பொது சிவில் சட்டம்; பாஜக நோக்கம் என்ன?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பத்து மாதங்கள் இருக்கிறபோது பொது சிவில் சட்டம் பற்றிய விவாதத்தை வேண்டுமென்றே பாஜக எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்றார்.அத்தடன், பொது சிவில் சட்டத்தைக் காரணம் காட்டி இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாக எதிர்க்கட்சிகளை சாடினார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றிய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிற வேளையில் பொது சிவில் சட்டம் என்ற பிரச்சினையை எழுப்பி, எதிர்க்கட்சிகள் இந்துக்களுக்கு விரோதமானவர்கள் என்று கிளப்பி விட மோடி முயற்சிக்கின்றார். “வாக்கு வங்கி அரசியல் பசியில் உள்ளவர்கள்”, பொது சிவில் சட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும் பாஜக “எப்போதும் எல்லோருடனும், எல்லோருக்காகவும்` என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் மோடி பேசினார். உண்மையில், பாஜகவின் சித்தாந்தம்,இந்துத்துவா. இது பாலின சமத்துவத்தை எதிர்க்கக்கூடிய சித்தாந்தம்; சமூக ஒடுக்குமுறையுடன் கூடிய நால்வருண முறைக்கான சித்தாந்தம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பொது சிவில் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது “இந்து சட்ட சீர்திருத்தங்கள் எதுவும் கூடாது” என்று குரல் எழுப்பியவர்,சியாம் பிரசாத் முகர்ஜி.பாஜக தலைவர்களின் ஆதர்ச நாயகனாக இன்றைக்கும் போற்றப்படுகிறவர், சியாம் பிரசாத் முகர்ஜி அவர் ‘இந்து சட்டங்களுக்கும், இந்து கலாச்சாரத்துக்கும், இந்து தர்மத்துக்கும் எதிரான ஒரு குரூரமான, அறிவற்ற மசோதா”என்று கண்டித்தவர். “பெண்களுக்கு விவாகரத்து உரிமையை அளிப்பது ஏற்க இயலாதது” . .”திருமணத்தின் புனிதமான இயல்பு என்பது லட்சக்கணக்கான மக்களின் மனங்களில் ஆழமாக வேர் விட்டுள்ள ஒரு தத்துவம், அது இந்துத் திருமணத்தின் அடிப்படையான, புனிதமான இயல்பு” என்றெல்லாம் பழமை வாதத்தை அள்ளித் தெளித்தார் அவர். மோடி,ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கருத்துக்களை நிராகரிப்பதாக அறிவிப்பாரா? இந்துத்துவா சித்தாந்த அடிப்படையிலான சிவில் சட்டத்தை பன்முகத் தன்மை கொண்டிருக்கிற இந்திய மக்கள் மீது திணிக்கிற முயற்சியாகத்தான் பாஜகவின் பொது சிவில் சட்டம் அமையும். உண்மையில் மோடி பேச்சின் நோக்கம் வேறானது.ஒரு விவாதத்தை கிளப்பி’ நாங்கள் இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்’என்ற கருத்தை ஏற்படுத்தி,இந்து மதப் பெரும்பான்மையினர் வாக்குகளை உறுதிப்படுத்துவதுதான் நோக்கம். இதனால் மத நல்லிணக்கம் குலைந்து மதக் கலவரங்கள் விளைந்தாலும் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும். எனவே,இது அரசியல் திரட்டலுக்கான ஒரு சித்தாந்த முயற்சி.
சித்தாந்தப் பிரச்சாரம்
வகுப்புவாத இயக்கங்களும் பாசிச இயக்கங்களும் பிளவுவாத சித்தாந்த பிரச்சாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பது வரலாறு.இதனை எப்படி எதிர்கொள்வது? ஆளும் வர்க்கங்கள் சித்தாந்தத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதனை பல மார்க்சியர்கள் விளக்கியுள்ளனர்.மார்க்சிய அறிஞர் அல்தூசர் எழுதிய “சித்தாந்தமும்,சித்தாந்த அரசுக் கருவிகளும்”கட்டுரையில் விவரிக்கின்றார். சித்தாந்தம் என்பது ஒரு சமூகக்குழு,அல்லது ஒரு தனிநபர் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகிற கருத்துக்கள் மற்றும் வெளியுலக பிரதிபலிப்புக்களின் தொகுப்பு.மதம்,அறம்,நீதி,அரசியல்,அழகியல் என சித்தாந்தம் பல வடிவங்களை எடுக்கிறது. ஒரு முதலாளி உற்பத்தியின் போது தேய்மானமடைந்த உற்பத்திக்கருவிகளை மாற்றுகிறார்;தொழிலாளி தனது உழைப்பைச் செலுத்திய பிறகு,தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மூலம், இழந்து போன உழைப்பு ஆற்றலை மீண்டும் மறு உற்பத்தி செய்து கொள்கின்றார். அதே போன்று ஒரு சமுக அமைப்பு தன்னை மறு உற்பத்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க வேண்டுமானால் அது செயல்படும் சமுக நிலைமைகள் மறு உற்பத்தி செய்யப்பட வேண்டும். முதலாளித்துவ சுரண்டலை நீட்டிப்பதற்கான அரசியல்,சட்ட நிலைமைகளை ‘அரசு’ எனும் கருவி மறு உற்பத்தி செய்கிறது என்று லெனின் விளக்கியுள்ளார்.அதற்கான சித்தாந்தங்களும் மறு உற்பத்தி செய்யப்டுகின்றன என்கிறார்,அல்தூசர்.
