசு குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி ஒரு புறம் செய்து வருகிறது.ஆனால் மலை பகுதியில் வாகனம் புகை மாசு அதிகரிக்க மக்கள் செயல்படும் நிலை வருத்தம் அளிக்கிறது. மக்கள் அனைவரும் தம் தனிப்பட்ட வாகனங்கள் மூலம் சுற்றுலா தலங்களில் குவியும் போது அங்கு எப்படி இயற்கை ரசிக்க இயலும் ? என்பது என் மனதில் எழும் ஐயம் ஆகும். நம் கவனம் முழுவதும் ஓரிரு நாட்கள் மலை வாழ்விடங்களில் தங்கி செல்லும் போது அங்கு ஒரு அவசர பரபரப்பு உருவாகி, அவர்கள் பல பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
உதகமண்டலம் என்ற நீலகிரி மாவட்டத்தின் நகரம், குறிப்பிட்ட சுற்றுலா கோடை காலத்தில்,ஒவ்வொரு நாளும் புதிய நபர்கள் வருகை தருகின்றனர் மேலும் கர்நாடக, கேரளா மாநில எல்லைப் பகுதி ஆக உள்ளதால், தினந்தோறும் கோவை மற்றும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்ட மக்கள் இவ்வழியாக பயணங்கள் மேற்கொள்ளும் நிலை உள்ளது. அதனால் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க இயலாது. தொடர்ந்து காற்று மாசு, சாலை விபத்து ஆகிய விரும்பத் தகாத நிகழ்வுகள் வரும் வாய்ப்புகள் இருக்கிறது எனில் மிகையாகாது. சரி, இவ்வாறு ஒரு மலை ராணி என்று அழைக்கப்பட்ட நகரம், சூழல் பாதிப்புகளை பெற்று வந்தாலும், அரசு விழிப்புணர்வு, செயல் திட்டங்கள் ஆகியவற்றால் ஓரளவு பிரச்சினைகள் சமாளிக்கப் பட்டு வருவது உண்மை. இதே போல் மலைப்பகுதி வனவிலங்கு சரணாலயங்களில், விலங்குகள் காணும் ஆர்வத்தில் காடுகளுக்குள் பயணிகள் செல்லுகையில் அவர்கள் மிகுந்த கவனம் கொண்டு இருப்பது அவசியம் ஆகும்.
ஒவ்வொரு மலைப்பகுதியும், நம் அன்றாட தட்ப வெப்ப நிலை பராமரிப்பு, மழை பெய்தல் போன்ற சூழல் பணிகள் மேற்கொள்கின்றன. மலைப்பகுதி விவசாயம், தோட்டம், சமவெளி பகுதியினை விட அதிகம் வேறுபட்டது.
அங்கு வசிக்கும் மக்கள் வாழ்க்கை முறை மாறுபட்ட ஒன்றாகும். பயணிகளாக செல்லும் நாம் மகிழ்ச்சி அனுபவம், தற்காலிக மாக பெறவேண்டும் என்று அங்கு செல்கிறோம். ஆனால் அங்குள்ள இயற்கை சூழல் புரிந்து கொண்டு, அதனை நிரந்தரமாக மாசு படுத்தாமல் இருக்க நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு பயணத்தின் திட்டம் வடிவமைக்கையில், நாம் செல்லும் காலம், வாகனம், அதன் சீரமைப்பு, தங்குமிடம், பாதுகாப்பு, செல்லும் தலங்கள்,உணவு,பொருளாதார நிலை ஆகிய முக்கிய காரணிகள் பற்றிய குறிக்கோள்கள் உருவாக்க வேண்டும். மக்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரு இயற்கை சூழலில் குவியும்போது அங்கு சூழல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
அரசுதுறைகள், காவல்துறை, சுற்றுலாதுறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவை பயணிகள் வரும் நிலை அறிந்து உரிய செயல்பாடுகள் மேற்கொள்வது நன்று.மலர் கண்காட்சி, தாவரத் தோட்டங்கள் பார்வை , ஏரிகளில் படகு பயணம்,வணிக வளாகங்களில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் தனிப்பட்ட ஒவ்வொரு நபரின் நடத்தை மிக முக்கியம். இங்கு அரசுதுறைகள் விதிக்கும் விதி முறைகள், வழிகாட்டல்,கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் ஒவ்வொன்றும் முறையாக அனுசரிக்க நம் எண்ணங்களை சீர்ப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவேண்டும்.
நம் மக்கள் உடலாலும், உள்ளத்தினாலும் தம்மை செம்மைப்படுத்திக்கொள்ள மலைப்பகுதி மகிழ்ச்சி பயணம் கோடை காலத்தில் நிச்சயம் அவசியம் ஆகும். ஆனால் இயற்கைச் சூழலை மாசு படுத்தாமல் அதன் தூய்மை தன்மையை புரிந்துகொண்டு அங்கு நாம் அனைவரும் செயல் பட்டால் மட்டுமே நம் எதிர் கால தலைமுறை மனிதர்கள் மகிழ்ச்சி அனுபவம் பெற மலை வாழ்விடங்கள் இயற்கை மாறாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

