தொடர்-16 : சமகால நடப்புகளில் மார்க்சியம் - என். குணசேகரன் thodar -16 : samakaala nadappukalil marxiam - n.gunasekaran
தொடர்-16 : சமகால நடப்புகளில் மார்க்சியம் - என். குணசேகரன் thodar -16 : samakaala nadappukalil marxiam - n.gunasekaran

தொடர்-16 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

பாலின சமத்துவத்திற்கு எது தடை?

இன்றைய நவீன உலகின் பெரிய குறைபாடு எதுவென்றால்,பாலின சமத்துவம் இன்னமும் எட்டப்படவில்லை என்பதுதான்.பாலின சமத்துவ இலக்கை அடைவதற்கான பாதையில் உலகம் முன்னேறி வருகிறதா என்பதும் கேள்விக்குரியது.

இதைக் கேட்டால்,அரசாங்கங்கள், அதிகார வர்க்கங்கள் ஏராளமான புள்ளி விவரங்களை நம் முன் வீசி, பெண்கள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சாதிப்பார்கள். அந்த விவரங்கள் உண்மையானவை என்று எடுத்துக்கொண்டாலும் முழுமையான பாலின சமத்துவம் எப்போது அடைவது என்று கேட்டால்,அதற்கு விடை இல்லை.

பெண் அடிமைத்தனத்தின் சமூக வேர்கள் ஆழமானவை. இந்த வேர்களை களைந்தெறியாமல் பாலின சமத்துவ இலக்கை அடைய இயலாது

‘முதலாளித்துவம் இருக்கும் வரை பாலின சமத்துவம் சாத்தியமாகாது’ எனவும், ‘முதலாளித்துவம் முடிவிற்கு வந்தால்தான் பாலின சமத்துவ சாத்தியப்பாடு ஏற்படும்’ என்றும் கம்யூனிஸ்ட்கள் சொல்வதுண்டு.உடனே,எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் முதலாளித்துவத்தின் மீதே குறை சொல்லும் பல்லவி பாடுவது கம்யூனிஸ்டுகளுக்கு வாடிக்கை என்று பலர் சலித்துக் கொள்வதுண்டு.

முதலாளித்துவம் இந்த விஷயத்தில் என்ன சாதிக்கப் போகிறது என்பதை கடந்த ஆண்டு வெளியான ஐக்கிய நாட்டு சபை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

300 ஆண்டு காத்திருப்பு!!
அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவம் அடைய வேண்டும் என்றால் இன்னும் ஒரு 300 ஆண்டுகள் ஆகலாம் என்று ஐ.நா.கணித்துள்ளது. இதே ஐ.நா. சபை ஏற்கனவே 2030-க்குள் பாலின சமத்துவ இலக்குகளை எட்டுவதற்கு உறுதியளித்தது.

பெண்களுக்கு நலத்திட்டங்கள்,நிதி ஒதுக்கீடுகள் என ஏராளமான வசதிகளை நாங்கள் செய்து கொடுத்துள்ளோம் என்று முதலாளித்துவவாதிகள் ஆர்ப்பரித்து பேசினாலும் பாலின சமத்துவம் இன்னும் கானல் நீராகவே இருக்கிறது.

இதற்கு,இந்தியாவும் விதிவிலக்கல்ல.உலகப் பொருளாதார மன்றத்தின் 2022-ம் ஆண்டுக்கான பாலின இடைவெளி அறிக்கையில் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 135-வது இடம்தான் கிடைத்தது. இது,75-ஆண்டுக்கால முதலாளித்துவப் பாதை,மோடி அரசின் நவீன தாராளமயம்,இந்துத்துவ சித்தாந்தம் செய்த கைங்கர்யம்!

முதலாளித்துவம் காட்டும் தீர்வு என்ன?தற்போதுள்ள சமூகக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு,அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே இருந்தால், 300 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் சமத்துவம் சாத்தியம்;அது வரை காத்திருக்க வேண்டும்!!மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியப்போவதில்லை!

மேலோட்டமான நடவடிக்கைகள்
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.வெளியிட்ட அறிக்கை பரவலாக ஊடகங்களில் வெளியானது. ஆனால் தொடர் விவாதம் நடக்கவில்லை. அந்த அறிக்கை ஒவ்வொன்றையும் பட்டியலிடுகிறது.

*பெண்கள் மீதான வன்முறை தடுப்பு, திருமண உரிமை, பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றையெல்லாம் உறுதிப்படுத்துவதில் இன்றைய அரசாங்கங்கள் காட்டுகிற ‘அக்கறையை’ ஆய்வு செய்தால், இவற்றை அடைவதற்கு 286 ஆண்டுகளாகும்.