அரசின் கருவிகள்
‘அரசு’ கருவியை இரண்டு வகையாகப் பிரிக்கிறார் அல்தூசர்.ஒன்று, “அடக்குமுறை அரசுக்கருவிகள்”;மற்றொன்று, “சித்தாந்த அரசுக் கருவிகள்”. இராணுவம்,காவல்துறை உள்ளிட்ட “அடக்குமுறை அரசுக்கருவி”களில் ஆளும் வர்க்கம் அதிகாரம் செலுத்தும்.அது மட்டுமல்ல;சமுகத்தின் மீது சித்தாந்தங்கள் செலுத்தும் மேலாதிக்கத்திலும்,ஆளும் வர்க்கங்கள் அதிகாரம் செலுத்துகின்றன. இந்த சித்தாந்தங்கள் பல நிறுவனங்களாக செயலாற்றுகின்றன.இவற்றை “சித்தாந்த அரசுக் கருவிகள்”என அல்தூசர் அழைக்கின்றார். இராணுவம்,போலீஸ்,அரசாங்கங்கள்,நிர்வாக அமைப்புக்கள்,நீதிமன்றங்கள்,சிறைச்சாலைகள் உள்ளிட்ட அரசு அடக்குமுறை கருவிகளுடன் இணைந்து, ’சித்தாந்த அரசுக் கருவிகள்’, முதலாளித்துவத்திற்கு உதவுகின்றன. பல்கலைக்கழகங்கள் எனும் “சித்தாந்த அரசுக் கருவி”எப்படி செயல்படுகிறது?மாணவர்கள்,அடுத்த தலைமுறை முதலாளித்துவ சமுகத்தை மறு உற்பத்தி செய்வதற்கான அறிவையும் கற்றுகொள்கின்றனர்.அத்துடன், சமுகத்தில் ஆளும் வர்க்கத்திற்கு அடங்கி சேவகம் செய்யும் பாங்கையும் கற்றுக்கொண்டு வெளி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் “இந்து ராஷ்டிரம்” அமைந்தால் இந்து மதவெறியர்களாக மாணவர்கள் வெளிவருவார்கள்! அல்தூசர் சில “சித்தாந்த அரசுக் கருவிகளை” வரிசைப்படுத்துகின்றார்.
-மதம் சார்ந்த நிறுவனங்கள்.
-தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள்,
-குடும்பம்,
-நீதித்துறை
-அரசியல் கட்சிகள் உள்ளிட்ட நிறுவனங்கள்,
-தொழிற்சங்கங்கள்,
-பத்திரிக்கைகள்,தொலைக்காட்சி,வானொலி,தகவல் தொடர்பு நிறுவனங்கள்,
-இலக்கியம்,கலை,விளையாட்டு, பண்பாட்டுக் கருவிகள்.
இவை அனைத்தும் முதலாளித்துவத்திற்கு ஏற்ற சித்தாந்த நிலைமைகளை நிலை நிறுத்தும் நிறுவனங்கள்.
இன்று, இந்த தளங்கள் அனைத்திலும் சங்கப் பரிவாரங்களும் தங்கள் சித்தாந்தத்தை பரப்பி வருகின்றன. அடக்குமுறை அரசுக் கருவிகள் வன்முறை மூலமாக செயல்படுகின்றன;சித்தாந்த அரசுக் கருவிகள் ‘சித்தாந்தம்’மூலமாக செயல்படுகின்றன”என்கிறார் அல்தூசர். இந்த சித்தாந்த அரசுக் கருவிகளின் முதலாளித்துவ, வகுப்புவாத செல்வாக்கிலிருந்து,உழைக்கும் மக்கள் விடுபட வேண்டும்.இதற்கு இந்த சித்தாந்த தளங்கள் அனைத்திலும் ஏககாலத்தில் மாற்று சோசலிச சித்தாந்த கருத்துக்களுக்கான வர்க்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.இதற்கான வர்க்க ஒற்றுமை வலுப்பட வேண்டும்.
(தொடரும்)