*அனைத்து துறைகளிலும் உயர் பொறுப்புகளை பெண்கள் பாலின சமத்துவத்துடன் அடைய வேண்டுமென்றால் 140 ஆண்டுகளாகும்.

*உலகம் முழுவதும் நாடாளுமன்றங்களில் பெண்கள் சமமான பிரதிநிதித்துவம் பெறுவதற்கு 40 ஆண்டுகளாகும்.

தற்போதுள்ள பாலின சமத்துவ திட்டங்கள்,நடவடிக்கைகளை ஆய்வு செய்துதான் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.எனவே மேலோட்டமான பாலின சமத்துவ நடவடிக்கைகள் இலக்கை அடைவதற்கான பாதையாக இல்லை என்பது புலனாகிறது.

இன்னமும் பெண்கள் மத்தியில் வறுமையும் மோசமான வாழ்வாதார சூழலும் நீடித்து வருகிறது. ஐ.நா அறிக்கையில் 38.30 கோடி பெண்கள் மிக மோசமான வறுமையில் வாடுவதாகவும், உணவு, உடை, இருப்பிட வசதி எதையும் பெற முடியாத நிலையில் வாழ்வதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கல்வி கற்காத நிலையில் 54 சதவீதம் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.குடிநீர்,கழிப்பிட வசதி,போன்ற வசதிகலற்ற வாழ்க்கை சூழல், ஆண்டுதோறும் 8 லட்சம் பெண்கள் உயிரிழப்பதற்கு காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா.தெரிவித்துள்ளது.

மார்க்சிய தத்துவப் பார்வை
19- ஆம் நூற்றாண்டில் தொழில்,அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படத் துவங்கி, முதலாளித்துவம் ஏற்றம் கண்டது.20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெண் உழைப்பாளர்கள் தேவை அதிகரித்தது.அப்போதும்,பெண்கள் அடிமைத்தனத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் நிலை மாறவில்லை. குறைந்த ஊதியத்துடன் உழைப்புச் சுரண்டலுக்கான கருவிகளாக பெண்கள் பயன்பட்டனர்.

பெண்கள் கல்வி வளர்ச்சி,பெண்ணுரிமை விழிப்புணர்வு ஓரளவு வளர்ந்தது.பெண்கள் இயக்கமும் வலுப்பெறத் துவங்கியது.இதற்கு முக்கிய காரணம் மார்க்சிய தத்துவத்தின் எழுச்சியம்,அன்றைய சோவியத்தில் நிகழ்ந்த சோசலிச சாதனைகளும்தான்.

பெண் ஒடுக்குமுறை ஒரு வரக்கப் பிரச்சனையாக மார்க்சியம் அணுகுகிறது. அப்படியானால், வர்க்க ஒடுக்குமுறைக்கு ஆளாகும் உழைக்கும் பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்ட பகுதியினரா? மார்க்சியம் அவ்வாறு கருதவில்லை. பொருளாதார ரீதியில் உழைக்கும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால்,அனைத்து தரப்பு பெண்களும் வன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள் கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

வர்க்க சமுதாயம் உருவானபோது பெண்ணடிமைத்தனமும் சமூகத்தில் வேரூன்றியதால் இது வர்க்கப் பிரச்சனை என்று மார்க்சியம் கருதுகிறது. ஒரு சிறு கூட்டம் பெரும் கூட்டத்தின் உழைப்பினை சுரண்டி, உபரியை உடைமையாக்கி, ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.இந்த வரலாற்றுக் கட்டத்தில் பெண் அடிமையாக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த வரலாற்றை ஏங்கல்ஸ் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலில் விளக்குகிறார்.

வர்க்க சமுதாயத்தில் உருவான பெண்ணடிமைத்தனம் நிரந்தரமானதா? வர்க்க சமுதாயம் மறைந்து, சமத்துவ சமுதாயம் அமைகிறபோது பெண் சமத்துவமும் நிலைப்பெறும்.அதற்கு, முதலாளித்துவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான வர்க்கப் போராட்டம், பெண் ஒடுக்குமுறை எதிர்ப்பு இயக்கத்துடன் முன்னேறிட வேண்டும்.இது மார்க்சிய தத்துவ பார்வை.

முதலாளித்துவம் மறையும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டுமா ?மார்க்சியம் அவ்வாறு சொல்லவில்லை.மாதர் இயக்கமும்,மக்கள் இயக்கமும் இணைந்து பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான போராட்டத்தையும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும்,கருத்தியல் பணிகளையும் மேற்கொள்வது அவசியம்.

ஆனால் அடிப்படை சமூக மாறுதலுக்காகவும்,பெண் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை காணுகிற சோசலிச இலக்குடனும் பயணிப்பது அவசியம்.

( தொடரும்)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *